உழவு மட்டுமில்லை நலிந்தது
தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும் என்று
சொல்லாதவர் எவரேனும் உண்டா? எல்லோரும் அதற்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் நடைமுறையில்
நடைபெறவில்லை. எப்படி? இதற்கான சதியில் பின்னால் இருந்து யாரோ தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்
என்பது வெள்ளிடைமலை. உணவில் உப்பு போன்றது, சமூகத்தில் கல்வி. அது இல்லாவிட்டால் வாழ்க்கை
சுவைக்காது. ஆனால், உப்பு என்பது கெடுதியானது. உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகிறது.
அதனால்தன் இறந்தவற்றைக் கூட கெடாமல் வைத்திருக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்த
உப்பிலும் கல் உப்பா? பொடி உப்பா? எனக் கேள்வி கேட்டு ஒவ்வொரு நாளும் இது நல்லது !
அது நல்லது ! என மக்களைக் குழப்பிவிடும் நிலையினையும் காணமுடிகிறது. யார் என்று கேட்கிறீர்களா?
இன்று வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பெரியவர்கள்
சொல்வதைக் கேட்போம். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் முதியோர் இல்லங்களிலும் வீட்டு
மூளைகளிலும் முடங்கித்தானே கிடக்கிறார்கள்.
அவர்களுக்குரிய மதிப்புடன் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா? இல்லைதானே. அப்படி மதிப்பதாயிருந்தால்
உலகம் வெப்பமயமாகி இருக்காது ! வெள்ளம் ஊருக்குள் புகுந்திருக்காது ! முப்போகம் விளைவது
கனவாகி இருக்காது ! உழவு நிலம் வறண்டிருக்காது ! உழவன் வறுமையில் உழன்றுக்கொண்டிருக்கமுடியாது
! குளங்களில் வீடுகள் கட்டப்பட்டிருக்காது ; தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்காது. இன்னும்
எத்தனையோ காதுகள் சொல்லலாம். ஆனால், காது கொடுத்து கேட்பவர்கள் எத்தனை பேர்?. உங்களைப்போல்
சில நல்லவர்களைத் தவிர.
உழவுத்தொழில் வேர். மற்றவை கிளைகளும் இலைகளும்.
மற்றதொழில்களுக்கு அடிப்படையாக வேர் போன்ற உழவுத்தொழில் உணவிடும். மற்ற தொழில்கள் இலைகள்
பச்சையம் சேர்ப்பதுபோல் சேர்த்து வேருக்குப் பலம் சேர்ப்பதுபோல் உழவைக் காக்கவேண்டும்.
ஆனால், செய்கிறதா? அனைத்துத் தொழில்களும் வானைத் தொட முயற்சிக்கின்றனவே அன்றி உழவுத்தொழிலைக்
கவனிக்க மறந்துவிட்டது. கதிரவன் எழும் முன்னே
எழும் கதிரவன்கள் உழவர்கள்தானே. மற்றவர்கள் எவ்வெவ்வாறோ வளர்ச்சியடைந்துவிடும்போது
உழவர்கள் மட்டும் எப்படி ஏழையாகவே இருக்கிறார்கள். எண்ணிப்பார்க்கவேண்டும்தானே? இதற்குப்
பின்னணி என்ன?
அன்றைய இளைஞர்கள் தலைவர்கள் அழைத்த பாதையில்
சென்று நாட்டு விடுதலைக்குப் போராடினர். விடுதலை பெற்றனர். பின்னர் இளைஞர்களுக்கு என்ன
வேலை? புதிது புதிதாகத் தொழில் தொடங்கினரா? மகாகவி பாரதியார் கூறிய ‘ஆலை அமைப்போம்..
ஊசிகள் செய்வோம்” என்றெல்லாம் பாடினாரே. எத்தனை இளைஞர்கள் முன் வந்தார்கள். நாட்டில்
சட்டங்களும் வாய்ப்புகளும் குவிந்துகிடக்கின்றன. முன்வரவேண்டியது யார் பொறுப்பு? இன்றைய
இளைஞர்களுக்குத் தலைவர்களாக திரைநாயகர்களே இருக்கிறார்கள். அவர்கள் கூறினால்தான் ஒரு
தொழிலைத் தொடங்குவார்கள் என்னும் நிலையில் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதை
உணர்ந்து நாயகர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கச்சொல்லலாம்தானே? எல்லைகளில் அச்சுறுத்திக்கொண்டிருக்கும்
நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொருட்களை வாங்கிக்கொண்டிருப்பதுதான் இன்றைய கவலைக்குரிய
நிலை. நாமே எதிரிக்குக் காசு கொடுத்தால் என் செய்வது? இதற்குப் பின்னணியில் இருப்பதுயார்?
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் யார்
இத்தகைய செயல்களுக்கு எல்லாம் பின்னால் இருந்துகொண்டு செயல்படுவார்கள் என்று. ஆம்,
நாட்டிற்கு எதிரானவர்கள்தான். “அவர்கள் யார்?” என்று கேட்கிறீர்களா? எந்த நாட்டிலெல்லாம்
தங்கள் பொருட்களை விற்பனையாக வேண்டும் என எண்ணுகிறார்களோ, எங்கே நம் நாடு வளர்ந்துவிட்டால்
அவர்கள் வருமானம் குறையும் என்று நினைக்கிறார்களோ அந்த நாடுகள்தான். அவர்களே, நம் நாட்டில்
உள்ளவர்களை சோம்பேறிகளாக ; போதைக்கு அடிமைகளாக ; குடிகாரர்களாக ; புகைப்பவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
பசியை மறக்க இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களையெல்லாம்
காப்பாற்றுவது யார்? இளம் வயதிலேயே போதைப்பொருட்களில் சிக்கிக்கொண்டு இறப்பவர்களைக்
காப்பாற்றுவது யார்? அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் காப்பது யார்? அநாதைக் குழந்தைகளை
உருவாக்கும் சூழலை உருவாக்குவது யார்? இந்த இத்தனை யாருக்குப் பின்னும் பெருமுதலைகள்
ஒளிந்துகொண்டிருக்கின்றன. விழிப்புணர்வோடு பாருங்கள்.
நம் நாடு முதலிடத்தில் வந்துவிடக்கூடாதென எண்ணும்
கயவர்களே அவர்கள். நாளிதழைப் புரட்டிப்பாருங்கள். சொத்தினைக் கேட்ட மகனைக் கொன்ற தந்தை
; குடிகாரக் கணவனைத் திருத்தமுடியாமல் தாயும் மகளும் தற்கொலை ; குடிப்பதைக் கண்டித்ததால்
கணவன் தற்கொலை என ஒரே நாளில் ; ஒரே பக்கத்தில் வெளிவந்த செய்திகள்தான் இவை. இப்படி
இறப்பவர்கள் பெரும்பாலும் இருபது முதல் நாற்பது வயதுக்குள் இருப்பவர்கள் தான். யாரால்
உலகில் உள்ள நாடுகள் அனைத்து வளம் பெற்றுக்கொண்டிருக்கிறதோ அத்தகைய மக்களை தெருக்களில்
மயங்கிக்கிடக்கவைத்திருக்கிறது அந்நியரின் ஆளுமை.
எப்போதிலிருந்து தொடங்கியது எனக் கேட்கிறீரா?
இதற்கு இயற்கை வேளாண் அறிஞர் காலஞ்சென்ற நம்மாழ்வாருடைய சொற்களைச்சொல்கிறேன், எளிமையாகப்
புரிந்துகொள்வீர். “ஆங்கிலேயர்கள் பாலில் தண்ணீரைக்
கலக்க மாவினைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், தமிழர்கள் பாலில் தண்ணீரைக் கலந்துகுடித்தார்கள்.
தமிழர்களின் அறிவுத்திறத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயன் மாட்டின் வளத்தை அறிந்தான்.
இதனால்தான் இவர்கள் எவ்வளவு பஞ்சத்தை உண்டாக்கினாலும் நன்றாக விளைவித்து உடம்பைத் தேக்குபோல்
வைத்திருக்கிறார்கள் என எண்ணுகிறான். எனவே, மாடுகளைக் கொல்வதற்கென்றே சாவடிகளைக் கொண்டுவருகிறான்.
நாடுமுழுதும் இலட்சக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. மாடுகள், மனிதர்கள் எதைத் தின்பதில்லையோ
(புல், வைக்கோல்) அதனைத் தின்று குழந்தைகளுக்குப் பால்கொடுத்தன. மாடுகளைக் கொன்றபிறகு
போனவை: குழந்தைகளுக்குப் பால் போனது ; பயிர்களுக்கு எரு போனது ; ஏர் உழும் உழவு போனது.
வந்தவை : டிராக்டர் வண்டி , புகை, டீசல் எரிபொருள், குப்பை குவிதல், எந்திரங்கள். இவை
அனைத்தும் இயங்க மின்சாரம். இவை அனைத்திலும் எவ்வளவும் பணம். எவ்வளவு சிக்கல்கள். இத்தனை
சிக்கல்களையும் தீர்க்கும் ஒரே தீர்வாக மாடுகள் இருந்தன. அவை மிகவும் நன்றியுணர்வுடன்
தன்னை வளர்ப்பவர்களுக்குத் துணைசெய்ய வருடந்தோறும் கன்றினைக்கொடுத்தது. அந்தக் கன்றினைக்கொன்று
பொள்ளாச்சியில் பஜ்ஜி செய்துவிடுகின்றனர் ; அப்படியும் விலைபோகாவிட்டால் கேரளாவுக்கு
அடிமாட்டுக்கு விற்றுவிடுகின்றனர். குருடனிடம் அரிக்கன் விளக்கு கிடைத்தது போல் ஆகிவிடுகிறது”
என உழவுத்தொழில் நலிந்ததற்கான காரணத்தைத் தெளிவாகவும் வருத்தத்துடனும் குறிப்பிட்டுள்ளார்.
அன்று இந்தியாவிற்குள் அவர்கள் நின்றுகொண்டு
கெடுத்தார்கள். இன்று அவர்களுடைய எந்திரங்களும் பொருட்களும் எடுபிடிகளும் கெடுத்துக்கொண்டிருக்கின்றன.
விழிப்புணர்வுடன் வாழ்ந்தால்தான் உழவர்களைக்காக்கமுடியும்.
மாடுகளைப் பெருக்குவோம் ; உழவுத்தொழிலைப் பெருக்குவோம் ; பிற தொழில்களை உருவாக்குவோம்.
அதுவே நம் கடமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக