தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 11 ஆகஸ்ட், 2021

அடிப்படை உரிமைகள் ஏழு

 


அடிப்படை உரிமைகள் ஏழு

  அடிப்படை உரிமைகள் ஏழும் உங்களுக்குத் தெரியுமா? 1. அனைவரையும் சமமாக நடத்தும் உரிமை 2. சுதந்திரமாக வாழும் உரிமை 3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை 4. சமயத்தைத் தேர்வு செய்யும் உரிமை 5. பண்பாடு மற்றும் கல்வியைப்  பின்பற்றுவதற்கான உரிமை 6. அரசியல் நிர்ணயச்சட்டத்தை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான உரிமை 7. கல்வி கற்பதற்கான உரிமை.

     இந்த ஏழு உரிமைகளையும் நீங்கள் பின்பற்றுகிறீரா? பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் சுதந்திரமானவர்தான். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் பெற்ற வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். பெற்றோர் துணை நின்றதால் எத்தனை வெற்றிகளைக் குவித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். தம் திறமையை வெளிப்படுத்த முடிந்த விடுதலை உணர்வின் வெளிப்பாடுதான் சிறந்த வீரங்கனையாக மிளிர்வதன் காரணம். சிலர் தம் ஆற்றலை அறிவார் ; செயல்படுத்த இயலாது. சிலரால் செயல்படுத்த முடியும். ஆனால் அதற்கான முயற்சி இருக்காது.

தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை இவற்றின் முதல் மூன்றெழுத்தும் அவர்களுக்கான தகுதியினை கூறிவிடும்தானே. இவை மூன்றையும் முறையாகச் செயல்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த நீரஜ் சோப்ராவையும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மீராபாய் சானுவையும், வெண்கலப்பதக்கம் வென்ற வளைதடி அணியையும், மலியுத்த வீரர் ரவிகுமார் தஹியா, பஜ்ரங் புனியா வீராங்கனை லவ்லினாபோர்கோஹைன் அனைவரும் தம் தகுதியைப்போற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்தானே. இவர்கள் அனைவரும் இவ்வேழு உரிமைகளையும் பெற்றவர்கள்.

     முதல் உரிமை, அனைவருக்கும் ஒன்றுபோலவே வாய்ப்பு. பாதுகாப்புப்படையில் சேரவேண்டுமானால் உடல்நலத்தில் சிறந்தவர் எவரும் சேரலாம். வணிகம் தெரிந்த எவரும் வணிகம் செய்யலாம். கற்றவர் எவரும் கற்பிக்கலாம். உழைக்கத்தெரிந்தவர் எவரும் உழைக்கலாம். கேட்பதற்கே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறது. இதனை உணர்ந்து செயல்படுவதே முதல் விடுதலை.

     இரண்டாவது உரிமை, ஒரு பெண் சாலையில் தனியாக நடந்து செல்கிறார். இருவர் கிண்டல் செய்கின்றனர். தப்பித்தால்போதும் என வீட்டிற்குவந்து தம்பியிடம் சொல்கிறாள். தம்பி “யாரது? எங்கே?” எனத் திரைப்படத்தில் வருவதுபோல் இல்லாமல், “என்னிடம் ஏன் சொல்கிறாய்.” என்றான். ‘பளார்’ என அறைந்துவிட்டு “சரியான கோழை” என்கிறாள். “உன்னையே நீ காப்பாற்றிக்கொள்ளமுடியாவிட்டால் நீ எப்படி குடும்பத்தை ; நாட்டைக் காப்பாற்றப் போகிறாய். பகல் நேரம். பலரும் நடமாடும் சாலை. சத்தமாக குரல் எழுப்பினாலே போதும். அரசு 1098 என்னும் எண்ணையும் கொடுத்திருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஓடி வருகிறாய். பெண்ணுக்குச் சம உரிமை எனப்பேச மட்டும் தெரிகிறது. இன்று ஓடிவந்தால் நாளையும் அப்படித்தானே கிண்டல் செய்வார்கள்” என்றான். உடனே, கிண்டல் செய்த அதே இடத்திற்குச் செல்கிறாள். இருவரையும் “பளார்” என்று அறைகிறாள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள். தம்பி பின்னால் நின்று இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் வீரத்துடன் இருக்கவேண்டும் என்கிறான். சுதந்திரமாக வாழ்வதன் பொருளை அறிந்து தம்பிக்கு நன்றி கூறுகிறாள்.

     மூன்றாவது உரிமை, இயற்கை அனைவருக்குமான சொத்து. இதனை எவரும் கொள்ளையடிக்க உரிமை இல்லை. நீர், மணல், கல், மலை, கனிமம் அனைத்தும் மக்களுக்கானது. இதனை எவர் சுரண்டினாலும் தவறுதான். சிலர் பணத்தையும் சிலர் உழைப்பையும் சுரண்டுவர் எதுவானாலும் தவறுதான். அதனால்தான் இத்தனை மணிநேர உழைப்பு  என அரசு நிர்ணயித்து இருக்கிறது. இயற்கையாக ஓடும் நீரை குடுவையில் அடைத்து அதிக விலைக்கு விற்பது எத்தனை ஏமாற்றுத்தனம்தானே. ஆயிரம் லிட்டர் தண்ணீர் பத்துரூபாய்க்குப் பெற்று ஒரு லிட்டர் நீரை இருபது ரூபாய்க்கு விற்கும் நிலையினைக் காணமுடிகிறதுதானே. இப்படி உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலைவாங்குவது. திருமணமாகாத பெண்களை மட்டுமே வேலைக்கு வைப்பது. திருமணமான பெண் எனில் சமைப்பது ; குழந்தையைப் பார்த்துக்கொள்வது எனக் கூறுவது. பெண்கள் எனவும் பாராமல் இரவு காலம் கடந்து பணியிலிருந்து அனுப்புவது. மகப்பேறுக்கு விடுப்பு கொடுக்காமலிருப்பது ; அப்படியே கொடுத்தாலும் சம்பளப்பிடித்தம் செய்வது. இப்படி எத்தனையோ சுரண்டல்கள் உள்ளன. இவற்றைச்செய்வோர் அனைவரும் குற்றவாளிகளே. தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட நல்லவழியில் மெதுவாகச் செல்வதே பெருமை என்று உணரவேண்டும். தண்ணீர் அனைத்தையும் விற்று பணமாக்கியவர்கள் நாளைய தலைமுறைக்குத் தண்ணீர் கிடைக்காது வாடும்நிலை ஏற்படுவதனை உணரவேண்டும். பணத்தைவைத்து வாழமுடியாதுதானே.

     நான்காவது உரிமை, எந்தச்சமயத்தையும் எவர் வேண்டுமானாலும் பின்பற்றும் உரிமை. எவருடைய தலையீடும் இல்லாமல் எந்தக்கடவுளையும் வணங்கும் உரிமை. மன அமைதியைத் தருவதற்கும் நாட்டில் அமைதி நிலவுவதற்கு சமயம் துணையாக நிற்கவேண்டும். அதற்கான சுதந்திர உரிமை.

     ஐந்தாவது உரிமை, முன்னோர் மரபினைப் பின்பற்றுவதில் உரிமை. முன்னோர்கள் காரணமறிந்தே பழக்கவழக்கங்களை வரையறுத்தார். அதனை உணர்ந்து பின்பற்றவேண்டும். அவற்றை மறந்து புதிய வழக்கங்களுக்கு ஆட்பட்டதனாலேயே நோய்கள் பெருகி வருந்துவதனைப் பார்க்கமுடிகிறது. அவ்வாறே விருப்பம்போல் விரும்பிய கல்வியினைப் படிப்பதிலும் உரிமை. யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது. இன்றுகூட ‘தானே’ என்னுமிடத்தில் பதினைந்து வயது சிறுமியை ‘நீட்’ தேர்வுக்குப் படித்தே ஆகவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்கள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த சண்டையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தாயைத்தள்ளிவிடுகிறாள் மகள். தலை கட்டிலின்மீது பட்டதும் ரத்தம் தெறிக்கிறது. தாய் இறக்கிறாள். எத்தனை கொடுமை. கட்டாயப்படுத்துவதால் ஒரு குடும்பம் என்ன நிலைக்கு மாறிவிடுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் கல்வியைப் பயில்வதற்கான உரிமை.

     ஆறாவது உரிமை, அரசியல் நிர்ணயச்சட்டம் செயல்படுத்தப்படவேண்டிய நிலையினைப் பின்பற்றும் உரிமை. நாட்டை வழிநடத்தும் சட்டதிட்டங்களை எவர் அவமதித்தாலோ, பின்பற்றப்படாவிட்டாலோ அதனை உணர்த்துவதற்கான உரிமை.

     இந்த ஆறு உரிமையுடன் ஏழாவது உரிமையாகச் சொத்துரிமை இருந்தது. ஆனால், இந்தச் சொத்துரிமையைத் தவறாகப் பயன்படுத்தி அளவுக்கு மீறிய சொத்துக்களைச் சேர்த்தனர். அரசுக்குத்தேவையானபோது சாலை, தொடர்வண்டி போக்குவரத்து பாலம், தொழிற்சாலை, என ஏதேனும் ஒரு நாட்டு நலனுக்காக ; மக்களின் வேலை வாய்ப்புக்காக ; அந்நிய இறக்குமதியைக் குறைப்பதற்காக ; அந்நிய ஏற்றுமதியை ஊக்குவிக்க என அரசு பல திட்டங்கள் வைத்திருக்கும்தானே. நாடு வல்லரசாவதனைப் பிறநாடுகள் விரும்புமா? அதனால் யாருக்காவது காசுகொடுத்து போராட்டம் நடத்தி நாட்டுநலனைக் கெடுத்துவிடுவர். பணத்திற்கு ஆசைப்பட்டு, “அரசு தரும் நிலத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டோம்” எனத் தங்கள் அரசையே எதிர்ப்பர். எனவே இந்தச் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து 1978 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதனால் ஆறாக மட்டுமே இருந்தது. ஆனால் குழந்தைகளின் கல்வி குறித்து எண்ணிய அரசு அதற்கான உரிமையை ஏழாவது உரிமையாகக் கொண்டுவந்தது.  

     ஏழாவது உரிமை:  சில குழந்தைகள் கற்கவும் ; சில குழந்தைகள் பணிக்குச் சென்று உழைப்பதும் ஏற்றத்தாழ்வாகும். எனவே, அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க அரசு ஆவன செய்யவேண்டும். இச்சட்டம் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் நாள்முதல் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது.  எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. இதுவே கல்வி உரிமை.

     இந்த ஏழு உரிமையினை அனைவரும் அறிந்து செயல்படுத்தினால் நாடு வல்லராசாகும். பின் என்ன நாட்டு மக்களும் வல்லரசர்தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக