கற்பு என்னும் திண்மை – தமிழ் இலக்கியப்பதிவுகள்
“கற்பெனப்படுவது
சொல் திறம்பாமை” - சொல் திறம்பாமல் வாழ்வதே ‘கற்பு’ என்பது ‘தமிழ் மூதாட்டி’ ஔவையின்
வாக்கு. இதனை முறையாகக் கற்பித்த ஒழுக்கமே
கற்பாயிற்று. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்பதனைக் கற்பித்ததும், “கற்புடன்
வாழவேண்டும்” எனக் கற்பித்துதும் இரண்டல்ல ; ஒன்றே.
இதை எவ்வாறு ஒப்புவது? என நீங்கள் கேட்பதுபுரிகிறது.
ஒல்காப்புகழ் தொல்காப்பியம் கூறினால் ஒத்துக்கொள்வீர்தானே?
கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே
(140)
என்னும் நூற்பாவில் ‘கற்பு’ குறித்து இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியர்.
இந்நூற்பாவில் மூன்று கருத்துக்களை வரிசைப்படுத்துகிறார். முதலில் ‘கரணமொடு புணர்வது”.
‘கரணம்’ என்பது வதுவையைக் குறிக்கும். ‘வதுவை’ என்பது கூடி வாழ்வதற்கான வழிவகை செய்தல். எனவே, எந்நாளும் கூடிவாழும் வகையில் தலைவனையும்
தலைவியையும் இணைந்துவாழச்செய்வதே ‘கற்பு வழக்கு’ என்கிறார் தொல்காப்பியர். உண்மையாக
வாழ்வதனால் மட்டுமே கூடிவாழஇயலும் என்பதனை வாழ்ந்தவர்கள் வழி அறியலாம்தானே? ‘உண்மையாக
வாழ்தல்’ என்பது சொல் திறம்பாமையையும் குறிக்கும்தானே?
இரண்டாவது, திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் கல்வி, பணம்,
புகழ், பதவி என எவற்றையெல்லாம் அளவீடாகக் கொள்ளமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்து ஆண்வீட்டார் திருமணம் செய்விக்கவேண்டும். இதுவே கொளற்குரிய மரபு.
மூன்றாவது, புகுந்தவீட்டில்
எக்குறையுமின்றி வாழவேண்டும் என்பதனை உணர்ந்து பெண்வீட்டார் அத்தகைய வாய்ப்புடைய ஆண்மகனையே திருமணம்
செய்விக்கவேண்டும். இதுவே கொடைக்குரிய மரபு.
இவ்வாறு திருமணங்கள் செய்யப்படும்போது,
வாழ்க்கை இனிதாகும். இல்லையேல் நரகம்தான். மருத்துவம் படித்த பெண்ணை, மருத்துவத்தைப்
பற்றி ஒரு துளியும் அறியாத ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தால் என்னாகும்?. இரவுபகல் பாராது உழைக்கும் மருத்துவத்தின் அருமையினையும் பெருமையினையும் அறியாது செயல்படுவான்.
இதனால் வாழ்நாள் நரகமாகிவிடும்தானே? உணர்ந்தவனாயின் உயிர்காக்கும் தெய்வீகப்பணி என
மனைவியைக் கொண்டாடுவான்தானே?
கணவன் மட்டும்தான் மனைவியின்
அருமையினை அறிவானா? மனைவி கணவனின் அருமையை அறியமாட்டாளா? என்றுதானே கேட்கவருகிறீர்.
நீங்கள் கேட்பீர்கள் என்பதால்தான், தற்காலத்தில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வு
ஒன்றினைக் கூறவிழைகிறேன்.
நிகிதாகௌர் என்னும் பெண்மணிக்குத்
திருமணம் நடக்கிறது. கணவன் டோராடூனைச் சார்ந்த
விபூதிசங்கர்தவுண்டி, இராணுவ மேஜர். பத்து மாதங்கள் ஓடின. 2019 பிப்ரவரிமாதம் இந்திய
எல்லையான ஜம்முகாஷ்மீர் ‘புல்வாமா’வில் தாக்குதல் நடக்கிறது. எதிரிகளால் மத்திய இருப்புக்காவல்
படை (சி.ஆர்.பி.எஃப்) நாற்பது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். உடனடியாக எதிரிகளுக்குப்
பாடம் கற்பிக்க இராணுவம் இறங்குகிறது. அப்படையில்தானே விரும்பி களம் இறங்குகிறார் விபூதிசங்கர்தவுண்டி.
எதிரிகள் துரத்தப்படுகின்றனர் ; கொல்லப்படுகின்றனர். இப்போரில் மேஜரும் உயிரிழக்கிறார்.
காலம்காலமாக இப்படி நாட்டுக்காக வீரர்கள் உயிர்கொடுத்துக்கொண்டிருப்பது இயல்பான நிகழ்வுதானே
என நினைக்கிறீர்கள். அப்படித்தானே? இத்துடன் அவர்களுடைய வீரப்பயணம் முடிந்துவிடவில்லை.
இப்போதுதான்தொடங்கி இருக்கிறது என்கிறார் நிகிதா.
கணவனை இழந்த துக்கத்தில் சோர்ந்துவிடாமல்
கணவரின் தேசபக்தியினை தனதாக்கிக்கொள்கிறார். கணவனின் கனவினை நினைவாக்கத் தொடங்கினார்.
இலட்சக்கணக்கில் சம்பாதித்த தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலையை விட்டுவிட்டு, தகுதித்தேர்வெழுதி
இராணுவத்தில் சேர்ந்துவிட்டார். கணவனின் இலட்சியக்கனவினை நினைவாக்கத் துணிந்த பெண்ணின்
பெருமையினை என்னென்பது? ‘உனக்காக வாழ்வேன்’ என்னும் சொல்திறம்பாத கற்புத்திறம் பெருமையுடையதுதானே?
பெண்ணிற் பெருந்தக்க யாவுள
கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள்-54)
என்னும் தெய்வப்புலவரின் வாக்கிற்கு வாழ்க்கையான பெண்மணிதானே இவர்.
ஆம்! அருமையான பெண்மணிதான்.
பெண்ணுக்கு மட்டும்தான் கற்பா ? ஆணுக்குக் கற்பில்லையா ? என்னும் கேள்வி உங்களுக்குள்
எழுகிறதுதானே? அதனால்தான் ‘ஏக பத்தினியுடன்
வாழ்ந்த இராமனை இராமாயணத்தில் படம்பிடித்துக்காட்டினார் கம்பர். தமிழில் இல்லாத பொருளென்று
எதுவும் இல்லைதானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக