தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 12 ஜூன், 2021

கல்வி என்னும் மலைவாழை

 


ஆசிரியப் பணியைவிட உலகில் உயர்ந்த பணி உலகில் இல்லை. ஏனென்றால் உயிருள்ள பொம்மைகளை உயர்ந்த மனிதர்களாக உலகில் உலவச்செய்யும் கலை ; அது ஆசிரியர்களுக்கு மட்டுமே கைவந்தகலை. ஒருவர் மருத்துவரை வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்றால் அவர் போற்றப்படுவார். ஆனால், ஆசிரியரைச் சந்தித்ததே இல்லை என்றால்?... அவர் மதிக்கப்படுவாரா? இல்லைதானே?. வாழ்நாளில் எப்பொழுதாவது ஒருவர் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்திருந்தால் அந்த மருத்துவமனையை மறக்கவே முயற்சிப்பார். ஆனால், கல்வி கற்ற பள்ளியை மறப்பார்களா? எந்நாளும் மறவார். வயதான பின்பும் அங்குசென்று பார்த்து மகிழ்வார் ; நின்று மகிழ்வார் ; முடிந்தால் ஓடியும் ஆடியும் மகிழ்வார்தானே?

கல்வி அத்துணை அருமையானது ; பெருமையானது ; அகலமானது ; ஆழமானது ; அழகானது.  அதனால்தான் கல்விகற்ற இடத்தைப் பார்ப்பதில் அத்துணை மகிழ்ச்சி.

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழை. மனச்சிக்கலைப் போக்கும் கல்வி. அதனால்தான் பாவேந்தர் ‘மலைவாழை அல்லவோ கல்வி” என்றார்.  இச்சொற்றாடரை ஆய்வு செய்வதே இக்கட்டுரை.

வாழை – மங்கலக்கனி  - அதனால் ஒவ்வொரு விழாவிலும் முதலிடம்பெறும். இது ஒரு கற்பகக் கனி. “கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி”. இது இறைவனை மட்டுமன்று அவர்படைத்த வாழையையும் குறிக்கும். ஏனெனில், இப்பழம் காலத்திற்கேற்ப கிடைக்கும் கனியன்று; காலம் தவறாமல் கிடைப்பது. எக்காலமும் பசி தீர்க்கும் பெருமையுடையது. அதனால்தான் இறைவனுக்கும் படைக்கப்படுகிறது.

கல்வியும் அப்படித்தான். இறைவனே தொடக்கமும் இறைவனே முடிவும். அகரத்தில் தொடங்கி முப்பாற்புள்ளியில் முடிகிறது. அகரம் அறிவுக்கண் திறப்பு. முப்பாற்புள்ளி என்பது மெய்யறிவுக் (மூன்றாவது) கண் திறப்பு. என்ன தலைப்பு மாறிப்போகிறதே? என எண்ணுகிறீரா? என்ன செய்வது. எண்ணியதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஒரு மகிழ்ச்சி. சரி, தலைப்புக்கு வந்துவிடுவோம்.

மலைவாழையை, பெருமலைவாழை, சிறுமலைவாழை என இருவகையாகப் பிரிப்பர். கல்வியும் அப்படியே கலை, அறிவியல் என்னும் இருபிரிவுக்குள் அனைத்தையும் அடக்கிவிடமுடிகிறது.

மலை வாழை சூட்டைத் தரும் – குளிர் பிரேதசங்களுக்குரிய நல்ல கனி. மலைவாழை. சளி (கோழை) பிடிக்காமல் காக்கும். கல்வியும் அறிவுச்சூட்டினை உருவாக்கும். கோழையாகாமல் வீரனாக வளரவழி செய்யும். 

மலைவாழை, மனித உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் “செரட்டோனின்” என்னும் இயக்குநீரை (ஹார்மோன்) சுரக்கச்செய்கிறது. கல்வி அறிவுத்திறனைச் சுரக்கச்செய்து தன்னம்பிக்கையை வளர்த்து  மகிழ்ச்சியுடன் வாழவழிவகுக்கிறது.

மலைவாழை தாய்ப்பால் சுரக்கத் துணைசெய்கிறது. கல்வியறிவு தாய்மொழிப் பற்றையும், தாய்நாட்டுப் பற்றையும் உருவாக்கி நாடு வாழவழிசெய்கிறது.

மலைவாழை மந்தத்தை நீக்கும். கல்வியறிவு அறிவு மந்தத்தை நீக்கிப் புதைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறது.

மலைவாழை குருதியில் (ரத்தத்தில்) குருதிவளிக்காவி (ஹீமோகுளோபினை) அதிகரிக்கும். கல்வி தன்னம்பிக்கையினை வளர்த்து ஊக்கமுடன் வாழவைக்கும்.

 மலைவாழையினால் உயிரணு (செல்கள்) சுறுசுறுப்பாகும். கல்வியால் விழிப்புணர்வு உண்டாகும். செல்கள் சேர்ந்து உடலில் பல்வேறு உறுப்புகளாக மாறுவதுபோல் கல்வியறிவு முயற்சிக்கும் பயிற்சிக்கும் விரும்புகின்ற துறையில் வல்லவராக மாற்றுகிறது.

மலைவாழையினைச் சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். கல்வியினைப் பெறுவதற்கு உடல்வலிமை தேவையில்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் எவரும் கற்க இயலும்.

மலைவாழை புற்றுநோயைத் தடுக்கும். பிறந்ததே வீண் என நாளும் எண்ணியெண்ணி உடலும் உள்ளமும் வருந்த தாழ்வுமனப்பான்மையுடன் திரிவோரைக் கல்வி மேம்படுத்தும்.

மலைவாழை, உணவைச் சீரணமாக்கத் துணை செய்யும். கல்வி, வறுமை, ஏழ்மை அனைத்தையும் உண்டு வளமாக வாழவழி செய்யும்.

மலைவாழை தோல் கருத்தாலும் பழம் நன்றாக இருக்கும். கல்வி நிறத்தைப் பார்க்காமல் அவருடைய பதவியைப் பார்க்கச்செய்யும் ; மதிப்பினை உண்டாக்கும் ; இழிவு செய்தோரையும் வணங்கவைக்கும்.

மலைவாழை அழிந்துவரும் பயிர்களுள் ஒன்றாக இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுத்தால் காக்க இயலும். கல்வியில் பிறமொழிச்செல்வாக்கானது திறமானவர்களை உருவாக்க இயலாமல் தேய்ந்துவருகிறது. தாய்மொழிக்கல்வியால் மட்டுமே எண்ணங்கள் விரியும் ; உலகிற்கும் திறமை தெரியும்.

மலைவாழை சீறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு வேண்டாம். கல்வியை ; ஆசிரியர்களை, ஏன் மதிக்கவேண்டும்? என்னும் சிறுமதிகொண்ட கோளாறு உள்ளவர்களுக்கு கல்வி கற்பித்தால் ஆபத்துதான். அவர்களால் வீட்டிற்கோ நாட்டிற்கோ பயன் இருக்காது.

இனி, மலைவாழையையும் கல்வியையும் நாம் பெறுவதோடு மற்றவர்களும் பெற வழிகாட்டுவோம். இனிப்பாவேந்தர் பாடலைக் காண்போமா?

‘தனனான தனனான னானா – தான

தானன்ன தானன்ன தானன்ன தான”

இந்த தாளத்தில் பாடினால் இன்னும் மலைவாழை போல் எளிதில் உள்ளத்துள் இறங்கும். பாடிப் பார்க்கிறீர்களா?

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட

சாலைக்குப் போவென்று சொன்னால் உன்அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி

வேளைதோறும் கற்றுவருவதால் படியும்

மலைவாழை அல்லவோ கல்வி? – நீ

வாயார உண்ணுவாய் போயென் புதல்வி.”

எத்தனை அழகு பாருங்கள். இன்னும் சுவைக்க ஆசை உண்டா? உண்டாயின் உங்களுக்காகப் பாவேந்தர் “இசையமுது”  நூலில் “பெண்ணுக்கு” எனப்பாடியுள்ள பாடலை முழுதாகப் படித்துச் சுவைப்பீர் ; மகிழ்வீர்.

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக