தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வியாழன், 27 மே, 2021

இலக்கியம் சொல்லும் எளிய வழிபாடு

 

தாயினும்  சிறந்தோன்

     ஏழைகளால் இறைவனை வழிபடமுடியுமா? செல்வங்களின்  அதிபதி ; சொர்க்கத்தின் தனிபதி.  தங்கத்தால் ஒளிவீசுபவன் ; மறைமொழியால் உடன்பேசுபவன். இப்படி அத்தனை அருமையினையும் உடைய இறைவனை, வறுமையினை மட்டுமே சொத்தாக வைத்திருக்கக்கூடிய எளியவர்கள் எவ்வாறு அறியமுடியும்? இந்த அச்சம் மனிதர்களுக்கிடையே இருக்கலாமேதவிர, அனைத்து மக்களையும் ஒன்றாகப் படைத்த இறைவனிடம் இருக்கக்கூடாது. தாயானவள் குழந்தைகளில் ஏற்றத்தாழ்வு காண்பாளா? தாயினும் சாலப்பரிந்தூட்டுபவரல்லவா இறைவன்.

     இறைவனை வழிபடுவதற்கு தீபம் ஏற்றவேண்டுமே என்செய்வது? அதற்கும் நாதியற்று வாழ்கின்றேனே என எளியவர்கள் எண்ணக்கூடும்தானே. நாயன்மார்களும் ஆழ்வார்களும். அவர்களின் அச்சத்தை நீக்குகிறார்கள். விளக்கேற்ற திரி வேண்டும் ; நெய் வேண்டும் ; அகல் வேண்டும். இவை வாங்குதற்குக் கூட வழியற்றுக் கிடக்கிறேனே என வருந்துகிறார் அடியவர் ஒருவர். அத்தகைய எண்ணமுடைய எளியோர்களை நல்வழிப்படுத்த நக்கீரதேவநாயனார் ‘கயிலை பாதி காளத்திபாதி” என்னும் நூலைப் படைக்கிறார்.

     சொல்லும்  பொருளுமே தூத்திரியும் நெய்யுமா

     நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் – சொல்லரிய

     வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த

     பெண்பாகர்க்கு ஏற்றினேன் பெற்று.

 

என்னும் முதல்பாடலே இறைவனின் எளிமையினை எடுத்துக்காட்டுகிறது.  சொல்லே திரியாகவும்,  அதன் பொருளே நெய்யாகவும், நாவே அகலாகவும் இருக்கிறது. எனவே, இம்மூன்றையும் பயன்படுத்தி வெண்பா என்னும் விளக்கினை ஏற்றுகிறேன். கயிலை மலையில் வீற்றிருப்பவனும் பெண்ணை ஒருபாகத்துக் கொண்டவனுக்காகவுமே இவ்விளக்கை ஏற்றுகிறேன் எனப்பாடுகிறார்.

     கயிலையையும் காளத்தியையும் ஒரே நூலில் பாடிய அழகினுக்கு இந்நூல் எடுத்துக்காட்டு. தென்னாடுடைய சிவனையும் வடநாடுடைய சிவனையும் ஒருங்கே இணைக்கும் இலக்கியமாக இவ்விலக்கியம் அமைகிறது. ஒற்றைப்படை எண்களுடைய ஐம்பது வெண்பாக்கள் கயிலை மலையைப் பாடுகிறது. இரட்டைப்படை உள்ள ஐம்பது வெண்பாக்கள் காளத்தி மலையைப் பாடுகிறது. அப்படியென்றால் நூறுபாடல்கள் உடைய நூலிது என்பதனைச் சொல்லாமலே நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்தானே?

     கயிலை நாதனும் காளத்தி நாதனும் மட்டும்தான் அடியார்களின் அன்புக்கு இரங்குவரோ? அரங்கநாதன் இரங்கமாட்டாரா? எனக் கேட்கிறீர்களா? நீங்கள் கேட்பீர் என்று தெரிந்துதான் பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று

 

எனப்பாடியுள்ளார். மண்ணுலகத்தை அகலாகவும், அதனைச் சூழ்ந்துள்ள கடலை நெய்யாகவும் ஞாயிற்றை விளக்காகவும் கொண்டு சொல்மாலை சூட்டியதனைச் சுட்டிக்காட்டுகிறார். பன்னிரு ஆழ்வார்களுள் இரண்டாவதான பூதத்தாழ்வார்

     அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

     இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

     ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

     ஞானத் தமிழ் புரிந்த நான்

 

எனப்பாடியுள்ளார். அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவும்  கொண்டு ஞான விளக்கை ஏற்றினேன் என்கிறார்.

தமிழ்ச்சொற்கள் அன்புக்குரியன. எனவே இறைவனின் அருள்பெற தமிழால் பாடுவதே போதுமானது. ஞானத்தமிழால் இறைவனைப் பாடினாலே இறைவன் அருள் கிடைக்கும் எனப்போற்றுவதனைக் கொண்டு இறைவனின் எளிமையினை அறியலாம்தானே?

1 கருத்து: