தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 17 ஜூலை, 2021

தலைமையுரை – இப்படி அமையலாமே

 


தலைமையுரை – இப்படி அமையலாமே

ஆடித்திங்களில் அடி எடுத்துவைக்கும் இனிய இந்நாளில் (17.07.2021) எழிலுற நடக்கும் இவ்விலக்கிய விழாவிற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் ‘தலைமை’ என்னும் முறையில் வருக ! வருக! என வரவேற்கின்றேன்.

     கற்றோர் தம் படைப்புத்திறனை வெளிப்படுத்திச்செல்ல அமைக்கப்பட்ட சாலை இது ;  புதுவையின் இலக்கியச்சோலை இது.

     ஒவ்வொரு திங்களும் பெரியோரைப் போற்றவேண்டிய கடமை நமக்குண்டு என்பதாலே, இவ்வமைப்பின் நிறுவனர் வடுகை கண்ணன் அவர்களும் தலைவர் சோமசுந்தரனாரும் மூன்று தலைவர்களைத் தலைப்பாகக் கொடுத்துள்ளார்கள்.

திங்களுக்கு ஒரு விழா நடத்துகிறோம். இத்திங்கள் விழாவில் மூன்று திங்களைப்பற்றி பேசவேண்டும். ஏனெனில், ‘இலக்கியச்சோலை, என்றுமே எவரையும் கைவிட்டதில்லை’ என்று சொன்னார் தலைவரவர். அப்போதுதான், இச்சோலையில் மலர்ச்செடிகள் மட்டுமன்று ; மூலிகைச்செடிகளும் உண்டு ; பயன் தரும் கொடிகளும் உண்டு. அதனால்தான் பார்போற்றும் திருவள்ளுவர், ‘வீரத்துறவி’ சுவாமி விவேகானந்தர், ‘செயல்வீரர்’ காமராசர்,  என மூன்று திங்க(தலைவர்)களைப் போற்றும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று நினைத்துக்கொண்டேன். இருளில்தானே திங்கள்தோன்றி ஒளிகொடுக்கும். அப்படி ஒளிகொடுத்தவர்களே இம்மூவர். இதைச்சொல்ல இங்கே கவிஞர் கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது.

     பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விரும்பும் ‘மை’ ஒன்று இருக்கிறதென்றால் அது ‘தலைமை’ தான். அதுமிகவும் ஆபத்தானது. எத்தனைப் பாராட்டுகளுக்குரியதோ அத்தனை வசவுகளுக்கும் உரியது. இரண்டையும் ஒன்றாக நோக்கும் பக்குவம் தலைமைக்கு வேண்டும். “பக்குவம் என்றால் என்ன?” என்று உங்களுக்குத் தெரியும்தானே? ஒருவர் குறை சொன்னாலும் அவரைப் பற்றிய நிறைவினைச் சொல்லுவதே பக்குவம். “நீ ஒரு முட்டாள்”  என்று யாராவது சொன்னால், “ஆம், முள் தாள்தான். என்னைக் கிழியாமல் காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு” எனக் கூறிவிடவேண்டும். அப்போதுதான் எதிரிகள் கூட உதிரிகள் ஆவர்.

‘தலைமை’ என்பது எல்லோரையும் படியாக வைத்துக்கொண்டு உச்சியில் ஏறிவிடுவது மட்டுமன்று. ஏறியபிறகு, யாரெல்லாம் படியாக நின்றார்களோ அவர்களையெல்லாம் மேலேற்றி அழகுபார்ப்பது. அதுவே தலைமைக்கு அழகு.  அப்படி முன்னோர் காட்டியவழியில்தான் இவ்விழாவில் பங்கேற்றிருக்கின்றேன்.

     இங்கு பலரும்  பல அரங்குகளில் அழகு சேர்த்தவர்கள் ; கவி வார்த்தவர்கள். இவர்கள் அனைவரும் கவிபாடும் அழகினைக் காண்பதற்கே ஐவர் பெருமக்கள் முன்னிலை வகிக்க வந்துள்ளார்.

     முதலாமவர், இலக்கியச் சோலையின் நிறுவனர் வடுகை. கு.கண்ணன் ஐயா, இவர் பெண்களைப் போற்றுவதில் மன்னன் ; அதனால்தான் இவர் கண்ணன். தன் மனைவிக்கென்றே தனி காவியம் படைத்தவர். பூக்களைப் போல பாக்களைத் தொடுத்தவர்.

இரண்டாமவர்,  கவிஞர் பைரவி, இவர் இல்லாத தமிழ்மேடையினைப் புதுவையில் காண இயலாது. தேனீ கூட இவரிடம் தோற்றுப்போகும் எனச் சொன்னால் மிகையாகத்தான் இருக்கும். ஆனால், இவருக்கும் தேனீக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கும் தேனீ போல இவர்  கவிஞர்களைக் கூட்டி விழா எடுப்பதில் வல்லவர் ; எம் போன்றோரிடம் பழகுவதில் நல்லவர்.

மூன்றாமவர், சரஸ்வதி வைத்தியநாதன. இவர் பெயரொன்றே இவ்விழா சிறப்படைய வழி செய்யும். தமிழ்ப்பணியைத் தளராமல் செய்பவர். விழாக்களில் பங்கேற்பார் ; கவி தொடுப்பார் ; விழா நிறைவு வரை செவிமடுப்பார்.

நான்காமவர், பேராசிரியர் உரு.அசோகன். பெயருக்கு ஏற்ற புன்னகை முகம் கொண்டவர். இவரிடம், யார் சோகமாக வந்தாலும் அசோகமாக மாற்றிவிடுவார். பின்னாளில், ‘இவர் இப்படித்தான் இருப்பார்’ என உணர்ந்து பெயர் வைத்த தீர்க்கதரிசியான பெற்றோர்க்குப் பாராட்டுக்கள்.

ஐந்தாமவர், கவிஞர் ரவி, இவர் வராமல் உலகம் விடியாதுதானே?.  எழுச்சியை உண்டாக்கும் கவிதைகளைப் பாடும் திறம் படைத்த கவிஞர்  இவர்.

அருமையான திறம் படைத்த முன்னோர்கள் முன்னிலையில் திறமையான கவிஞர்கள் மூவரைப் பற்றி முறையாகப் பாடவந்துள்ளீர். திறம் படைத்த கவிஞர்களே! உங்கள் கவிதையினால் நீங்கள்தான் யாரென்று நானறிவேன். இனி இந்த புவியறிவும். வாழ்த்துக்கள் பல சொல்லி மகிழ்கின்றேன்.

முக்கனிபோல் மூவர் குறித்துச் சிலசெய்தி சொல்வதுதான் தலைமைக்கு அழகாகும் என்பதாலே சொல்கின்றேன்.

திருவள்ளுவர்,  வெண்பாவில் பண்பாட்டை எடுத்துச்சொல்ல இவரைப்போல் பலருண்டு.  ஆனால்,

இரண்டடியில் மூவுலகை அளந்தவரும் இவர்தான்.

பூவுலகில் இவரைப்போல் பாடியவரே எவர்தான்?.

கிணற்றினிலே நீர் இரைக்கின்ற போதினிலும்

இவர்குரலைக் கேட்டுத்தான் ஓடிவந்தார் வாசுகியே

கணவரவர் குரல்கேட்டு அந்தரத்தில் விட்டுவிட்ட

பாத்திரமும் வீழாமல் நின்றதுவே,  ஏனென்றால்

‘பா’திறத்தால் பாடிய வள்ளுவரின் மனைவியன்றோ!

என் மனைவியை நானழைத்தால் பாத்திரத்தை

விட்டுவிட்டு ஓடித்தான் வருவாளா? அறியேனே!

தொடரில்வரும் பாத்திரத்தை விட்டுவிட்டு வாராளே

மற்றகதை என்சொல்வேன். நீரே உணர்வீர்.

 

அடுத்து, இரண்டாமவர் வீரத்துறவி விவேகானந்தர்,

 

இளமையிலே துறவாடை அணிவதென்றால்

பெரும் வீரம் குறையாமல் வேண்டுமன்றோ

‘இளமயிலே’ எனப் பெண்பின்னால் ஓடும்பருவத்தில்

ஆவி உள்ளவரை காவிகட்டிய பெருமகனார்.

நீச்சல் வீர்ர்களும் தயங்கிடும் கடலினிலே

அஞ்சாமல் நீந்தித்தான் தவம்செய்தார் குமரியிலே

அழகான பெண்ணொருத்தி இவர்முன்னே வந்துநின்றாள்

பேசும்ஆங்கிலத்தில் மயங்கினளோ, பேசாஆன்மீகத்தில் மயங்கினளோ

‘உங்களை நான் விரும்புகிறேன்’ என்று சொன்னாள் விருப்புடனே

‘ஏன்என்னை விரும்புகிறாய்’ எனக்கேட்டார், உண்மைத்துறவியவர்

‘உம்போல ஒருபிள்ளை’ நான்பெறவே வேண்டுமென்றாள்.

இதற்காக ஏன்நீங்கள் காத்திருக்கவேண்டுமென, உவப்புடனே

‘இக்கணமே என்னைமகனாக ஏற்பீர்’ என்றார்.

இம்முத்தான சொற்களைச் சொல்வதற்கு இப்புவியில்

எவரேனும் உண்டோ? சொல்வீரே பெருமக்காள்.

 

மூன்றாமவர், செயல் வீர்ர் காமராசர்

 

     பெயருக்கேற்றார் போல் கலியுகத்தின் ராசாதான். (காமராசர்)

எத்தனையோ ஆடு மேய்த்த ரோசாக்களை

வாடாமல் அழைத்துவந்து பள்ளியிலே படிக்கவைத்தார்.

தான்பெறாத கல்வியினைப் பிறர்பெறவே வழிவகுத்தார்.

கற்றோர்தம் நிலம்உயர என்செய்ய வேண்டுமென

     அறியாத வேளையிலே தொழிற்சாலை பாலமென

எத்தனையோ நன்மைசெய்தார்.: இவர்போலே ஒருவருண்டோ?

     “முதல்வரே வந்தாலும் முறையில்லா திரையரங்கு

திறப்பதை நான்சம்மதியேன்” என்றே சொன்ன

ஆட்சியரை மாற்றம்தான் செய்ய வில்லை

வீட்டிற்குச்சென்று முழுமனதாய்ப் பாராட்டி மகிழ்ந்தாரே.

ஆட்சியரின் குழந்தையிடம் தந்தைபோல் வரவேண்டும்என

வாழ்த்து சொன்ன பாங்கினையே என் சொல்வோம்.

 

இப்படி முத்தான செய்திகள் பலவுண்டு. நல்ல பூக்களைத் தேர்ந்தெடுத்துக் கட்டுவதுபோல் அழகான சொல்லையெல்லாம் கோத்துகோத்துக் பாமாலை செய்துவந்தீர். கவிஞர்களே ! கவிஞர் கந்தசாமி, ‘வேலுநாச்சியார்’ கலைவரதன், கவிஞர் குப்புசாமி, சிவத்திரு மண்ணாங்கட்டி அம்மையார், கவிஞர் ஞானசேகரன் ஐயா, கவிஞர் கலியன் ஐயா மற்றும் அனைத்துக் கவிஞர்களுடைய கவிதைகளைக்கேட்க ஆவலுடன் நிற்கின்றேன்.

     இந்த அருமையான வாய்ப்பினை அளித்த இவ்விலக்கியச்சோலையின் தலைவருக்கும் ; நன்றியுரை நவிலக் காத்திருக்கும் சிவநேசர் ; நாள் தவறாமல் நற்செயல்கள் பலவற்றை செய்துவரும் தொண்டுள்ளம் படைத்த ஐயா சோமசுந்தரனார் அவர்களையும் வணங்கி விடைபெறுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக