தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 12 மே, 2021

ஆசிரியர் ஏன் பிச்சைக்காரரானார்?- why did teacher became beggar.



கற்பிக்க மறந்தபாடம்

    கேரளா, மல்லபுரத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரைக் கடந்து சென்ற பெண்மணி, இவரைத் தனது கணித ஆசிரியர் என அடையாளம் காண்கிறார். உணவு அளித்து, உடை கொடுத்து தோழிகளுடன் பேசி தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவிட்டு, செய்தியை முக நூலில் பதிவிடுகிறார்.

    மனிதநேயத்தின் பதிவினை இவ்வாறு ஒவ்வொருவரும் இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கவேண்டிய கடப்பாடு இருக்கிறது.  நல்ல செயல்களை அடையாளம் காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய ஊடகங்களில் சில ; விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகங்களில் சில ; அச்சத்தை மட்டுமே  ஏற்படுத்தும்வகையில் செய்திகளை வெளியிடுவது மிகவும் கொடுமை. ஊடக அறங்கள் படித்தார்களா?  இல்லையா?  எனத் தெரியவில்லை.  எது மனிதப் பண்பை வளர்க்கும் என்பதைப் பார்க்காமல் தங்கள் வளர்ச்சியை மட்டுமே பார்க்கும் ஊடகக்காரர்களை ஒரு கேலிச்சித்திரம் அழகாக எடுத்துக்காட்டுகிறது.  நாய்க்கு முகமாக  மை ஊற்றி எழுதும் பேனா முனை வரையப்பட்டிருந்தது. 

    இதை விட கேலியாக ஊடகங்களைச் சித்திரிக்கமுடியாது.  கொள்ளையடிப்பவர்கள், கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள், கொலை செய்பவர்கள் குறித்த செய்திகள் வந்தால் அச்செய்தியின் முக்கியத்துவத்தைப் பார்ப்பதில்லை.  சாதி, மதம், பணம் எல்லாம் பார்த்துவிட்டு ; பேசிவிட்டு செய்திகள் ,  படிந்தால் குப்பைக்கோ ; படியாவிடில் அச்சிற்கோ போகிறது

    என்ன தலைப்பைவிட்டு திசை மாறி விட்டீர்களே? என நீங்கள் கேட்பது புரிகிறது. உங்களைப் போல் சிந்திக்கத்தெரிந்தவர்களாக எல்லோரையும் மாற்றவேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது. ஆசிரியர்கள்  நடமாடும் தெய்வங்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் அறிவு விதைகள் தூவப்பட்டுக்கொண்டே இருக்கும். அவர்களால் அறிவுரைகள் சொல்லாமல் இருக்கமுடியாது. தவறுகள் எளிதில் அவர்களுக்குப் புலப்படும். எப்போது பார்த்தாலும் குறை சொல்கிறாரே? என அவர்களைக் குறை சொல்வது அறியாமை. அதற்காகத்தானே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். சமுதாயத்தைத் திருத்தவந்தவர்கள் குற்றங்களைச் சகித்துக்கொண்டிருக்கமுடியுமா? ஊடகங்கள் ஆசிரியர்களை கிண்டல் செய்வது எத்தனைக் கொடுமையானது. எத்தனைத் திரைப்படங்களில் 'வாத்தியார்'- ஐ 'வாத்தி' என இழிவுபடுத்தினர்.  மதிப்பினைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்க்கே மதிப்பில்லாத சமுதாயத்தில் பிள்ளைகள் யாரை மதிப்பார்கள்.? தாய், தந்தை பாசம் இருக்குமா? 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' எனக் கற்றுக்கொடுத்ததை மறந்துபோயிருப்பார்கள்தானே? அதன்பின் அவர்கள் ஏன் மற்றவர்களை மதிக்கப்போகிறார்கள். எல்லோரிடம் விருப்புணர்ச்சிக்கு மாறாக வெறுப்புணர்ச்சிதானே பரவும். எங்கு அன்பு மலரும்? வன்முறைதான் தலைவிரித்தாடும். 

மருத்துவர்கள், மனிதர்களைப் பிணமாகாமலும், ஆசிரியர்கள் மனிதர்களை நடைபிணமாகாமலும் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது எத்தனை அழகான வரிகள். இதில் இறைத்தன்மையும் அன்பும் இழையோடி இருக்கிறதல்லாவா? ஆம்! அதனால்தான் இதை  ஆட்சியர் இறையன்பு  முத்திரையாகப் பதிவு செய்திருக்கிறார். 

இப்போது, என்ன சொல்லவருகிறேன் என்று தங்களுக்குப் புரிந்திருக்கும். ஆசிரியர்களால் காவலர்களைப் போல வீட்டிற்கு வந்ததும் சீருடையை கழற்றி வீசத் தெரிவதில்லை. அவர்கள் காலம் முழுதும் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள்.  மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ, பேரனோ, பேத்தியோ எல்லோரையும் திருத்த முனைவார்கள். விளைவு முதியோர் இல்லங்களில் 'இடம் காலி இல்லை' என்னும் பதாகை மானுடத்தின் வஞ்சத்தைப் பறைசாற்றும். எல்லை மறந்த ஆசிரியர்களுக்கு இல்லத்திலும் இடம் இல்லை எனப் பிள்ளைகள் கற்பிக்கும் காலம் ; கலிகாலம்.

   "தான் பெறாமலே தன் குழந்தைகள் எனச்சொல்லிக்கொள்ளும் பெருமை ஆசிரியர்களுக்கே உண்டு "என எங்கோ நான் படித்த அருமையான வரிகள் நினைவுக்கு வருகிறது. அவர்களுக்கு இந்தச்சமுதாயம் கொடுக்கும் பரிசு என்ன? எத்தனையோ ஆசிரியர்கள் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்துவார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு மாதச் சம்பளம் அவர்களுடைய ஒரு நாள் கற்பித்தலுக்கு ஈடாகாது. கட்டிடத்தொழிலாளி சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளம்  மட்டுமே பெறும் எத்தனையோ ஆசிரியர்கள்  நானும் அறிவேன். நீங்களும் அறிவீர்தானே? இக்கொடுமையிலிருந்து தப்பிக்க கடவுளின் கடைக்கண் பார்வை விழுந்து அரசுப்பள்ளியிலோ, கல்லூரியிலோ வேலை கிடைத்தால், மூன்றுமாத சம்பளம் கட்டினால்தான் சான்றிதழ்களைத் திருப்பித்தருவார்கள். 

                          ஆசிரியர்கள் அணியும் ஆடையின் ஒழுங்கே மிகச்சிறந்த                 பாடத்தை மாணாக்கர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். ஆசிரியரின் ஒவ்வொரு செயலும் அவர்கள் அறியாமலே  கற்பிக்கும் பாடம்.  அப்படிப்பட்ட புனிதமான பணி ஆசிரியப்பணி. "ஆசிரியப் பணி அறப்பணி ;அதற்கே உன்னை அர்ப்பணி" என்னும் பொன்மொழி ஆசிரியர்களை எட்டிவிட்டது ; எட்ட வேண்டியவர்களுக்கு எட்டவேண்டும்தானே? நல்ல திறமையான ஆசிரியர் பல ஆண்டுகள் பணிசெய்துவிட்டால் சம்பளம் அதிகமாகக் கொடுக்கவேண்டுமே என நீக்கிவிட்டு, புதிய ஆசிரியர்களை நியமிப்பது எத்தனை இழிவு. . 

 தனியார் பள்ளிகளில்; கல்லூரிகளில் எப்போது வேலையை விட்டு அனுப்புவார்கள் என்பதே தெரியாது?.  பதற்றமானச் சூழ்நிலையில் ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் விரட்டி விடுகின்றன.  முகக்கவசங்களை விற்று தன் வாழ்க்கையை ஓட்டும் ஆசிரியர் குறித்த ஒரு குறும்படம் ஒன்றே அத்தனை ஆசிரியர்களின் துன்பத்தைப் படம்பிடித்துக்காட்டிவிடுகிறதே?   எந்த நாட்டில் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறதோ அந்த நாட்டில்தான் சாதனையாளர்கள் உருவாகமுடியும் என எத்தனை உளவியலாளர்கள் ஆய்ந்தாய்ந்து சொல்லி இருக்கிறார்கள். எப்படி உரக்கச்சொன்னாலும் பலருக்கு மரக்காதுகளாகவே இருப்பது வேடிக்கைதானே?


 

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக