தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 30 செப்டம்பர், 2023

நாடகத் துறையின் தொல்காப்பியர்

 

நாடகம் என்பது நாடகமல்ல – உண்மை

       ‘புஸ் புஸ்’ எனப் பாம்புகளின் ஒலி காதில் அக்னி குழம்பாய் நுழையும். இதயம் படபடக்கும். இருட்டில் பாம்பு எங்கு இருக்கிறது எனத் தெரியாது. இரவு நடுநிசி நேரத்தில் கயிறு போல் நெளியும். கொடியா ? பாம்பா ? எனத் தெரியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்வார்கள். நாடகம் நடத்துபவர்களுக்கு இது வாடிக்கையாகி இருந்தது. அப்படி ஒரு முறை போலிநாயக்கனூரில் இருந்து முடிமன்னிக்கு நாடகம்முடித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தது ஒரு கூட்டம். அப்படிப் பயத்துடன் செல்லும்போது ஒரு கருத்த உருவம் ; ஆஜானுபாகுவான தோற்றம் ; வெள்ளை கிருதா ; மீசை ; கையில் வேல்கம்புடன் தடுத்து நிறுத்தியது. ‘உங்க கூட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள்’ இருக்காரா?” என அந்த உருவம் கேட்டது. ‘இல்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் வரவில்லை. நாளை முடிமன்னிக்கு வந்தால் பார்க்கலாம்’ எனச் சொன்னதைக் கேட்டு அந்த உருவம் செல்ல அனுமதித்தது. அடுத்தநாள் அந்த உருவம் வந்தால் அது மனிதன் இல்லாவிட்டால் பேய் என அந்தச் சிறுவன் நினைத்துக்கொண்டு காத்திருந்தான். எதிர்பார்த்தபடி அந்த உருவம் வந்தது. எனவே, மனிதன் என்பது உறுதியானது. ‘ஐயா, நான் கட்டபொம்மு, ஊமைத்துரை, தானாப்பதிப்பிள்ளை, பகதூர்வெள்ளை இவர்களைப் பற்றிய உண்மைக்கதையை வைத்திருக்கிறேன். ஆங்கிலேயரிடம் கொண்ட பயத்தால் இவர்களைப் பற்றிய உண்மையை யாரும் சொல்லவில்லை. வெள்ளையத்தேவர் வமிசத்தினர் எழுதிய பழைய ஏடுகள் என்னிடம் உள்ளன. ‘சிறுமூட்டையில் கந்தல் துணியில் பாதுகாத்த சுவடிகளை எடுத்துக் கொடுத்தார். ‘ஒரு சில அடிகளைப் படித்துப்பார்த்தார். நடை அருமையாக இருக்கிறது. இதற்கு உங்களுக்கு என்ன வேண்டும் ?’ என ‘நாடகத்துறையின் தலைமையாசிரியர்’ எனப் போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் கேட்டார். ‘கண்கள் சிவக்க, குரல் தழுதழுக்க ‘உண்மையை மக்கள் அறிந்துகொண்டால் போதும். அதற்கு நீங்கள் இக்கதையை நாடகமாக்கி நடிக்கவேண்டும். அதுவே என் ஆசை’ என்றார். பின்னர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த பெருமையினை உலகம் அறிந்துகொண்டது. இவ்வுண்மையை சிறுவனாக இருந்தபோது அறிந்துகொண்டதனை  ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் சுயசரிதையில் குறிப்பிடுகிறார் ‘நாடகத் துறையின் தொல்காப்பியர்’ என அழைக்கப்பெற்ற அவ்வை தி.க. சண்முகம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக