தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 7 ஆகஸ்ட், 2021

ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே - தியாகிகள்

 



ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே  - தியாகிகள்

 ஒரு குடிகாரன் குடித்துவிட்டு நடுசாலையில் அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கிறான். கட்டுப்படுத்தமுடியவில்லை. காவல்காரர் வருகிறார். அவருடைய கையைப்பிடித்துக்கொண்டு நடனமாடுகிறான். அவருக்கு அடிக்க மனம்வரவில்லை. அடித்துவிட்டால் இறந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு. குடும்பத்திற்கு யார் விடைசொல்வது என்னும் அச்சத்தின் காரணமாகவும் பொறுத்துக்கொண்டிருக்கலாம்தானே. யாருக்கும் அடங்காமல் அங்கேயே ஆடிக்கொண்டிருந்தவன் திடீரென காவலர் கையை உதறிவிட்டு ஓடினான். “என்ன ஆயிற்று?” என எல்லோரும் திரும்பிப்பார்க்கையில் அங்கு ஒருபெண்மணி தூய்மை செய்யும் ஆயுதம்தாங்கி வேகமாக முன்னேறி வருகிறாள். “யாரம்மா நீ” எனக் காவலர் கேட்க, அதோ அந்த மைக்கல் ஜாக்சனோட மனைவி என்றாள். எல்லோரும் சிரிப்பை வெளிப்படுத்தாமல் “வீட்டுக்குக் கூட்டிட்டுப்போம்மா” என்றனர். குடும்பத்திற்க்காகத் தன்னையே கரைத்துக்கொள்ளும் பெண்களுக்கு குடியின் கொடுமை வேறு. பாவம்தானே?

     டோக்கியோவில் நடந்த ஹாக்கிப்போட்டியில் முதலில் ஜெர்மன் கோல் அடித்தது. பின்னர் இந்தியர்கள் கோல் அடிக்க ஒன்றுக்கு ஒன்று எனப்புள்ளிகள் இருந்தன. அடுத்து இரண்டு கோல்களை ஜெர்மனி அடிக்கவே இந்தியா ஒன்றுக்கு மூன்று என்னும் நிலையில் பின் தங்கியது. அடுத்து, இந்தியா இரண்டு கோல்களை அடிக்கவே மூன்றுக்கு மூன்று என்றானது. அடுத்து, இரண்டு கோல்களை இந்தியா அடிக்க ஐந்து மூன்று என்னும் நிலையாயிற்று. ஜெர்மனி அணி மிகுந்த வேகத்துடன் நாற்பத்தெட்டாவது நிமிடத்தில் ஒருகோல்போட்டது. இந்தியா ஐந்து ; ஜெர்மனி நான்கு என்னும் நிலையில் இருந்தது. போட்டியைக்காண்போருக்கும் அனைவருக்கும் ஆர்வம் கூடிற்று. ஜெர்மானியர் அடித்தகோலை கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுக்கிறார். இந்திய அணியினர் வெற்றிக்கனியைப் பறித்தனர். நாற்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம். 1980 மாஸ்கோவில் தங்கம் வென்ற இந்தியா இன்று வெண்கலத்தைப் பெற்றிருக்கிறது. பதக்கக்கனவு நிறைவேறியது. தொடக்கத்தில் புள்ளிகளை இழந்தாலும் முடிவில் வெற்றி கிடைத்தது. இந்த அணியின் தலைவர் மன்பிரீத்சிங் “பதினைந்து மாதக் கடுமுயற்சியின் பலன் இது” எனக்கூறி, இந்த வெற்றியினை கொரோனோவில் மக்களைக்காத்த மருத்துவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் காணிக்கையாக்கினார்.

     முதல் கதையில், நாயகனுக்கு முதலில் வெற்றிக்களிப்பு. பின் தோல்வி. இரண்டாவது நிகழ்வில்,  முதலில் நாயகர்களுக்குத் தோல்வி பின் வெற்றி. எது வரலாற்றில் நிலைபெறும் என்பதனை  அறிவோம்தானே. எந்தச் செயலுக்குப் பின்னால் உண்மையும் உழைப்பும் உள்ளதோ அதுவே வரலாறாகும் ; வழிகாட்டும்.

     முதலில் சிறுமையைப் பார்த்தோம் ; இரண்டாவது பெருமையைப் பார்த்தோம். இனி அருமையைப் பார்ப்போமா?

     இந்த வாரம் தாய்ப்பால்வாரம் . ஆகஸ்டு ஒன்று முதல் எட்டு வரை. தாய்ப்பாலின் அருமையினைக்கூட கொண்டாடவேண்டியிருக்கிறது. “மழை நீரைப் போற்றுங்கள்” எனக் கூறுவதைப்போல “தாய்ப்பாலினைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்” எனச்சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது கொடுமைதானே. கலப்படப்பொருட்களை ; மசாலா பொருட்களை ; இனிப்புகளை (சாக்லெட்) ; பனிக்கூழினை (ஐஸ்க்ரீம்) தூய்மையில்லாத கடைஉணவுகளை உண்டு உடலைக்கெடுத்துக்கொள்ளும் பெண்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள். அத்தகைய பெண்களின் குழந்தை பாலுக்கு அழும்தானே. அத்தகைய குழந்தைகளுக்காகவே தாய்ப்பாலைச் சேமித்துவைக்கும் மருத்துவமனைகள் இருக்கின்றன. சில கொடையுள்ளம்கொண்ட தாய்மார்கள் தம்குழந்தைக்குக் கொடுத்து எஞ்சியபாலை கொடையளித்தனர் ; அளிக்கின்றனர். இந்நிகழ்வு தாயுள்ளத்தின் அருமையினை எடுத்துக்காட்டுகிறதுதானே? இது கலியுக தியாகம்.

     தாயுள்ளம் கொண்டு எத்தனையோ ஆண்கள் சமைக்கின்றனர் ; உணவிடுகின்றனர். நளபாகம் , பீம பாகம் என அவர்கள் சுவையுடன் சமைப்பதனைப் பாராட்டுவதனையும் காணமுடிகிறது. சரி அதற்கென்ன? என்றுதானே கேட்கிறீர். உணவளிப்பவரை தாயாக எண்ணுவதுதானே தமிழர் இயல்பு. அவ்வாறு எண்ணி மடிந்த வீரனைத் தெரியுமா? அவர்தான் தீரன் சின்னமலை.

     பெயரைக் கூறினாலே வீரம் பொங்கும் பெயர். சிலையைக் கண்டாலே வீரம்பொங்குகிறதே. அடுத்தமுறை தீரன் சின்னமலையின் சிலையைக் கண்டால் உற்றுப்பாருங்கள். அந்நியர்கள் அஞ்சியதில் தவறில்லை எனத்தோன்றும். திப்பு சுல்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்கள், தீரன் சின்னமலையை எளிதாக வென்றுவிடலாம் என எண்ணி போரிட்டனர். அறச்சலூர் போரில் தீரன்சின்னமலை கர்னல் ஹாரிஸை துரத்தியடித்தார். “இத்தகைய வீரனை எதிர்கொள்ளமுடியாது” என எண்ணிய ஆங்கிலேயர்கள் மிரண்டனர். துரோகிகள் யாரென ஆய்ந்தாய்ந்து அவர்கள்வழியாக அப்பாவித்தமிழர்களை வென்றனர் ; கொன்றனர். அப்படித்தான் தீரன் சின்னமலையின் சமையல்காரனுக்கு ஆசையைமூட்டி காட்டிக்கொடுக்கச்செய்தனர். 1805 ஆம் ஆண்டு ஜூலை முப்பத்தோராம் நாள் தீரன் சின்னமலையை உடன்பிறந்தோரையும் தூக்கிலிட்டுக் கொன்றனர். நேருக்குநேர் நின்று போர்செய்யாமல் துரோகத்தால் கொன்றவர்களை என்னென்பது?

     பக்கத்து நாடுகளில் கொள்ளையடித்துச்சென்றாலும் அவர்களைத் தடுத்து “எங்களுடைய செல்வங்களை நீங்கள் கொள்ளையடிக்கக் கூடாது” எனக்கூறி அஞ்சாமல் எதிர்நின்ற தீரம் தீரன்சின்னமலைக்கு உண்டு.  மறக்கருணையோடு அறக்கருணை கொண்டவராகவும் தீரன்சின்னமலை விளங்கினார். “சென்னி மலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை இருக்கிறது. அதுதான் செல்வங்களை எடுத்துக்கொண்டது. என உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்” என வீரத்துடன் எதிரிகளை எதிர்கொண்ட பெருமையே தமிழர்பெருமைக்கு எடுத்துக்காட்டு.

     துரோகம் என்பதனை அறியாத தமிழ் மன்னர்கள் எளிதில் ஏமாந்திருக்கின்றனர். உன் மனதையே உன்னால் அறியமுடியாதபோது எப்படி எதிரிகளை அறிந்துகொள்ளமுடியும் என ஆங்கிலேயன் தூரோகத்தின் பாடத்தைக் கற்பித்தான். தமிழர்கள் அந்நியர்களுக்கு எப்படி அன்புடன் வாழவேண்டும் எனக் கற்பிக்க, அந்நியர்கள் எப்படி அன்புடன் வாழக்கூடாதெனக் கற்பித்தனர்.

     தொடக்கத்தில் எது நன்மை? எது தீமை? என்று அறியாமல் ; எந்தப்பக்கம் நிற்கவேண்டும் என்பது புரியாமல் மக்கள் தவித்தனர். ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகி நல்லோர்களைக் காட்டிக்கொடுப்பதா? விடுதலை வீரர்களின் பக்கம் நின்று நாட்டு விடுதலைக்காகப் போராடுவதா? என எண்ணினர். கோடாலிக்காம்புகளையும் தந்தங்களையும் ஒன்றாக ஒப்பிடுவது சரியில்லைதானே.

     இப்படி மக்களைக்காக்க தமிழ் மன்னர்களும் , மன்னர்களைக்காக்க மக்களும் போராடிய போராட்டமாகவே விடுதலைப்போராட்டம் அமைந்தது. எண்ணற்றதியாகிகளின் உழைப்பெல்லாம் வீணாகவில்லை. இன்று கல்வி கற்பதற்கும் பணிக்குச் செல்வதற்கும் முழுமையான விடுதலை கிடைத்திருக்கிறது. தொய்வின்றி உழைத்தால் வறுமை ஓடும் ; வளமை கூடும் என்பதில் ஐயமில்லை.  அவர்களுடைய வீழ்வு அடுத்த தலைமுறைக்கான வாழ்வாக அமைந்திருக்கிறதுதானே?

     ஆட்டத்தின் தொடக்கம் எப்படி இருந்தாலும் முடிவைக்கொண்டுதான் உங்கள் திறமையினை உலகம் அறியும் என வாழ்ந்துகாட்டியோர் பலர். வெற்றிபெறாதவரை வீண்முயற்சி என்பதும் வெற்றி பெற்றுவிட்டால் விடாமுயற்சி என்பதும் உலகத்தின் இயல்புதானே? எனவே தொடக்கத்தைக் குறித்த கவலையின்றி இலக்கினை அடைய துணிந்து நிற்போம் ; வழிகாட்டியாக வாழ்வோம்

    

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக