தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 23 ஜூலை, 2021

தாய் கடவுளன்று ; தாய் தாய் தான்

 


தாய் கடவுளன்று ; தாய் தாய் தான்

     பலாப்பழத்தையே அறியாதவனிடம், மாம்பழம்போல் பலா இனிக்கும் எனக்கூறினால், அது உண்மையாகவா இருக்கும்? இல்லைதானே !. ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளைக் கூறிவிட்டால் அப்பொருளினை முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது ; அறிந்தாலும் தவறாகிவிடும். கடவுள் அனைத்து உயிர்களையும் ஒன்றுபோல்காப்பவர் ; தாய் அப்படியன்று. தன்னுடைய குழந்தை என்னும் தன்னலம் எப்போதும் அவளுக்குள் உயிர்போல் ஒளிந்திருக்கும். இன்னொரு குழந்தையை தன் குழந்தை அடித்துவிட்டாலும் தவறென ஒப்புக்கொள்ளாத மனம் தாய்மனம்.   தன்குழந்தை யாரையாவது அடித்துவிட்டால், அப்போதும் வேறுகுழந்தையே தவறு செய்ததாகப் பேசுவதே தாயுள்ளம்.

     ஒரு தாயனவள் பள்ளி முதல்வரிடம், “என்மகனை அவன் வகுப்புத்தோழன் ஒருவன் நகத்தால் முகத்திலே கீறிவிட்டிருக்கிறான். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என வேகமாகப் பேசினாள். மகனோ திருவிழாவில் காணாமல்போனவன்போல் விழித்துக்கொண்டிருந்தான். முதல்வர் உடனடியாக வகுப்பாசிரியரை அழைத்தார். “நானே உங்களிடம் சொல்லலாம் என்றுதான் வந்துகொண்டிருந்தேன். இப்போதுதான் இவனுடன் சண்டையிட்ட மாணவனுக்குக் கையில்கொட்டிய குருதியைத் (ரத்தத்தை) துடைத்துவிட்டு வந்தேன். இவன் அவனுடைய கையை கடித்ததிலே அப்படியாகிவிட்டது” என்று தாயுடன் நின்றிருந்த சிறுவனைப் பார்த்துக்கொண்டே கூறினார் ஆசிரியர். அதுவரை வானைக் கிழித்த தாயின் குரல் மெலிதானது. மகனைப் பார்த்து, “என்ன கண்ணா! ஏன் அவன் கையைக் கடித்தாய்” எனக்கேட்டாள். அப்போதும் முழித்துக்கொண்டிருந்தான். பின் முதல்வரைப் பார்த்து ‘குழந்தைகள் அப்படித்தான் அடித்துக்கொள்வார்கள்” எனச்சொல்லி அமைதியாக அங்கிருந்து நழுவிச்சென்றாள். “அடுத்து வரும் பெற்றோர்க்கு என்சொல்வேன்” என முதல்வரும் பெருமூச்சு வாங்கினார். இதுவும் தாயன்புதானே?

     ஒரு கலைஞர்,  தாயன்பின் வலிமையினை படம் வழியே காட்டிச்சென்றார். சொல்லட்டுமா?. ஒருவர் ஆட்டினை முழுமையாகவாங்கினார். மகிழ்வுந்துக்குள் வைக்க மனமில்லாமல் அதனைச் சாகடித்து காருக்குப் பின்னாலே கட்டிவிடச்சொல்கின்றார். அதனைக்காரில்கட்டி இழுத்துக்கொண்டுபோகையிலே அந்த ஆட்டின் குட்டி கொஞ்சதூரம் பின்னால் ஓடி .. ஓடி முடியாமல் நின்றது. அது ‘மே ! மே’ எனத்தாய் உடல் தரையில் இழுத்துக்கொண்டுபோவதனைப் பார்த்து வருந்தியது. கொஞ்சநேரத்தில் மகிழ்வுந்து காணாமல்போனது. அந்தக் குட்டியின் ஒவ்வொரு குரலும் “இது இறைச்சியல்ல. என் தாய்” என்று உணர்த்துவதனைப் படம்பிடித்துக்காட்டினார். இக்குறும்படம், தாயன்பினை காட்சியின் வழியே புலப்படுத்திவிடுகிறது. அந்தக்குட்டி,  பால் குடிக்க முடியாமல் எங்கு செல்லும்? தாயின்றி வாழ்வேது? சாகும் வரை வாழ்வதற்குக் கற்றுக்கொடுப்பவள் தாய்தானே? இவ்வாறு, பல எண்ணங்கள் வந்துபோகும்.

     தாயில்லாத ஒரு உயிர் உலகில் உண்டா? இல்லைதானே. எத்தனை துயரம் இருந்தாலும் குழந்தைமுகம் பார்த்தபின்னே அத்தனை துயரத்தையும் மறந்துவிடுபவள் தாய்தானே. அதனால் பத்து ; எட்டு ; ஐந்து  ; இரண்டு என எத்தனையோ தாய்மார்கள் குழந்தைகளைப் பெற்றதனை ;  பெறுவதனைக் காணமுடிகிறது. பத்துத்திங்கள் குழந்தைகாக உணவுண்டு ; ஒருபக்கமாக உறங்கி ; நடைதளர்ந்து வாழ்ந்த பெருமைக்கு ஈடேது. அவளின்றி  இவ்வுலகம் செழித்திடுமா? எனவே, நம்நாட்டை ‘தந்தைநாடு’ எனக்கூறாமல் ‘தாய்நாடு’ எனச்சான்றோர்கள் குறிப்பிட்டனர்.  போராடிக்காத்தால்தான் நாடு வளமாகும் என எண்ணியே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் என எண்ணத்தோன்றுகிறது.

      “காதற்ற ஊசி கூட நீ இந்த உலகை விட்டுச்செல்லும்போது வராது” என மகனாய் வந்த குருவின் சொல்கேட்டு பொன்னை ; பொருளை ; உறவை ; வரவை  என அனைத்தையும் துறந்தார் பட்டினத்தார்.  ‘துறந்தால் பட்டினத்துப்பிள்ளையைப்போல் துறத்தல் அரிதெனச்’ சான்றோர்கள் பாடும் அளவிற்குத் துறந்தவர் பட்டினத்தார். அத்தகைய பட்டினத்தாரே தாயன்பிலிருந்து விடுபடமுடியாதவர் ஆனார். அத்தகைய பெருமையினை உடையவள் தாய். அவளைப் போற்றவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை.

     வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

     கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்

     சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

     விறகிலிட்டுத் தீமூட்டு வேன்           (பட்டினத்தார்)

 

என்னும் பாடலே தாயன்பினை விளக்கிச்சொல்லும். கோழியானது தன் சிறகிடையே குஞ்சுகளைவைத்துக்காப்பதுபோல, தாயானவள் முந்தானை என்னும் சிறகால்மூடி வெயிலிலும் மழையிலும் காத்த அன்பினை பட்டினத்தார் பாடியுள்ளது எத்தனை அழகு.

     இப்படி வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் இட்டு என்னைப் பாதுகாத்தவளை, விறகில் இட்டு தீ மூட்டுகிறேன் எனப்பட்டினத்தார் பாடுவது தாயன்பில் இமயம்தானே?

     காதல் என்பது உயர்ந்தவகையான அன்பு. அச்சொல்லையே தாயன்பிற்கு எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ள அழகினையும் காணலாம்.

     தேசபக்தர்கள்  எத்தனையோபேர் பூமியினையே தாயாக எண்ணி செருப்பணியாமல் நடப்பதனையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். அத்தகையோர் பேரன்பினை ; நன்றியுணர்வை என்சொல்வது?. இதுவும் தாயன்புதானே.

     தாயென்பவள் தாயாக மட்டுமின்றி முதல் ஆசிரியையாகவும் திகழ்கிறாள்தானே. அவள் கற்பிக்காத பாடமில்லை. ‘உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்’ என்னும் சொல்லுக்கு இலக்கணம் அவள். வறுமை தனக்கிருப்பினும் குழந்தைகளின் பெருமைக்கு உழைப்பவள் அவள். ஜோத்பூரில்  ‘ஆஷா கந்தாரா’  என்னும் பெண்மணி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறார். கணவன், விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். குழந்தைகளைக் காப்பாற்ற என்செய்வது? என வருந்துகிறார். தெருக்களைச் சுத்தம்செய்யும் துப்புரவுப்பணிசெய்கிறார்.  ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் படித்து, அஞ்சல் வழியில் பட்டம்முடித்து ;ஆட்சியர் தேர்வும் எழுதி வெற்றிபெறுகிறார். இன்று துணை ஆட்சியராகப் பணிசெய்கிறார். இதுவும் தாயின் பெருமைதானே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக