தமிழில் விளையாடும் பள்ளியர்கள்
பள்ளத்தில் வாழ்ந்த
மக்களைத்தான் ‘பள்ளர்கள்’ என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பள்ளர் வாழ்வை ‘முக்கூடற்பள்ளு’
எழிலுற எடுத்தியம்புகிறது. அவர்கள் உழவுத்தொழிலில் ஈடுபட்டு மக்கள் வளத்துடன் வாழ வழிசெய்தனர்.
முக்கூடற்பள்ளு
எழுதியவர் யார்? எனக் கேட்டால் பலரும் சரியான விடையைச் சொல்லிவிடுவார்கள். ஏனென்றால்
‘தெரியாது’ என்பதே அவ்வினாவிற்கான விடை. மக்களையும், அவர்கள் வாழும் முறைமைகளையும்
இவ்விலக்கியம் கற்பதன்வழி எளிதில் உணரலாம். இந்நூலை இயற்றிய புலவரின் பெருமையினை இருபள்ளிகளின்
உரையாடலில் ஒரு சிறுபகுதியின் வழி அறிவோம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்”.
இரு மனைவிகளுடன்
வாழ்பவன் நிலை என்னாகும். கேலிக்கூத்தாகத்தானே அமையும். இயல்பான மனிதன் செய்யாத செயலை
ஒருவன் செய்யும்போது அது நகைச்சுவையாகிவிடுவது இயல்புதானே. முகத்திற்குப் போட வேண்டிய
முகக் கவசத்தை தனது குழந்தைக்கு உள்ளாடைபோல் அணிவித்துப் புகைப்படம் எடுப்பது நகைச்சுவைக்காகத்தானே?
பள்ளனின் பொறுப்பில்லாத
போக்கால் மூத்தபள்ளியான முக்கூடற்பள்ளியும், மருதூர் பள்ளியான இளையபள்ளியும் சண்டையிட்டுக்கொள்கின்றனர்.
(இருவரும் பள்ளனை மணந்ததால் சகக்களத்திகள்) அப்போது இருவரும் வன்சொற்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
கணவன் மனைவியிடையே சண்டை என்றால், தோற்றுக்கொண்டே போகும் கணவன், கடைசி முயற்சியாக,
மனைவியின் வீட்டில் இருப்பவர்களைப்பற்றிப் பேசுவான். மனைவியின் சினத்தைத் தூண்டிவிட
அவன் கையாளும் தந்திரம். வேறு எல்லா பந்துகளுக்கும் ஆறு ஓட்டங்கள் எடுத்துவிடும் திறன்கொண்ட
மனைவி, இப்பந்தில் வீழ்ந்துவிடுவாள்தானே. அதேபோல், இப்பள்ளிகள் கடைசியாக, கடவுளை இழிவாகப்
பேசி சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதில் விளையாடும் தமிழழகைப் பார்ப்போமா?
சிவன், சிவனே
என்றிருக்க, மூத்தபள்ளி இளையபள்ளியை இழிவாகப்பேச, அவள் வழிபடும் சிவனை குறைசொல்கிறாள்.
மங்கை ஒரு பங்கிருக்க ; யோகி
என்றுதான் – கையில்
மழுவேந்தி நின்றான் உங்கள்
மத்தன் அல்லோடி
என வசைபாடுகிறாள்.
“பெண்ணைத்தன் இடப்பாகத்தில் வைத்துக்கொண்டே ‘யோகி’ என்பது ஏமாற்றுவித்தைதானே. சிவனை வழிபடுபவள்தானே நீ. நீமட்டும் சொல் ஒன்று
; செயல் ஒன்றாகவா இருப்பாய்” என வசைபாடுகிறாள்
இதற்கு இளையபள்ளி, “யோகி” ஆண், பெண் என்னும் வேறுபாட்டைக்
களைந்து அனைத்து உயிரும் ஒன்று என நோக்குவர். அதனை உணர்த்தவே தன்னில் பாதியைக் கொடுத்தான்
சிவபெருமான். இதனை அறிந்தால்தான் சிவன் ‘யோகி’ என்பதனை உணரமுடியும்” என இளையபள்ளி விடைகூற
விரும்பவில்லை. ‘அடிக்கு அடி’ என்னும் நிலையில் மூத்தபள்ளி வணங்கும் கடவுளான கண்ணனை
இழிவாகப் பேசுகிறாள்.
கொங்கைதனில் ஆய்ச்சியரைச்
சங்கை இல்லாமல் – பண்டு
கூடி நெய்யில் கையிட்டானும்
கொண்டல் அல்லோடி
எனச் சாடுகிறாள்.
“வெட்கமில்லாமல் ஆய்ச்சியர் பெண்களுடன் விளையாடியவனும், பானையிலிருந்து வெண்ணையைத்
திருடித் தின்னவனும் உங்கள் கண்ணன்தான். அதனால்தான் உனக்கும் வெட்கம் இல்லாமல் இருக்கிறது”
என வசைபாடுகிறாள்.
உடனே, முத்தபள்ளி “உறவின் அருமை தெரியாதவன் உன்னுடைய
கடவுளான சிவபெருமான்”
காமனை மருகனென்று எண்ணிப்
பாராமல் – காய்ந்து
கண்ணிலேறு பட்டான் உங்கள்
கர்த்தன் அல்லோடி
என வசைபாடுகிறாள்.
சிவபெருமான் மருமகனாயினும் மன்மதனை எரித்த ‘மன்மத தகனத்தைக்’ குறிப்பிடுகிறாள். மேலும்,
‘”கண்’ கருணையைப் பொழியும் ஆற்றலுடையது. ஆனால் அக்கண்ணாலேயே எரித்துவிட்டான்” என வசைபாடுகிறாள்.
உடனே இளையபள்ளி, “மருமகனாக இருந்தாலும் கடமையைத் தடுத்தால் வீழ்த்திவிடுவான். எனவே,
கடமை உணர்வுடன் வாழவேண்டும் என உணர்த்தவே அவ்வாறு செய்தான். அதுவும் கருணை பொழியும்
கண்களில் எரிக்கவில்லை. மூன்றாவதுகண்ணால்தான் எரித்தான்.” என விடை கூறவிழையவில்லை.
மாறாக கண்ணனைக் குற்றம் சொல்லத் துணிகிறாள்.
“என்னுடைய சிவபெருமான் மருமகனைத்தான் கொன்றான்.
உன்னுடைய கண்ணனோ தாய்மாமனையே கொன்றானே” என்பதனை,
மாமனென்று பாராமல் முன் கஞ்சனைக்
கொன்றே – கண்கள்
மாறாதே பூப்பட்டான் உங்கள்
மாயன் அல்லோடி
என்னும் அடிகளில்
சாடுகிறாள் இளையபள்ளி. மேலும், அதனால்தான், “அவன் கண்ணில் நிலையான பூ விழுந்துவிட்டது”
என்கிறாள். அதற்கு, மூத்தபள்ளி, “கஞ்சனை (கம்சன்) கஞ்சக் (தாமரை) கண்ணன்தான் கொல்லமுடியும்.
அதனால் ‘தாமரைக்கண்ணன் என்பது அழகுக்கு அழகுதானே” எனக் கூறாமல் சிவனை வசைபாடுகிறாள்.
“பெண்ணாசை கொண்டே பனிமலை என்றும்பாராமல் உங்கள்
சிவன் போனான் என்றால் அவன் எத்தனை இழிவானவனாக இருப்பான்” என்பதனை,
மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப் பொன்னின் மயமாம் – பனி
மலையேறிப் போனான் உங்கள் மத்தன் அல்லோடி
என்னும் அடிகளில்
சாடுகிறாள். “மணப்பதற்கு பெண்தேடி செல்வது புதுமை இல்லை பதுமையே” எனக்கூறாமல் மூத்தபள்ளி
வணங்கும் இராமனை வசைபாடுகிறாள்.
காதலித்து தம்பியுடன் சீதை
பொருட்டால் – அன்று
கடலேறிப் போனான் உங்கள் கண்ணன்
அல்லோடி
எனச் சாடுகிறாள்.
“பெண்ணாசை கொண்டே இராமன் தான் மட்டுமின்றி தம்பியையும் துணைக்கு அழைத்துப்போனான். அதுவும்
கடல்கடந்துபோனானே. இது அழகா?” எனக் கேட்கிறாள். மனைவியை, “கண் போல் காப்பதால்தான் கணவன்.
அவன் அவ்வாறு செய்துது தானே அழகு” எனக் கூறாமல் தொடர்ந்து சிவனைச் சாடுகிறாள் மூத்தபள்ளி.
இவ்வாறு மூத்தபள்ளியும் இளையபள்ளியும் சண்டையிட்டுக்கொள்வதாகக்
காட்டுவது, முக்கூடற்பள்ளினை இயற்றிய பெயர்தெரியாத புலவரின் புலமை விளையாட்டுதானே.
எத்தனை வரலாறுகளை ; திருவிளையாடல்களை, பெண்கள் இருவருடைய சண்டையின் வழி வெளிப்படுத்தியுள்ளார்.
அந்நியர்கள், தமிழர் செல்வத்தை கொள்ளை அடித்துக்
கப்பல் கப்பலாக ஏற்றிக்கொண்டு போனது கொடுமை எனில், இலக்கியச் செல்வங்களை எரியூட்டி
அழித்தது கொடுமையிலும் கொடுமைதானே. இத்தனை பாவங்கள் செய்தாலும் உலகை இணைக்கும் பாலமாய்
தமிழ்மொழி திகழ்கிறதெனில், தன்னிகரற்ற மொழிதானே தமிழ்.
******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக