மனைவி -விளக்கேற்ற வந்த விளக்கு
மனைவி இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாதசோலைதானே?
எத்தகைய அறிஞனுடைய அறியாமையினையும் உணர்த்திவிடுகிறாள் அவன் மனைவி. ஒவ்வொரு வெற்றிக்கும்,
தோல்விக்கும் அவளே காரணமாகிறாள். தோல்விக்கு வலியாகவும் மருந்தாகவும் இருப்பவளும் அவள்தானே?
அன்னையின் கண்களுக்கு குறைகள் தெரிவதில்லை ; மனைவியின் கண்களுக்கு குற்றங்கள் மட்டுமே
தெரியும். ஆசிரியரின் கண்களுக்கு தவறுகள் தெரிவதைப்போல.
அவள் இருந்தால் எல்லாம் இருக்கிறது. அவள் இல்லை
என்றால் எதுவும் இல்லை. அவள் வேலைக்காரியாகப் பணி செய்தாலும் வீட்டிற்கு முதலாளியாகவே
இருக்கிறாள். பெயருக்கு மட்டுமே தலைவன் முன்னிற்கிறான். இனி, குடும்பத்தலைவிக்குத்தான்
குடும்பஅட்டை உதவித்தொகைக் கொடுக்கப்படும் என்று சிலஅரசுகள் அறிவித்ததை அறிவீர்தானே?
குழந்தைகளின் தேவையை மனைவியே எளிதில் அறிந்துகொள்கிறாள். கணவன் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறான். பதற்றத்தில்
அண்டாவில் கை நுழையாது என்பதனை அவனுக்கு உணர்த்துபவள் அவளே.
இல்லது என் இல்லவள் மாண்பானால் ; உள்ளது என்
இல்லவள் மாணாக் கடை. ( திருக்குறள் :53)
எதுவும் இல்லையென்றாலும் மனைவி மாண்புடன் இருப்பாளானால் கணவனுக்கு இல்லாதது ஒன்றுமில்லை.
எல்லாம் இருந்தாலும் மனைவி மாண்புடன் இல்லையனால் கணவனுக்கு உள்ளது என்று எதுவும் இல்லை
ஏனென்றால், எல்லாம் அவளே. அதனால்தான் மனைவியின்றி
கணவனால் வாழமுடிவதில்லை. விதிவிலக்குகள் இல்லையா?
எனக் கேட்காதீர். நீங்கள் கேட்கும் வினாவிலேயே விடை இருக்கிறதுதானே?
நடு இரவில் எரிந்துகொண்டிருந்த விளக்கு அணைகிறது.
விளக்கு அணைந்ததும் மின்விசிறி நிற்கிறது. மின்தடை தான். சரியாக கணித்துவிட்டீர்கள்.
இனி உறங்கமுடியாதுஎனப் புலம்பிகொண்டே மெழுகுவர்த்தி ஏற்றுகிறான். அதை நிற்கவைக்கவே
முடியவில்லை. “மெழுகுவர்த்தியின் கீழேயும் தீக்குச்சியைக் காட்டுங்கள்” என்றாள் மனைவி.
அவனும் தீக்குச்சியைத் தீட்டி சூடுகாட்டி மெழுகுவர்த்தியை நிற்கவைத்தான். அவள் உடல்நிலை
சரியில்லாததால், இரண்டு நிமிடவேளை இருபது நிமிடங்கள் ஆனது. வேர்வை ஆடையை நனைத்துக்கொண்டிருந்தது.
பெருந்தொற்று காலத்தில் வெளியே போகலாமா? வேண்டாமா? என எண்ணியவன், வேறுவழியே இல்லை.
என முகக்கவசம் அணிந்துகொண்டு வெளியே செல்லத்தயாரானான். அவன் கூறிக்கொண்டிருந்தபோதே
அணைந்தவிளக்கு எரிந்தது. மெழுகுவர்த்தியை அணைக்க எண்ணி ஊதினான். அணையவில்லை. வேர்வை
கொட்டியது. இதயத்துடிப்பு அதிகமானது. உடனே, மனைவியை அழைத்தான். “முச்சுக்காற்று (ஆக்ஸிஜன்)
அளவு குறைந்துவிட்டது போலிருக்கிறது” என்று அலறினான். “அணைக்கமுடியவில்லையே” எனப் பதறினான்.
பதற்றப்படாத மனைவி, “முகக்கவசத்தை கழற்றிவிட்டு ஊதுங்கள்” என்றாள். முகக்கவசத்தை கழற்றிவிட்டு அசடுவழிந்தான். என்ன அழகாக மனைவியின் துணையைச் சொல்லிவிடுகிறது
இந்தக்கதை. இப்படித்தான் ஒவ்வொரு செயல்பாட்டிலும்
வேகத்தடையாகிப் பாதுகாக்கிறாள் மனைவி.
இன்னொரு காட்சியைப் பார்க்கலாமா? கணவனிடம் கோபம்கொண்ட
மனைவி “நான் அம்மாவீட்டிற்குப் போகிறேன்” என்கிறாள். “ஓவ்வொரு முறையும் சொல்கிறீர்களே
தவிர போறது இல்லை. ஆசை காட்டி மோசம் செய்கிறீர்கள்”
என்கிறான் கணவன். இவ்வளவு மரியாதையாக மனைவியைக் கணவன் பேசுகிறானா? எனக் கேட்காதீர்கள்.
அவன் ஈழத்தமிழ்க்கணவன். பெண்களை மதிப்பதால் எத்தனை அழகாகிவிடுகிறது தமிழும் ; தலைவனுடைய
பண்பும். கணவனின் சொல்கேட்ட மனைவி புன்னகைக்கிறாள். கோபம் தணிகிறது. இது ஒரு சிறிய
காட்சிதான். ஆனால் எத்தனை வலிமையானது.
மனைவி தாய் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறினாலும்
கணவனை விட்டுப் பிரிய அவளுக்கு மனம் வருவதில்லை. உணவுக்கு அவன் திண்டாடுவான் என்பதனை
அறிவாள்தானே?. கணவனுக்கும் அது தெரியும் இருப்பினும் தாய்வீட்டுக்குச் சென்றாள் ஓய்வெடுப்பாள். ஓரிருநாள் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என நினைக்கிறான்
கணவன். இத்தனை அன்பும் தேநீருக்குள் கலந்திருக்கும் தேயிலைபோல் கண்ணுக்குப்புலப்படாமல்
வாழ்வினை இனிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி குடும்பத்தை
நடத்திச்செல்லும் மனைவி மகாலட்சுமிதானே?
மனைவிக்குப் பிறந்தநாள். குடும்பத்துடன் ஓட்டலுக்குச்செல்கிறார்கள்.
வேலைக்குச் சென்றுவிட்டு, சமையல்செய்து வேளாவேளைக்குக் கொடுப்பது கடினம்தானே?. விடுப்பும்
இல்லை ; அடைப்பும் இல்லை. இன்று அடுப்படிக்கு ஒருவேளை விடுப்பு. கணவன், மனைவி, மகன்,
மகள். இதுதானே இன்றைய கூட்டுக்குடும்பம்?.
கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்க்குடும்பத்தின் அளவு குறைந்துவருவதனை அறிவீர்தானே. முந்தைய
காலத்தில் ஒரே வீட்டில் ஐந்து அண்ணன், தம்பிகள் சேர்ந்து வாழ்வார்கள். வீடு சிறியதாக இருந்தாலும் மக்கள் பெருகி இருந்தனர்.
இன்று வீடு பெரிதாக இருக்கிறது. மக்கள் சுருங்கிவிட்டனர். எல்லாம் முரணாகிவிட்டதுதானே?
வீட்டிற்கு வெளியே இருந்த கழிவறைகள் வீட்டிற்கு உள்ளே வந்துவிட்டது. வீட்டிற்கு உள்ளே
இருந்த பெரியவர்கள் வெளியேறிவிட்டார்கள். விளைவு ஓட்டல்களில் உணவு. திண்ணையில் உணவிட்ட மகிழ்ந்த இனம். உணவுக்கு காசு கொடுக்கும் அளவிற்கு மாறிவிட்டது
எத்தனை அவலம். சரி, இது நமது தலைப்பில்லை.
இல்லத்தலைவியைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஓட்டலில் சாப்பிட்டு முடித்தபின் சாப்பிட்டதற்கான
தொகையோடு சேவை செய்தவருக்கு இருபது ரூபாய் கொடுத்து “சாப்பாடு அருமை” எனக் கூறிவிட்டு
வெளியே வந்தான். மகள் கேட்டாள் “இப்படி ஒரு நாளாவது அம்மாவைப் பாராட்டி இருக்கிறீர்களா?”.
மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான். புன்னகையில் அவனுடைய தவறுக்கான வருத்தமும் கலந்திருந்ததனைப்
புரிந்துகொண்டாள் படித்த மனைவி. அப்படி கணவனைப்
புரிந்துகொண்டு குடும்பத்தை நடத்திச்செல்லும் மனைவி சரஸ்வதிதானே?
உங்கள் மனைவி மகாலட்சுமியா? மகா சரஸ்வதியா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக