“கடவுள் இருக்கிறார்” என்று சொல்வதற்கே அஞ்சிநின்ற நாத்திக வாழ்விற்கு
இடையே “கடவுள் இருக்கின்றான்” எனக்கவிதைபாடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி ஒழுக்கத்துடன்
வாழவழிகாட்டியவர் கவியரசர் கண்ணதாசன். தாயானவள், குழந்தை மதுக்கடையைத் தேடிச்சென்றால்
பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பாளா? மகன் எட்டி உதைத்தாலும் மயங்கும்வரை அடிவாங்கிக்கொண்டுதானே
இருப்பாள். அத்தகைய தாயுள்ளத்தோடு, எவர் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாது, தீயவழியில் சென்ற
மக்களுக்கு நல்வழிகாட்டிய பெருமை கவியரசருக்கு உண்டு. புலவர்கள் என்றாலே மக்களின் நல்வாழ்வுக்காகப்
பாடுபவர்கள்தானே? அக்காலப் புலவராகவும் இக்காலக் கவிஞராகவும் புகழ்பெற்று மக்கள் உள்ளத்தில்
நீங்கா இடம்பெற்றவர் இவர் ஒருவர்தானே?
தாயானவள், வெளியே சென்றமகன் வீட்டிற்குள் நுழைந்ததும்
‘அவன் பசித்திருப்பானே’ என உணவு சமைத்துக் காத்திருப்பதைப் போல இறைவன் தன்னிடம் வருவோர்க்கு
அருளை அள்ளித்தரக் காத்திருக்கிறான் என்று சான்றோர் குறிப்பிடுவர். நீ ஓரடி முன்வைத்தால்
இறைவன் பத்தடி முன்வைப்பானல்லவா? ஆனால், எங்கெங்கோ செல்லும் கால்கள் இறைவனைத் தேடிச்செல்வதில்லை
; மாயை, செல்லவிடுவதும் இல்லை. இத்தகைய கொடுமையைக்கண்டு, காலந்தோறும் நல்வழிப்படுத்திய
அருளாளர்கள் ; சான்றோர்கள் ; பெரியோர்கள்
; கவிஞர்கள் பலர். அவர்களுள் சிறியோர் ; பெரியோர் என்னும் வேறுபாடின்றி அனைவரையும் நற்றமிழால் நல்வழிப்படுத்தித்
தமிழுள்ளங்களை ஈர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.
கடவுள் இருக்கின்றான் ; அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
எனக்கேட்கிறார்.
கண்ணிருந்தால் தெரியவேண்டுமே? எனக்குத் தெரியவில்லை. அதனால் கடவுள் இல்லை எனக் கூறிவிடுகிறான்.
அவர்களுக்கு விடை கூறுகிறார் கவியரசர். காற்றைக் காணமுடிகிறதா? காணமுடியவில்லைதானே?
உடனே, காற்று இல்லையென்று சொல்லிவிடுவீரா? என மறைமுகமாகக் கேட்கிறார்.
காற்றில் தவழுகிறான் ; அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
எனக்கேட்கிறார்.
குழந்தைகளுக்குப் பக்தியுணர்வை ஊட்டவேண்டியது யாருடைய கடமை? மக்கள் ஒவ்வொருவரின் கடமைதானே?
வீட்டிலுள்ள பெரியவர்கள் கோவிலுக்கு நாள்தோறும் அழைத்துச்செல்வார்கள். அதனால், குழந்தைகளுக்குக்
கடவுளிடம் மதிப்பு இருந்தது ; அச்சமும் இருந்தது. அதனால், எப்போதும் “கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்”
என்னும் அச்சத்தால் தவறும் செய்யாம ஒழுக்கமாக வாழ்ந்தனர் ; அதனால் பெருமை கூடிற்று
; உடல் நலமும் உள்ளநலமும் நன்றானது.
முதலில், குழந்தைகள்
கடவுளை மதிக்கக் கற்றுகொண்டனர்; பின்னர் கடவுளைக்காட்ட கோவிலுக்கு அழைத்துச்சென்ற பெரியோர்களை
மதித்தனர் ; பின்னர், ஒழுக்கமாக வாழவேண்டும் எனக் கற்றுக்கொடுத்த பெற்றோர்களை மதித்தனர்.
உடன்பிறந்த தமக்கையை, அண்ணனை, தங்கையை மதித்தனர் ; அவர்களைச் சுற்றியிருந்த உறவுகளை,
சுற்றத்தாரை மதித்தனர். கற்ற கல்வியை மதித்தனர். இவர்களையெல்லாம் ; இவற்றையெல்லாம்
மதிக்கவேண்டும் எனக்கற்பித்த ஆசிரியரை மதித்தனர்.
ஆனால், இன்று இவர்கள் அனைவருடைய இடத்தையும் கைப்பேசி விரட்டிவிட்டது. ஒரு கைப்பேசி
இருந்தால் அவர்களால் வாழமுடியும். பத்து நிமிடம்
எந்திரங்கள் இன்றி அவர்களால் வாழமுடிவதில்லை. பொய்களை உண்மையாக எண்ணும் நிலை
பரவிவிட்டது. உறவுகளை வெறுக்கும் நிலை பெருகிவருகிறது. கதவை தட்டினாலும், கைப்பேசியில்
அழைப்பு வந்தாலும் ‘உச்’ கொட்டும் நிலைக்கு வந்துவிட்டதனைக் காணமுடிகிறது. எல்லோரும்
வெளிச்சக்கண்ணாடிகளிடம் சிக்கிக்கொண்டு இருட்டில் வாழப்பழகிவிட்டிருக்கின்றனர். இப்படி
ஏதேனும் ஒரு மாயையில் சிக்கிக்கொண்டு இறைவழிபாட்டில் கவனம் செலுத்தாதிருக்கின்றனர்.
காலக்கணிதமான கவியரசர் இதனையே,
இருளில் இருக்கின்றாய் ; எதிரே இருப்பது புரிகின்றதா?
எனக் கேட்கிறார்.
கண்முன்னால் நிற்கும் பெற்றோர்கள் தான் தெய்வங்கள். அவர்கள் சொல்லைக் கேட்காமல் புகைக்கவும்,
குடிக்கவும், எதிர்க்கவும் கற்றுக்கொடுக்கும் சில நடிகர்களின் சொல்லுக்குத் தவம் கிடக்கிறார்கள்.
பண்பாட்டைக் கெடுக்கும் நிலைகளைச் செய்தால் ஒத்துக்கொள்கிறார்கள். கடவுளையே கிண்டல்
செய்யும் கொடுமையைப் பொறுத்துக்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். கடவுள் பெயரை வைத்தவர்களை
இழிவுபடுத்தும் நிலையினையும் காணமுடிகிறது. தன் விரலைவைத்தே தன் கண்களைக் குத்தச் செய்யும்
நாயகர்களை நம்புகிறார்கள்.
நம்முடைய பண்பாட்டை
விளக்கும் மகாபாரதம், இராமாயணம் போன்ற நல்லெண்ணங்களை
விதைக்கும் காவியங்களைப் படமாக்க வெளிநாட்டார், வெளிமாநிலத்தார் முயல்கின்றனர். தமிழில்
அத்தகைய தொடர்கள் எடுத்தால் நன்றாக இருக்கும்தானே? அரேபிய நாடுகளிலும் இராமாயணம், மகாபாரத
ஒழுக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றனர். உண்மையைக் கற்றுக்கொடுத்தால் மட்டுமே
குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வார்கள். வீடும் நாடும் நலம்பெறும் என்பதனை உணர்ந்திருக்கின்றனர்.
உண்மை அமைதியாகத் தன் கடமையைச் செய்துகொண்டே இருக்கும். இதனை,
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகின்றதா?
என்னும் வினாவின்வழி
உணர்த்தியுள்ளார். உண்மையின் வடிவாக இருக்கின்ற
இறைவன், உள்ளத்தில் இருப்பதனையும் அது கண்ணுக்குத்தெரியாமல் மக்களை மகிழ்விக்கும் நிலையினையும்
கவியரசர் உணர்த்தியுள்ளது எத்தனை அழகு?
நாத்திகர்கள் இராமனையும், கிருஷ்ணனையும் எவ்வாறு
நம்புவது? எனக் கேட்கின்றனர்தானே? அவர்களுக்கு உண்மையை உணர்த்த எவ்வளவு படிக்கவேண்டியிருக்கிறது
; எத்தனை அறிவுத்தேடல் வேண்டும். ஆனால், ‘இல்லை’ என்று சொல்வதற்கு அறிவு தேவையா? தேவையில்லைதானே?
எனக்கேட்கிறார் கவியரசர். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களையே நூல்களின்வழிதானே
தெரிந்து கொள்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக கடவுளின் பெருமை பேசப்படுவதனை
எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும். காலம் கடந்து நிற்கும் அவ்வுண்மைகளைச் சந்தேகிப்பது
எத்தனை அறியாமை? என வினாத்தொடுக்கிறார் கவியரசர்.
புத்தன் மறைந்துவிட்டான்.அவன் போதனை மறைகின்றதா?
எனப்பாடி உண்மை
என்றும் அழியாது நிலைக்கும் என்பதனை உணர்த்தியுள்ளார்.
சத்தியம் தோற்றதுண்டா? உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
எனக்கேட்கிறார்.
வாழ்நாள் முழுதும் கடவுள் வாழ்ந்துகாட்டிய தர்மங்களைச் சொல்லிக்கொடுக்கவேண்டும். குழந்தைகள்,
தவறான வழியில் சென்று வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது. நல்லவர்களாகவாழ, கடவுளின் திருவிளையாடல்களை
விளக்கவேண்டும். அப்படியும் ஏற்றுக்கொள்ளாது கயவர்களின் பேச்சில் மயங்கி நிற்போரிடம்
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம்
வருகின்றதா?
எனக் கேட்கிறார்.
எதிரிநாடுகள் நேரடியாக நமது நாட்டை எதிர்க்கமுடியாது என உணர்ந்துகொண்டனர். மாற்றுவழியாக,
காசு வாங்கிக்கொண்டு தொழில்செய்யும் கயவர்களை உள்நாட்டில் தேடுகின்றனர். அவர்களைத்
தேர்வு செய்து பணத்தைக்கொடுத்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கின்றனர். தன்விரலை வைத்து
தன்கண்ணைக் குத்துவதுபோல் நம்நாட்டவரைக்கொண்டே நாட்டில் குழப்பங்களை உண்டாக்குகின்றனர்.
இந்நிலை, குடிக்கக் காசின்றி அடிமைப்படும் கடைமகனிலிருந்து மிகுந்த செல்வாக்குள்ள விலைபோகும்நடிகர்வரை
பரவியிருக்கிறது.
உலகிலேயே அதிக
இளைஞர்களைக் கொண்ட நாடான இந்தியாவை வீழ்த்தமுடியாமல், நாட்டையேகாட்டிக்கொடுக்கும் இழிவானவர்களை
விலைக்குவாங்கி முதலில் பண்பாட்டை அழிக்கின்றனர் ; படிப்படியாக போதையைக் கற்பிக்கின்றனர்
; வன்முறைகளுக்கு அடிமையாக்கி இளையோரின் ஆற்றலை, குழந்தைகளின் அறிவுத்திறனை ஒழித்துவிடுகின்றனர்.
இதனை உணராத குழந்தைகள் “நடிகர்களே தம்மை வழிபடுத்தும் நல்லவர்கள்” என நினைக்கின்றனர்.
அவர்களிடமிருந்து புகைபிடிப்பது, குடிப்பது என தீயபழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றனர்.
நடிகர்கள் பெண்களை ; பெரியோர்களைக் கிண்டல்செய்வதைப்
பார்த்துப்பார்த்து குழந்தைகளும் பெண்களை ; பெற்றோரை எதிர்த்துப் பேசுகின்றனர். இதனால்
தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும் நிலை உருவாகிவிடுகிறது.
கடவுள் இயற்கையின்
வடிவமாக நின்று உயிர்களைக் காக்கின்றார். இதனை உணராது இயற்கைக்கோ ; ஏதேனும் ஒரு உயிருக்கோ,
கேடு செய்வாராயின் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். “பிற உயிர்களைத் தாக்குவது தர்மம்
இல்லை” எனக் கற்றுக்கொடுத்த இறைக்கோட்பாட்டை கடவுளன்பர்கள் பின்பற்றுவர். இதனை அறிந்துகொண்ட
கயவர்கள் மென்மையானவர்களை எதிர்க்கின்றனர். இது எத்தனை இழிவு. தாயின் கவனம் மென்மையான
குழந்தையிடமே இருக்கும். அதுபோலவே கடவுள் நல்லோரைக் காப்பார். இதனை உணராது கேடு செய்தால்,
காலத்தில் தோன்றி ; கைகளை நீட்டி ; காக்கவும்
தயங்காது
என்கிறார் கவியரசர்.
இறைநாட்டம் உடையவர்கள் எந்நாளும் கடவுளின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதனை எடுத்துக்காட்டுகிறார்.
தலையில் சுமைவைத்துக்கொண்டு நடப்பவர்களைவிட, சுமை இல்லாமல் நடக்க வழிசெய்தவர் கடவுள்தானே?
ஏனென்றால், இறையடியார்கள் தம் சுமைகளை இறைவனிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள்தானே? இப்படித்தான்
வாழவேண்டும் என வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக்கொடுத்தவர் கவியரசர்.
கவியரசர் விதைத்த
விதைகள் இன்று விருட்சமாகி எத்தனையோ நல்லவர்களை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கடவுள்
பக்தி உண்மையானது. அதனைக் காணமுடியாது ; அதனைக்
கட்டுப்படுத்த முடியாது ; அதனை அடக்கிவிடமுடியாது என்பதனை,
நீதி தெருவினில்
கிடைக்காது ; சாட்டைக்கு அடங்காது ; நீதி சட்டத்தில் மயங்காது
எனப் பாடியுள்ளார்.
உலகியல் நீதிமன்றத்திற்கு சாட்சி தேவை. இறைவனுடைய நீதிமன்றத்தில் உண்மையான வாழ்வே சாட்சியாகும்
என்பதனை உணர்த்தியுள்ளார்.
இப்பாடலைக் கவியரசர், புரட்சித்தலைவர் எனக்கொண்டாடப்பட்ட
எம்.ஜி.ஆர் அவர்களின் ‘ஆனந்த ஜோதி” படத்துக்காக எழுதினார். எம்.ஜி.ஆரைத் தம் தலைவராக
மக்கள் கொண்டாடிய காலகட்டம்அது. இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தொண்டர்களிடம் கடவுள்
பக்தியை விதைத்து ஒழுக்கமாக வாழவழிவகுத்தார் எம்.ஜி.ஆர். இவ்வாறு, நடிகர்கள் ஒவ்வொருவரும்
ரசிகர்களின் ஒழுக்கத்தைக் காக்க ; பண்பாட்டைக் காக்க ; உடல் நலம் காக்க ; உயிரைக் காக்கத்
துணை நிற்பாராயின் படத்தில் மட்டுமன்று ; வாழ்விலும் நாயகராய் வலம்வருவார்தானே?
மக்களை
நல்வழிப்படுத்த எண்ணிய கவியரசரின் ஒவ்வொரு சொல்வெட்டும் உள்ளத்தில் பதிக்கவேண்டிய கல்வெட்டுதானே.
கவியரசர் கவிதைக்கு இணங்குவோம் ; கடவுளை வணங்குவோம்.
*****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக