ஞாயிற்றிலும் உழைக்கும் திங்கள் – பெண்
எத்தனை விடுப்புகள் வந்தாலும் வீட்டு வேலையில் பெண்களுக்கு விடுப்பு உண்டா?. அனைவரும் ஓய்வெடுக்கும் நாளிலும் பெண்ணின் இடுப்பு
ஒடிந்துபோகும் அளவிற்கு வேலை. ஏனென்றால் அன்றுதான் விருந்துபோல் உணவு சமைக்கவேண்டுமாயிற்றே.
துணிதுவைக்கும் எந்திரம் துவைத்த பின் ஓய்வெடுக்கும். மாவரைத்த எந்திரமும் அரைத்த பின்
ஓய்வெடுக்கும். சட்னி அரைத்த குறுஅரவையும் (மிக்ஸி) அரைத்தபின் ஓய்வெடுக்கும். ஆனால்
ஓய்வறியாமல் நாளும் உழைத்திடும் பெண்கள் பலர். வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை பார்க்கும்
இடங்களில்தான் ஓய்வெடுக்கமுடிகிறது. வீட்டுவேலைகளைவிட அவர்களுக்கு அலுவலக வேலைகள் பெரிதாகத்
தெரிவதில்லை. அதனால்தான் பலர் காலை சிற்றுண்டியையும் அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றே
உண்கின்றனர். எந்திரம்போன்ற அவர்களின் ஓட்டத்தை, அலுவலகத்தில் நுழையும்போது அவர்களின்
தலையிலிருந்து எட்டிப்பார்க்கும் சீப்பு நினைவுபடுத்தும்.
வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலுள்ள
பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என எண்ணுவதும், வீட்டில் உழைக்கும் பெண்கள் வேலைக்குச்
செல்லும் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என எண்ணுவதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதானே.
பெண்களுக்குத் தன்னைக் காத்துக்கொள்வதே அரும்பணி.
சமூகத்தில் பெண்களைப் பகடி செய்வது பழக்கமாகி இருக்கிறது. ஒரு பெண்ணை, தாயாகவும் தங்கையாகவும்
பார்க்கும் பழக்கம் குறைந்துவருவதற்கான அடையாளம் அது. ஆண் குழந்தைகளுக்குப் படிப்பதுமட்டுமே
போராட்டமாக இருக்கிறது. கடினமாகப் படித்தால் வெற்றிவாகை சூடமுடிகிறது. ஆனால், பெண்கள்
நன்றாகப் படித்தால் மட்டும்போதாது, நாளும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று திரும்புவதே
போராட்டமாக இருக்கிறது. அதனை எதிர்கொள்ள முடியாத எளிய குடும்பங்களில் பெண்களின் படிப்பு
கனவாகி நின்றுவிடுகிறது. நன்றாகப் படித்து பெண் மருத்துவர்களாக ; பொறியாளராக ; காவல்துறை
அதிகாரியாக ; சிறந்த ஆசிரியராக ; விஞ்ஞானியாக வரவேண்டியவர்கள் வீட்டிற்குள் முடங்கிப்போய்விட்டதனைக்
காணமுடிகிறது. பெண் குழந்தைகள் கல்வி பெறாவிட்டாலும் பாதுகாப்பாக வாழ்ந்தால்போதும்
என்னும் எண்ணம் வளர்ந்துவிட்டது. இத்தனை இழிவுக்கும் யாரைக் காரணம் காட்டுவது? இழிவான
ஆண்களையா? அப்படிப்பட்ட இழிவான ஆண்களை ஒழுக்கமாக வளர்க்கமுடியாத பெண்களையா? ஏன் இப்படிக்
கூறுகிறீர்கள்? வளர்ப்பதில் ஆண்களுக்குப் பங்கில்லையா?
எனக் கேட்காதீர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே குடும்பத்தை மட்டுமின்றி தன்னைக் கொண்டானையும்
பேணிப்பாதுகாக்க முடியும். ஆண்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையினையே பெண்தானே அறிந்து
வெளிப்படுத்துகிறாள். அதனால்தான் திருமணத்திற்குப் பின் ஆண்களின் வாழ்க்கை அழகானதாக
மாறிவிடுகிறது. இதனையே, தெய்வப்புலவர் திருவள்ளுவர்
தற்காத்துத்
தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (திருக்குறள்
– 56)
என்னும் திருக்குறளில் உணர்த்தியுள்ளார்.
ஒரு
சொல் வெல்லும் ; ஒரு சொல் கொல்லும் என்பர் பெரியோர். அது இல்வாழ்க்கைக்குப் பெரிதும்
பொருந்தும். பெண்ணுடைய கடைக்கண் பார்வையும் கனிந்த சொல்லும் எத்தகைய ஆணையும் திருத்திவிடும்
அருமையுடையது. எச்சொற்களை, எப்போது பேசவேண்டும் என்னும் கலை பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது.
ஏனெனில், சிறுவயது முதலே இப்படி இருக்கவேண்டும். இப்படிப்பேச வேண்டும் என்னும் கட்டுப்பாடுகள்
சமூகத்தால் கற்பிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, ஏன்? எதற்கு? இவை அனைத்தும் நன்மைக்கா?
தீமைக்கா? என அளவறிந்து செயல்படும் திறம் பழக்கமாகிவிடுகிறது. எனவே, பெருமையுடைய பெண்,
புகழுக்குரிய செயல்களை மட்டுமே செயல்படுத்த விழைகிறாள்.
தனக்கு
உடல் நலம் சரியில்லாதபோது கூட சிறிதும் பொருட்படுத்தாமல் கணவனுக்கும், குழந்தைகளுக்கும்
உணவு ஆக்கிவைத்துவிட்டே ஓய்வெடுப்பாள். தன் சோர்வினை வெளிப்படுத்தமாட்டாள். பின் தூங்கி
முன் எழும் பெருமையுடையாள். வீட்டிலுள்ள அனைவரும் திருமணத்திற்கோ, கோவிலுக்கோ சென்று
திரும்புவர். அனைவரும் வீட்டில் நுழைந்ததும் ஓய்வெடுப்பர். ஆனால், பெண்ணோ அடுத்த வேளை
உணவிற்கு வழி செய்வாள். அவளுடைய சோர்வு என்ன ஆனது?. அவளுடைய அன்பில் சோர்வே சோர்வடைந்து
ஓடிவிடுகிறது.
தாயாருக்கு
எண்பது வயதானாலும் தனக்குத் துணை செய்ய வேண்டுமென அன்புக்கட்டளையிடும் மகள்களையும்
பல இடங்களில் பார்க்கமுடிகிறதுதானே?. அந்த
வயதிலும் முடிந்தும் முடியாமலும் அனைத்து இல்லப்பணிகளையும் செய்யும் தாய்மார்களும்
தமிழகத்தில் உண்டுதானே?
“ஏன்?
இப்படி சோர்வில்லாமல் உழைக்கின்றீர்கள்?” எனக் கேட்டுப்பாருங்கள். “‘ஏன் தனியாக ஊரில்
கஷ்டப்படுகிறீர்கள். இங்கே வந்துவிடுங்கள்” என. மகள் அழைத்தாள். ராணி போல் வாழலாம்
என நினைத்தேன். இங்கே வேலைக்காரிபோல் வாழ்கிறேன். அவளை நம்பிவந்ததன் விளைவு. இப்படியாகிவிட்டது.
மீண்டும் ஊருக்குத்திரும்பவும் முடியாது. மகள் பார்த்துக்கொள்வதாக பெருமையுடன் கூறிவந்துவிட்டேன்.
சரி. பரவாயில்லை. பேரன் பேத்திகளைத் தானே பார்த்துக்கொள்கிறேன்”
என்பாள். அந்த அன்பில்தான் அவளுடைய சோர்வுகள்
காணாமல் போகின்றன. கருணை உள்ளங்களை காயப்படுத்தி வாழ்வது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டதே வேடிக்கைதான்.
நாட்டு
மக்கள் நன்றாக வாழவேண்டுமென எல்லைக்கோட்டில் உழைத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்புப்படைவீரர்கள்
எத்தனைப் பெருமை உடையவர்கள். அவர்களைப்போலவே வீட்டில் உள்ள அனைவரின் நன்மைக்காகவும்
தனது சோர்வை மறந்துபோகிறாள் பெண். அவர்களால்தான் நாடும், வீடும் செழிக்கிறது.
எட்டு வயதில் தொடங்கிய பணி எண்பது வயதிலும்
தொடர்கிறது என்றால் “சோர்விலாள் பெண்” என்னும் தெய்வப்புலவரின் வாக்கு தேக்குதானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக