வேர்களால் வாழ்கிறோம்
இலக்கிய மை. கருப்பாக இருந்தாலும் கற்போர்
உள்ளத்தில் வெளிச்சத்தை ஊட்டிவிடுகிறது கரும்பலகை வெளிச்சம் ஊட்டுவதுபோல்.
தமிழ் இலக்கிய வேர்கள்தான் தமிழ்மரபினைக்
காத்துவருகின்றன. வேர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டே சென்றால் மரம் என்னாகும்
என்பதை அறிவோம்தானே! தமிழ்மரமும் அவ்வாறே. தமிழ் இலக்கியங்களைப் படிப்பது நாளுக்கு
நாள் குறைந்துவருகிறது. “புத்தக விற்பனை அதிகமாக இருக்கிறதே!” என எனக்கு விடையளிக்க முயல்வீர்களேயானால் மகிழ்ச்சிதான்.
ஆனால், அவ்விடையை புத்தகம் பதிப்பிக்கும் நூலாசிரியர்களிடம் சொல்லுங்கள். வீட்டில்
பல பரண்கள் புத்தகங்களால் வழிந்துகொண்டிருக்கும் அவலத்தைச் சொல்வார்கள். தங்கள் சொத்து
தங்களிடம் இருப்பதை எந்த எழுத்தாளரும் விரும்புவதில்லைதானே?
மரங்களைப் பாதுகாத்தல் நன்றுதான். முடியாவிட்டால்
விட்டுவிடலாமா?. வேர்களுக்கு கேடுசெய்தால் கனிகள் குறையும் ; காய்கள் குறையும் ; பூக்கள்
குறையும் ; கிளைகள் குறையும் ; இலைகள் குறையும்
; மரம் விறகாகும் ; நிழல் மறையும் ; காற்று மாசாகும் ; மண் மணலாகும் . மருதம் பாலையாகும்.
இது மரங்களுக்கு மட்டுமா ? இலக்கியங்களுக்கும்தான்.
ஒவ்வொரு மொழியின் வேர் இலக்கியங்கள்தானே? அந்த மொழியே மனிதர்க்கு வேர். வேர் இல்லாத
மரம் என்னாகும்? அதுபோல்தான் தாய்மொழி இல்லாத மனிதர்களும் அடையாளம் தெரியாமல் முழு
; முக்கால் ; அரை ; கால் எனக் காணாமல் போனார்கள் ; போகிறார்கள் ; போவார்கள்.
மதிப்பிற்குரிய வாசகர்களே ! விழித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் தாத்தாவின் தமிழ்வளம் உங்கள் தந்தையிடம் இருந்ததா? உங்கள் தந்தையின் தமிழ்வளம்
உங்களிடம் இருந்ததா? உங்களின் தமிழ்வளம் உங்கள் பிள்ளைகளிடம் இருக்கிறதா? செழுமையான
இலக்கியங்கள் எல்லாம் நூலகங்களில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அருமையான பதிப்புகள் எல்லாம்
கரையான்களால் கரைக்கப்படுகின்றன. மின்னாக்கம் செய்யவேண்டிய நூல்களை அடையாளம் சொல்வதற்காவது
தமிழ்ப்புலமை வேண்டுமன்றோ ! தமிழறிஞர்களுடன் தமிழ் இலக்கியங்களும் மறைந்துபோகிறது.
ஒரு இலக்கியத்தைப் படிப்பதற்கே வாழ்நாள் போதாது என்னும் நிலையில், தமிழில் படிக்க என்ன
இருக்கிறது? எனக் கேட்பது எத்தனை அறியாமை. குழந்தைகளுக்கு தமிழின் அருமையைக் கற்பிக்கவேண்டியது
தமிழர்களால்தானே முடியும். அவ்வருமையை நாள்தோறும் ஊட்டிமகிழ்வோம்.
இந்த உலகத்தில் “நீங்கள் நன்றி சொல்ல விரும்பினால்
யாருக்குச் சொல்வீர்கள்?” என்று ஒருவர் பலரை நேர்காணல் செய்கிறார். ஒவ்வொருவரும் மருத்துவர்,
பொறியாளர், விஞ்ஞானி எனப் பலரை சொல்கின்றனர். எல்லோரிடமும் கேட்டுவிட்டு, யாரும் குறிப்பிடாத
; நாள்தோறும் அனைத்து உயிர்களின் உணவுக்காக உழைத்திடும் உழவனைப்பற்றி கருத்து கேட்கிறார்.
எல்லோரும் புன்னகைத்து ; உண்மைதான் எனக்கூறி ; பொறுத்தருளவேண்டி ; “உழவர்தான் நாம்
மதிக்கவேண்டிய முதல் மனிதர்” என ஆனந்தக்கண்ணீருடன் கூறுகிறார்கள். உழவன் மட்டுமே தன்
பசியை அடக்கிக்கொண்டு ஊர் பசிக்குச் சோறு போடுகிறான். கடவுள் என்னும் முதலாளியின் முதல்
தொழிலாளி உழவன் எனில் மறுப்பாருண்டோ? அத்தகைய
உழவனாலேயே நாடு நலம்பெறும் என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் எத்தனை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.
அடிப்படை நன்றாக
இருந்தால் கட்டிடம் நன்றாக இருக்கும்தானே? அப்படி நாடு நன்றாக இருக்க உழவுத்தொழில்
சிறக்கவேண்டும் என உலகுக்கே நெறிகாட்டியவர் தமிழர். வரப்பு உயர்ந்தால் நீர் நிறைவாகும்
; நீர் நிறைவானால் நெல் முதலாகிய தானியங்கள்
நிறைவாகும் ; நெல்
நிறைவானால் உழவர்கள் வளம் பெறுவர். உழவர்கள்
வாழ்வு வளமானால் நாடு வளமாகும். அதற்குத் துணைநின்ற மன்னனின் உயர்வினை நாடே புகழும்.
இப்பெருமையினை, உலகம் ஓயாமல் சொல்லிக்கொண்டே
இருக்கும் எனப் பாடியுள்ளார் சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்.
வார்சான்ற கூந்தல் ; வரம்புயர வைகலும்
நீர் சான்று உயரவே நெல்லுயரும் – சீர்சான்ற
தாவாக் குடியுயரத் தாங்கரும் சீர்க்கோ உயரும்
ஓவாது உரைக்கும் உலகு (சிறுபஞ்சமூலம் – 46)
என்னும் இப்பாடல் காலத்தால் மறையாத ; பொய்க்காத
சொற்களின்வழி எடுத்துக்காட்டியுள்ள திறம் வியக்கத்தக்கதுதானே!
இக்கருத்தினையே
‘தமிழ் மூதாட்டி” ஔவையார் மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் பாடியுள்ளார். காரியாசான்
கூறிய கூற்றோடு செங்கோலின் அறத்தையும் கூட்டிப் பாடியுள்ளார். அறமின்றி அரண் ஏது? என்னும் செங்கோல் அறத்தையும் பதிவுசெய்கிறார்.
வரப்பு உயர்ந்தால் நீர் நிறைவாகும் ; நீர்
நிறைவானால் நெல் முதலாகிய தானியங்கள் நிறைவாகும்
; நெல் நிறைவானால் உழவர்கள் வளம் பெறுவர்.
உழவர்கள் வளமாக வாழ்ந்தால் மன்னனின் செங்கோல் எவ்வுயிர்க்கும் கொடுங்கோலாகாது. .செங்கோல்
தாழாது உயர்ந்து நிற்பின் மன்னனின் உயர்வினை நாடே புகழும் என்பதனைத் “தமிழ் மூதாட்டி”
ஔவையார் அருந்தமிழில் பாடினார்.
வரப்புயர
நீர் உயரும் ; நீர் உயர நெல் உயரும்
நெல்
உயரக் குடி உயரும் ; குடி உயரக் கோல் உயரும்
கோல்
உயரக் கோன் உயர்வான்.
எனக்
குலோத்துங்க சோழனுக்காகத் ‘தமிழ் மூதாட்டி” ஔவையாரின் அறிவுரை
எண்ணியெண்ணி வியக்கத்தக்கதுதானே. இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியங்களை விரித்துரையுங்கள்.
தமிழில் ஆர்வம் தலைக்கேறும். பின்னர், அவர்களே உங்களை இலக்கியம் படிக்கச்சொல்வார்கள்.
தமிழின் செவ்விலக்கியங்களை செவிமடுக்கச்செய்வீர். தமிழ்த்தாயின் தவப்புதல்வர் என்னும்
பெருமைதனைக் காப்பீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக