பொய் வாழ்க்கை வாழலாமா? – கவியரசர் கண்ணதாசன் காட்டும் வழி
ஓர் ஊரில் ஒரு செல்வந்தர். ஊருக்கு
உணவிட்டபின் தன் வீட்டுக்கு உணவிடுவார். தம் வயலில் நெல் விளைந்தபின், மக்களுக்குக்
கொடுத்தபிறகே தன் வீட்டிற்கு படியளப்பார். அவருக்கு ஊரில் செல்வாக்குப் பெருகிற்று.
பெருமையுடையவர்கள் வாழும் நாட்டில் பொறாமை உடையவர்களும்தானே வாழ்வார்கள். ஒரு நல்லவனைப்
படைத்த கடவுள் ஓராயிரம் தீயவர்களைப் படைத்துவிடுகிறார். தீயவர்கள் நன்றாக வாழ நல்லவர்கள்
வருந்தி வாழ்கிறார்களே என நீங்கள் நினைக்கிறீர்கள்தானே? நீங்கள் இப்படி நினைப்பீர்கள்
என்பதனை முன்னரே உணர்ந்தேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அன்றே
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் (திருக்குறள்-167)
எனப்பாடிவைத்தார். இதற்கு விடை சொல்ல கவியரசர் கவிதை காத்திருக்கிறது. சரி!
கதையைப் பாதியில் விட்டுவிட்டோமே? ஆம். தீயவர்கள் ஒன்றுகூடி செல்வந்தரைப் பற்றி பொய்யான
தகவல்களைப் பரப்புகின்றனர். உங்களால்தான் அவர் கோடீஸ்வரனானவர். உங்களுக்குக் கிடைக்கவேண்டிய
பணத்தைத்தான் எடுத்துகொள்கிறார். வெளியூரில் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார். நீங்கள்
அவரை எதிர்த்துக்கேட்டால்தான் அந்தப் பயன் உங்களுக்குக் கிடைக்கும் எனத் தூண்டிவிடுகின்றனர்.
வெள்ளந்தியான மக்களும், செல்வந்தரால்தான் பஞ்சமின்றி மகிழ்ச்சியாக வாழ்கிறோம்
என உணராமல் நாளும் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் செய்தனர். எதிரிகள் கூறிய பொய்யையே
இவர்களும் எல்லோருடைய உள்ளத்திலும் விதைத்தனர் ; வேலைக்கு வருவோரையும் தடுத்தனர். செல்வந்தர்
பொறுமை இழந்தார், நிலத்தை விற்றுவிட்டு நகரத்திற்குச் சென்றுவிடுகிறார். விளைநிலம்
தொழிற்சாலையாக மாறுகிறது. அந்த தொழில்நிறுவனத்தில் பணிசெய்ய வேலையாட்கள் வெளியூரிலிருந்து
வருகின்றனர். செல்வந்தரை எதிர்த்துப்போராடக் கூறியவர்கள் வீடெல்லாம் மாளிகையாகிவிடுகிறது.
அப்பாவி மக்கள் அன்றாடங்காய்ச்ச கஞ்சியுமின்றி வருந்தினர். “பொய் சொன்ன வாய்க்குப்
போஜனம் கிடைக்காது” என்னும் சத்தியமான வாக்கினை உணர்ந்தனர். கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம்
செய்தால் நல்லது எனத்தெரிந்து கொண்டனர். என்ன புண்ணியம்?
அப்பாவி மக்களை ஏமாற்றியவன்தானே பாவத்தை அனுபவிக்கவேண்டும். மக்கள் என்ன செய்வார்கள்?
என்றுதானே கேட்கிறீர்கள். உணவிட்டவரை மனம் நோகவைத்தல் எத்தனை பாவம். அதுவே வினைப்பயன்(விதி).
நல்லோர்கள் சிலராக இருக்க தீயோர்கள் பலராக இருக்கின்றனர். இதற்கு என்னதான் விடை என்றுதானே
கேட்கிறீர்கள்? மேற்கூறிய அனைத்து வினாக்களுக்கும் ஒரே விடை சொல்கிறார் கவியரசர்.
ஆண்டவன் வாசல் அளவில் சிறியது
சாத்தான் வாசல் சாலையிற் பெரியது!
அதிலே செல்பவர் அளவில் குறைவே
இதிலே செல்பவர் எத்தனை பேரோ!
எனக்கூறுவது எத்தனை அழகு. இறைவனுடைய வீட்டிற்கான வாசல் சிறியது. அவ்வாசலில்
பலர் நுழைவது கடினம். எனவே நல்லவர்களைக் குறைவாக்கினார். தீயவர்கள் குறித்து சொல்லத்தேவையில்லை.
நீங்கள் புரிந்துகொண்டீர்கள்தானே?
இப்போது நீங்கள் எந்த வரிசையில்
நிற்கவேண்டும் என உணர்ந்துகொண்டீர்கள்தானே?. எனக் கவியரசர் கேட்கிறார். நல்வழிதான்.
ஆனால், அதற்கு என்ன செய்யவேண்டும் என்றுதானே கேட்கிறீர். இதோ, கவியரசர் கூறும் கருவழி
பிறப்பைத் தடுக்கும் அருவழி.
எவரைப் பற்றி எந்த நேரத்திலும்
குற்றம் பேசிக் குறை சொல்லாதீர்!’
அப்படிச் சொன்னால் அடுத்தநாள்
உமக்கும்
சட்டம் அதுவே தாக்குதல் திரும்பும்
கண்டனம் செய்தால் கண்டிக்கப்படுவீர்
மன்னித்துவிட்டால் மன்னிக்கப்படுவீர்
கொடுங்கள் அதுபோல் கொடுக்கப்பெறுவீர்
அளக்கும் அளவே அளக்கப்படுமே!
என்னும் அடிகள் எத்தனை
எளிமையோ அத்தனை வலிமையும் கூட. எனவே, அன்புடன் வாழ்வோம். அன்பைப் பெறுவோம்.
அன்பின் ஆழத்தை அறிந்துகொள்ள படித்த கதை ஒன்றை சொல்லட்டுமா?
கணவனை இழந்த தாயானவள் பலவீடுகளில் வேலைசெய்து ஒரே மகனைச் செல்லமாக வளர்க்கிறாள். வறுமைச்
சுவடே தெரியாமல் வளர்க்கிறாள். “பிறகு, எப்படி அந்தக் குழந்தை உருப்படும்” என்றுதானே
கேட்கிறீர்? ஆம்! அந்தக் குழந்தை உருப்படாமல் போனது. உருப்படாத நண்பர்களுடன் சேர்ந்து
தீய பழக்கமே நன்மை என உணரும் அளவிற்குப் போதைப் பழக்கம் உண்டாயிற்று. இப்போது, உணவுக்கான
பணத்தையும் அடித்துப் பிடிங்கிக்கொண்டு போய்விடுகிறான். என்னதான் இருந்தாலும் தாய்மனம்
பித்துதானே!. பக்கத்துவீட்டில், எதிர்வீட்டில் எனக் கடன்வாங்கி சமைத்துப்போட்டுவிடுகிறாள்,
குடித்துவிட்டு, சாப்பிடாமல் இருந்தால் வயிறு புண்ணாகிவிடும் இறந்துவிடுவான் என்று
கவலை.
ஒருநாள், குடித்துவிட்டுவந்த மகன் தாயை அடிக்க வழக்கம்போல்
எல்லோரும் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தாயானவள், வழக்கத்திற்கு
மாறாகத் தேம்பித்தேம்பி அழுகிறாள். சுற்றி இருந்தவர்கள் இதற்காகவே காத்திருந்தவர்கள்
போல் மகனை அடித்துத் துவைத்துவிடுகிறார்கள். தாயானவள், அவர்களிடமிருந்து மகனைக் காப்பாற்றுகிறாள்.
எதிர்வீட்டுக்காரர், “என்னம்மா? எப்போதும் அழமாட்டீர்கள். இன்று அழுகிறீர்கள். அதனால்தானே
அடித்தோம்” என்றனர். அதற்கு அந்த தாய், “நான் தினமும் அடிவாங்குவேன். அழுதால் நீங்கள்
மகனை அடித்துவிடுவீர்கள் எனத்தெரியும். எனவே, அழாமல் வலியைப் பொறுத்துக்கொள்வேன். ஆனால்
இன்று, அவன் அடித்து ஒரு வலியும் இல்லை. குடித்துக்குடித்து அவன் வலுவிழந்துவிட்டான்.
அதனை எண்ணினேன். கட்டுப்படுத்தமுடியாமல் அழுகைவந்துவிட்டது.” என்றாள். சுற்றி இருந்தவர்கள்
அனைவருடைய கண்களிகளிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. இவ்வுலகில் செய்யும் ஒவ்வொரு வரவு செலவுக்கான கணக்கும்
மேலுலகில் சரிபார்க்கப்படும் என்னும் கவியரசர் சொல்லுக்கு இலக்கணமே இத்தாய்.
இனி, பொய்யான வாழ்க்கை வாழ மனம் வராதுதானே. வாழ்க்கைச்
சகதியில் சிக்கிக்கொள்ள நேரிட்டால் கவியரசர் பாடல்தான் உங்களுக்கு ஊன்றுகோல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக