தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 5 ஜூலை, 2021

நூலகம் அறிவின் தாயகம்

 


நூலகம் அறிவின் தாயகம்

கல்லாதவருடைய கல்விக் கனவினையும் நிறைவேற்றும் கல்விச்சாலைதான் நூலகங்கள். கல்லாதவர்களையும் ‘படிக்காத மேதை’ ஆக்குவன. இன்று, பார்வை குறைபாடுடையோர், செவிவழி அறிவைப்பெறுவதற்கு ஒலி நூலகங்களும், கேட்கும் திறன் குறைபாடுடையோர், கண் வழி அறிவைப்பெறுவதற்கு ஒளி நூலகங்களும் வந்துவிட்டன. முத்தாய்ப்பாக கணினி நூலகங்கள், இணைய நூலகங்கள், மின் நூலகங்கள் என நாளும் வளர்ச்சிபெற்று வருவதும் சிறப்பு.

கற்றவர்க்கு நூலகம் சொர்க்கவாசல். அங்குக் கற்றவர்கள்தான் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று, வறுமையினை ஓட்டி வளமையினைக் கூட்டி வாழ்கிறார்கள். நேர்மையான நாளிதழ்களின் செய்திகளை ஆய்ந்து படிக்கும் அறிவு உலகியல் அறிவை வளர்க்கும். நாளிதழ்களைத் தொடர்ந்து கற்ககற்கத்தானே இத்திறன்வாய்க்கும். மக்களுக்காக செய்திகளை வெளியிடுவோரும் காசுக்காக மக்களுக்குத் தவறான வழிகாட்டுவோரும் யாரென அறியவேண்டும்.

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” எனப் பல இதழ்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில், சில இதழ்கள் “தடுப்பூசியால் கை வீங்கியது, கால் வீங்கியது” எனப் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பத்தில் தவிக்கவிடுவர். மக்களின் அச்சத்தை நீக்க அறிவு ஒன்றே வழி.

கற்பதால் மட்டுமே பகுத்தறிந்து உண்மையான செய்திகளைப் பதிவுசெய்துகொள்ளமுடியும். அவ்வறிவினை வளர்க்கவே நூலகங்கள் துணைபுரிகின்றன. அவை, காலக்கட்டுப்பாடின்றி பகல் மட்டுமின்றி இரவிலும் செயல்படுவதனைக் காணமுடிகிறது. பகல் வேளைகளில் கல்விச்சாலைக்குச் செல்வோர் மாலை, இரவு நேரங்களில் நூலகங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். “எங்கள் ஊரில் பகல் நேர்த்திலேயே யாரும் நூலகத்தைப் பயன்படுத்துவதில்லை” எனச் சொல்லாதீர்கள். தொலைக்காட்சி வசதிகளும் கைப்பேசி வசதிகளும் செய்துக்கொடுத்துவிட்டபின் நூலகத்தைப் பயன்படுத்த அவர்கள் என்ன தவசீலர்களா? இயல்பான குழந்தைகள்தானே? படிப்படியாக நூலகத்தின் மதிப்பினைக் கற்பிக்கவேண்டியது பெரியோர்களின் கடமை.

பெரியோர்கள், உடல்நலத்திற்கு உள்ள நலத்திற்காகவும் கோவில்களுக்கு அழைத்துச்செல்வதுபோல், அறிவுக் கோயிலாகத் திகழும் நூலகங்களுக்கும் அழைத்துச்செல்லவேண்டும். நீங்கள் உங்கள் பேரக்குழந்தைகளுக்கென வீடு, பணம், நிலம், அணிகலன்கள் என எத்தனைச் செல்வங்களைச் சேர்த்துவைத்தாலும் அவை பின்னாளில் நன்மையும் செய்யலாம். அல்லது அதனாலேயே பிரச்சினைகள் உருவாகி ; உறவுகளை இழந்து  வாடும் அளவிற்கு தீமையும் செய்யலாம். ஆனால் கல்வி அப்படியா?

 

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை. (திருக்குறள் – 400)

 

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூற்றின்படி, கேடு செய்யாத ஒரே செல்வமான கல்விச்செல்வத்தை ஊட்டிவிடுவதே அருமையான சொத்து என்பதனை அனைவரும் உணரவேண்டும். எனவே, உடல் பயிற்சிக்கு விளையாட்டுத்திடலில் நேரத்தைச் செலவிடுவதுபோல அறிவு வளர்ச்சிக்கு நூலகங்களைப் பயன்படுத்தவேண்டும்.

     கல்வி கற்போர்க்கு மட்டுமே நூலகங்கள் என நினைத்துவிடக்கூடாது. விளையாட்டு வீர்ர்களும் களத்தில் பயிற்சியில் ஈடுபடாதபோது நூலகங்களைப் பயன்படுத்தவேண்டும். ஏனெனில், தாம் விரும்பும் விளையாட்டுப் போட்டியில் சாதனைப் படைத்தவர்களின் வரலாற்றை, வழிகாட்டுதல்களைப் படிக்க நூலகங்கள் துணைசெய்யும். எனவே, அறிவுப் பயிற்சியும் விளையாட்டு வீர்ர்களுக்கு ஊட்டப்படுதல் வேண்டும். அதனால் வெற்றி எளிதாகும். நூலகம் செல்லும் வழக்கம்,அனைத்து முயற்சியாளர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் தேவைதானே?

இனி, நூலகத்தின் சொல்லழகைப் பார்க்கலாம். நூல் + அகம் = நூலகம். புத்தகச்சாலை, நூல் நிலையம் எனவும் அழைக்கப்பெறும். ‘அகம்’ என்றால் ‘வீடு’ என்றும் பொருள்படும். அதனால் தான் ‘அகம் உடையான்’ எனக் கணவனைக் குறிப்பிட்டனர். அது பின்னால் ‘ஆம்படையான்’ எனப் பேச்சுவழக்கில் மருவிவிட்ட நிலையினையும் காணமுடிகிறது. அவ்வாறே ‘அகத்துக்காரர்’ என்னும் சொல் ‘ஆத்துக்காரர்’ எனப் பேச்சுவழக்கில் மருவி நிற்பதனையும் காணமுடிகிறது. “இதெல்லாம் இப்போது எதற்கு?” என்றுதானே நினைக்கிறீர்கள். இப்போது “நூல் வீடு” என்றால் என்ன? எனப் புரிந்துகொண்டீர்தானே. இனி, “நூல் வீடு” சிலந்திக்கு மட்டும் பாதுகாப்பானது என எண்ணக்கூடாது, மனிதர்களுக்கும்தான் என உணர்ந்துகொள்ளலாம்தானே?

படி…. படி….. என ஒவ்வொரு படியாய் ஏறினால்தானே உயரே செல்ல முடியும். அதுபோலவே படித்துப்படித்து உயர்ந்தால்தானே உயர்பதவிகளை அடையமுடியும். எனவேதான், படிக்காதமேதையான கல்விக்கண் திறந்த காமராசரும் “படிப்புதான் ஒருவர் உயரவழி” என்றார். காலையில் நாளிதழ்கள் விற்கும் பணிசெய்த சிறுவன், நாளிதழ் செய்திகளை உள்வாங்கிக்கொண்டு கல்வித்தாகத்துடன் நூலகங்களைப் பயன்படுத்தினான். நூல் வாங்க காசில்லாத அச்சிறுவன்தான் பின்னாளில் நாளிதழின் முதல்பக்கத்தை அணிசெய்யும் குடியரசுத்தலைவரானார். அவர்தான் “புத்தகங்கள் படிப்பதையே வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” எனக்கூறியவரும் ‘ஏவுகணைமனிதர்’ எனக் கொண்டாடப்படுபவருமான அ.ப.ஜெ.அப்துல்கலாம்.

யாருடைய துணியுமின்றி ஒரு சிறப்பான காரியத்தைச் செய்யமுடியும் எனில் அது படிப்பது ஒன்றுதான். நூலகத்தில் நுழையும்போது பல அறிஞர்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதை உணரவேண்டும். அப்போதுதான் பயபக்தியுடன் படிக்கமுடியும். அங்கு படிப்போருக்கும் எவ்வகையான இடையூறுமின்றி படிப்பது அறிவின் அடையாளம். அதனால்தான் “மோனம் என்பது ஞான வரம்பு” என்றார் தமிழ் மூதாட்டி ஔவையார். நூலகத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அங்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரா? என்றுதானே கேட்கிறீர். “நூல்பல கல்” என  ஆத்திசூடி இலக்கியத்தில் கூறியிருக்கிறாரே. சரி, அப்படி படித்தால் என்ன நன்மை? எனக் கேட்கிறீரா. “கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி” எனக் கொன்றை வேந்தனில் விளக்குகிறார். கைப்பொருள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அதனைவிட கல்விச்செல்வம் ஏற்படுத்தும் நம்பிக்கை நிலையானது ; நிகரற்றது என உணர்த்துகிறார். உண்மைதானே?

உலகிலேயே கல்வியின் அருமையினை உணர்ந்தவர்கள் நம் பாரத மக்கள். அதனால்தான் ‘குருகுலக்கல்வியை’  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருந்தனர். நாலந்தா பல்கலைக்கழகத்தில் பல்வேறு வெளிநாட்டவர் கல்வி கற்க வந்திருந்த சான்று ஒன்று போதுமே.

இங்கிலாந்தில் முதல் பள்ளிக்கூடம் 1811 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பாரதத்தில் ஏழு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் (7,32,000) கல்விச்சாலைகள் இருந்தன எனில் எண்ணிப்பாருங்கள். அதுவே பாரதம். ஆங்கிலேயர்கள், அவற்றையெல்லாம் அழித்துவிட்டு தம் பெருமையினை உலகிற்குக் காட்டவே ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்தனர். அவ்வாறு இருந்தும், இன்றும் ஆசியாவில் பழமையான நூலகமாகத் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் திகழ்கிறது.  இங்கு அக்கால ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகிறது. தமிழில் மட்டுமின்றிப் பல மொழி ஓலைச்சுவடிகள் உள்ளன எனில் தமிழரின் பன்மொழிப்புலமையினையும் உணரலாம்தானே?

     களிமண்ணில் எழுதப்பட்ட காலத்தில் அரசர்கள் மட்டுமே நூலகத்தைப் பயன்படுத்தினர். மற்றவர்கள் படிக்கத்தடை இருந்தது. நாளடைவில் பொதுமக்களுக்காக நூலகங்கள் திறக்கப்பட்டன.  இந்தியாவின் பெரிய நூலகமான, கொல்கத்தா தேசிய நூலகம் 1836 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதே, இதற்குச் சான்று.

இன்றைய நூலக நிலை பற்றி தெரிந்துகொள்ளத் தானே நினைக்கிறீர்கள்.  உலகின் மிகப் பெரியநூலகமாக “அமெரிக்காவிலுள்ள “லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்” நூலகம் திகழ்கிறது. இந்தியாவில் தொடங்கிய முதல் பொதுநூலகமாகத் திருவனந்தபுரம் நடுவண் நூலகம் திகழ்கிறது. உலகில் தமிழ்நூல்கள் அதிகம் உள்ள நூலகம் – சென்னை. கன்னிமாரா நூலகம் திகழ்கிறது.

நூலகம் செல்வோம் ; தேர்வினை வெல்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக