தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 26 ஜூன், 2021

குடிகார நண்பர்களே – திருவள்ளுவர் அழைக்கிறார்

 




குடிகார நண்பர்களே – திருவள்ளுவர் அழைக்கிறார்

“இராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்ல” எனப் பாடிக்கொண்டு குடித்துவிழும் குடிகாரரர்களைப் பார்த்திருப்பீர்கள்தானே? 1980- இல் வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படத்தில் வெளிவந்தபாடல் இது. இன்றும் அந்தப்பாட்டைப் பாடிக்கொண்டு குடித்து விழுந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்?. அந்த அளவிற்கு அந்தப் பாடலை விரும்பியிருக்கிறார்கள் என்றுதானே பொருள். அதுபோலவே 1974 இல் வெளிவந்த “அவள் ஒரு தொடர்கதை“ படத்தில் “தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என்னும் பாடலும் குடித்துவிட்டுப்பாடும் பாடல். அப்பாடலைப் பாடுவதனையும் அன்றாடம் பார்க்கமுடிகிறதுதானே. அறுபது வயது குடிகாரரின் கச்சேரியில் இப்பாடலுடன் நடிப்பும் பார்ப்பவரை ஈர்க்கும். இளைய குடிகாரர்களுக்குப் பாடல் பஞ்சமே இல்லை. இன்று வெளிவரும் படங்களில் ஒரு பாட்டு குடிப்பாட்டாக இருக்கவேண்டும் என்பது விதியாகவே எழுதப்பட்டுவிட்டிருக்கிறதுபோல.  குழந்தைகள்கூட இப்பாடல்களைப்பாடித்திரிவதுதான் வேதனை. தெரிந்தோ தெரியாமலோ சில நடிகர்கள் தங்கள் ரசிகர்களைக் குடிகாரர்களாக  மாற்றிக்கொண்டுதான் இருந்தனர் ; இருக்கின்றனர். சிங்கம்போன்று வீறுநடை போட வேண்டிய இளைஞர்கள் வீதீயில் விழுந்து கிடப்பது எத்தனை இழிவு. இந்நிலையினை மாற்றுவது நடிகர்களுடைய பொறுப்பு.   ஏன் இயக்குநர்களுக்குப் பொறுப்பில்லையா? எனக் கேட்காதீர். பெற்றோர் பேச்சைக்கேட்காத பிள்ளைகள்கூட நடிகர்பேச்சைக்கேட்டுத்தான் நடக்கிறார்கள் : நடக்கவும் செய்கிறார்கள்.

தாயானவள், குழந்தையின் எந்த நிலையினையும் கண்டு பொறுத்துக்கொள்வாள். ஆனால், குடித்து விழுந்திருக்கும் நிலையினைக் கண்டால் மனம் பொறாள். பெற்றவளே மன வருத்தம்கொள்ளும்போது, சான்றோர்கள் கண்டால் என்ன ஆகும்? எனக்கேட்கிறார் திருவள்ளுவர். படிப்பு, பணி, திருமணம், உடல் நலம் என அனைத்தையும் ஒருங்கே கெடுத்துவிடும்தானே?

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி (திருக்குறள் – 923)

 

என்னும் திருக்குறள் குழந்தையின் முகத்தைக் கண்டு இன்பமடைந்த தாயின் மனம், துன்பமடையக்கூடிய நிலைக்குக் குடி மாற்றிவிடுவதனை எடுத்துக்காட்டியுள்ளது.

குடிகாரர்கள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்களே எப்படி?. குடிகாரன் எப்படி உளறுவான்? எப்படி நடப்பான்? எப்படி விழுவான்? என்பதைப் பார்க்க எல்லோருக்கும் ஆவல் உண்டு. அதனால்தான் கயவர்கள் ‘விருந்து’ என்னும் பெயரில் நேர்மையானவர்களை குடிக்கவைத்து, தவறான செயல்களில் ஈடுபடவைத்து படமெடுத்துவைத்துக்கொள்கின்றனர். பின்னாளில் மயக்கியோ, அச்சுறுத்தியோ பணியவைக்கின்றனர். போதையில் கையெழுத்துபோட்டுவிட்டு வீட்டையும் நாட்டையும் இழந்தவரலாறு பலவுண்டு. பெரிய விடயங்களுக்குள் புகவேண்டாம். குடும்பங்களில் கலவரம் ஏற்படுத்தும் குடியினைத் தடுக்கத் திருவள்ளுவர் என்ன கூறுகிறார்? என்பதைப் பார்த்தால் போதும். வீடு நன்றாக இருந்தால்தானே நாடு நன்றாக இருக்கும்.

அரசு குடும்ப வறுமையை நீக்க உதவித்தொகை கொடுத்தால், உடனே அப்பணத்தை எடுத்துக்கொண்டு குடிக்கச்சென்றுவிடும் குடிகாரர்களைப் பார்க்கமுடிகிறது. குழந்தைகளுக்குக் கஞ்சி வார்க்கவும் வழியின்றித் தவிக்கும் குடும்பச்சூழலை மறந்துவிட்டு எங்கோ விழுந்துகிடக்கும் பொறுப்பற்ற குடிகாரர்களை என்னென்பது? அப்படிக் கேட்பாரற்று அளவுக்கு அதிகமாகக் குடித்து இறந்துபோகும் குடிகாரர்கள் இருபத்தைந்து (25) முதல் நாற்பத்தைந்து (45) வரை வயதுள்ளோரே. திருமணம் நடந்து சில மாதங்கள், வருடங்களானோர், ஒன்று, இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றோர் என எத்தனையோபேர்  இறப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

ரோஜா மலர் போன்ற பிஞ்சுக்குழந்தைகளை விட்டுவிட்டு குடியில் மூழ்கி இறக்கின்றனர். அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு அக்குடும்பம் தாழ்ந்துபோகிறது. தந்தையை இழந்த குழந்தை வேலைக்காரியாகி பத்துப்பாத்திரம் தேய்த்துக் கைகள் காய்ந்து புண்ணாகிவிடும் நிலையினைப்பார்க்கமுடிகிறது. இதனை, குடிப்பவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்தானே? மருத்துவராக ; பொறியாளராக ; ஆசிரியராக ; விளையாட்டு வீர்ர்களாக ; கலைஞர்களாக வரவேண்டிய குழந்தைகள் வறுமையில் உணவுக்காகவே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்கொள்வது எத்தனை அவலம். தன் குடும்பத்தினரிடம் பாசம் கொண்டவர்கூட, குடியானது நஞ்சு எனத்தெரிந்தும் குடிக்கின்றனர். அத்தகையோர் அறிவுடையராகார் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்உண் பவர் (திருக்குறள் – 926)

 

என்னும் திருக்குறளின்வழி, குடும்ப நன்மையையும், உடல் நலத்தின் அவசியத்தையும் உணர்ந்தால் மட்டுமே இக்குடியிலிருந்து ; நஞ்சிலிருந்து விடுபடமுடியும் என உணர்த்துகிறார் தெய்வப்புலவர்.

     ஒருவன் குடித்துவிட்டு சாலையில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருகிறான். போவோர் வருவோரையெல்லாம் கிண்டல் செய்கிறான். ஊடகங்கள் அப்படித்தானே குடிகாரர்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் அவரைத் தண்டிக்கும் வகையில் தான் வைத்திருந்த குச்சியில் ஒரு அடி அடிக்கிறார். சுற்றி இருந்தவர்கள். “நல்லா அடிங்கய்யா? குடித்துவிட்டு சாலையில் ஆட்டம் போடுகிறான்”. என இளைஞரை ஊக்கப்படுத்துகின்றனர். அடித்த அடியினைத்தாங்கமுடியாமல் அவன்மேல் விழுகிறான் குடிகாரன். “என்மேலா கைவைத்தாய்” என இளைஞன் பலமாக அடிக்க, குடிகாரன் மயங்கி விழுகிறான். சுற்றி இருந்தவரில் ஒருவன் ஓடி வந்து விழுந்த குடிகாரனின் நாடியைப் பார்த்தான். “செத்துட்டான்பா” என்கிறான். கூட்டம் புலம்பிக்கொண்டு இருக்கிறது. ஒரு பெண்ணும், மூன்று பெண்குழந்தைகளும் ஓடி வருகிறார்கள்.  “இது ஒரு கதை” என எண்ணாதீர். அன்றாட நிகழ்வு. கேட்பதற்கு நாதியின்றி நாள்தோறும்  இறக்கும் குடிகாரர்கள் பலர்.

     மதுக்கடைகள் எத்தனைக் குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது? எனக் கேட்ட காலம் மலையேறிவிட்டது. குடி எத்தனைக் குடும்பங்களை வாழ்விக்கிறது? எனக் கேட்கும் அளவிற்கு, குடிப்பது நகைச்சுவையாகிவிட்டதுதான் கொடுமை.

இவர்களைத் திருத்தவே முடியாதா? என்றுதானேகேட்கிறீர்கள். குடியில் மூழ்கி இருக்கும்போது திருத்த எண்ணுவது, விளக்கினை ஏற்றி எடுத்துக்கொண்டு  நீரில் மூழ்கியவனைக் காப்பது போன்றது என்கிறார் தெய்வப்புலவர்.

     களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைக் தீத்துரீஇ அற்று (திருக்குறள் – 929)

 

சேற்றில் விழுந்த செங்கதிர்போல் ஒளியின்றி வாழ்வைக்கெடுத்துக்கொள்வோரைப் பார்த்தால் வெறுப்பினைவிட அவர்களுடைய குழந்தைகளை ; மனைவியை ; பெற்றோரை எண்ணி வருந்தவே வேண்டியிருக்கிறது. குடியை எதிர்த்து எத்தனை ஆயிரம் மக்கள் போராடினாலும் பயனில்லை. இதற்கு அந்த ஆலைகளை வைத்திருக்கும் ஒருசிலர் எண்ணினால் போதும். நாடும் வீடும் நலம்பெறும்தானே.

குடி குடிப்போரே கேளுங்கள் ! குடி விற்போரே கேளுங்கள் ! இன்று  உங்களுக்கு மகிழ்ச்சி தருவதால் இச்செயலைச் செய்கிறீர்கள்.  ஆனால் இது  மகிழ்ச்சியைத் தராது. அப்படியே நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தந்தாலும் எதிர்காலத்தில் துன்பத்தையே தரும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்

     முடிந்தாலும் பீழை தரும் (திருக்குறள் – 658)

 

     சான்றோர்கள் போற்றாத செயல்களைச் செய்தால் இழிவுமட்டுமே உண்டாகும். குடிப்பதுபோல் நடிப்பது தவறு. நடிப்பதுபோல் குடிப்பது அதனைக் காட்டிலும் தவறு.  இதனை, உணர்ந்து தவறான வழியில் செல்லாதிருத்தலே பெருமைக்கு வழி. தெய்வப்புலவர் பேச்சைக் கேட்கலாம்தானே?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக