தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 11 மே, 2021

ஓய்வூதியம் ஓர் வாழ்வூதியம் - Pension Plucks Tension

 


ஓய்வூதியம் ஓர் வாழ்வூதியம் -
Pension Plucks Tension

 

பென்ஷன் – ஓய்வூதியம்,  அரசு ஊழியர்களுக்குக் கிடைத்த வரமாக முன்னொரு காலத்தில் இருந்தது ; இன்று இல்லை. அப்படி என்றால் அரசு ஊழியர் அல்லாதவர்களுக்கு பென்ஷன் இல்லையா? . முதியோர் பென்ஷன், விதவைப்பென்ஷன் (கைம்பெண்ணுக்கான ஓய்வூதியம்),  இன்ஷூரன்ஸ் பென்ஷன்  (காப்பீட்டு ஓய்வூதியம்)  எனப் பல உள்ளன. ‘பென்ஷன்’ எனச் சொல்லக்காரணம் ‘ஓய்வூதியம்’ என்னும் அழகிய தமிழ்ச்சொல் பேச்சு வழக்கில் இல்லாமல் போனதால்தான்.

'பத்து சன்(மகன்) செய்யாத உதவியை பென்ஷன் செய்துவிடும்' என்பது பொன்மொழி. இன்று ஆங்கிலமும் சிறிது தமிழும் கலந்து பேசும் அளவிற்கு தமிழர் நிலை மாறிவருவது உண்மைதானே?. இல்லை என்றால் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தமிழார்வம் உடையவர்களிடம் மட்டுமே பழகுகிறீர்கள். விளம்பரங்களைப் பார்ப்பதில்லை என்பதை என்னால் கணிக்கமுடிகிறது.

முதியோர்கள் சில இல்லங்களில் இந்த  ஓய்வூதியத்திற்காக மட்டுமே உயிரோடு பாதுகாத்து வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். சரியாக மாதத்தின் முதல் நாள் தாயையோ, தந்தையையோ வங்கிக்கோ, அஞ்சல் நிலையத்துக்கோ பொறுப்பாக அழைத்துச்சென்று ஓய்வூதியத்தை வாங்கிக்கொண்டுச் (பறித்துக்கொண்டு) சென்று விடும் அன்பான மகனையும் மகளையும் பார்த்திருக்கிறேன். உயிரோடிருக்கத் தேவையான உணவு மட்டும் திண்ணைக்கு (பொறுத்தருள்க! இப்போதுதான் திண்ணை இல்லையே.) ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வரும்.  கடவுள் கொடுத்த உயிரை அவர் எடுத்துக்கொள்ளும்வரை அவமானங்களைப் பொறுத்துக்கொண்டு வாழவேண்டும்தானே. "வாழும் வரை வீட்டுக்கு வெளியே இருந்த பெரியவர் ; வீட்டிற்குள் சென்றார் ; படமாக” என்ற ஒரு கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது.

அதெல்லாம் சரி, ஓய்வூதியம் எப்படி வாழ்வூதியம், தலைப்புக்கும் கட்டுரைக்கும் ……. என நீங்கள் நினைப்பது புரிகிறது.

வாழ்நாளெல்லாம் தான் பெற்ற ஊதியத்தை ஏழைகளுக்குக் கொடுத்த ‘பாலம் கல்யாணசுந்தரம்’ ஐயாவின் வழியில் எண்ணற்றோர் விளம்பரமின்றி தங்கள் ஓய்வூதியத்தை ஏழைக்குழந்தையின் படிப்புக்கு ; மருத்துவ உதவிக்கு ; கோவிலுக்கு ; குளத்திற்கு ; அன்னதானத்திற்கு எனத் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

ஓய்வூதியம் மட்டும் இல்லாவிட்டால் யாரிடம் கையேந்தி நிற்கமுடியும். எல்லாம் இருந்தாலுமே உறவுகளும் நட்பும் பார்க்கும் பார்வை பணத்தைப் பொறுத்து  மாறுபடுவது உண்மைதானே? 

எனக்குத்தெரிந்த ஒரு பெரியவர் தன் ஓய்வூதியத்தை எல்லாம் ஒரு ‘கோ சாலை’ அமைத்து பசுக்களைப் பாதுகாக்கிறார். பால் கறப்பதற்காக என நினைத்துவிடாதீர்கள். அவை அத்தனையும் வயதானவை. உழைத்து உழைத்து ஓடானவர்களுக்குத்தானே உழைத்து உழைத்து ஓடான பசுவின் அருமை தெரியும். தாம் உழைக்கும் காலத்தில் எல்லாம் உறவுக்கும் நட்புக்கும் செலவு செய்ததை விட இப்படி செலவு செய்வதே ‘வாழ்வூதியம்’ என எண்ணினார். ‘போற இடத்துக்கு புண்ணியம் தேவைதானே’ என்பது அவர் கொள்கை.  உழைத்து உழைத்து வயதான பின் பசுக்களை, கேரளாவிற்கு அடிமாட்டுக்கு – இறைச்சிக்காக விற்றுவிடும் பசு வளர்ப்போரிடம் பணம் கொடுத்து வாங்கிவிடுவார். அவை இறக்கும் வரை உணவிட்டு, இறந்தபின் தம் நிலத்திலேயே புதைத்துவிடுவார். கடைசி காலத்திலாவது சந்தோஷமாக சாகட்டுமே என்னும் அந்த உயர்ந்த குணம்தான் அவருடைய‘வாழ்வூதியம்’ ஆனது. இவருக்குச் சொர்க்கத்தில் ஒரு இடம் நிச்சயம் இருக்கும்தானே?,

வேறோரு ஊருக்கு ஒரு நாள் சென்று தங்குவதனாலும் முன்பே அதற்கான முன்பதிவு செய்து விடுகிறோம்  அல்லவா? அப்பயணம் மாறினாலும்  மாறும். ஆனால், என்றோ ஒரு நாள்  உறுதியாக செல்லக்கூடிய இடத்திற்கு புண்ணியம் என்னும் பதிவினைச் செய்து விட்டால் பதற்றம் விலகி ஓடிவிடும்தானே?

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக