தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

எப்படி வாழ்வது? – நல்லாதனார் காட்டும் வழி

 

 

எப்படி வாழ்வது? – நல்லாதனார் காட்டும்  வழி.

நல்ல வழி காட்ட நல்லாதானார் பொருத்தமானவர்தானே. செல்வந்தர் ஒருவர் தன்னுடைய நிறுவனத்தின் பொறுப்புகளை ஒப்படைக்க நம்பிக்கையான ஒருவரைத் தேடுகிறார். “நகரத்தைவிட கிராமத்தில்தான் நல்லவர்கள் இருப்பார்கள்” என ஒருவர்கூற, செல்வந்தர் கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு ஒருவர் பண்ணையார்போல் அமர்ந்திருக்கிறார். “ஐயா, உங்களைப் பார்த்தால் இந்த ஊர் பெரியவர்போல் தெரிகிறது” என்றார். “யார் சொன்னது? அப்படியெல்லாம் முடிவெடுத்துவிடாதீர்.  இந்தப் பண்ணை என்னுடையது அவ்வளவுதான்” என்றார் பண்ணையார். “ஐயா, உங்களுடைய உண்மையான பேச்சு எனக்கு நம்பிக்கை தருகிறது. நீங்கள்தான் எனக்கு உதவமுடியும்.” என நினைக்கிறேன்” என்றார். “கேளுங்கள். முடிந்தால் உதவுகிறேன்” என்றார் பண்ணையார். “நம்பிக்கையான ஒருவரை என்னுடைய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில்விடவேண்டும். அதற்காகத்தான் வந்தேன்” என்றார். “அப்படி ஒருவரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை” என்றார். “உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா” எனக்கேட்டார். “எனக்கு எட்டுப் பிள்ளைகள்” என்றார் பண்ணையார்.  “அப்படியா? உங்கள் பிள்ளைகளில் ஒரு நல்ல பிள்ளையை என்னுடன் அனுப்புங்களேன்” என்றார். “அதோ அந்தக் கூரையின் மீது தீ வைக்கிறானே அவன்தான் என் பிள்ளைகளிலேயே மிகவும் நல்லவன்” என்றார் பண்ணையார். அடுத்தநொடி செல்வந்தர் காணாமல் போகிறார்.

இப்படித்தான் நல்லவர்கள் எல்லாம் நாளுக்குநாள் குறைந்துவருகின்றனர். மதிப்பும் மரியாதையும் எதிர்பார்க்கவேண்டிய பொருளாகிப்போனது. “ஏன் மரியாதைக் கொடுக்கவேண்டும்?. வெளிநாடுகளில் பெயர் சொல்லித்தானே அழைக்கிறார்கள். பெயரே அதற்காகத்தானே இருக்கிறது” எனக் கேட்கும் இளைஞர்கள் பலர். வெளிநாடுகளில், உறவுகளின் அருமையினை உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. அதற்குக் காரணம் அவர்களுக்கென்று நிலையான வாழ்வு கிடையாது. இன்று ஒருவர் ; நாளை மற்றொருவர் என  உறவுகளை மாற்றிக்கொண்டே இருப்பர். அதனால் பெயர்மட்டுமே அவர்களுடைய உறவுக்குப் பாலமாக அமையும். அதனால்தான், பெயரிட்டு அழைப்பர். ஆனால், நம்மிடையே உறவு முறைகள் உண்டு, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், அத்தை என அழைப்பதே எத்தனை அழகு. பண்பாடு மாறாத கோவை மக்கள், அனைவரையும் அக்கா, அண்ணன் என்றுதானே அழைக்கிறார்கள். கேட்பதற்கே செவிகள் இனிக்கிறதுதானே?

ஓர் இளைஞர் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிசெய்வார். எத்தனையோ அவசர ஊர்திகள் வந்தவண்ணம் இருக்கும். பலதரப்பட்ட நோயாளிகளை இறக்கிச்செல்லும். செவிலியர்களோ, வண்டியைத்தள்ளிச்செல்லும் பணியாளர்களோ வரக்காலதாமதாமானால் உடனே இவர்சென்று நோயாளியை வண்டியில் ஏற்றி மருத்துவரிடம் கொண்டுசெல்வார். சனி, ஞாயிறு எப்போது வரும் எனக் காத்திருக்கும் பணியாளர்களும் உண்டு. தவறாமல் துணைக்கு வரும் இளைஞரை எதிர்பார்த்திருப்பார்கள்.

விபத்தில் சிக்கிய நோயாளிகளானால், விபத்தில் சிக்கிய உறவினர்கள் பதற்றத்தில் இருப்பர். அப்போது அவர்களால் விண்ணப்பப்படிவத்தை எழுத இயலாது. இவர் விவரங்களைக் கேட்டுஎழுதி உடனடியாக மருத்துவம் பார்க்க வழிசெய்வார். மருத்துவமனை வளாகத்தைத் தூய்மை செய்வார். அதனால்தான் நோய் உண்டாகிறது என்பதனை உணர்ந்தவர்தானே அவர். வறுமையிலிருக்கும் நோயாளிகளின் உறவினர்க்கு உணவளிப்பார். எத்தனையோ மருத்துவர்கள் இளைஞர் செய்யும் பணியைப் பார்த்து வியப்படைவர்.

“உனக்கு என்ன உதவி வேண்டும் கேள்” என்றுகூட பலர் கேட்டிருக்கிறார்கள். அப்போது மட்டுமே “தான் பல இலட்சங்கள் வருமானம் பெறுவதையும் இப்பணியை இலட்சியத்துக்காகச் செய்கிறேன்” என்றும் கூறுவார். “எத்தனையோ பாதுகாப்புப்படைவீர்ர்கள் இரவு பகல் பாராது நம் நாட்டைக் காக்கின்றனர். எத்தனையோ மருத்துவர்களும், எத்தனையோ ஓட்டுநர்களும், எத்தனையோ உழைப்பாளிகளும் இரவைப் பகலாக எண்ணி உழைக்கிறார்கள். அவர்களைப்போல் முடியாவிட்டாலும் விடுப்பு நாட்களில் நேரடியாக இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என எண்ணுகிறேன். எனவே இப்பணியைச் செய்கிறேன்” (என்பான் தவறு) என்பார் அவ்விளைஞர்.

அந்த இளைஞரை அவனுடன் பணியாற்றுவோர் ‘துறவி’ என்றே அழைப்பர். ‘சாமியார்’ எனக் கேலிபேசுவர். அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் சமூகப்பணியினைச் செய்துவந்தார் அந்த இளைஞர். “தொழுநோயாளிகளின் கால்களைக் கழுவும்போது இறைவனை வணங்குவதாகவே உணர்கிறேன்” என்றார் ,மெகர்பாபா என்ற ஞானி. தொழுநோயாளிகளுக்கு, ஏழைகளுக்கு என்றே வாழ்நாளை அர்ப்பணித்தவர். தான்பெற்ற செல்வமான நிலங்களை ; சொத்துக்களை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுச்சென்றார். நாற்பத்து நான்கு ஆண்டுகள் மௌனமாக இருந்த குருவாதலால் “தி சைலண்ட் மாஸ்டர்” என அழைத்தனர். அவரை எத்தனைபேர் கொண்டாடினார்கள். இன்றைய தலைமுறைக்கு அவர்பெயர் தெரியுமா? அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைபட்டாரா? இல்லைதானே?

நற்பணி செய்வோரை எளிதில் மற்றவர்கள் காயப்படுத்திவிடுவார்கள். அதைக்கேட்டு நற்பணியை நிறுத்திவிடுவது நன்றன்று. ஒருவர் உணவுதானம் செய்வதனை சிலர் எதிர்ப்பர் ; பள்ளிக்கூடம் கட்டுவதனை எதிர்ப்பர் ; நூலகம் கட்டுவதனை எதிர்ப்பர்.  இந்த எதிர்ப்புகளால் நற்பணிகள் தடைபட்டால் இழப்பு மக்களுக்குத்தானே. ஆனால், இன்றைய எதிர்ப்பை பற்றி கவலைப்படாது, நாளைய தலைமுறை வாழ்வை எண்ணி நற்பணி செய்யும் நல்லோர்களாலேயே நாடு நலம்பெறுகிறது.

அத்தகைய சகிப்புத்தன்மை ஒவ்வொருவரிடையேயும் வளரவேண்டும். மெதுவாகச் செல்லும் ஆமையையும் நத்தையையும் கேலி பேசுவோர்கள்கூட, பொறுமைக்கு எடுத்துக்காட்டாக அவற்றைத்தானே எடுத்துக்காட்டுவர். வீட்டினையே சுமந்துசெல்லும் அவ்வுயிர்களைக் கேலி பேசலாமா?

இதுதான் வாழ்வதற்கான வழிமுறை என்கிறார். இகழுரையைக் கேட்டாலும், புகழுரையே என எண்ணுங்கள். எளிய உணவாயினும், விருந்தென எண்ணுங்கள். பாகல்காய் எனினும் தேங்காய்போல் எண்ணுங்கள். இவ்வாறு வாழ்வோர் இவ்வுலக வாழ்க்கையிலும் சிறப்பர். இறைவனாகிய மெய்ப்பொருளைக் கண்டும் சிறப்பர் என்கிறார் திரிகடுகம் இயற்றிய நல்லாதானார்.

வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த

சோறென்றே கூழை மதிப்பானும் – ஊறிய

கைப்பதனை கட்டி என்று உண்பானும் இம்மூவர்

மெய்ப்பொருள் கண்டு வாழ்வர் (திரிகடுகம் -48)

எனப் பாடுகிறார். பிறர் வசைச்சொல் கூறுவதனை இன்சொல் எனக்கொள்ளவேண்டும். ஏழைகளின் உணவான கூழை நெய்பெய்த சோறென்றே மதிக்கவேண்டும். கசக்கின்ற பொருளாயினும் இனிப்பென்று எண்ணி உண்ணவேண்டும். இவை மூன்றையும் செய்வோர் இறைவனைக் காண்பர் என்கிறது திரிகடுகம்.

     இதனை நாமும் பின்பற்றலாம்தானே? நற்பணிகளைத் தொடர்ந்து செய்பவர்கள் இறைவனை அறிவார்கள் என்பதனைக் காட்டிலும் இறைவன் இவர்களை அறிவார் என உணரலாம்தானே?


        குப்பையை உரமாக்கும் கலையைக் கற்றுக்கொண்டீர்தானே

************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக