தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 30 செப்டம்பர், 2023

அதியமானும் ஔவையும்

 

புறநானூற்றின் வழி நட்பிலக்கணம் : அதியமானும் ஔவையும்


       வாழ்க்கை என்பது வாழும் தன்மையினைக்கொண்டு மாறுபடுவது. கார்மேகம், ஒருவர்க்கு மகிழ்ச்சியையும் மற்றவர்க்கு வருத்தத்தையும் தரக்கூடும். உழவுத்தொழில் செய்வோர்க்கும் உப்பளம் கொண்டோர்க்கும் ஓரெண்ணம் தோன்றுமெனெ எண்ணுதல் ஏற்புடைத்தன்று. ஆனால், பெரும்பான்மையினரின் நலத்தைக் கொண்டும் பெரும்பயன் கருதியும் மழை போற்றப்படுகிறது. இவ்வுலக உயிர்கள் செழிப்பதற்கு அம்மழையே அடிப்படையாகிறது. எனவே, மழைபோல் வள்ளல் குணம்கொண்ட புரவலர்களாக தமிழ் மன்னர்கள் விளங்கினர். அவ்வாறு வாழ்ந்த தமிழ் மன்னர்கள் என்றும் நிலைபேறுடையவர்களாக விளங்கவேண்டும் என எண்ணிய புலவர்கள் பலர். அத்தகைய இலக்கியங்களில் தலையாயன சங்க இலக்கியங்கள். அவ்விலக்கியங்களுள் புறநானூறு தனித்த சிறப்புடையது. அப்புறநானூற்றில் தமிழ்மூதாட்டி ஔவையாரின் பாடல் மேலும் தனித்த சிறப்புடையது. அவர் பாடிய பாடல்களிலும் அதியமான் குறித்துப்பாடிய ‘கையறு நிலை’ பாடல்வழி, நட்பின் அருமையினைக்காண எண்ணியதன் விழைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

அதியமானும் ஔவையும்

       புரவலரெனில் இவ்வாறிருக்கவேண்டுமென வாழ்ந்தவன் அதியமான். புலவரெனில் இவ்வாறிருக்கவேண்டுமென வாழ்ந்தவர் தமிழ்மூதாட்டி ஔவையார். இவ்விருவர் கொண்ட நட்பே தலையாய நட்பு. இந்நட்பின் பெருமையினை உலகறிய எடுத்துச்சொல்லும் இலக்கியமாகவே ‘புறநானூறு’ அமைகிறது. ஏனெனில், மன்னர்களின் புகழை உலகறியச்செய்யும் கலைஞர்களாகவே புலவர்கள் திகழ்ந்தனர். அவர்களுடைய சொல்வெட்டுக்கள் அனைத்தும் பாடல்களாக இலக்கியங்களில் இடம்பெற்றன. அத்தகைய பாடல்களின் வழி அதியமானின் இயல்புகளைச் சுட்டிக்காட்டியவர் ஔவையார். அவருடைய பாடல் வழியாக அதியமானுடைய நட்பு இலக்கணத்தை எடுத்துக்காட்டியுள்ளதனைக் காணமுடிகிறது. தனது வாழ்நாள் நீட்டிக்கும் கருநெல்லிக்கனியினை ஔவையாருக்குக் கொடுத்த  அதியமானின் நட்பின் பெருமையே இக்கட்டுரையின் ஆய்வுப்பொருளாகிறது. 

பெண்மையைப் போற்றிய புரவலன்

       ‘பெண்களை ஆண்கள் எவ்வாறு மதிக்கவேண்டும்’  என்பதனை இன்று ‘பெண்ணிய’ இயக்கங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால், இவை அனைத்தையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சமூகம் இயல்பாகப் பின்பற்றியிருந்ததனை சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன. நேர்முகமாகக் குறைகளையும் புறத்தே நிறைகளையும் எடுத்தியம்பும் பெண்ணை சங்க இலக்கியகாலத்தில் காணமுடிகிறது. கல்வி அறிவில் ஆணுக்கும் இணையாகவும் ; மேலாகவும் பெண்கள் இருந்ததனை ஔவையாரின் பாடல்வழி அறிந்துகொள்ளமுடிகிறது. பெண்ணைப் போற்றிய புரவலனாக அதியமான் நின்றதனை

       நரந்த நாறும் தன்கையால்

       புலவு நாறு மென்றலை தைவருமன்னே ( புறநானூறு-235 ; 8-9)

 

என்னும் அடிகளில் புலப்படுத்துகிறார். தாயின் தலையினை வருடிவிடும் மகனைப் போல் புலவரிடம் தலையாயநட்பு கொண்டவனாக அதியமான் விளங்குவதனை இவ்வடிகள் உணர்த்தி நிற்கின்றன. புலால் நாற்றம் வீசும் தலையாயினும் வருடும் அன்பின்வழி, நட்பின் அருமையினை இப்பாடலடிகள் படம்பிடித்துக்காட்டுகிறன.

கள்ளைப் பகிர்ந்த நட்பு

       ‘கள்’ நொதிப்பதால் மட்டுமே மயக்கத்தை ஏற்படுத்தும். புளிக்காத கள் வெப்பத்தை நீக்கும் ; வாய்ப்புண், குடல்புண் நீக்கும். அத்தகைய கள்ளினை (இன்று ‘பதநீர்’) குடித்தல் மக்கள் வழக்கமாகவே இருந்தது. அத்தகைய கள்ளினைக் குடிக்கும்போதும் அதியமானும் ஔவையும் புரவலன் புலவன் என்னும் உயர்வுதாழ்வின்றி தனக்கு நிகராக அமர்த்திய நிலையினை

பெரிய கட் பெறினே

யாம் பாடத்தான் மகிழ்ந்துண்ணு மன்னே  ( புறநானூறு-235 ; 8-9)

 

என்னும் அடிகளில் புலப்படுத்துகிறார்.  ‘கள்’ மயக்கம் ஏற்படுத்துவதாயிற்றே அதனை உயர்ந்தோர் குடிப்பரோ? என்னும் அச்சம் இங்கு ஏற்படுதல் இயற்கை. திராட்சைசாறினைக் குடிப்பவரை ‘மது அருந்தினார்’ எனில், பார்ப்பவரும் கூட நிறத்தைக் கொண்டு நம்புவர். அவ்வாறு ஒவ்வொருவருடைய உணர்வுக்கேற்ப அதனைப் பெருமையாக எண்ணுவதும் சிறுமையாக எண்ணுவதும் இயல்பு. மதுவானது, கள்ளினை விட பத்து மடங்கு மயக்கத்தினை உண்டாக்குவது ; உயிரைப்போக்கும் தன்மையது. மயக்கம் தரும் கள்ளினையே கொண்டாரெனினும் அதியமான் ஔவையாரைப் பாடல்கேட்டு மகிழ்ந்த நிலையினைக் காணமுடிகிறது. இதன்வழி, இன்றைய பெண்ணுரிமை கொள்கைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளதனையும் காணமுடிகிறது.

இனி இது கழிந்தது

       மனிதன் இறக்கும்பொழுது, அவனுடைய பண்புநலன்களும் அழிந்துவிடுகின்றன. அதியமானின் நட்பும் கொடையும் அவனுடனே அழிந்துவிட்டதனை

அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகி

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்

சென்று வீழ்ந்தன்று, அவன்

அருநிறத்து இயங்கிய வேலே (புறநானூறு-235 ; 10-15)

 

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. இவ்வடிகளில் ஔவையாரின் உயர் நட்புத்திறம் புலப்படுகிறது. பகைவர் எறிந்த வேலானது,  என்னை நட்பில் வென்ற அதியமானின் நெஞ்சினைத் துளைக்கவில்லை, பாணர்களின் உண்கலத்தை ; இரந்துண்டு வாழ்வோரின் கைகளை ;  மக்களைப் பாதுகாக்கும் கருணையுடையோர் கண்களை ; புலமையுடையோர் நாவினைத் துளைத்துவிட்டது எனப் பாடியுள்ளதன் வழி அதியமானிடம் கொண்ட நட்பு புலப்படுகிறது.

கையறு நிலையில் நட்பு

உறவின் பெருமையினைப் பிரிவில் அறியமுடியும் என்பதனை ஔவையாரின் இக்கையறுநிலைப்பாடல் உணர்த்துகிறது. அதியமானிடம் கொண்ட நட்பின் திறத்தை தந்தையின் அன்போடு புலப்படுத்துவதனை

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ (புறநானூறு-235 ; 16)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அதியமான் வாழும்பொழுது இடித்துரைத்த ஔவையார், இக்கையறுநிலைப் பாடலில் அதியமானின் நற்குணங்களை நிரல்படுத்துவதனைக் காணமுடிகிறது. 

நிறைவாக

       தமிழ் மன்னர்களின் பெருமையினை அறிவதற்கு இலக்கியங்களே ஆவணங்களாகின்றன. அவ்வகையில் அதியமானிடம் கொண்ட நட்புத்திறத்தை ஔவையாரின் இப்பாடல் தெளிவுறுத்துகிறது.

       பெண்மைக்குரிய சிறப்பினைப் போற்றுவதில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சிறப்புற்று விளங்கினர். இதற்கு எடுத்துக்காட்டாகவே அதியமானிடம் கொண்ட ஔவையாரின் நட்பு விளங்குவதனை இப்பாடல் உணர்த்துகிறது.

       ‘இலக்கியங்கள் மக்களின் இலக்கினை ; பண்பு நலன்களைப் போற்றுவதாக அமைகின்றன’ என்னும் கூற்றுக்கு தமிழ்மூதாட்டியின் இப்பாடல் சான்றாவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

*************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக