தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 5 மே, 2021

தாகூர் - மனிதமே என் சமயம் - Tagore - Humanity is my religion

 




கவியோகி இரபீந்திரநாத் தாகூர் (07.05.1861 – 07.08.1941)

எண்பது ஆண்டுகள் மனிதனாக வாழ்ந்த கவிதையே கவியோகி இரபீந்திரநாத் தாகூர். சொல்லை நெல் போல் பயனுடையதாக மாற்றிய கவிஞர். ஊடகம் வளராத காலத்திலேயே நாடகம் எழுதியவர். உயர்ந்த உண்மைகளை நயம்பட உரைத்த மெய்யியலாளர். தம் கவிதைக்கு தாமே மெட்டமைக்கும் வல்லமைபெற்ற இசையமைப்பாளர். விதைகளை கதைகளாக்கிய சிறுகதையாசிரியர். எழுத்து மொழியும் இசைமொழியும் ஓவிய மொழியும் அறிந்த  தன்னிகரற்ற அறிஞர். எழுத்துமொழியில் வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் எனப் பலமொழிகளைக் கற்றறிந்தவர்.

            “சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்” என்னும்  சொற்றொடருக்கு முரணானவர் ; வளமான கவிதைகளுக்கு அரணானவர். கவிதைகளைத் தொகுத்து ‘கீதாஞ்சலி’ ஆக்கினார். பாரத நாட்டில் இலக்கியத்திற்காக முதன்முதலாக (1913) நோபல் பரிசு  பெற்றவரும் இவரே. அன்னிய நாட்டவர் மட்டுமே பெற்றுவந்த இப்பரிசினை முதன்முதலாகப் பெற்றவரும் இவரே. இலக்கியத்தில் இறைவனைக் கலந்த பெருமைக்குரிய கவிஞர்.

“மனிதமே என் சமயம்” என முழங்கிய மாமனிதர் தாகூர், கொல்கத்தாவில் ஜமீந்தார் பரம்பரையில் தேவேந்திரநாத் தாகூருக்கும் சாரதாதேவி அம்மையாருக்கும் பிறந்தவர். 1883 ஆம் ஆண்டு திசம்பர் 9 ஆம் நாள் மிருணாளினிதேவியை மணந்தார். எட்டுவயதில் கவிதை எழுதிப் பாராட்டு பெற்றவர். ஆங்கில அரசையே சிங்கம்போல் எதிர்த்து நின்றவர். அதனால்தான் அவருடைய கவிதைகள் ‘பானுசிங்கோ’ என்னும் புனைப்பெயரில் வெளிவந்தது.  பானு என்றால் சூரியனையும், ‘சிங்கோ’ என்பது சிங்கத்தையும் குறித்தது.  

எட்டு வயதில் கவிஞர் ; பதினாறு வயதில் சிறுகதை ஆசிரியர் ; இருபது வயதில் நாடக ஆசிரியர் ; இளமையில் நாட்டு விடுதலைக்கும் முதுமையில் ஆன்ம விடுதலைக்கும் வழிகாட்டியவர். இவருடைய ‘கீதாஞ்சலியை” ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்ட்ரூஸ் தாகூரின் புலமையில் மயங்கி அமைதிப் பூங்காவான சாந்திநிகேதனில் தம்மை இணைத்துக்கொண்டார். கவிஞன் மக்களுடன் கலந்து அவர்கள் சுவாசத்தை உணர்ந்து கவிதைகளைப் படைக்கவேண்டும் என்னும்  தந்திரத்தை அறிந்தவர் தாகூர். அரேபிய பழங்குடி மக்களுடன் மக்களாக வாழ்ந்து கவிதை படைத்தார்.

பள்ளியில் படிப்பதைவிட இயற்கையைப் படிப்பதையே பெரிதும் விரும்பினார். படிப்பில் கவனம் இல்லையென இவரை, படிப்புக்காக இலண்டன் அனுப்பினர். ஆனால் அவருடைய மனம்  கலைகளோடும் கடவுளோடும் ஒன்றியிருந்தது. கல்வியால் பெறும் அனுபவத்தைக் காட்டிலும், அனுபவத்தால் பெறும் கல்வி உயர்ந்தது என எண்ணி அதனையே தம் படைப்புகளின் வழி உலகிற்கு உணர்த்திக்காட்டினார்.  எனினும், கல்வியால் மட்டுமே குழந்தைகளை நல்வழிப்படுத்த இயலும் என எண்ணினார்.

கல்வியின் அருமையினை உணர்ந்தே கல்விக்கூடங்களையும் நிறுவினார். கலைகளுடன் கூடிய கல்வியே உயர்ந்ததென எண்ணி, தனது சாந்திநிகேதனில் பள்ளியைத் தொடங்க எண்ணினார். அவருடைய மனைவி நகைகளை விற்று, பள்ளி தொடங்குவதற்காகப் பணம் கொடுத்தார். அலைகளின் ஒலியையும் காற்றின் மொழியையும் உணர்ந்து கவிதைகளைப் படைத்தார். பொறுப்புணர்வுமிக்க இல்லறத்தைக் காட்டிலும் துறவறம் சிறந்ததன்று” என்னும் கருத்தை ‘துறவி’ என்னும் நாடகத்தில் உணர்த்தியுள்ளார்.

மக்களிடம் கொண்ட கருணை அவரை விடுதலை வீரராக மாற்றியது. நாட்டுப்பற்றும் கருணை உள்ளமும் வீரமும் நிறைந்த கவிஞராகத் திகழ்ந்தார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டு ஆங்கிலேயர் கொடுத்த ‘சர்’ பட்டத்தைத் திருப்பிக்கொடுத்தார். உலகமே அஞ்சி நடுங்கிய இத்தாலிய கொடுங்கோலனான முஸோலினிக்கு அறிவுரை கூறிய பெருமை இவருக்கே உண்டு.

            இரண்டாயிரம் பாடல்கள் எழுதிய பெருமைக்குரியவர். கலைஞர்களின் கடமை, புகழையும் பணத்தையும் மக்களிடமிருந்து அள்ளிக்கொள்வதன்று ; மக்களின் மறுமலர்ச்சிக்கு வித்திடுவது. அதன் பலன் வாழும் காலத்தில் பயனளித்தாலும் அளிக்காவிட்டாலும் வருங்காலத்திற்கு உரமூட்டவேண்டும். அதற்காக சொல்லில் மட்டுமின்றி செயலாலும் சிறந்து நின்றவர் தாகூர். விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவி கல்வி கற்க வழிசெய்தார். இன்றும் பொலிவுடன் கல்விப்பணியில் முன்னிற்கும் அப்பல்கலைக்கழக அழகிற்கு பின்னிற்பவர் கவியோகி. கல்விப்பணியில் மட்டுமின்றி இலக்கியப்பணியிலும் அவர்தொடாததுறையே இல்லை. எனவே, பல்கலைக்கழகத்தை நிறுவிய பல்கலைக்கழகம் என கவியோகியைக் குறிப்பிடலாம்தானே?.

            முப்பது நாடுகளுக்கு மேலாகப் பயணம் செய்தவர். இவ்வனுபவத்தை ‘யாத்ரி’ என்னும் நூல் எடுத்தியம்பும். விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இலக்கியவாதி பங்கிம் சந்திரர், எச்.ஜி.வெல்ஸ், மகாத்மா காந்தியின் சீடரான ஆண்ட்ரூஸ், ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ், எஸ்ரா பவுண்ட்  எனப் பல அறிஞர்கள் இவரைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

இருநாடுகளுக்கு தேசிய கீதம் எழுதிய ஒரே கவிஞர் என்னும் பெருமையும் தாகூருக்கே உண்டு . பாரதத்தில் ‘ஜன கன மண..” என்னும் கீதமும் பங்களாதேஷில் “அமர் சோனார் பங்களா..” என்னும் கீதமும் நாட்டு மக்களுக்கு உயிரூட்டுவன ; ஊக்கமூட்டுவன. நாட்டுப்பற்றை வளர்க்கும் நயமான வரிகள் அவை.

வங்காளக் கவிஞரின் தங்கமான வரிகள் வங்காளிகளை ஈர்த்தன. பேச்சு நடையில் கவிதை வீச்சு கொண்ட எழுத்துக்கள் அவருடையவை.  தங்கப்படகு (சோனார் தரி - 1894) , சித்ரா (சித்ரங்கடா-1892) புகழ்பெற்றவை. இவ்வாறு ஒவ்வொரு படைப்பும் காலத்தை விஞ்சி நிற்பன. பல பதிப்புகள் கடந்தும் நன்கு விற்பன.

கவிதையை மொழிபெயர்ப்பது கடினம். மொழியின் அருமையும் கவித்துவமும் காணாமல் போய்விடும். சிறுகதை, நாவல், நாடகம் எப்படைப்பாயினும் தத்துவமே ஆயினும் தாய்மொழியில் காட்டிய உணர்வை மொழிபெயர்ப்பில் ஊட்டுதல் இயலாது. முயன்று எழுதும்பொழுது கவியோகியின் வரிகள்  பொன்னிழைகளாகி மின்னுகின்றன.

·        தண்ணீரைக் கண்டு அஞ்சும்வரை கடலைக் கடக்க இயலாது.

·        அன்பு கட்டுப்படுத்துவதில்லை ; விடுதலை உணர்வையே தரும்.

·        கடவுள் மனித இனத்தை விரும்புவதை குழந்தை பிறப்பே உணர்த்துகிறது.

·        நிருபிக்கப்பட்ட உண்மைகள் பல ; நிருபிக்கப்படாத உண்மை ஒன்றுதான்.

·        மனம் ஒரு கத்தி. பயன்படுத்த தெரியாதபோது ரத்தம் சிந்த நேர்கிறது.

·        பட்டாம்பூச்சிகள் நிகழ்காலத்தில் சிறகடிப்பதால்தான் அழகாக இருக்கிறது.

·        ஒரு மலரானது, பல முட்களைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை

·        இலை நுனியின் பனித்துளிபோல் வாழ்க்கை. மெல்ல ஆடுவோம்.

·        மகிழ்ச்சியாக வாழ்வது எளிது. எளிமையாக வாழ்வது கடினம்

·        மனம் அஞ்சாதபோது தலை நிமிரும்.

கடலின் சில துளிகள் இவை. 1961 ஆம் ஆண்டு  பாரதத்தின் “திரையுலக மேதை”யான சத்யஜித்ரே  ‘ரபீந்திரநாத் தாகூர்’ என்னும் ஆவணப்படத்தை எடுத்து  கவியோகிக்குக் காணிக்கையாக்கினார். “கவியோகியின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டம் கிளப்பிய புழுதியை விட சிறந்த அஞ்சலி இருக்கமுடியாது” என அறிஞர் மிருணாள்சென் குறிப்பிடுகிறார்.  நாம் என்ன செய்வோம்? கவியோகியின் ஒவ்வொரு சொல்லும் வாழ்க்கையை அழகாக்கும்தானே?. நன்றிக்கடனாய் நன்கு வாழ்ந்துகாட்டுவோம்.

தேசியக்கவியினைக் கற்போம் ; கற்பிப்போம் ; கலைகளை வளர்ப்போம் ; வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ;

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக