தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 6 ஜூலை, 2021

கவனமா இருங்க – ஔவையாரின் அறிவுரை

 


கவனமா இருங்க – ஔவையாரின் அறிவுரை

     ஒருவன் காட்டின் வழியே அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டுமெனத் தன் பாட்டியிடம் விடைபெற்று செல்கிறான். அப்போது பாட்டி, “காட்டில், ‘புலி’ என்ற கொடிய விலங்கு இருக்கும். அது கூர்மையான நகங்களுடன் இருக்கும் ; வரிகளுடன் இருக்கும் ; நான்கு கால்களுடன் இருக்கும் ; கூரிய பார்வை மற்றும் மீசையுடன் இருக்கும் ; அச்சத்தை உருவாக்கும் ; பதுங்கும் ; பின் பாயும். ஒரே அடியில் கொன்றுவிடும் கவனமாகச் செல்லவேண்டும்” என அறிவுறுத்தினாள்.  “சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று வீட்டை வீட்டு வெளியே சென்றவன் ஐந்தே நிமிடத்தில் ஓடி வருகிறான்.

“பாட்டி நீ சொன்ன மிருகம் வந்துவிட்டது. அதனால்தான் வந்துவிட்டேன்.” எனப் பதற்றத்துடன் கூறினான். “எங்கே இங்கெல்லாம் புலிவராதே. சரி ! வா,” எனத் தீப்பந்தத்தை எடுத்துச் செல்கிறாள். “புலியைக் காணவில்லையே” என்றாள். அப்போது ஓரமாக நின்று “மியாவ் மியாவ்” என ஒரு விலங்கு கத்துகிறது. “இதோ நீங்க சொன்ன புலி என்றான் பேரன். “அடக்கோழையே ! இது, புலியில்லை பூனை” என்றாள். “கொடியில் சிக்கிக்கொண்டிருக்கிறதே” எனக் கூறிக்கொண்டே அந்தப் பூனையைக் கொடியிலிருந்து விடுவித்தாள். பூனை நன்றி கூறுவதுபோல் அவளுடைய காலைச் சுற்றிவந்து ஓடிவிட்டது.  

இரண்டு நாள் ஓடியது. பேரன் மறுபடியும் பாட்டியிடம் விடைபெற்றுச்செல்கிறான்.  . அப்போது காட்டின் வழியே செல்லும்போது ஒரு புலி பள்ளத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது. உடனே, தன் பாட்டி உதவி செய்ததை எண்ணி, பக்கத்திலிருந்த நீளமான மரக்கட்டையை எடுத்து சறுக்குமரம்போல் போட்டான். புலி, உடனே எளிமையாக அக்கட்டையில் ஏறிவந்து, ஒரே அடி அடித்து அவனைக் கொன்றுவிட்டது. பேரனின் அறியாமையே அவனைக் கொன்று விட்டது. ஒவ்வொரு விலங்கின் இயல்பினை அறிந்துகொண்டால் மட்டுமே அந்த விலங்கிடமிருந்து காத்துக்கொள்ளமுடியும்.

     ஒரு விலங்கின் இயல்பை அறியாதவனே கொல்லப்படுகிறான் எனில், பல விலங்கின் இயல்பினைக் கொண்ட மனிதர்களுடன் பழகும்போது எப்படி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அப்படி எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் என்னாகும், என்பதனை,

     வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்குஅதனுக்கு ஆகாரம் ஆனாற்போள் - பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம். (மூதுரை-15)

 

என்னும் பாடலின்வழி தமிழ் மூதாட்டி ஔவையார் அழகாக உணர்த்திவிடுகிறார்.

மருத்துவர்கள், தம்முடைய அறிவால், பிறருடைய  உயிரைக்காத்து நிற்கின்றனர். அதனால்தானே, அவர்களைக் கடவுளாக எண்ணுகிறோம். மிகவும் கருணை உடையவர்களாக வாழும் மருத்துவர்கள் பிற உயிர்களின் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பாதுகாப்பையும் உணரவேண்டும்தானே? உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? எளிமையாகப் புரிந்துகொள்வீர்கள்.

     ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமையாக்க, இந்திய வீரர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்கள், ஆயுதமில்லாத இந்தியர்களை ஆயுதம் கொண்டு தாக்கி ; துன்புறுத்தி ; சித்திரவதை செய்து கொன்றுகுவித்த காலம். துணிவுடன் எதிர்த்த தலைவர்களின் தலையைக்கொய்து, நடு சாலையில் பல நாட்கள் தொங்கவிடுவர். இவ்வாறு அச்சத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்திய கோழைகளாகவே ஆங்கிலேயர் விளங்கினர்.  நெல்மணிகளை பயிரிட தடைவிதித்து வறுமையில் உழலவைத்தனர். வணிகம் செய்யவிடாமல் தடுத்தனர். தலைப்பாகையுடன் பெருமிதத்துடன் வாழ்ந்த ஊர்த்தலைவர்களையெல்லாம் ஆயுதத்தால் தாக்கி, அச்சத்தை ஊட்டி, ஆடையைக் கழற்றி ஓடஓட விரட்டியடித்தனர். நம் நாட்டில் காட்டிக்கொடுக்கும் குணமுடைய சிலரைத் தம்முடன் வைத்துக்கொண்டு, விடுதலை வீரர்களை வேட்டையாடினர்.

ஒரு முறை, விடுதலை வீரர்கள் இருவரைத் துரத்திக்கொண்டு ஆங்கிலப்படை வீர்ர்கள் (அவர்களுள் பலர் இந்தியர்கள்தான் ஆங்கிலேயரிடம் இருந்துதப்பிக்க அவர்களுடன் கூட்டுசேர்ந்து காட்டிக்கொடுத்தவர்கள்)  வருகின்றனர். ஒரு வீட்டிற்குள் இரண்டு வீரர்களும் நுழைந்துவிடுகின்றனர். அங்கு நின்ற பெண்மணியிடம் “நாங்கள் விடுதலை வீர்ர்கள், எங்களை ஆங்கிலப்படை துரத்துகிறது” எனக் கூறுகின்றனர். அந்தத்தாய், அவர்களை தானிய அறையில் மறைந்துகொள்ளும்படி கூறித்தாழிட்டுவிடுகிறாள். கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. அவள்,  படபடப்புடன் கதவைத் திறக்கிறாள். “என்ன, இங்கே ஓடிவந்த இரண்டு பேர் எங்கே?” எனக் கேட்கின்றனர். “இதோ எனக் கைகாட்டுகிறாள். போர்வைக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என எண்ணி பல குண்டுகளால் இருவரையும் சுட்டனர்.  “இனி, விடுதலை வீரன் என எவர் வந்தாலும் இடம்கொடுக்கக் கூடாது” எனக்கூறிச் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றதை உறுதிசெய்துகொண்டு தாழினைத் திறக்கிறாள். வெளியே வந்த வீரர்கள், அங்கே இறந்துகிடந்த இரண்டு இளைஞர்களைக் கண்டு “தாயே ! யார் இவர்கள்?” எனக் கேட்கிறார்கள். “என்னுடைய இரண்டு மகன்கள்” என்கிறாள். “ஏன்? எங்களைக்காட்டிக்கொடுக்காமல் எங்களைக்காக்க உங்கள் மகன்களை இழந்த்தீர்” எனக் கேட்கிறான். “என்னுடைய மகன்களை இழப்பதால் எனக்கு மட்டுமே இழப்பு. ஆனால், உங்களைப்போல நாட்டின் விடுதலைக்காகப் போராடும் வீரர்களை இழந்தால் நாட்டிற்கே இழப்பாயிற்றே”. எனக்கூறி அழுகிறாள். உள்ளம் நெகிழ்ந்த வீரர்கள், “உம்போன்ற வீர்த்தாய்மார்களால்தான் நாடு விடுதலைப்பெறப்போகிறது” எனக்கூறி, காலில் விழுந்து வணங்கி விடைபெறுகின்றனர். என்ன எங்கிருந்து எங்கோ தாவிவிட்டீர் என்கிறீரா. எல்லாம் காரணமாகத்தான். இரக்ககுணத்தை நல்லோரிடம் காட்டலாம் தீயோரிடம் காட்டக்கூடாது. காட்டினால் என்னாகும் என்றுதானே கேட்கிறீர்.?

விடத்தை நீக்கும் மருத்துவர், பாம்பு கடித்த புலியின் விடத்தை நீக்குகிறார். விடம் நீங்கியபுலி மருத்துவரையே அடித்துக்கொன்றுவிடுகிறது. இவ்வாறு, நன்றி உணர்வில்லாதவர்களுக்கு ஒருவர் உதவிசெய்தால், மண்ணால் செய்யப்பட்ட கலத்தைப்பாறையில் போட்டு உடைப்பதைப்போல அவ்வுதவியினை மறந்து உதவிசெய்தவர்க்கே கேடு செய்வர் என விடை சொல்கிறார் தமிழ்முதாட்டி. பாட்டி சொல்லைத் தட்டலாமா? தட்டக்கூடாதுதானே?.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக