தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

பேச்சு வழக்கில் மரபுச் சொற்கள்

 


            வெற்றி பெற்றதை ‘வாகை சூடுதல்’ எனக் குறிப்பிடுவதுண்டு. ‘வாகை’ என்பது மணிமுடியினைக் குறிக்கும். மன்னர் காலத்தில் இருந்த மணிமுடி இப்பொழுது  இல்லாவிட்டாலும் அவர்கள் பயன்படுத்திய சொல் இன்று வெற்றி பெற்றோரைப்  பாராட்டப் பயன்படுகிறது.

            “தலை தப்பியது” என்னும் சொல் சிக்கலிலிருந்து விடுபட்டதனைக் குறிக்கும். தொடர்வண்டி இருப்புப்பாதையினை எப்பொழுதும் கடந்து செல்லக்கூடாது. தொடர்வண்டியின் வேகத்தைக் கணிக்க இயலாது. நொடிப்பொழுதில் கடந்துவிடும். சுரங்கப்பாதையையோ  மேம்பாலத்தையோ பாதையாக்கிக் கடக்கவேண்டும். அறியாமை நிறைந்த ஒருவர், தெரியாமல் இருப்புப்பாதையினை கடக்கும்பொழுது வேகமாகத் வந்த தொடர்வண்டி வேறு இருப்புப்பாதையில் சென்று விடுகிறது. இச்சூழலை அவருடைய ‘தலை தப்பியது’ என்னும் சொல் உணர்த்திவிடுகிறது.

            “மூக்கறு பட்டான்” என்னும் சொல் ஒருவர் தாழ்வு படுத்திப்பேசும் பொழுது அதற்கு அவரே காரணம் என உணர்த்திவிடுதல். ஒரு தேனீர் கடைக்காரரிடம் பால் காரர் “என்ன இது  தேநீரா” எனக் கிண்டல் செய்கிறார். நீ கொடுக்கும் பாலில்தான் தேநீர் அணியம் செய்தேன் என்கிறார். பால்காரர் ஏன் கேட்டு அவமானப்பட்டோம் என எண்ணுகிறார். இதுவே, மூக்கறுபடுவது.

            “தலை கவிழ்ந்தான்” என்பது  தோல்வியினைக் குறிப்பிடுவது. மட்டைப்பந்து விளையாட்டில் சதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, விளையாட்டு வீரர் அடித்த முதல் பந்து கோட்டுக்கு வெளியே செல்லாமல் எதிரணி வீரர் கையில் சிக்கிக் கொள்கிறது.  அப்பொழுது அந்த வீரர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என தலை குனிந்து நடப்பார். இதுவே ‘தலை  கவிழ்தல்’ எனக் குறிக்கப்படுகிறது. இதனையே இழிவான வழக்கில் “மண்ணைக் கவ்வினான்” எனக் கூறிக் காயப்படுத்துவதும் உண்டு.

            “தலையில் கல்லைப் போட்டு விட்டான்” என்பது ஏமாற்றிவிட்டதனைக் குறிப்பிடுகிறது.  குடும்பத்தைக் காப்பாற்றுபவன் ஏதோ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னாகும். எனவே, முதுமையில் உள்ள பெற்றோர் என் செய்வர். எனவே, அவர்கள் “தலையில் கல்லைப் போட்டுவிட்டான்” எனக் கூறி  வருந்துவர்.

            “ஊசிக்காது” என்பது கூர்மையாகக் கேட்கும் திறனுடைய காதினைக் குறிக்கப்பயன்படுத்துவது வழக்கம். ஊசியின் காதில் மெல்லிய நூல் நுழைவது போல், காதில் மெல்லிய செய்திகள் நுழைந்தால் “ ஊசிக்காது” எனக் குறிப்பிடுவதனைக் காணமுடிகிறது.

            ஒரு பேச்சாளர் தொடர்ந்து சிறப்பாகப் பேசுகிறார் எனில்  அருவி போல் பேச்சு எனக் குறிப்பிடுவர். வாய்ப்பு கொடுத்தால் கருத்துக்களை அள்ளிக் கொட்டும் ஆற்றலுடைய பேச்சாளர்கள் உண்டு. அவ்வாறு பேசப்படும் பேச்சினை “மடை திறந்த வெள்ளம்” போல எனக் குறிப்பிடுவர்.

            தலைமுடி படியாமல் குச்சிபோல் நின்று கொண்டிருந்தால் “முள்ளம்பன்றி” தலை எனக் குறிப்பிடுவர்.  ஆனால் இன்று அப்படி தலைமுடியை வெட்டச்சொல்வதனைக் காணமுடிகிறது. காசு கொடுத்து அவ்வாறு  தலைமுடியை நிற்கவைக்கும் வழக்கம் வந்துவிட்டது. ஆனால் படியவைத்தலே பணிவின் பெருமையை உணர்த்தும். அது தலை முடியாக இருந்தாலும் சரி மன்னனின் மணி முடியாக இருந்தாலும் சரி. 

-   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக