தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 26 மே, 2021

நூறாண்டு வாழ்வோமா ?

 

நூறாண்டு வாழ்வோமா ?

     வாழ்வோம் என்று துணிவாகத்தான் சொல்லுங்களேன். மூச்சுவிடுவதும் வாங்குவதும் உங்கள் கையிலா இருக்கிறது?. அது தானாகவே தன் கடமையைச் செய்துகொண்டிருக்கிறது. எதுவும் உங்கள் கையில் இல்லாதபோது வாழும்வரை மகிழ்ச்சியுடன் வாழலாம்தானே? “நோயால் இறந்தவர்களைவிட அந்த பயத்தில் இறந்தவர்கள்தான் அதிகம்” என்பதனை பி.எம்.ஹெக்டே என்னும் மருத்துவர் எடுத்துக்காட்டுகிறார். உலகிலேயே சிறந்த மருந்து ஒன்று உண்டு. தெரியுமா உங்களுக்கு? … அதுதான் தன்னம்பிக்கை.

“என்னைப் படைத்த இறைவன் என்னைக் காப்பான்” என்னும் நம்பிக்கை வேண்டும். “இறைவனை நான் காணாதவரை நம்பமாட்டேன்” எனக் கூறினால் “நீங்கள் உயிருடன் இருக்கிறீரா?” எனக்கேளுங்கள். தனது காலை தானே பார்த்துக்கொண்டு உயிருடன் இருப்பதை உறுதிசெய்வார். அப்படியெனில், “அந்த உயிர் எங்கே இருக்கிறது? பார்த்ததுண்டா?”  எனக் கேளுங்கள்.. யோசிப்பார்.  “உங்கள் உடலை இயக்கும் உயிரையே உங்களால் பார்க்க முடியாதபோது, உயிரைப்படைத்த பேராற்றலை எப்படிப்பார்க்க முடியும்? எனக் கேளுங்கள். மௌனம் மட்டுமே விடையாய் வரும்.

                எத்தனையோ மருத்துவர்கள், “தேவையற்ற மருந்துகளை உட்கொள்ளாதீர்” எனக் கூறி இருக்கிறார்கள். அவர்களை மருத்துவமனைகள் விரட்டிவிடுகின்றன. நிறைய மருந்துகள் எழுதும் மருத்துவர்களைப் பாராட்டி மகிழ்கிறது. எத்தனைக் கோடிகொடுத்து பட்டம் வாங்கியிருக்கிறார். மருத்துவமனை கட்டியிருக்கிறார். சம்பாதிக்க வேண்டாமா? என நியாயம் பேசுவோரும் உண்டு.

உயிர்காக்கும் மருத்துவர் கடவுளுக்கு இணையானவர்தானே? கடவுள்  கணக்குப் பார்த்தால் உயிர்கள் வாழுமா? நிலத்திற்கு விலை. நீருக்கு விலை, காற்றுக்கு விலை, மழைக்கு விலை, சூரிய ஒளிக்கு விலை என இறைவன் விலைவைத்தால் உயிர்கள் வாழ இயலுமா?. கடவுளின் சொத்தினை மனிதன் பிரித்துக்கொண்டது எவ்வளவு அறியாமை. பிணத்திற்கு மருத்துவம் பார்த்து காசைக்கறந்த பல மருத்துவமனைகள் செய்தித்தாளில் வந்துகொண்டுதானே இருக்கிறது. எல்லோருக்கும் தெரிகிறதுதான். ஆனால் உயிர்காக்க மருத்துவமனைகளை நாடித்தானே போகவேண்டியிருக்கிறது.

அவர்களை விட்டுவிடுங்கள். நல்ல மருத்துவர்கள் எத்தனையோபேர் வெளிநாடுகளில் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தபோதும் செல்லாமல் தனது ஊர் மக்களுக்கு மருத்துவத்தைச் சேவையாகப் பார்க்கின்றனர். அத்தகைய மருத்துவர்கள் வணங்கத்தக்கவர்கள்தானே?. ஏழை மக்களை அச்சுறுத்தாமல், தேவையான மருத்துவம் மட்டும் பார்த்து உயிரைக் காத்தவர்களும் உண்டு ; காப்பவர்களும் உண்டு. அத்தகைய மருத்துவர்களாலும் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது.

மருந்துகளைப் பொதுவாகவே உடல் ஏற்பதில்லை. புதிதாக ஒரு பொருள் உள்ளே நுழைந்தவுடன், வீட்டிற்குள் வெளியாள் நுழைந்தால் ஏற்படும் அச்சம்போல் உடலும் அஞ்சுகிறது. இயல்பாகவே, நமக்குள் இருக்கும் எதிர்ப்புசக்திகளே நமக்குள் நுழையும் கிருமிகளைக் கொன்றுவிடும். விதிவிலக்காக அமையும் தொற்றுகளுக்கு அரசு கூறும் மருந்துகளையும் ஊசிகளையும் போட்டுக்கொண்டே ஆகவேண்டும்.

சிறிய தலைவலிக்குக்கூட, அஞ்சி மாத்திரைகளை உணவுபோல் விழுங்குவோருமுண்டு.அவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.   அப்படி மனம்போன போக்கில் செல்லவிடாமல் தடுக்கவேண்டிய கடமை ஒவ்வொருவர்க்கும் உரியது என ஒரு மருத்துவரே குறிப்பிட்டு இருக்கிறார். இது நம்பும்படி இல்லை, பிறகு எப்படி நோய்க்கு மருந்துபோட்டால் குணமாகிறது? என்றுதானே கேட்கிறீர்கள். இதற்கு விடை உங்கள் மன ஆற்றல்தான் என்றால் நம்புவீர்களா? நம்பமாட்டீர்கள்தானே? உங்களுக்காக மருத்துவர் ஹெக்டே ஒரு குட்டிக்கதை இல்லை குட்டி நிகழ்வைச் சொல்கிறார்.

ஒருவன் மன நிலை சரியில்லை என்று மருத்துவமனை செல்கிறார். உடனே மருத்துவர் மூளை செயல்பாட்டுக்கு மருந்துகொடுக்கிறார். மனம் சரியாகிறதா? மருந்தால் சரியாகாது. நம்பிக்கையால் சரியாகும்.  மனம் எங்கே இருக்கிறது? என்றுதான் எவரும் கண்டறியவில்லையே. மாறாக, மூளைக்குத்தான் சிகிச்சை நடைபெறுகிறது. நன்றாக செயல்படும் மூளை சிதைவடைகிறது. இதுதேவையா? எனக்கேட்கிறார். இது உண்மைதானே? எனவே, மனம்தான் எல்லா குறைகளுக்கும் நிறைகளுக்கும் காரணம் என உணர்த்துகிறார். அவருடைய அழகான ; அன்பு நிறைந்த எண்ணத்தை எவ்வாறு பாராட்டி மகிழ்வது?. உண்மையைக் கண்டறியுங்கள். விழிப்புணர்வுடன் இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். இவையே அவருக்கு நன்றி சொல்லும் வழி.

     இன்னும் நம்பிக்கை வரவில்லையா? இணையத்தில் அவரைத் தேடுங்கள். கூற்றினை உதைத்த கூத்தனாகிய  சிவபெருமானை வழிபடுங்கள். நூறாண்டுகள் வாழமுடியும் என வழிகாட்டுகிறார் கபிலதேவநாயனார்.

     ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள் வாழ்ந்து

     ஒன்றும் மனிதர்  உயிரையுண்டு  - ஒன்றும்


     மதியாத கூற்று உதைத்த சேவடியான் வாய்ந்த

     மதியான் இடப்பக்கம் மால்.

என்னும் ‘சிவபெருமான் திருவந்தாதி’யின் முதல்பாடல் நூறாண்டு வாழ வழிகாட்டுகிறது. நாளும் தேய்ந்துபோய் வருந்திய சந்திரனுக்கு தலையிலே அடைக்கலம் கொடுத்துக்காத்தான். சக்தியின் வடிவமான பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்வகையில் உமையம்மைக்கு வலப்பாகத்தில் இடம்கொடுத்துள்ளான், ஆணோ, பெண்ணோ காப்பதற்கு இறைவன் உண்டு.   எனவே,. மரணம் வந்தால் வாழமுடியாதே என அஞ்சாமல், வாழும்வரை மரணம் வராது என நம்பிக்கையுடன் வாழலாம்தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக