தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 27 ஜூன், 2021

பெண்ணியம் பேசிய முதல்வர் – திருவள்ளுவர்

 


பெண்ணியம் பேசிய முதல்வர் – திருவள்ளுவர்

     பெண்ணியம் பேசிக்கொண்டே காலத்தைக் கடந்துகொண்டேபோகும் சூழலைக் காணமுடிகிறது. எத்தனையோ நூற்றாண்டுகள் ; எத்தனையோ தலைமுறைகள் கடந்தபின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நின்றபாடில்லை. மாறாகப் பெருகிவரும் சூழலையும் காணமுடிகிறது. இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமாயின் பெண்களை இழிவுபடுத்தும் சூழல் கொடூரமானதாக மாறிவருகிறது.

     “பெண்விடுதலை” என்னும் மாயையினை நம்பி வெளியே துணிவுடன் எதிர்த்து நிற்கும் பெண்கள் நாள்தோறும் காணாமல் போவது வாடிக்கையாகிவிட்டது. நாள்தோறும் அப்பெண்களைப் பெற்ற தாய்மார்களின் கண்ணீர்தான் எழுத்துக்களாக செய்தித்தாள்களில் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

     குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிக்கும் முன் பணம், புகழ், பதவி என எத்தனையோ கவசங்கள் குற்றவாளிகளைக் காப்பாற்றிவிடுகிறது. சரி, பிறரை குறை சொல்லியே தப்பித்துக்கொள்ள நினைப்பதில் ஒரு பயனும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு பெண்களின் மீதான மதிப்பினை உயர்த்துவஹ்டு ஒன்றுதான் வழி. விதைகள் நன்றாக அமைந்துவிட்டால் செடி நச்சுடையதாக அமையாதுதானே? எனவே சிறுவயது முதலே பெண்களை மதித்துவாழ ஆண் குழந்தைகளுக்கு ; இளைஞர்களுக்கு ; பெரியோர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். பெண்களைப் பாதுகாப்பாக வளர்க்கவேண்டும். பெண்களைக் காப்பதாக எண்ணி அவர்களுடைய திறமையை முடக்கிவிடக்கூடாது.

     ஆண்களுக்குப் பெண்ணிய அறிவை ஊட்டுவது முள் மேல் படர்ந்துவிட்ட சேலையை எடுக்கும் அளவிற்கான கவனம் தேவை. வீடுகளில் ; பள்ளிகளில் ; கல்லூரிகளில் ; பணியிடங்களில் ; சாலைகளில் ; மண்ணில் ; விண்ணில் என அனைத்து இடங்களிலும் பெண்கள் மதிக்கப்படவேண்டும்.

     ‘பெண்ணிய முழக்கம்’ என்பது பெண்களின் திறத்தை மதிக்கவேண்டும் என்பதற்கான ஒரு வழக்குதானே? மனிதர்களை மனிதனாக எண்ணவேண்டும் என்னும் இயல்பான ஒரு வாழ்வைக்கூடப் போராடித்தான் பெறவேண்டுமென்றால், மனித இனத்துக்கு ஆறறிவிருந்து என்ன பயன்? என்றுதானே கேட்கத்தோன்றுகிறது. அதனால் வீட்டில் பெண்குழந்தைகளை ஆண்குழந்தைகளுக்கு இணையாக; மேலாக வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் மதிக்கவேண்டும் என்னும் எண்ணம் ஆண் குழந்தைகளுக்கும், வீரத்துடன் வளரவேண்டும் என்னும் எண்ணம் பெண்களுக்கும் ஏற்படும். முதலில் இப்படி வளர்ப்பது சாத்தியமில்லாததாகத் தோன்றினாலும் காலப்போக்கில் பழகிவிடும்.

     காசுக்காக தன் உடலையே விற்கும் பெண்களைக் கூட “வரைவின் மகளிர்” என எத்தனை மதிப்புடன் சுட்டியிருக்கிறார் திருவள்ளுவர். வரைவு எனில் திருமணம் என்று பொருள். திருமணம் செய்யாத பெண்கள் எனக்கூறுவது எத்தனை மேன்மை.

     “வரைவுஇலா மாண் இழையார் மென் தோள்”  (திருக்குறள்- 919) எனக் குறிப்ப்பிடுகிறார். மேலும் “இருமனப் பெண்டீர்” (திருக்குறள் – 920)  பொது நலத்தார் (திருக்குறள் – 915) பொருட்பெண்டீர் (திருக்குறள் -914) என எத்தனை மதிப்புடைய சொற்களால் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று வாடி, போடி என ஊடகங்களில் பெண்களை அழைப்பது, பெண்ணே மற்றொரு பெண்ணை, ஆணை அழைத்துக் கொடுமை செய்யச்சொல்வது என எத்தனைக் காட்சிகளைக்காணமுடிகிறது. இதுவா வளர்ச்சி? சமூகத்திற்கே இகழ்ச்சிதானே?

பெண்களை ‘கட்டை’ என அழைப்பதும் ‘குட்டி’ என அழைப்பதும் பாடல் எழுதுவதும் இன்னும் எத்தனையோ இழிவான சொற்களால் பெண்களைக் குறிப்பது வாடிக்கையாகிவிட்டது.

தமிழர்களுடைய வாழ்வில் பசுவானது மிகவும் புனிதமானது. அதனால்தான் மாட்டுப்பொங்கல் அன்று காளைகளை மட்டுமின்றி பசுக்களையும் வணங்குவர். பசு புனிதமானது என்பதனை பண்பாட்டு அடிப்படையில் மட்டும் குறிக்கப்படுவதில்லை. தாயனவள் குழந்தைக்குப் பாலூட்டி வளர்ப்பதுபோல், பசுவும் பாலினைக் கொடுத்து குழந்தையைக் காக்கிறது. கைக்குழந்தை முதல் இறக்கும் நிலையில் உள்ளவர் வரை பால் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது. ஏன்? இன்னும் சொல்லப்போனால் இறந்த பின்னும் பாலூற்றும்நிகழ்வு நடக்கத்தானே செய்கிறது. என்ன கட்டுரைக்குத் தொடர்பில்லாமல் பால் குறித்துப் பேசப்படுகிறதே என்றுதானே எண்ணுகிறீர்கள். காரணம் இருக்கிறது. சொல்லட்டுமா?

கன்று உயிருடன் இருக்கும்வரை, முதலில் கன்றினை பசுவின் மடியினை முட்டச்செய்து பால் கறப்பர். பசு தன் கன்றுக்குப் பால் சுரக்கும். அதனை மனிதன் பிடித்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவான். அது தன் குழந்தையாக இருக்கலாம். அல்லது சமூகத்தில் ஏதேனும் ஒரு குழந்தையாக இருக்கலாம். ஆனால் பயன் அடைவது மனித குலமே. பசுவினது கன்று இறந்துவிட்டாலும், வைக்கோலைவைத்து கன்று வடிவத்தில் பசுவின் முன் காட்டுவர்கள். அப்பொழுதுதான் பால் கறக்கும். பசுவிற்கு கன்று இறந்துவிட்டது. இது பொம்மை எனத்தெரியும். ஆனால், அதன் பாசம், பாலாக வடியும்.  

அப்படித்தான் பெண்களும். பசுவிடம் கன்றின் பொம்மையைக் காட்டி மயக்குவது போல கயவர்கள் பெண்ணின் இரக்க உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பாசம் என்னும் பெயரில் பெண்களை அடிமையாக்கிவிடுகின்றனர். ஆசை வார்த்தைகளால் மோசம் செய்கின்றனர். “நீ இல்லை என்றால் தற்கொலை” எனப்பேசிப்பேசி வசப்படுத்தி வலையில்வீழ்த்திவிடுகின்றனர். இத்தகைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெண்களுக்கு வேண்டும். திட்டமிட்டு ஏமாற்றும் கயவனின் பண்பை அறியாமல் “அவன் தீங்கு செய்யமாட்டான்” என எண்ணினால் பின்னால்வருந்தவேண்டி வரும். எல்லா துன்பங்களுக்கும் அந்த இரக்கமே காரணமாகிவிடும். எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் காவலர்தான் குற்றவாளிகளை அடையாளம் காண்பார். குற்றம் நிகழாது காப்பார். அவ்வாறே ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக்கொள்ள விழிப்புடன் செயல்படவேண்டும். ஆண்கள் எவராயினும், பெண்களுக்குக் கேடு செய்தால் உடனடியாகத் தண்டிக்க வழி செய்யவேண்டும். தொடக்கத்தில் மன்னித்து விட்டுவிட்டால் நாளுக்கு நாள் பெருகி பெரும் ஆபத்தை விளைவித்துவிடும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பல பழகியவர்களாலேயே ஏற்படுகிறது எனக் காவல்துறை கூறுகிறது. உங்களுடைய நகம்தானே என வளரவிட்டால் முகத்தைக் கீறிவிடும்தானே?  பகையை வெல்ல பெண்களுக்கு வழிகாட்டுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

     கைகொல்லும் காழ்த்த இடத்து (திருக்குறள்- 879)

 

     முளைவிட்ட முள்மரத்தை பார்த்த உடனே வெட்டிவிடவேண்டும். வளர்ந்தபின் வெட்டலாம் என எண்ணினால் அதனால் காயங்கள் ஏற்படும் என அறிவுரை கூறுகிறார். பெண்களைத் துணிவுடன் வாழச்செய்ய அறிவுறுத்துவதால் பெண்ணியம் பேசிய முதல்வர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் எனக் குறிப்பிடலாம்தானே?

 

 

    

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக