தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 30 செப்டம்பர், 2023

நின்ற சீர் நெடுமாறனும் வேலிப்போரும்

 

நின்ற சீர் நெடுமாறனும்  தமிழர்பெருமை காத்த வேலிப்போரும்

            வரலாறு  உண்மையானதாக அமைதல்வேண்டும். ஏனெனில் அதுவே பின்னாளில் ஆவணமாகும். ஒவ்வொருவரும் தனக்கேற்றார்போல் எழுதத்தொடங்கியதால்தான் உண்மையான வரலாற்றினை அறியமுடியவில்லை. இந்தியாவின்மீது போர்தொடுத்தவர்களே வரலாற்றினை எழுதியதால் வரலாற்றில் அவர்களே நாயகர்களாக நின்றனர். அவர்களை எதிர்த்த உண்மையான இந்திய வீரர்கள் வரலாற்றில் எதிரிகளாகக் காட்டப்பட்டனர். இந்தியவீரர்களின் வீரம் மறைக்கப்பட்டது. அந்நியர்களின் வீரம் புகழப்பட்டது. இந்தியர்களே இந்தியர்களின் வீரத்தை எழுதத்தொடங்கியபின்னரே இந்தியரின் பெருமை புலப்ப்படத் தொடங்கிற்று. தமிழர்களே தங்கள் வரலாற்றினை எழுதத் தொடங்கிய பின்னரே தமிழரின் பெருமை புலப்பட்டது.

            தமிழர்கள் அறிவால் சிறந்து ; வணிகத்தால் வளர்ந்து ;  வளத்தால் செழித்து உலகையே வளப்படுத்தினர். அதனால் உலகமே தமிழரைப் போற்றி வணிகத்தொடர்பு வைத்திருந்தது. அதனால்தான் அனைத்து நாடுகளின் வரலாற்றிலும் தமிழகத்திற்கு மிகப்பெரிய பங்கிருப்பதனைக் காணமுடியும்.  அவ்வாறே உலகிற்குப் பொருள்கொடுத்து ஆண்ட தமிழினத்தின் பெருமை வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அவ்வரலாறுகள் அந்நியர்களின் சூழ்ச்சிகளாகவே அமைந்தன. சமயம், மொழி, நாடு என்னும் மூன்றையும் காக்கவே (அ) தாக்கவே போர்கள் ஏற்பட்டன.  ஆனால் இந்தியா ஒரு நாளும் பிறருடைய சமயத்தை ; மொழியை ; நாட்டைக் கைப்பற்ற போர்செய்ததில்லை ; காக்கமட்டுமே போர் செய்தது ;செய்கிறது. இப்பெருமையே வரலாற்றில் இடம்பெறத்தக்க செய்தியாகிறது.

            இலக்கியங்களில் போற்றப்பட்ட பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் வரலாற்றில் அரிகேசரி மாறவர்மன். கி.பி. 640 முதல் 675 வரை கோலோச்சியதாக தமிழகவரலாறு எடுத்துக்காட்டுகிறது.  முதலாம் நரசிம்மவர்மன் காலத்து மன்னன்.  இடைக்காலப் பாண்டியர்களான கடுங்கோன், அவனி, சூளாமணி, செழியன், சேந்தன் வரிசையில் வந்த மன்னன்.  அரிகேசரி மாறவர்மனே பாண்டிய அரசைப் பேரரசாக்கிய பெருமைக்குரியவன். சமண சமயத்தைப் போற்றிய பாண்டியர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் வழிவகுத்தனர்.  சமணக் காவியங்களும், சேந்தன் திவாகரம் எனப் பல இலக்கியங்கள் இப்பாண்டியர் காலத்தில் தோன்றின.

             முதலாம் மகேந்திரவர்மப்பல்லவன் சமணனாக இருந்தபொழுது திருநாவுக்கரசர் சைவராகத் தாய்மதம் திரும்புவதை எதிர்த்தான்.   சுண்ணாம்பு அறையில் இட்டும், யானையை வைத்து மிரட்டியும், கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிந்தும் பல கொடுமைகள் செய்தான். பின்னாளில் திருநாவுக்கரசரின் பக்தித்திறத்தின் அருமையினை உணர்ந்து திருநாவுக்கரசரை வணங்கிநின்றான். மகேந்திரவர்மனும் உண்மையை உணர்ந்து சிவநெறிக்கு மாறினார். அவ்வாறே பாண்டிய மன்னனாகிய அரிகேசரி மாறவர்மனும்  கூன் விழுந்து துன்பப்பட்டான். அவனுடைய மனைவி பாண்டிமாதேவி சிவபக்தி கொண்ட சோழன் மகள். எனவே ‘ஆளுடைய பிள்ளை’ எனப் போற்றப்பட்ட சைவசமயக் குரவருள் (தலைவர்) நால்வருள் ஒருவரான  திருஞானசம்பந்தரை வேண்டுகிறாள்.  அமைச்சராக இருந்த குலச்சிறையாரும் வேண்டுகிறார்.  திருஞானசம்பந்தர் திருநீற்றால் மருத்துவம் செய்து, பதிகம்பாடி காத்தருளினார். ‘கூன் பாண்டியன்’ ‘ கூன் நீங்கி ‘நின்றசீர் நெடுமாறன்’ ஆனான். பெண்களை அமைச்சராக நின்ற பெருமை, அமைச்சர் குலச்சிறையாரால் புலப்படுகிறது. அரசனின் நோய்நீக்கத் துணைநின்ற அரசியார் பாண்டி மாதேவியும் , அமைச்சரான குலச்சிறையாரும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் இடம்பெற்றனர்.

            நெல்வேலியில் கி.பி. 675 ஆம் ஆண்டு சாளுக்கிய மன்னனான முதலாம் விக்கிரமாதித்தனை அரிகேசரிமாறவர்மன் பல்லவர் துணையோடு பெரும் வெற்றி கொண்டான். இதனை

            நிறைகொண்ட சிந்தையால்

            நெல்வேலிகொண்ட

            நின்ற சீர் டுமாறன்

            அடியார்க்கும் அடியேன்

எனப்போற்றியவரும் திருத்தொண்டத்தொகையைப் பாடியவருமான சுந்தரமூர்த்திநாயானாரின் பாடலும் உணர்த்திநிற்கிறது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்திநாயனார் நூறாண்டுகளுக்கு முன் நடந்த நெல்வேலிப்போரினைக் குறிப்பிட்டுள்ளதன்வழி நெல்வேலிப்போரின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.

            சமணனும் வடுகனுமாகிய விக்கிரமாதித்தனிடமிருந்து சைவர்களைக் காக்கும் முயற்சியாகவும் இப்போர் அமைந்தது. எனவே நாயன்மார்களும் இப்போரின் அருமையினை எடுத்துரைக்கின்றனர்.  இப்போர் தமிழகத்துக்குச் செய்த பெரும்பேறாக அமைந்ததனை வரலாறு பதிவுசெய்துள்ளது.

            வில் வேலிக் கடல் தானையை

            நெல்வேலிச் செரு வென்றும்

எனப் பாண்டியர் செப்பேடான வேள்விக்குடிச் செப்பேடும் குறிப்பிடுகிறது.

            சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் தமிழரசர்களை ஏளனமாக எண்ணினான். அவனுக்குப் பாடம் புகுட்டவே அரிகேசரி நெடுமாறன் போர்தொடுத்தான் ; விரட்டினான் ; தமிழர்ப்பெருமையை நிலைநாட்டினான். தமிழர் மானத்தைக் காக்கும் இப்போரில் சோழர்களின் துணைப்படையும் துணைசெய்தது.யாக நின்றனர். அவர்களுடைய துணையும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

            பல்லவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சாளுக்கியர்களை அடக்கவேண்டிநல்ல தருணத்தை எதிர்பார்த்திருந்தனர் பல்லவர்கள். பாண்டிய அரசன் அரிகேசரி நெடுமாறன் போர்தொடுப்பதறிந்து அவனுக்குத் துணை நின்றனர். சாளுக்கிய மன்னர்களின் தமிழர் அடக்குமுறையினை ஒடுக்க பாண்டியர், சோழர், பல்லவர் என அனைவரும் ஒன்றுதிரண்டனர்.  அவர்களின் ஒற்றுமையே  நெல்வேலி போரின் வெற்றிக்கு வித்திட்டது.  தமிழர்கள் ஒன்றுபட்டதாலேயே இப்போர் வெற்றிபெற்றது எனச் சாளுக்கிய மன்னன்  ‘கேந்தூர் பட்டயத்தில்’  குறிப்பிட்டுள்ளான். இது அவனுடைய தோல்வி பலர் ஒன்றுபட்ட சூழ்ச்சியால்தான் நிகழ்ந்தது என்பதனை உணர்த்தும்வகையில் குறிப்பிடப்பட்டதனை அறியமுடிகிறது.  பாண்டியர் தலைமையில் தமிழர்கள் ஒன்றுசேர்ந்த முதல்போராகவும் இவ்வேலிப்போர் அமைந்தது, எனவே வரலாற்றுப்பதிவும் ஆயிற்று.

            வில்லவனை நெல்வேலியிலும்

            விரிபொழில் சங்கரமங்கைப்

            பல்லவனையும் புறம் கண்ட

            பராங்குச உன் பஞ்சவர் தொன்றலும்

எனச் சின்னமனூர் கல்வெட்டு குறிப்பிடுவதும் இங்கு எண்ணத்தக்கது.

            திருத்தொண்டர்புராணம் என்னும் பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழார் “சேய்புலத் தெவ்வர் தம் கடல்போன்ற தானையை நெல்வேலியில் அழித்தார் என்றும் வடபுலத்து முதல் மன்னன் படை சரிந்ததும் நெடுமாறன் வாகை சூடினான்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

            போர்கள் செய்வதில் வல்லவர்களான பாண்டியர்கள் தொடர்ந்து பல போர்களில் ஈடுபட்டு தம் பெருமையை நிலைநாட்டினர். போரொன்றே எதிரிகளை அடக்கி வரியினைப்பெறுவதற்கான வழி என எண்ணம்கொண்டிருந்தனர். முறையாகக் கட்டப்படும் வரியைக்கொண்டே போர்களைத் தொடுத்தனர் எனத் தெளியமுடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக