தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 25 மே, 2021

நகைச்சுவை நகைக்க அன்று

 


நகைச்சுவை நகைக்க அன்று

நகைச்சுவை அறுசுவையினைவிட நிறைவு தருகிறது. உண்மைதானே? அதனால்தான் இனிக்கஇனிக்கப் பேசும்போது பசி தெரிவதில்லை. நகைத்து முடித்தபின் நன்கு பசிக்கும். நகைக்கத் தெரிந்தவருக்கு பசி மட்டுமன்று வாழ்நாளும் கூடும். உறவுகளிடமும் நண்பர்களிடமும் பேசத்தெரிந்தவரைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கும். “கண்களில் கருணை  இருந்தால், அனைவரிடமும் நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள்” என்று பொருள்.  “சொற்களில் இனிமை இருந்தால், அனைவரும் உங்களிடம் விருப்பமாக இருக்கின்றார்கள்” என்று பொருள். இரண்டனுள், முன்னதைவிட இரண்டாவதுதான் போற்றப்படுகிறது என்பது பெரியோர் வாக்கு.

நீங்கள் இரண்டு நிமிடம் உங்களைப்பற்றி எண்ணிப்பாருங்கள். உங்களுடைய அருமை உங்களுக்குப் புரியும். அனைவரைப் பற்றியும் அறிந்துகொள்ள விழையும் மனிதர்கள் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவிழைவதில்லைதானே. கடந்தகாலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப்பாருங்கள். அழுத நிகழ்வுகள் சிரிப்பையும், சிரித்த நிகழ்வுகள் அழுகையையும் கொண்டுவந்துவிடுகிறது. இப்பொழுது நகைச்சுவை என்பது நகைக்க மட்டுமல்ல என உணரமுடிகிறதல்லவா?

உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் சிரிப்பதில்லை ; சிரிக்கத்தெரிந்தாலும் வெளிப்படுத்துவதில்லை. அப்படி பொறுப்புணர்வுடனும் புன்னகையுடனும் வாழ்பவர்களைக்கண்டால் வணங்கத்தான்வேண்டும். அப்படி சில தாத்தாக்களோ ! பாட்டிகளோ  ! உங்கள் வீட்டில் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்தான். எந்தச் சூழலையும் எளிமையாக எதிர்கொள்ளக்கூடிய வல்லமை அவர்களுக்குள் இருப்பதைக் காணலாம். நடு இரவில், குழந்தை, வயிற்றுவலியில் துடிக்கிறது. பெற்றோர் பதைக்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் அலறும் சத்தம்கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்து குழந்தையிடம் வருகிறார்கள். பாட்டி, பதற்றப்படாமல் பொறுமையாக, குழந்தை வயிற்றில் விளக்கெண்ணையைத் தடவிவிட்டு, கை, காலை நீவிவிட்டு படுக்கவைத்தார். புன்னகை இல்லாமலே குழிவிழும் புன்னகை முகத்துடன் ‘நீங்க போய் தூங்குங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் பாட்டி. தாத்தாவும் அதனையே வழிமொழிகிறார். வானைக் கிழித்த குழந்தையின் அழுகை படிப்படியாக மழை நிற்பதைப்போல் நின்று உறங்கிவிடுகிறது. ஒருவர் மற்றொருவரைப் பார்த்துப்புன்னகைத்த புன்னகை, வாழ்க்கையில் அவர்கள் இப்படி எத்தனை  சூழலை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதன் வெளிப்பாடு.

சரி, நகைச்சுவையைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறோம். புன்னகைக்குத் தாவிவிட்டீரே. என எண்ணாதீர்கள். புன்னகை, நகைச்சுவையின் ஒன்றுவிட்ட சித்தப்பா முறைதான். மிகவும் நெருக்கமானது என்பதற்காகவே இந்த உவமை. பொறுத்தருள்க.

நகைச்சுவை என்பது பிறர் நகைக்கத் துணைசெய்யலாமே தவிர யாரையும் நகைப்புக்கு உரியவராக ; உள்ளத்தைக் காயப்படுத்துவதாக அமைதல் கூடாது. “நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி” என்னும் தெய்வப்புலவர் வாக்குதானே நம் வாழ்வின் போக்கு. அப்படி, யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை நடிகராக விளங்கியதால்தான் என்.எஸ்.கிருஷ்ணன் ‘கலைவாணர்’ ஆனார்.  குழந்தைகளிடம் பேசும்முறை அறிந்துபேசவேண்டும் என்பதனை, “நான் என்ன செய்யட்டும்” எனக் குழந்தைகேட்க, கோபத்தில் “என் தலையில் தீயை வை” என்பார் கலைவாணர். அவர் கவனிக்காதபோது குழந்தை தலைப்பாகையில் தீயைவைக்கும். அவருடைய பதற்றமே நகைச்சுவை காட்சியாகும். இத்துடன் காட்சி முடியவில்லை. “குழந்தைகளிடம் தவறான சொற்களைக் கூறினால் விளைவு இப்படித்தான் இருக்கும்” என்பதனைக் கலைவாணர் படம்பிடித்துக்காட்டிவிடுவார்.  இது படம் மட்டுமல்ல பாடமும்தானே.

“ஒரு நாள் முழுதும் சும்மா இருந்துகாட்டு. பிறகு, அது எவ்வளவு கஷ்டமுன்னு புரியும்” என ஒரு திரைப்படத்தில் சொல்வார் நகைச்சுவை நடிகர் வடிவேலு”. அப்போதுதான், மனிதர்களால் சும்மா இருத்தல் இயலாது. அப்படி முரணாக ஒருவர் இருந்தால் அது நகைப்புக்குரியதாகிவிடும் என்பதனையே அந்த நகைச்சுவைக்காட்சி உணர்த்தியிருக்கும்.

‘இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா” என்னும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தை அனைவரும் அறிவர். இது நகைச்சுவைக்காக மட்டுமா? பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுபவர்களே அரசியல்வாதிகள் என்னும் செய்தியினை உறுதிப்படுத்தும் காட்சியாகவே அக்காட்சி அமைகிறது. இதனை, அரசியலுக்கு மட்டும் உரியதாக எடுத்துக்கொள்ள இயலாது. ஏமாற்றும் இடங்களில் எல்லாம் “அங்கு அரசியல் நடைபெறுகிறது” எனக் கூறுவதனையும் காணமுடிகிறது. அவ்வாறெனில், அரசியலில் நேர்மையாக வாழ்வதற்குப் பழகிக்கொண்டால் நாடு நலம்பெறும்தானே. அரசியலுக்கு வர அஞ்சும் இளைஞர்களும் எளிதில் அரசியலுக்குள் நுழைவார்கள்தானே. இத்தனை உண்மைகளையும் புலப்படுத்தும் காட்சியாகவே அக்காட்சி அமைகிறது.

காவலர்கள் கையூட்டு பெறும் நகைச்சுவைக் காட்சிகள் எத்தனையோ திரைப்படங்களில் இடம்பிடித்துள்ளன. அவை அனைத்தும் நகைச்சுவைக்குரியதா? ‘எந்திரன்’ திரைப்படத்தில் சிட்டியாக வரும் ‘எந்திரன்’ மொழியைப் புரிந்துகொள்ளுமே தவிர குறியீட்டுமொழியினை அறியாது. போக்குவரத்துக்காவலர், சிட்டி வேகமாகக் காரை ஓட்டியதற்காக தண்டம் விதிப்பார். அதிலிருந்து தப்பிக்க கையூட்டு கேட்பார். ‘வெட்டு’ என்பது “கையூட்டுக் கொடு” என்னும் பொருளினைக்குறிக்கும். இதனை அறியாத ‘சிட்டி’ காவலரின் கையை வெட்டிவிடும். இதுதான் காட்சி. 

உலகிலேயே சிறந்த காவல்துறை வரிசையில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை வரிசையில் முதல் இடத்தையும் பெற்றுள்ள காவல்துறையை இப்படி திரைப்படங்கள் நகைச்சுவைக்காகக்காட்டுவது நாட்டிற்கு நன்மையா? இல்லைதானே.  “நாட்டில் நடப்பதைத்தானே காட்டுகிறார்கள்” எனத் தணிக்கைக் குழுவினர் ஒப்புதல் அளித்ததே இதற்குக்காரணம். அப்படியென்றால் யாரைக் குறைசொல்வது. எங்கும் குற்றம் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்னும் விழிப்புணர்வை இக்காட்சி குறித்து சிந்திப்பவர்களுக்கு எழும்தானே?

ஆம், நகைச்சுவைக் காட்சியினைக் கண்டு நகைக்கும் நகை அழகுதான். ஏனென்றால் அந்த நகைதான் ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடில்லாமல் அனைவரிடமும் இருக்கிறது.  ஆனால், அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியையும் எண்ணிப்பார்த்தால், பின்புலமாக நிற்கும் பல குறைகளைக் களையமுடியும். இனி நகைச்சுவை நகைச்சுவைக்காக மட்டுமில்லை என்பதனை உணரலாம்தானே?

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக