தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 12 ஜூலை, 2021

 


ஆமை புகுந்த வீடு உருப்படும்

     தண்ணீருக்கு உருவம் உண்டா? இல்லைதானே. ஆமையின் வீடு நீருக்கு அடியில்தானே? அதற்கு மட்டும் எப்படி உரு அமையும்.  நீர் வற்றிவிட்டால்தானே உரு அமையும். அப்படியென்றால் “ஆமை புகுந்த வீடு உருப்படாது” என்பது நன்மைக்காகத்தானே சொல்லப்பட்டிருக்கிறது. இதனை எதிர்மறைக்காகப் பயன்படுத்துவது அறியாமைதானே.

கடல் உருப்படாதவரைதான் நன்று. இயற்கை மாற்றத்தால் கடல் உறைந்து உருபட்டால் உலகமே உருப்படாமல் போய்விடுமே. கொஞ்சம் பொறுமையானவர் கிடைத்தால்போதும், இழிவாகப் பேசி விடலாம் என்னும் நினைப்பு வந்துவிடுகிறது. மரம் திருப்பி அடிக்காது என்னும் எண்ணத்தால்தானே காய்த்தமரத்தில் கல்லடிக்கிறார்கள்.  காயாத மரத்தில் கிளை ஒடிக்கிறார்கள். நாய்களை ;ஓணான்களை, மாடுகளை, பறவைகளை அடிக்கிறார்கள் என்றால் என்ன பொருள்?. அவை அனைத்தும் திருப்பி அடிக்காது ; காவல் நிலையத்தில் புகார் சொல்லாது ; நீதிமன்றத்தில் வழக்கிடாது என எண்ணுவதால்தானே. உழவுத்தொழிலுக்கு நண்பன் மண்புழு மட்டுமன்று, சிலந்தி, பாம்பு, தவளை என அனைத்தும்தான். அனைத்தையும் மனிதன் கொன்றுவிட்டு ‘உழவுத்தொழிலில் வளர்ச்சியில்லை’ என்பது எத்தனை அறியாமை.

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வகையில் இயற்கையோடு பின்னப்பட்டிருக்கிறது. இதை உணராமல் முடிந்தவற்றை எல்லாம் கொல்வது அறியாமை. இதனைக் கற்பிக்கவேண்டியது யார் கடமை?. ஒவ்வொருவரும் தம் முயற்சியால்தான் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ எல்லாவற்றையும் கற்பித்துவிடுவார்கள் என நினைப்பதும் தவறு. சரி, ஆமைக்கு வருவோம். ஆமையை வளர்ப்பவர்கள் இன்று ஒரு வணிகமாகவே அதனைச் செய்துவருவதனையும் காணமுடிகிறது.

‘பொறுத்தார் பூமியாள்வார்’, ‘நிதானமே பிரதானம்’, ‘விவேகமே வெற்றி தரும்’. என எத்தனையோ பொன்மொழிகள் ஆமை சொல்லிவிட்டுத்தானே சென்றிருக்கிறது. ஆனால், ஆமைக்கு மனிதர் சொன்னபாடம் என்ன? “அகப்பட்டால் உணவுக்காகவோ, மருத்துவத்திற்காகவோ கொன்றுவிடுவோம்” என்பதே. உயர்ந்த பாடத்தை அஃறிணை தானே கற்பித்திருக்கிறது.

ஆமை, தண்ணீரிலும் வாழும் ; நிலத்திலும் வாழும்.  உடல் வெப்ப நிலையினை மாற்றிக்கொள்ளும் குளிர் இரத்த விலங்கு இது. அதன் ஓடே கவசம். நூறாண்டுகள் ஆனாலும் அவற்றின் ஈரல், நுரையீரல், சிறுநீரகம் இளமையோடு இருக்கும். இவை அனைத்தும் மனிதனுக்குப் பாடம்தானே. அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளவேண்டும். சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும். தன்னைக்காத்துக்கொள்ள தானே கவசம் என்பதனை உணரவேண்டும். எத்தனை வயதானாலும் உடலால் இயலாவிடினும் உள்ளத்தாலேனும் இளமையுடன் வாழவேண்டுமென வழிகாட்டுகிறது.

ஆமையை வென்றுவிட்டதாக ‘ஆமை-முயல்’ கதை கூறுவதுண்டு. போட்டி எனில் ஒரே தகுதியுடையவர்களுக்கிடையேதானே அமையவேண்டும். அதுவும் மனிதர்களுக்கிடையே போட்டி எனில், வயது ; பால் என எத்தனையோ வகைப்பாட்டுடன்தானே போட்டி நடக்கிறது. ஆனால், விலங்கு என்பதால், ஆமைக்கும் முயலுக்கும் போட்டி வைக்கின்றனர். மனிதன் சேவலை, ஆட்டினை, காளையை மோதவிட்டுப் பார்ப்பதில் வல்லவன்தானே. ஆமையை விடுவானா?

அப்போது கூட தளராத ஆமை, போட்டியில் வெற்றிபெறுகிறது. “வென்றால் பெருமை இல்லாமல் கூட போகலாம். தோற்றால், சிறுமை ஏற்படப்போவதில்லை” எனத் துணிந்து களத்தில் இறங்குகிறது. எத்தனையோ வேகமாக ஓடும் விலங்குகள் எல்லாம் கூட ஒதுங்கிக்கொண்டன. அப்படியெனில், “தோல்வி கூட ஒரு பரிசுதான்” என்னும் தன்னம்பிக்கையை ஆமை வளர்த்துக்கொடுக்கிறது. போட்டியில் கலந்துகொள்ளாதவர்களைவிட கலந்துகொண்டவர்கள் பெருமையுடையவர்கள்தானே.  ஆமையானது, “கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே” என்னும் பொன்மொழியைப் பாடமாகக் கொண்டு முயலை வென்று காட்டியது. ஆமை கற்பித்த அழகியபாடம்தானே.   

     பெண்ணின் பெருமையினையும் ஆமை சுட்டிக்காட்டிவிடுகிறது. எப்படி? என்றுதானே கேட்கிறீர்.  பெண் ஆமைகளே அதிக வெப்பம் தாங்குவனவாக இருக்கின்றன. ஆமை இனத்திலும் பெண் இனமே வலிமையானது. இயற்கை கொடுத்தவரம்தானே அது.

     இதுவரை  அறிந்தது, ஆமை கற்றுக்கொடுத்த உலகியல் பாடம். இனி ஆமை கற்பிக்கும் அருளியல் பாடத்தைக் காண்போமா? இறைவனை மனத்தால் எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். எண்ணம், சொல், செயல் யாவற்றிலும் இறைவனையே எண்ணவேண்டும். எண்ணம் ஒன்றினால் இறைவனைக் காணமுடியுமா? என்றுதானே கேட்கிறீர்கள். இதோ சிவவாக்கியவர் உங்களுடைய ஐயத்தைத் தெளிவிக்கிறார்.

     கடலிலே திரியும்ஆமை கரையிலேறி முட்டையிட்டு

     கடலிலே திரிந்தபோது ரூபமானவாறு போல்

     மடலுளே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை

    உடலுளே நினைத்துநல்ல உண்மையானது உண்மையே                                                                      (சிவவாக்கியர்.பா.100)

என்னும் பாடலில், மண்ணிலே முட்டையிட்டுவிட்டு கடலுக்குள் சென்றுவிடும் ஆமையானது, நினைவிலேயே அடைகாத்து முட்டையைப் பொரித்துவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சானது கடலினை நோக்கிச்சென்று தாயை அடைந்துவிடும். எப்படி? எனக் கேட்காதீர். இயற்கையின் வலிமை அப்படி என உணர்வீராக. “அந்த ஆமையைப் போலவே உள்ளத்தில் இறைவன் உள்ளத்தில் இருப்பதாக உணர்ந்து போற்றினால் இறைவன் வந்துறைவார்” எனப்பாடியுள்ளது எத்தனை அழகு.  

     உள்ளத்தில் இறைவன் இருப்பதாக நினைத்துவிட்டால், நாட்டில் குற்றங்கள் நிகழாது. உள்ளம் தீயவழி பழகாது. ஆமை சொல்லும் பாடம் எத்தனை எத்தனை. இயலாமை, முயலாமை, கல்லாமை, பொறாமை, அறியாமை என அத்தனை ஆமைகளையும் வெல்ல வழிகாட்டுவதால்தான் இது ஆமை எனப் பெயர்பெற்றதோ?

ஆமையைப் போல் அடக்கம் உடையவர்க்கு அனைத்து நலனும் வாய்க்கும் எனில் ஆமை புகுந்த வீடு உருப்படும்தானே?.  மந்திரமலையால் பாற்கடலைக் கடைந்தபோது திருமாலே ஆமை வடிவில் “கூர்ம” அவதாரமாக தாங்கிநின்றாரே. இனி ஆமையைக் குறைசொல்வதை விட்டுவிடலாம்தானே? வைரக்கல்லை ‘கல்’ என நினைத்துத் தூக்கி எறியலாமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக