மகாகவி பாரதியார் தூக்கத்தை விரட்டிய சூரியன்.
அதனால்தான் பாரதத்தாய்க்குப் (பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி) பள்ளியெழுச்சி மட்டும்
பாடினார். பாவிற்கு அரசன் தாலாட்டுப் பாடவில்லை. ஏன் பாடவில்லை? தாய் உறங்கினால் குழந்தைகள்
அடித்துக்கொள்கிறார்கள். பின் எப்படித்தூங்கமுடியும். ஒற்றுமையுடன் வாழத்தெரியாத பிள்ளைகளைப்பெற்றுவிட்டு
அன்னையால் அமைதியாய்த் தூங்கமுடியுமா? முடியாதுதானே? அதனால்தான் தனக்குத் தாலாட்டுப்
பாடிய தாய்க்குத் தாலாட்டுப் பாடமுடியாமல் தன் கைகளைத்தானே கட்டிப்போட்டுக்கொண்டார்.
“மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?”
எனத்தூங்காததாயை தூங்கியதாக
எண்ணியெழுப்பும் இப்பாடலடிகள் அழகோஅழகுதானே?. ஆங்கிலேயனின் அடக்குமுறையினை கவிழ்க்கவே
அவருடைய எழுதுகோல் தலைகவிழ்ந்தது. அந்த எழுதுகோல் கவிழ்ந்தபோதெல்லாம் இச்சமுதாயத்தில்
விடுதலை உணர்வு எழுந்தது ; ஆங்கிலேயர் குருதி உறைந்தது ; விடுதலைப்போராட்டத்தியாகிகளின்
உளம் நிறைந்தது.
“உன் நாடு உன்னுடையது” எனச் சொல்வதற்கு ஒரு மகாகவி
தேவைப்படுகிறார். கொடுமைதானே?. தந்தையானவர் மகனை அழைத்து, ‘இது உன்வீடு” எனக் கூறினால்,
என்ன பொருள்?. “பொறுப்பில்லாத மகன்” என்பதுதானே பொருள். “குடும்பம் இல்லை என்றால் நீ
அநாதையாகி விடுவாய்” என ஒரு தந்தை மகனுக்கு உரைப்பதுபோல “உன்னைத் தாங்கிக்கொண்டிருக்கும்
நாடு இல்லாவிட்டால் நீ அநாதையாகிவிடுவாய் என்பதனை
உணர்த்துகிறார் மகாகவி பாரதியார்.
உனக்கு நாட்டுப்பற்று உண்டா? என எந்தக் குழந்தையையாவது
கேட்டுப்பாருங்கள். அப்படியென்றால்? எனக் கேட்கும். குழந்தைகளிடம் தவறில்லை. நாட்டுப்பற்று
என்றால் என்னவென்று எந்தப்பாடத்தில் சொல்லிக்கொடுத்தீர்கள்.? தமிழ் மன்னர்கள் அந்நியரை
வெற்றிகொண்டதையோ, நாட்டுக்காகப் போராடிய தியாகிகளையோ பாடத்தில் பார்க்கமுடியாதபோது
அவர்கள் எப்படி அறிந்திருப்பார்கள். அந்நியர்களின் புகழை மட்டுமே படிக்க வாய்ப்பளித்துவிட்டு
நாட்டுப்பற்று குறித்துப் பேசினால் என்ன பயன்? குழந்தைகளுக்கு நாட்டு உணர்வு வருவதில்லை.
நடிகர்களை மட்டுமே காண்பதால் அவர்களையே கொண்டாடுகிறார்கள். குழந்தைகளிடம் உண்மையான
வீரர்களைக் கொண்டு சேர்க்கவேண்டியது பெரியோர்களின் கடன்.
நாட்டுப்பற்று எப்படி இருக்கவேண்டும்? ஒரு
உண்மை கதை சொல்லட்டுமா?... 1962 ஆம் ஆண்டில் வடகிழக்கு எல்லையான நூரானங் (அருணாசலப்பிரதேசம்)
என்னும் இடத்தில் சீனாவுடன் இந்தியா போர் செய்கிறது. பெரும்படைகொண்ட சீனா, போரினை எண்ணிப்பார்க்காத
இந்தியப் படையை எதிர்க்கிறது. எளிமையான ஆயுதங்களை மட்டுமே கொண்ட இந்தியப்படைவீரர்களை
நவீன எந்திரத்துப்பாக்கிகளைக் கொண்டு குருவி சுடுவதைப் போல சுட்டழிக்கிறது. இந்தியப்படை
பின் வாங்குகிறது. சீனா, அமைதிக்கான உடன்படிக்கை பேசிவிட்டு போர்தந்திரத்தைக் கையாண்டது.
சீனா, வெற்றிகொண்டது வீரத்தால் அன்று ; துரோகத்தால்தான். போர்ச்சூழலில், அதனை துரோகத்தை
அவமானமாகக் கருதிய மூன்று வீரர்கள், புறமுதுகிட்டுச் செல்வதை விரும்பவில்லை. சீனப்படையுடன்
போர்செய்யத் துணிகின்றனர். சீனப்படைக்குள் சென்று அவர்களுடைய கனரக ஆயுதங்களைக் கைப்பற்றினால்
அன்றி ஒன்றும் செய்யமுடியாது என சீனப்படைக்குள் நுழைய முன்னேறுகிறார்கள். இருவர் கொல்லப்படுகின்றனர்.
ஜஸ்வந்த்சிங்ராவத் என்னும் போர்வீரர் மட்டும் தவழ்ந்து தவழ்ந்து சீனப்படைக்குள் நுழைந்துச்சென்று
ஓர் கனரகத்துப்பாக்கியைக் கைப்பற்றுகிறார்.
“இப்பொழுது வாங்கடா ! பார்ப்போம்” என அழைக்க
சீனப்படையினர் சூழ்கின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் எதிரிகள் தரையில் சரிந்துகிடந்தனர்.
அடுத்தடுத்து சீனப்படையினர் தொடர்ந்து குவிந்துகொண்டே இருந்தனர். எழுபத்திரண்டு மணி
நேரம் தனி மனிதனாக சீனப்படையை எதிர்கொண்டார். முந்நூறு சீன வீரர்களைக் கொன்றார். சீனப்படை
அதிர்ந்தது. “இந்தியப்படையில் எவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள்” என ஆய்கிறார்கள். “ஒரே
ஒருவன்தான் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறான்” எனச்செய்திப்பறக்கிறது. இதனை அறிந்துகொண்ட
சீனப்படை, திட்டமிட்டுச் சுற்றிவளைத்து ஜஸ்வந்த்சிங்ராவத்தை சுட்டு வீழ்த்துகிறார்கள்.
“முந்நூறு வீரர்களை இவன் ஒருவன் கொன்றானே” என்று
இறந்தபின்னும் தலைசிறந்தவீரனின் தலையைவெட்டி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கின்றனர்.
ஆனால், இன்றும் பாரதத்தின் பாதுகாப்புப்படை அவ்வீரனின் புகழைக் கொண்டாடுகிறது. இன்றும்
ஜஸ்வந்த்சிங்ராவத் உயிருடன் இருப்பதாக எண்ணிப் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் ஓர் உயர்அதிகாரிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுமோ அதே மதிப்பினை இன்றும்
அவருடைய நினைவாலயத்திலுள்ள அவருடைய சிலைக்குக்கொடுக்கப்படுகிறது. அந்த இடம் இன்று
“ஜஸ்வந்த் கர்” என அழைக்கப்படுகிறது. இதுதான் பாரதத்தாயின் தவப்புதல்வனின் செயல். தாயாரின்
புகழ்க்காத்த இருபத்தோரு வயது வீரப்புதல்வனை ஒவ்வொருநாளும் பாரதம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
இத்தகைய தேசப்பற்றையே மகாகவி பாரதியார் ஒவ்வொரு
குடிமகனிடம் எதிர்நோக்குகிறார். பாரதம் வளத்தாலும் பண்பு நலத்தாலும் பிறநாடுகளுக்கெல்லாம்
தலையாயது. இதனை உணர்ந்து பெருமிதம் கொள்வாய் என அறிவுறுத்துகிறார்.
“பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்”
எனப்பாடியுள்ளார். சத்ரபதி
சிவாஜி தன் படைக்கு அறிவுறுத்துவதுபோல் பாரதப்புதல்வர் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தும்
திறத்தைக் காணமுடிகிறது. இன்று அவருடைய கனவு
நினைவாகியிருக்கிறதா? என்றுதானே கேட்கிறீர்கள். ஆம். இக்கால நிகழ்வு ஒன்றைக் கூறட்டுமா?
“உங்கள் நாட்டில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது
? எதிர்த்துப்போராடுங்கள்” எனத் தூண்டிவிடுகிறது எதிர்தேசம். அதற்கு இன்றைய நாட்டுப்பற்றுடைய
பாரதப்புதல்வனின் விடை “என்னுடைய நாட்டிற்காக நான் கொடுக்கும் பணம் ஒவ்வொன்றும் மீண்டும்
எங்கள் நலனுக்கே செலவழிக்கப்படும். எங்களுடைய நாட்டின் ஒரு மாநிலம் தான் உங்கள் நாடு.
உங்களால் முடிந்தால் எங்கள் முப்படையுடன் போர் செய்துப்பாருங்கள். அச்சமாக இருந்தால்
அமைதியாக இருங்கள். எங்களையே எங்கள் நாட்டுக்கு எதிராகப் போராடச்செய்யும் கீழ்த்தரமான
செயல்களைச் செய்யாதீர்கள்.” எனக்கூறி வீரநடைபோடும் இளைஞனும் மகாகவி காணவிழைந்த பாரதத்தாயின்
தவப்புதல்வன்தானே?
மகாகவி ஒவ்வொருவர் உள்ளத்திலும் நாட்டுப்பற்றினை,
விதைத்தார் ; விதைக்கின்றார் ; விதைப்பார். அத்தகைய வலிமையுடைய எழுத்துத்திறத்தை எண்ணிப்பார்க்கும்பொழுதே
விண்ணைத் தொடுகிறது மகாகவியிடம் கொண்ட பேரன்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக