“நீங்கள் யார்?”
“நீங்கள் யார்?” என்று யாராவது கேட்டால் என்ன
சொல்வீர்கள். வீட்டில் வந்துகேட்டால் “நான் இன்னாரது மகன் அல்லது மகள் ; இன்னாரது தந்தை
அல்லது தாய்” என்று யாரேனும் ஒருவரை மையமிட்டு அடையாளம் காட்டுவீர். சாலையில் கேட்டால்,
கேட்பவர் யாரென்று பார்த்து, “எதற்காகக் கேட்கிறீர்கள்” எனக் கேட்பதுண்டுதானே? அவர்
பணம் கொடுப்பவராக இருந்தால் விருப்பாகவும் ; பணம் கேட்பவராக இருந்தால் வெறுப்பாகவும்
விடை சொல்வதும் இயல்புதானே. காகிதப்பணம்தான் குணத்தைத் தீர்மானிக்கும் திறமுடையதாக
இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் இதே கேள்வியைக் கேட்டால் “இந்தப் பதவி” எனக்கூறுவதனையும்
காணமுடிகிறது. கையூட்டு பெறுபவர்தான் பதவியினையும் பெயரினையும் சொல்ல அஞ்சுவர். அதனால்தான்
யாரேனும் தவறுசெய்தால், “உன் பெயர் என்ன?”
என்று கேட்டுப்பாருங்கள். உடனே, கோபம் பலூனில்
வெடித்துவரும் காற்றுபோல் “ஏன்…கேட்கிறாய்?” என வேகத்துடன் ஒலிக்கும்.
“நீங்கள்” என்பது அத்தனை வலிமையுடைய சொல்.
உங்கள் ஊரிலிருந்து நகரத்திற்குச் செல்லும்போது “நீங்கள் யார்?” எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள். ‘இந்த ஊரன்” எனச் சொல்வீர். வேறு
மாநிலத்திற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர்?. “இந்த மாநிலத்தன்” என்று சொல்வீர்.
வேறு நாட்டிற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர். உங்கள் நாட்டின் பெயரைத்தானே சொல்வீர்.
அப்படியென்றால் உங்களுடைய பெரிய அடையாளம் உங்கள் நாடுதானே? அந்த நாட்டை நீங்கள் நன்றாக
அறிந்து வைத்திருக்கிறீரா?. ‘இல்லை’ என்றாலும் ‘ஆம்’ என்றாலும் கீழ்க்காணும் வினாக்களுக்கு
விடையளிக்க. எத்தனை மதிப்பெண் என்று கேட்கிறீரா? ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்
போட்டுக்கொண்டு எத்தனை மதிப்பெண் என நீங்களே கணக்கிட்டுக்கொள்க. அந்த மதிப்பெண்தான்
உங்களுக்குரிய மதிப்பெண். மதிப்பெண் கூடுதலாக இருந்தால் நீங்கள் உங்களை பெருமிதமாகக்
காட்டிக்கொள்வதில் வல்லவர் என நீங்களே தோளில் தட்டிக்கொள்ளுங்கள். மதிப்பெண் குறைவாக
இருந்தால், நேர்மையாக ஒப்புக்கொண்ட உம் நற்குணத்திற்காக நீங்களே உங்களைப் பாராட்டிக்கொள்ளுங்கள்.
வினா 1. உங்களுடைய நாடு இறைமை நாடு – அப்படியென்றால்?
“இறைமை” என்பது இத்தகைய பெருமை உடையது என வரையறுக்க
இயலாத பெருமையினை உடையது. தானேதன்னை இயக்கிக்கொள்ளும் முழுமையினை உடையது. பிறநாடுகளின்
தலையீடு இல்லாமல் முழுமையாகச் செயல்படும் திறமுடையது
வினா -2 : உங்கள் நாடு குடியரசு நாடு - அப்படியென்றால்?
குடிமக்களால் இயக்கப்படுவது. குடிமக்களே தம்
தலைவரைத் தேர்வுசெய்து ஆளச்செய்வது. பரம்பரையால் வருவதில்லை.
வினா -3 : உங்கள் நாடு பொதுவுடைமை நாடு – அப்படியென்றால்
?
தன்னுடைமைக்கு எதிரான சொல் பொதுவுடைமை. தனக்காகப்
பொருளைவைத்துக்கொள்ளாமல் அனைவருடனும் பங்கிட்டுக்கொள்வது.
வினா -4 : உங்கள் நாடு மதச்சார்பற்ற நாடு
– அப்படியென்றால்?
அனைத்து மதத்தினருக்கும் ஒரே வகையான உரிமையினையும்
சுதந்திரத்தையும் அளிப்பது.
வினா -5 : உங்கள் நாடு சமத்துவத்தைப் பின்பற்றும்
நாடு – அப்படியென்றால்?
சாதி, மதம், நிலை என எவ்வகை வேறுபாடுமின்றி
ஒரே நிலையில் அனைவரையும் நோக்குவது.
வினா -6 : உங்கள் நாடு அரசியல் உரிமை உடைய
நாடு – அப்படியென்றால்?
எத்தகைய மனிதராக இருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுரிமை
உண்டு. ஒவ்வொரு ஓட்டிற்கும் சமமான மதிப்பெண் அளிக்கப்படுவது.
வினா – 7 : உங்கள் நாடு நீதிமன்றத்தையே உச்சநிலையாகக்
கொண்டு செயல்படுவது – அப்படியென்றால்?
அனைவர்க்கும் அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி
ஒரே வகையான நீதியினை வழங்குவது.
வினா – 8 : உங்கள் நாடு சகோதரத்துவத்தைப் பின்பற்றுவது
– அப்படியென்றால்?
அனைத்து மக்களையும் உடன் பிறந்தவராக எண்ணி
அன்பு பாராட்டுவது.
வினா- 9 : மக்களாட்சியை மூன்று தூண்களே தாங்கிக்கொண்டிருக்கிறது
. அப்படியென்றால் ?
சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை என
மூன்றும் மக்களைக் காக்கச் செயல்படுவது.
வினா – 10 : உங்கள் நாட்டிற்கென ஒரு உறுதிமொழி
உண்டு – அப்படியென்றால்?
இந்தியா என் நாடு . இந்தியர் அனைவரும் என்
உடன் பிறந்தோர்.
என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின்
பழம்பெருமைக்காகவும், பன்முக மரபுச்சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின்
பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள்
எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.
என் நாட்டிற்கும் என் நாட்டும் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும்
வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். ஜெய் ஹிந்த்.
இப்போது நீங்கள் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தால்
உங்களுடைய மதிப்பினை நீங்கள் முழுமையாக உணர்ந்துவிட்டீர்கள். அப்படி உங்கள் குழந்தைகளையும்
பெரியோர்களை மதித்து வாழக் கற்றுக்கொடுத்துவிட்டால்போதும். நாட்டில் சோம்பல் இருக்காது
; குடி இருக்காது ; முதியோர் இல்லம் இருக்காது ; வறுமை இருக்காது.
இந்தக்கருத்துக்களை எல்லாம் குழந்தைகள் காதில்
நூல்போல் நுழையவிடுங்கள். அவர்கள் ஆடையாக்கி தங்கள் மானத்தைக் காத்து நாட்டையும் காத்துவிடுவார்கள்.
வறுமை நிலையில் வளர்ந்த குழந்தைகள் எல்லாம்
டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு நாட்டுக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்களே.
சில குழந்தைகள் வறுமை நிலையிலிருந்து ஆட்சியராக, பட்டயக்கணக்கராக, மருத்துவராக வந்தார்கள்
; வருகிறார்கள் ; வருவார்கள். உங்கள் குழந்தையையும் அப்பெருமைக்குரியவரில் ஒருவராக
மாற்றலாம்தானே? மாற்றிவிட்டால் நீங்கள் நீங்கள் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக