தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 16 ஜூலை, 2021

ஒன்றாகக் காண்பதே காட்சி

 


ஒன்றாகக் காண்பதே காட்சி

     இது தெரியாதா? “திரையரங்கத்திற்குச் சென்றால் எல்லோரும் ஒன்றாகத்தானே பார்ப்போம்” என்றுதானே சொல்கிறீர்கள். சரிதான். ஆனால், இது இவ்வுலகக் காட்சி ; இது பொய்யானது. ஏனெனில், திரைப்படத்தில் நடிப்பவர் படப்பிடிப்புக்குப் பின் அக்காட்சியிலிருந்து வெளியே வந்துவிடுவார். ஆனால், ரசிகன் வாழ்நாளெல்லாம் அப்பாத்திரத்தை உள்ளத்தில் சுமந்திருப்பான். இக்காட்சியால் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நன்மையேனும் நடந்தால் நன்று. இல்லாவிடில் தீமையேனும் நடக்காமல் இருக்கவேண்டும். நற்குணத்தை மாற்றுவதாக அமைதல் கூடாது. அவ்வளவே.

     இப்போது மெய்யியல் காட்சிக்கு வருவோம். அனைவரையும் ஓர் உயிராக எண்ணி அன்பு காட்டுவதுவே ‘ஒன்றாகக் காண்பது’. இது அனைவராலும் இயலுமா?. இதற்குத் தாயுள்ளம் தேவை. தாயானவள், தனக்கு உணவில்லை என்றாலும் குழந்தைகளுக்கு இட்டு மகிழ்வாளே. அந்த உள்ளம் வேண்டும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

     பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் பலர் அல்லல் உறுவதனைப் பார்த்திருப்பீர்கள். ஆண்களுக்கு அதில் முதலிடம். “பெண்குழந்தைக்குத் திருமணம் செய்யவேண்டும்” என மனைவி கூறியவுடனே, “இப்ப என்ன வயசாச்சு பிறகு பார்க்கலாம்” எனக்கூறிவிடுவார். ஆனால், அன்றுமுதல் உறக்கம் இருக்காது. எப்போதுவரை எனக்கேட்காதீர். வாழ்நாள் முழுதும் ஓர் ஓரமாக மகளைப் பற்றிய எண்ணம், கணினித் திரையில் நேரம் காட்டுவதுபோல் ஓடிக்கொண்டே இருக்கும். அதை உற்றுநோக்கினால் அறிந்துகொள்ளமுடியும். திருமணமாகிச் சென்று பல ஆண்டுகள் கழிந்தாலும், “‘மழை பெய்கிறதா? வெயில் காய்கிறதா? எனக் கைப்பேசியில் பேசிக்கொள்வதைப் பார்த்திருப்பீர்கள்தானே?. ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ எனக் கேட்கும் மன்னர் பரம்பரை நாம் அதனால்தான் அப்படி பேசுகிறார்கள்” என எண்ணாதீர்கள். குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், எனத்தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு நான்கு சொற்களைப்பேச வேண்டும். அவர்கள் குரலைக் கொண்டே நலமும், துன்பத்தையும் அறிந்துகொள்வார்கள். அதற்கான முயற்சிதான் அது. “தான் வேறு ; குழந்தைகள் வேறு” என எண்ணாத அன்பு நிறை பேச்சு அது. “அதுவே ஒன்றாகக் காண்பது”

     கண்கள் இரண்டாயினும் காணும் காட்சி ஒன்றுதானே? இரு வேறு காட்சியைக் கண்டால் ஒரு வேலையும் செய்யமுடியாது. அப்படி இருவேறு காட்சியைக் கண்டால் மூளை எதனைச் செயல்படுத்தும். வலப்பக்கம் செல்வதா? இடப்பக்கம் செல்வதா? என்னும் குழப்பமும் ஏற்படும். ஒன்றுபட்டு வேலை செய்வதால்தானே “கண் + அவன்” எனக் கணவனை மனைவியும், “கண்ணே” என மனைவியைக் கணவனும் அன்புடன் கூறமுடிவதனைப் பார்க்கமுடிகிறது. “அதுவே ஒன்றாகக் காண்பது”

     மனிதர்கள் உதவிகேட்டு என்னைத் தொல்லைபடுத்துகிறார்கள்? என்ன செய்வது என இறைவன் இறைவியிடம் கேட்கிறார். “அன்புடன் கேட்டால் கொடுத்துவிடுங்களேன்” என்கிறாள் இறைவி. தாயுள்ளமாயிற்றே !. “உலக உயிர்களிலேயே உயர் அறிவுடன் ; ஆற்றலுடன் மனித இனத்தையே படைத்திருக்கிறேன். அப்படி இருந்தும் இப்படி வேண்டுவது நியாயமில்லை. திறமையுடன் உழைத்தால் வறுமை ஒழியும் ; செல்வம் குவியும்” என்றார் இறைவன். “நீங்கள் எங்கு நின்றாலும் அறிந்துகொள்கிறான் என்பதால்தானே கேட்கிறீர்.  அவன் காண முனையாத ஓர் இடம் இருக்கிறது” என்றாள் இறைவி. ”அப்படியா? சொல்” என்கிறார் இறைவன். “ஆம். அது பக்தர்களுடைய உள்ளம்தான்” என்கிறாள் இறைவி. இதனை அறிந்தே தமிழ் மூதாட்டி ஔவையார், அகத்தில் நிறைந்த இறைவனைக் காண வழிகாட்டுகிறார். புறக்கண்களை மூடிக்கொண்டு அகக்கண்களால்தான் அகத்தைப் பார்க்கமுடியும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

     முன்னோர்கள், ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இறைவன் இருக்கிறார் என்பதனை உணர்ந்துதானே ‘வணக்கம்’ சொல்லக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.  பெரியோர்களைக் கண்டால் வணங்கவேண்டும் எனச்சொல்லிக்கொடுத்ததும் அதனால்தானே? “அதுவே ஒன்றாகக் காண்பது”

     நீதிதேவதையின் கண்கள் மூடப்பட்டிருப்பதும் ; சட்டம் அனைவருக்கும் சமம்  எனக் கூறுவதும் அதனால்தானே?. செய்யும் செயலைக்கொண்டே ஒருவரை உயர்ந்தவர் ; தாழ்ந்தவர் என அறியலாமே அன்றி பிறவற்றால் அறியக்கூடாது.  “அதுவே ஒன்றாகக் காண்பது”

கண்கள் கருணையுள்ளது. அது ஒன்றாகப் பார்க்கும் திறனற்றது. எப்படி என்று கேட்கிறீர்களா? மனுநீதிசோழனைத் தவிர யாரும் கன்றினையும், மகனையும் ஒன்றாகப் பார்க்கவில்லையே. அப்படி பார்க்கத்தொடங்கிவிட்டால் நாட்டில் ஒரு குற்றமேனும் நிகழுமா? “அதுவே ஒன்றாகக் காண்பது”

ஒருவர் ஆட்டினையோ மாட்டினையோ வளர்க்கிறார். அதனை, வெட்டுவதற்காக மற்றொருவர் கத்தியினை எடுக்கிறார். உடனே, அந்த ஆடோ ; மாடோ “இவ்வளவு நாள் நம்மை அன்புடன் வளர்த்தவர் எங்கே?. இங்கே ஒருவனிடம் சிக்கிக்கொண்டோமே” என வருந்திக்கொண்டு அங்கும் இங்கும் பார்க்கிறது. அந்த விலங்கினை வளர்த்தவன் காகிதத்தை எண்ணிக்கொண்டிருக்கிறான். விலங்குகளைப் பொறுத்தமட்டில் பணம் காகிதம் தானே? “அன்பும் பாசமும் பணத்திற்குமுன் ஒன்றுமில்லை” எனக் கற்றவன் மனிதன் ஒருவனே.  மனித இனத்தை ஒன்றாகப் பார்க்கும் இவர்களுக்கு விலங்குகளை ஒன்றாகப் பார்க்கத்தெரியவில்லைதானே? இதை நான் சொல்வதாக எண்ணாதீர். ‘தன் ஊன் பெருக்க பிற ஊன் உண்ணக்கூடாது” என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கு. அவர் காட்டிய வழியில் அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டவேண்டும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

அதைவிடக்கொடுமை, நாய் வளர்ப்பவர்களில் சிலர், நாயிடம் பாசத்தைப் பொழிவார்கள். அந்நாயுடனே படுத்துக்கொள்வார்கள் ; கொஞ்சுவார்கள் ; விளையாடுவார்கள். அந்த நாயினால் தங்களுடைய இரத்தக் கொதிப்பைக் குறைத்துக்கொள்வார்கள் ; சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்வார்கள் ; மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வார்கள். அத்தகையோரின் அன்பைப் பார்க்கும்போது பெருமையாகத்தானே இருக்கும். அப்படி பாசத்தைப்பொழிந்த நண்பரிடம் ‘எங்கே உங்கள் நாயைக் காணவில்லை” எனக் கேட்டபோது, “அதற்கு உடல்நிலை சரியில்லை, அதனால் வெளியூர் செல்லும் போது ஓரிடத்தில் விட்டுவிட்டேன்” எனக் கூறினார். அவரிடம் கொண்ட அத்தனை மதிப்பும் ஓர் நொடியில் காணமல் போய்விட்டது. ஓர் உயிரை அன்புடன் பார்த்த நிலை மாறிவிடுவது எத்துணைக் கொடுமை!. மனிதர்களாக இருந்தாலும் ஏதேனும் ஒரு காப்பகத்துக்குச் சென்றுவிடுவர். வாயில்லா உயிரான நாய் எங்கு செல்லும்?. அதுவும் செல்வச்செழிப்பில் வளர்ந்த நாய். பாவம்தானே? நாயைக் கடைசிவரை பார்த்திருந்தால் எத்துணைப் பெருமை கிடைத்திருக்கும். “அதுவே ஒன்றாகக் காண்பது”

ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்

வென்றான்தன் வீரமேவீரம்  மற்று – ஒன்றானும்

சாகாமல் கற்பதே வித்தை தனைப்பிறர்

ஏவாமல் உண்பதே ஊண் (ஔவையாரின் தனிப்பாடல்)

என்னும் தமிழ்மூதாட்டியின் பாடல் எத்தனை எண்ணங்களை வளர்த்துவிடுகிறது.  நம்மை வெல்லக்கூடிய தகுதி, நம்மையன்றி வேறு எவருக்கு இருக்கமுடியும்.. இனி அனைத்துக்காட்சிகளையும் ஒன்றாகக் காணலாம்தானே?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக