தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சுவையான நிகழ்வுகள் - சுவாமி விவேகானந்தர் வாழ்வில்

 


சுவையான நிகழ்வுகள் – சுவாமி விவேகானந்தர் என்னும் வீரத்துறவி

(119 ஆவது நினைவுநாள்)

ஒரு கோழியானது தனது பத்துக்குஞ்சுகளை பாம்பிடமிருந்துகாக்க இறக்கைக்குள் அவற்றை மறைத்துக்கொள்கிறது.  கோழியைச் சுற்றிச்சுற்றி படமெடுத்துவரும் மூன்று பாம்புகளைத் துணிவுடன் எதிர்கொள்கிறது. இதுதான் வீரம்.

பிறரை வெற்றிகொள்பவன் வீரன். தன்னை வெற்றிகொள்பவன் மாவீரன். அவ்வாறு தன்னை வெற்றிகொண்ட நரேந்திரன் என்னும் இளைஞனே சுவாமிவிவேகானந்தர் (12.01.1863 – 04.07.1902) ஆனார். அவருடைய வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளைக் காண்போமா?

நிகழ்வு 1 :

பாஸ்கர் சேதுபதிக்கு அமெரிக்காவிலிருந்து “சமய மாநாட்டிற்கு வருக” என அழைப்பு வருகிறது. தன்னைவிட சுவாமி விவேகானந்தர் சென்றால் நம் நாட்டின் பெருமை உலகிற்குத் தெரியும் என எண்ணினார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் (திருக்குறள் : 517)

 

என்னும் திருக்குறளுக்குத் தலைசிறந்த சான்றானார்.

 

சான்றாக வாழக்கூடியவர் சான்றோர்தானே?. அவ்வகையில் சான்றோரான பாஸ்கரசேதுபதி அவர்கள், தன்னை பின்னிறுத்தி சமுதாய நலத்தை முன்னிறுத்த எண்ணி சுவாமி விவேகானந்தரை அனுப்பினார். சான்றோர், தமக்குக் கிடைக்கும் நல் வாய்ப்பை பிறர்க்குக் கொடுத்து மகிழ்வர். நல்லோர், தம் வாய்ப்பினை மட்டும் அனுபவிப்பர். வஞ்சகர், பிறர் வாய்ப்பையும் தனதாக்கிக்கொள்வர். அவ்வாறு நோக்குகையில்,  தன்னைக் காட்டிலும் சுவாமி விவேகானந்தர் சென்றால்தான் நன்றாக இருக்கும் என எண்ணினார் ; உலகிற்கு ஒளியூட்டினார். சுவாமி விவேகானந்தரை முன்னிறுத்தி தன்னைப் பின்னிறுத்திய  பாஸ்கர சேதுபதியின் பெயர், (பாஸ்கரன் – சூரியன்) காரணப் பெயர்தானே.

நிகழ்வு – 2

“சகோதர சகோதரிகளே!” எனத் தன்னுடைய உரையைத் தொடங்குகிறார் சுவாமி விவேகானந்தர்.  தொடக்கமே அத்தனை உள்ளங்களையும் நெகிழவைக்கிறது. இந்த இரண்டு சொற்கள் எப்படி நெகிழவைத்தன?  இந்த ஐயம் அனைவருக்கும் வருவது இயல்புதானே?. இதனை அறிவதே அருமை. உண்மையான துறவை மேற்கொண்டவன் மற்ற மனிதர்களை உடன் பிறந்தோராகக் கருதுவான் அதுவே துறவு. அவ்வாறு உண்மையாக வாழ்ந்துவரும் நிலையினை இரண்டே சொற்களில் உணர்த்தினார். உண்மையின் வலிமையை உலகுக்கு உணர்த்தியதால் “இவர்தான் உண்மைத்துறவி” என உடனடியாக உணர்ந்தது அந்த விழிப்புடைய அரங்கு. அதனால்தான் அரங்கு அதிர்ந்தது. பாரதத்தின் பெருமையினை உலகம் அறிந்தது. உலக அரங்கையே அவர்பால் ஈர்த்தது.

நிகழ்வு - 3

உண்மையான ; தெளிவான ; கம்பீரமான ; அழகான அவருடைய பேச்சில் மயங்காதவர் எவரும் இல்லை.  பெரியோர்கள் அவரை வாழ்த்தி மயங்கினர். சிறியோர்கள் அவரை குருவாக எண்ணி மயங்கினர். இடைப்பட்டோர் சொல்லழகிலும் பொருளழகிலும் மயங்கினர்.

துறவிகள், ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காண்பர். அவர்களுக்கு உயிர் மட்டுமே தெரியும். உடலைத் தெரியாது. அத்தகைய துறவிதானே சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் ஒரு வளரிளம் பெண், அவருடைய பேச்சை தொடர்ந்து பல மேடைகளில் கேட்கிறாள். சுவாமி விவேகானந்தரிடம் காதல்கொண்டதைச் சொல்கிறாள். “நான் உங்களுடன் வாழ விரும்புகிறேன்” என்றாள். வளரிளம் பெண்ணின்  காதல்மொழியைக் கேட்ட இளைய துறவியின் விடை என்ன தெரியுமா? “ஏன் என்னுடன் வாழவேண்டும் என நினைக்கிறீர்”  எனக்கேட்கிறார். “எனக்கு, உங்களைப்போன்ற ஒரு அறிவு நிறைந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதுவே என் ஆசை” என்றாள். உடனே “நீங்கள் அதற்காகக் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. என்னையே நீங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் சுவாமி விவேகாந்தர்.  இதுவே நம் பண்பாடு. இதற்குமுன் அவ்வாறு வாழ்ந்தவர் மாவீர்ர சத்ரபதி சிவாஜி.(19.02.1630 -  03.04.1680)

வீர சிவாஜியின் அருமையினை உணராத அயலார், நாட்டைக்கைப்பற்ற எல்லைக்குள் நுழைகின்றனர். சிவாஜியின் படை கொலைவெறி பிடித்த எதிரிகளை வீழ்த்தியது. அப்போது எதிர்த்துவீழ்ந்த சுல்தானின் மனையாளான பேரழகியை சிறைப்பிடித்து பல்லக்கில் தூக்கிவருகிறார்கள். மாவீரன் சிவாஜி, “பல்லக்கில் யார்? “ எனக் கேட்க, “பகைவனின் மனைவி” என்கின்றனர். சிவாஜி அப்பேரழகியிடம் சென்று “தாயே, பொறுத்தருள்க. பெண்களைத் தெய்வமாக எண்ணுவதே எங்கள் பண்பாடு. உங்கள் வயிற்றில் நான் பிறந்திருந்தால் நானும் அழகாக இருந்திருப்பேன்” என்றார். மாவீரன் சிவாஜி பெயரைக்கேட்டவுடன் அஞ்சி நடுங்கியவள், சிவாஜியின் அன்பு நிறைந்த பேச்சினைக்கேட்டும் மதிப்புடன் வணங்கினாள். இப்பரம்பரையில் வளர்ந்தவர்தானே சுவாமி விவேகானந்தர்.

நிகழ்வு – 4

சுவாமி விவேகானந்தர், ஒரு முறை இளைஞர்கள் துப்பாக்கி சுடும் விளையாட்டு விளையாடுவதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருவராலும் இலக்கினைச் சுடமுடியவில்லை. புன்னகைத்தார். உடனே, ஒரு இளைஞன் “எங்களைக் கேலி செய்யாதீர். உம்மால் முடியுமா?” எனக் கேட்கிறான்.  எப்படித் துப்பாக்கியைப் பிடிக்கவேண்டும்? எப்படிச் சுட வேண்டும்? என அந்தக் கடைக்காரனிடம் கேட்டறிந்து சுடுகிறார். துறவாடை உடுத்தியவர், எப்படிச் சுடப்போகிறார்?. என இளைஞர்கள் எண்ணினர். ஆனால், கொடுத்த அத்தனை குண்டுகளையும் குறிதவறாமல் சுடுகிறார். உடனே ஒரு இளைஞர், “ஏற்கெனவே நீங்கள் பயிற்சி பெற்றுள்ளீர்தானே?” எனக் கேட்டார்.  “நான் இப்போதுதான் முதல்முறையாகத் துப்பாக்கியைப் பிடிக்கிறேன்” என்றார் சுவாமிவிவேகானந்தர். அனைவரும் வியந்து நிற்கின்றனர். “இலக்கை மட்டுமே நோக்கும் தன்னம்பிக்கை உடையவர்க்கு எல்லாம் எளிமையாகும்” என்றார். இதுவும் நம் முன்னோர் வழக்குதான்.

அர்ச்சுனனுக்கும் துரியோதனனுக்கும் துரோணர் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, மரக்கிளையில் நின்ற பறவையின் கண்ணுக்குக் குறிபார்க்கச்சொல்கிறார். துரியோதனன் முதலில் அம்பு தொடுக்க நிற்கிறான். “என்ன தெரிகிறது?” எனக் கேட்கிறார். “மரம், கிளை, பறவை, கண்” என ஒவ்வொன்றாய் கூறிச்செல்கிறான். அடுத்து, அர்ச்சுனன் அம்பை எடுத்துக் குறி வைக்கிறான். “என்ன தெரிகிறது?” எனக் கேட்கிறார். “பறவையின் கண் மட்டுமே தெரிகிறது” என்கிறான். அத்தகைய குருபரம்பரையில் வந்தவர்தானே சுவாமிவிவேகானந்தர்.

நிகழ்வு – 5

     கன்னியாகுமரியில் தவம் செய்வதற்காக, கடலுக்குள் நின்ற மிகப்பெரியபாறைக்குச் செல்ல விரும்புகிறார் சுவாமி விவேகானந்தர். கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால், படகோட்டி காசு கேட்கிறான். “என்னிடம் காசு இல்லையே” எனக் குழந்தை உள்ளத்துடன் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். துறவிகள் என்போர், அடுத்த வேளை உணவையே இறைவன் அளிப்பான் என்னும் தன்னம்பிக்கையுடன் வாழ்பவர்கள்தானே?. உடனே படகுக்காரன், “காசு இல்லையென்றால், நீந்திச்செல்லுங்கள்” என்கிறான். வாழ்க்கை என்னும் நீளக்கடலையே நீந்தத்தெரிந்த சுவாமி விவேகானந்தருக்கு நீலக்கடலா தடையாகும்? உடனே, நீந்திசென்று தவம் பல நாட்கள் தவம் செய்து திரும்புகிறார். அவருடைய மனபலத்தைக் கண்ட படகோட்டி வியந்து வணங்கினான்.

     இப்படி வாழ்நாள் முழுதும் சோதனைகளையெல்லாம் சாதனையாக்கினார். அவரால்தான் இன்றும் பாரதத்தின் பெருமையினை உலகம் வியந்துபார்க்கிறது எனில் மறுப்பார்யார்? இல்லைதானே?

 

 

சனி, 3 ஜூலை, 2021

வரவேற்புரை எப்படி? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

 


வரவேற்புரை எப்படி? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

     (03.07.2021 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் பணிநிறைவுபெற்ற ஆசிரியர், கவிஞர் இராசமாணிக்கனாரின் நூல் வெளியீட்டு விழாவிற்காக எழுதிய வரவேற்புரை)

எண்ணங்கள்  தளர்ந்த போதெல்லாம் வாழ்வில் வண்ணங்களைக்கூட்டும் அன்னைத்தமிழே! உன்னை வணங்கி விழாவைத் தொடங்குகிறோம்.

இவ்விழா ஒரு பிரசவவிழா. இது பெண் பிரசவம் அன்று . ஆண் பிரசவம். அதுவும் பணி நிறைவுக்குப்பின். பிரசவ வலி பெண்ணுக்கு மட்டுமன்று. ஆணுக்கும் உண்டு. கவிஞர்களைக் கேட்டுப்பாருங்கள்.  ஒரு நூல் விழும்போதெல்லாம் ஒரு புதிய  எண்ணம் விழவேண்டும். அதனால் சமூகம் எழ வேண்டும்.

புத்தகம்  திறந்திருப்பதைப் பாருங்கள். பறவையின் சிறகுகள் விரிந்திருப்பதுபோல் இருக்கும்.  அப்படி இரண்டு சிறகுகள் கொண்டு பறந்திருக்கிறார். இன்று நம் பார்வையில் உயர்ந்திருக்கிறார். நூலாசிரியர் இராச மாணிக்கனார்.

அவைதாம் –     1.வாக்குமூலம், 2. கனவுகள்

கனவுகள் – ஆழ்மனதின் பிரசவம், வாக்குமூலம் – ஒப்புதல், தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்புவித்தல்.  வாழ்க்கை வானமாகிவிடும்போது கவிஞன் பறவையாகிவிடுகிறான்.  எல்லா உண்மைகளும் தெரிகிறது. மலையின் முதல் படிக்கட்டில் நிற்பவனைவிட உச்சிக்குச்செல்பவனுக்குத்தானே காட்சி நன்றாகத் தெரியும்.’

இத்தகைய அருமையான நூல்வெளியீட்டுவிழாவிற்கு வந்திருக்கும் பெரியோர்களே , தமிழார்வலர்களே ! புலவர்களே ! இறையடியார்களே ! அனைவரையும் வரவேற்கிறோம்.

முன்னிலை – ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி தாயார்

“புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணி நம் சென்னிமேல் பத்மபாதம் பதித்திடவே.” என்னும் அபிராமிபட்டரின் பாடலுடன், ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மையாரையே முன்னிலையாகக் கொண்டு இக்கவிதை  நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.  அக்காலத்தில் இறைவன் முன்னிலையில் வெளியிட்ட தமிழர் மரபினைப் புதிப்பிப்பதாக இவ்விழாவை ஏற்பாடு செய்த விழாக்குழுவினரைப் பாராட்டி மகிழ்கிறேன்.   

நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னிலை வகிக்கும் எல்லாம் வல்ல தாயாரை வருக ! வருக !  என வரவேற்கின்றோம்

 

தலைமை – சக்திவேல் ஐயா

     மரத்தின் கிளைகளை, பூக்களை, கனிகளை ஒருவர் எடுக்கவந்தாலும் மரம் நிழல்கொடுத்து அவர்களைக் காப்பதுபோல வந்தவர்களை மதித்துப் போற்றும் நல்லவர்.

தலைமை பண்புக்குச் சிறந்தவர் ; தளர்ந்து செல்வோர்க்கு மருந்தவர்

அனைவரும் விரும்பும் பண்பாளர் ; நம் நூலாசிரியரின் அன்பாளர்.

தலைமைதாங்க வந்துள்ள சக்திவேல் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

நூல் வெளியீடு - சட்டமன்ற உறுப்பினர்  

உலகமே கொரோனாவால் நோயுற்று வருந்தியவேளையில் அச்சம் நீக்கி காத்தவர் யார்? வைத்தியர்களுக்கெல்லாம் நாதனாகிய வைத்தியநாதன்தானே?

அப்படி, இந்த இலாசுப்பேட்டையின் மக்களுக்காகத் தமது கமலா அறக்கட்டளையின் வழி மக்களுக்கு உதவிகள் பல செய்தவர். இப்போதும் தெருத்தெருவாக தானியில் (ஆட்டோ) ஒலிப்பெருக்கிவழி ஊசிபோடவரும்படி அழைக்கிறார்.

தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி வேலைவாய்ப்பு, கல்வி, நலப்பணி எனத் தொடர்ந்துசெய்துவருகிறார்.

தாய்ப்பாசத்தில் இவர் எம்.ஜி.ஆர்

கொடைகுணத்தில் இவரை மிஞ்ச யார்?

மனத்தின் நிறத்தை ஆடையில் காணலாம்

குணத்தின் நிறத்தை மேடையில் காணலாம்.

நூல் வெளியிடவந்துள்ள சட்டமன்ற உறுப்பினரை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

நூல் பெற்று வாழ்த்துரை – வேல்முருகன் ஐயா

     உலகின் முதல்மொழி தமிழ்மொழி. இதனை உணர்த்த நாளும் பாடுபடுபவர். தம் இல்லத்தையே அருங்காட்சிக்கூடமாக்கித் தமிழ்க்காப்பவர்.

தமிழ்க்கடவுள் இல்லாமல் தமிழ் விழாவா?

வேல்முருகன் ஐயா இல்லாமல் கவிதை விழாவா?

சிறந்த ஆய்வாளர், பன்மொழி வித்தகர், கல்வெட்டு அறிஞர், தொல்லியல் பொருட்களைத் தொடர்ந்து சேகரித்து வருபவர். தமிழினத்தின் பெருமையை காத்து வருபவர்

நூலை பெற்றுக்கொள்ள வந்திருக்கும் சொல்லாய்வுச் செல்வர் வேல்முருகன் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : முனைவர் ஔவை.நிர்மலா

பார்புகழும் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த்துறைத்தலைவர், நன்றாக சமைப்பார், ஆனாலும் கரண்டியைப் பிடித்து சமையலறையில் முடங்கிவிடக்கூடாதென, எழுதுகோல்பிடித்து பல்கலைக்கழகம் சென்றவர். முனைவர் பட்டம் வென்றவர். படைப்பாளராய் நின்றவர் (45 நூல்கள்).

பலமொழிகள் படித்தவர் ; பல நூல்கள் படைத்தவர் ; பேராசிரியராக உயர்ந்தவர் ; ஏழைகளுக்கு பொருளையும் நாளும் கொடுத்துமகிழ்பவர். இவர் தொண்டும் நி(ற்)க்காமல் இருக்க நிக்கி ஐயா (கணவர்) உடன் நிற்பார்.

நூலாசிரியரை வாழ்த்த வந்துள்ள தமிழ்த்துறைத்தலைவர் ஔவை நிர்மலா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மு.பாலசுப்பிரமணியம்

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ; பொதுப்பணியில் பொறியாளர்.

தமிழ்விழாக்கள் சிறந்திடவே தவறாது முன்னிற்பார்.

கண்ணுக்கு ஒளிகொடுக்கும் கண்ணாடியையும் மதித்திடுவார். மூக்குக்கு மேல் நிற்கும் கண்ணாடியைக்கூட தலைமேல் தூக்கிவிட்டு மகிழ்ந்திடுவார்.

எறும்புபோல் உழைத்திடுவார் ; கரும்புபோல் பழகிடுவார்

            கவிதை சிறந்தால் கரம் கொட்டி மகிழ்ந்திடுவார்

தவறென உணர்ந்தாலே கரம்கொட்டி அமர்த்திடுவார்

ஒரே செயலை இரண்டுக்கும் பயன்படுத்தும் நுட்பத்தை உணர்த்திடுவார். அதனால்தானே இவர் துணைத்தலைவர்.

வாழ்த்த வந்துள்ள பொறியாளர் மு. பா. ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை – இல. ஜெயராமன் ஐயா

சந்தனம் மென் குறடுதான் தேய்த்த காலத்தும் குறை படாது – சந்தனம் தேய்த்தாலும் வாசம் கொடுக்க மறுத்திடுமா? அதுபோல அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.

இல்லை என்று சொல்லாததால் தான் இவர் இல. ஜெயராமன்

அன்பாலே நூலாசிரியரின் மனத்தை வென்றார்.

நட்பென்னும் முறையில் துணையாக நின்றவர்.

தம் உழைப்பாலே பகைவர்களை வென்றவர்.

வாழ்த்த வந்துள்ள இல. ஜெயராமன் ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மாசிலாமணி ஐயா

சிறப்போடு வாழ்வதிலே சிறப்பொன்றும் இல்லை. ஏனென்றால் இவ்வுலகில் சிறப்போடு வாழ்ந்தோர்கள் பலருண்டு. ஆனால், தனித்தன்மையோடு வாழ்ந்து வழிகாட்டும் சிலருள்ளே ஒருவரிவர். பெயர் ஒன்றே அவர் குணம் காட்டும்.

நல்லோர்கள் சூழ இருப்பது இவர் பணி.

அவர்தான் நம் மாசிலாமணி

நூலாசிரியரின் அன்புக்குப் பாத்திரமானவர்

பல முடிவுகளுக்கு இவரே சூத்திரமானவர்

வாழ்த்த வந்துள்ள மாசிலாமணி ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மகாலட்சுமி

     இவர் இல்லாத வீட்டினிலே பெருமையில்லை. இவருடைய பார்வைபட்டால் வறுமைபோகும். அவர்தான் மகாலட்சுமி. நல்ல ஆசிரியர்களின் பெருமைக்கு மாணாக்கர்தான் அளவுகோல். அப்படி நம் நூலாசிரியரின் ஆசிரியப்பணியினைப் போற்றிவளர்ந்த மாணவி, இன்று நூலாசிரியராகத் தம் ஆசிரியரை வாழ்த்த வந்திருக்கிறார்.

வாழ்த்த வந்துள்ள மகாலட்சுமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

ஏற்புரையும் நன்றியுரையும் – இராசமாணிக்கம் ஐயா

     “மருவினிய சுற்றமும் ; வான் பொருளும் ; நல் உருவும் ; உயர் குலமும் எல்லாம் திருமடந்தை ஆம் போது அவளோடு ஆம்” என்னும் பாடலுக்கேற்ப நல் சுற்றம், நல் பொருள், நல் உரு, நல் குலம் என அனைத்தும் வாய்க்கப்பெற்ற நூலாசிரியர்.

இவருக்குக் கடவுளைப் பிடிக்கும் என்பதைவிட, கடவுளுக்கு இவரைப் பிடிக்கும் என்பதே சிறப்பு. ஏனென்றால், ஏமாற்றுபவர்களை கடவுளுக்குப் பிடிக்காது. ஆனால், இவர் ஏமாறுபவர், அதனால் இவரைக் கடவுளுக்குப் பிடிக்கும்தானே.

வாழ்நாள் அனுபவம் கவிதையாக மலர்கிறது.

அதுதான் நூலெங்கும் எழுத்தாக தவழ்கிறது.

விழா நாயகரான கவிஞர். ஆசிரியர். மனிதநேயர் பண்பாளர் இராசமாணிக்கனார் ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

தமிழுக்காகவும் ; நட்புக்காகவும் ; உறவுக்காகவும்  கூடியுள்ள உங்கள் அனைவரும் விழாக்குழுவின் சார்பாக வரவேற்று மகிழ்கிறேன்.

 

தமிழார்வர்களாகிய உங்கள் வருகை ; தமிழன்னையைப் போற்றும் சிவிகை.

 

வாய்ப்பளித்தமைக்கு நன்றி ! வணக்கம்.!

 

 

 

வியாழன், 1 ஜூலை, 2021

கதாநாயகன் யார்? – திருக்குறள் சொல்லும் ‘வீரம்

 


 

கதாநாயகன் யார்? – திருக்குறள் சொல்லும் ‘வீரம்

     ஊடக நண்பர் ஒரு ஆளுமையைப்  பேட்டி காண்கிறார். “உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?”.” … என்ன? “கேள்வியை மீண்டும் கேட்கிறார். “உங்களுக்குப் பிடித்த நடிகர்…” எனக் கேட்கிறார் பேட்டி காண்பவர். அக்கேள்விக்குக் கூறிய விடை இன்றைய இளைஞர்களுக்கு ஓர் அருமையான பாடம். “மக்களைக் காக்கப் போராடும் முப்படை வீரர்களும், காவலர்களும் தான் கதாநாயகர்கள். அவ்வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்கள் மட்டுமே. அவர்கள் கதாநாயகர்கள் அன்று.  ஏழ்மையான நிலையிலிருந்து குழந்தைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர்கள்தான் கதாநாயகர்கள் என்றார்.

“நடிப்பவர்களை எல்லாம் கதாநாயகர்களாக எண்ணுவதால்தான் குழந்தைகள் மது குடித்து, புகை பிடித்து, ஆசிரியர்களிடம் மதிப்பின்றி, தாய்தந்தையை எதிர்த்துப் பேசி நாளும் கெடுகின்றனர்” என்பதனை உணர்த்தும் அவருடைய அறிவுரையை எத்தனைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நடிகர்களின் நடிப்பினைப் பாராட்டுவதோடு நின்றுவிடவேண்டும். நடிகர்கள் எப்படி நடித்துமுடித்தவுடன் இயல்பான மனிதர்களைப்போல் நடந்துகொள்கிறார்களோ அவ்வாறே மக்களும் நடிப்பினை நடிப்பாக மட்டுமே கொள்ளவேண்டும். நடிகர்களை கிள்ளிப்பார்ப்பது, தொட்டுப்பார்ப்பது நடிகர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டும் என்பதனை உணர்தல்வேண்டும்.

வாழ்க்கையின் வழிகாட்டியாக, தேசத்திற்காகப் போராடும் வீர்ர்ர்களை ; தேசத்தின் புகழைக்காக்கும் வீரர்களைக் கொண்டாடவேண்டும். இருபத்தோரு வயதில் எல்லையில் எதிர்களைப் பந்தாடும் வீர்ர்களின் உண்மையான வீர்த்தைக் கொண்டாடவேண்டும். ஒரு இந்திய இராணுவ வீர்ர் எதிரே நின்ற முந்நூறு பகைவர்களை வீழ்த்திய பெருமையினைக் கொண்டாடவேண்டும். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயனின் கடுங்காவல் உள்ள கோட்டையிலேயே நுழைந்து, ஆங்கிலக்கொடியை இறக்கி இந்தியக்கொடியை ஏற்றிய வீரரைக் கொண்டாட வேண்டும். பொய்களை விட்டுவிட்டு உண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால்தான் நாட்டுப்பற்றை ஊட்டிவிடமுடியும்.  

விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்

ஒட்டுஅன்றோ வன்கண் அவர்க்கு (திருக்குறள் – 775)

 

என்னும் திருக்குறள் போர்க்களத்தை எதிர்கொண்ட தமிழரின் வீரத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறது.  எதிரி எறியும் வேலினைக் கண்டு கண்களை இமைக்காது எதிர்கொள்வான். அப்படி இமைப்பானாயின் அதனைத் தோல்வி எனக் கருதுவான். இதுவன்றோ வீரம். இவர்களைத்தானே நாயகர்களாகக் கொண்டாடவேண்டும். அப்படி எண்ணற்றோர் வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

விளையாட்டுக் களத்தைப் போர்க்களம் போலும், போர்க்களத்தை விளையாட்டுக்களம்போலும் தொலைக்காட்சியில் பார்க்கும் நிலையினைக் காணமுடிகிறது. அப்படியெனில் விளையாட்டினை உயிர்ப்போராட்டம் போன்றும், மக்களைக்காக்கும் உயிர்ப்போராட்டம் விளையாட்டு போன்றும் காணும் அறியாமையைக் கற்றுக்கொடுத்தது யார் என்பதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.  சமூகக் காவலர்களின் குற்றமா? அந்தச் சமூகத்தில் காவலராக தன்னை எண்ணாத மக்களின் குற்றமா?

உண்மையாக நடக்கும் வாழ்க்கையை உணராமல், திரைப்படங்களின் காதல்கதையை உண்மை என நம்பும் இளையோரை என்னென்பது? பெற்றோரை அழவைத்துவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்யக் கற்றுக்கொடுக்கும் திரைப்படங்கள் பல. காதலுக்குப்பின் என்ன நடக்கும்? எனக்கூறும் துணிவுடைய படங்கள் எடுப்பது கடினம். திருமணம் செய்துகொள்ள முடியாத சகோதர சகோதரிகள் ; நடைபிணமாய் தாய் ; தலைநிமிர்ந்து நடக்கமுடியாத தந்தை என எத்தனையோ சோகங்கள். காவல் நிலையங்களில் இக்காட்சியைக் அன்றாடம் காணமுடிகிறது. அவர்களுடைய துன்பத்தைத் துடைப்பது யார் பொறுப்பு? காவலர்களும் பெற்றோர்போல் அறிவுறுத்திக்கொண்டுதான இருக்கின்றனர். அவர்களும் கதாநாயகர்கள்தான்.

 மக்களைப் பாதுகாக்கும் வீர்ர்களை மட்டும்தான் கொண்டாடவேண்டுமா? என்றுதானே கேட்கிறீர்கள். நாட்டிற்குப் பெருமை சேர்ப்போர்; வீட்டின் வறுமையினைப் போக்குவோர் என எவரையும் வாழ்க்கை வழிகாட்டிகளாகக் கொள்ளலாம். ஏன் பிற உயிர்களிடமும் இரக்கம்கொண்டு காக்கும் உண்மையான மனிதர்களையும் வாழ்க்கை வழிகாட்டியாகக் கொள்ளலாம்தானே? ஒரு கதையைக் கூறினால் நீங்களே ஒத்துக்கொள்வீர்.  

ஆற்றுப்பாலத்திலிருந்து தவறிவிழுந்த ஒரு நாய்  ஆற்றில் சிக்கிக்கொள்கிறது. வேகமான நீரோட்டம். மேலும் நடந்தால் இழுத்துக்கொண்டு பள்ளத்தில் வீழநேரும் என உணர்ந்து ஒரே இடத்தில் நிற்கிறது. ஆற்றுப்பாலத்திலிருந்து மேலிருந்து நால்வர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் இவர்கள் வேடிக்கைப்பார்ப்பதைப் பார்த்தார். நாய் மரணவாயிலில் நிற்பதைப் புரிந்துகொண்டார். கீழே கவனமாக இறங்குகிறார் ஆற்றின் சரிவான பக்கவாட்டில் மெதுவாக இறங்குகிறார். வேகமான நீரோட்டம் குறித்து கவலைப்படவில்லை. மெதுவாக நாய்க்கருகே சென்று அதனை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு வருகிறார். நாயாலும் சரிவில் ஏறமுடியவில்லை. அவராலும் ஏற்றமுடியவில்லை. வேடிக்கைப் பார்த்த நால்வரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்து கீழே   தவறிவிழுந்த நாயைப்பிடிக்க முயல்கின்றனர். முடியவில்லை. அந்தப்பக்கம் செல்லும் ஒருவர் இக்காட்சியைப் பார்த்து அவரும் கைகொடுக்கிறார். உடனே மற்றொருவரும் உதவ வருகிறார். இப்பொழுது  நாயைப் பற்றிக்கொண்டு கரைசேர்கிறார் அந்தக்கதாநாயகர். எல்லோர்க்கும் மகிழ்ச்சி. அன்பின் புன்னகை எல்லோருடைய முகத்திலும். அங்கிருந்தோர்க்கிடையே நட்போ, உறவோ இல்லை. ஒருவர்க்கு மற்றொருவரைத் தெரியாது. ஆனால், அன்பு அவர்களை ஒன்றிணைத்தது எத்தனை அழகு!. அடுத்து என்ன நடக்கும் என்ற எண்ணம் சிறிதுமின்றி நாயைக் காப்பாற்றிவிட வேண்டும் என எண்ணம் கொண்டவர் கதாநாயகர்தானே?

நாத்திகம் பேசுவதில் வல்லவரான நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. அவரைப்போல் பிறரைக் கிண்டல்செய்ய எவராலும் இயலாது. யார் மேடை போட்டு பேச அழைத்தார்களோ அவர்களையே திட்டுவார்.  அதைத் தவறாக எண்ணமாட்டார்கள். உண்மைதானே பேசுகிறார் என ரசிப்பார்கள். அதுபோல “நடிகர்களை நம்பாதே. அவன் நல்லவன் மாதிரிபேசுவான். ஆனால் மக்கள் வரிப்பணத்தை ஒழுங்கா கட்டமாட்டான்” எனக்கூறுவார்.  ஒரு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனை கிண்டல் செய்தார்.  திரைப்படக்காட்சியானாலும் இருவரின் உள்ளத்தையும் படம்பிடித்துக்காட்டும் காட்சி.  நடிகவேள் கவியரசரிடம் கேட்பார் “ஏன்பா. உனக்கு கிருஷ்ணரைத் தவிர வேறுகடவுளே தெரியாதா? எனக் கேட்பார். உடனே, கவியரசர் “என் கண்ணுக்கு அவன் தான் எங்கும் காட்சி அளிக்கிறான் என்பார். “எங்க கண்ணுக்குத் தெரியலையே” என்பார் நடிகவேல்.  உடனே கவியரசர், ஞானக்கண்ணால் தான் பார்க்க முடியும் எனக் கூறிவிட்டு,

“இல்லை எனச் சொன்னவர்தான் இருந்தாரா? வாழ்ந்தாரா?

எனது தேவன் எல்லையில்தான் போய்ச்சேர்ந்தார்”

 

என்பார்.  “லட்டுகள் சண்டை போட்டால் பூந்தி கிடைக்கும்” எனச் சொல்வார்கள். அப்படி அந்தக் காட்சி அமைந்திருக்கும். நாத்திகம் எங்கும் பரவிநின்ற காலத்தில் ஆத்திகத்தைப் பேசிய கவியரசரும் ஒரு கதாநாயகர்தானே?

     எத்தனை துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது துணிவுடன் நிற்பவரே, ஊக்கம் உடையவர் என்கிறார் தெய்வப்புலவர். களிறானது, எத்தனை அம்புகள் தைத்தாலும் தம் பெருமையை நிலைநிறுத்தும் வீர்ர்க்களே வீர்ர்கள்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்

பட்டுப் பாடூன்றும் களிறு (திருக்குறள் :597)

 

என்னும் திருக்குறளின்வழிவாழ்வோர் வழியில் செல்வோம்.

     இப்படி வாழ்க்கைக்குத் துணைநிற்கும் ; வாழ்க்கையை மேம்படுத்தும் பெருமையுடையவர்களை மட்டுமே நாயகர்களாகத் தமிழர் கொண்டாட வேண்டும். தெய்வப்புலவர் காட்டிய வீரம்தான் தமிழர் வீரம் என்பதனை உணர்ந்திடுவோம் ; உணர்த்திடுவோம்.

புதன், 30 ஜூன், 2021

குழந்தைகள் ஊமைகளாகின்றன

 


ஊமைகளாகும் குழந்தைகள் – தாய்மொழியை வாய்மொழியாக்குவோம்

மூளை,  தலைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதால்தானே “எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்னும் பொன்மொழி  உண்டாயிற்று. அந்த மூளையை எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்றுபோலவே இறைவன் படைத்துள்ளார். அதனை உணர்ந்துகொள்ளவேண்டியது முதல்கடமை. இதை உணர்ந்துகொண்டாலே மற்றவையெல்லாம் தெளிவாகிவிடும். எப்படி? என்றுதானே கேட்கிறீர்கள். உடல் என்னும் அரசாங்கத்தின் தலைமைச்செயலகம்தான் மூளை. பிறக்கும்பொழுது எல்லோருக்கும் 300 கிராம் தான்.  வளரவளர ஆண்களுக்கு 1,500 கிராம் அளவிற்கு வளர்கிறது. பெண்களுக்கு 1,300 கிராம். உடனே பெண்களுக்கு …? என இழுக்காதீர். எடை தான் குறைவு. செயல்பாடு அனைவருக்கும் ஒன்றுபோலவே இருக்கும். பெண்கள், சரியாகப் பயிற்சி கொடுப்பதால் எல்லாவற்றையும் நினைவில்வைத்துக்கொள்கின்றனர். எடையுள்ள கைப்பேசியைவிட எடைகுறைந்த கைப்பேசிதான் விலை அதிகம்.

 இப்போது ஒரு உண்மையை உணர்ந்துகொண்டீர்தானே. குழந்தைகள் அறிவுமிக்கவர்களாக வளர்வது வளர்ப்பவர்களின் பொறுப்பன்றி குழந்தைகளின் பொறுப்பில்லை. எந்தக் குழந்தையையும் அறிவு இருக்கா? எனக் கடிந்துகொள்ளக்கூடாது. அப்படிக் கடிந்துகொண்டால் கடிந்துகொள்பவரின் அறிவைத்தான் ஆய்வுசெய்யவேண்டும்.

*எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

பின் நல்லவராவது தீயவராவது அன்னை வளர்க்கையிலே

 

என்னும் புலவர்  புலமைப்பித்தனின் பாடலடிகளைப் பாடிப்பாருங்கள். குழந்தைகள் அறிவும் குணமும் மாறுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

     அன்னை என்றால் அன்னையை மட்டுமன்று, இந்த உலகத்தில் அந்தக் குழந்தை வளர்ச்சிக்குத் துணைசெய்வோர் அனைவரும்தான் காரணம். சூழலால்தானே குழந்தைகள் வளர்கிறார்கள். இவ்வரிசையில் முதல் இடம் பெறுவோர் ஆசிரியர்கள்.

     அதனால்தான் “ஆசிரியர்கள் சம்பளத்திற்குக் கணக்குப் பார்க்கக்கூடாது. விதை நெல்லுக்குக் கணக்குப் பார்க்கலாமா?” எனக்கேட்டார் கல்விக்கண் திறந்த காமராசர். கல்விச்சாலை என்னும் கோவிலை நன்றாகக் கட்டிவிட்டு பணிசெய்வோர்க்கு உரிய வசதிகள் செய்யாவிட்டால் என்னாகும். கடவுள் என்னும் கல்வியைப் போற்ற இயலுமா? முடியாதுதானே? ஆசிரியர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்யவேண்டும். அப்படியென்றால், தாய்மொழியில் கற்பிப்பதுதானே சிறப்பாக அமையும். கற்போருக்கும் கற்பிப்போருக்கும் அதுதானே எளிமை. அங்குதானே கற்பித்தல் சீராக அமையும்.

     தாய்மொழியில் கேள்வி கேட்க எண்ணும் ஆசிரியர், அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி ஆங்கிலத்தில் “Flowers Name …” எனக் கேள்வி கேட்கட் தொடங்குகிறார். “செவ்வந்தி, சாமந்தி, கனகாம்பரம், செம்பருத்தி, மல்லி, அல்லி, லில்லி, ரோஜா… எனக் குழந்தைகள் அடுக்கிக்கொண்டே சென்றனர். உடனே ஆசிரியர் “நோ டமில். ஒன்லி இங்க்லீஷ்” என்றார். சுடுகாட்டு மௌனம் நிலவிற்று. குழந்தைகளுக்கு நன்றாக விடைதெரிந்தும் தாய்மொழியில் கூறக்கூடாதென்பதால் ஊமைபோல் நிற்கின்றனர். ‘ஊமை’ என்னும் சொல்லால், இங்கு குறிப்பிடுவது வாய்பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளை அன்று. வாயிருந்தும் பேசமுடியாத ; பேச விடாத சமூக அமைப்பில் சிக்கிக்கொண்டவர்களையே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

     தாய்மொழிக்குத் தடைவிதித்ததால், நன்றாக விடைதெரிந்தும் கூற முடியாது தவிக்கும் குழந்தைகளின் அறிவாற்றால் மேம்படுமா? கீழ்ப்படுமா? இப்படி நாளுக்கு நாள் தன்னம்பிக்கை இழக்கும் குழந்தைகள், கல்வியை விட்டுவிடும் சூழலும் மேற்படிப்பினைத் தொடரமுடியாத சூழலும் பெருகிவிடுகிறது. அரசு பள்ளிகளில் நாளுக்குநாள் குழந்தைகள் குறைவதற்கு அதுதானே மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இனி, தாய்மொழியில் கற்றோர்க்கு மட்டுமே கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு எனில் என்னாகும். அரசுப்பள்ளியில் பிள்ளைகள் குவிவார்கள்தானே?

     வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருந்தால் அனைத்துக் குழாய்களிலும் தண்ணீர் வரும்தானே? தாய்மொழிக்கான வாய்ப்பு இருந்தால் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் தமிழ்ப்பயிலும் குழந்தைகள் வளமாக வாழ்வார்கள்தானே.

     ஆங்கிலம் தெரியாவிட்டால் பெரியகுற்றம்போல் நினைக்கும்நிலை மாறவேண்டும். நம் நாட்டில் பிறநாட்டுமொழி செம்மாந்து நடக்க, தாய்மொழி கற்ற குழந்தைகள் தலைகுனிந்து நடக்கும் சூழல் எத்தனை இழிவானது.

     *பாதை தவறிய கால்கள், விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை

     நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர், பேர்சொல்லி வாழ்வதில்லை.

 

என்னும் புலவர் புலமைப்பித்தனின் அடிகளை உணர்ந்து சரியான பாதையில் சென்றால் விரும்பிய ஊரினை அடையமுடியும். குழந்தைகளுக்கும் நல்ல பண்பினை வளர்க்கமுடியும். பேர் சொல்லும் பிள்ளையாக சிறப்புடன் வாழவழிகாட்டமுடியும்.

 

     தமிழர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்துவிளங்கியதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள், அடிமையாக்கவே தங்கள் மொழியான ஆங்கிலக்கல்வியைப் புகுத்தினார். அம்மொழியைக் கற்றவர்க்கும் மட்டுமே அரசு வேலையும் கொடுத்தனர். இக்கொடும்போக்கினை எதிர்த்த தமிழர்கள் தங்கள் அரசுப்ப்பணியினை விட்டு விடுதலை வீரர்களாக மாறினர். இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சில துரோகிகள் ஆங்கிலேயர்களுடன் கைகோத்துக்கொண்டு தமிழர்களைப் பேசவிடாது ஊமைகளாக்கினர். “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்னும் கொள்கையைப் பின்பற்றினர். இப்படி மொழியின் வழி ஊமைகளாக்கும் நிலையினை அந்நியர்கள் வழிவகை செய்தனர். அவர்கள்வழியிலிருந்து விடுபட்டு, தாய்மொழியில் கற்றுக்கொடுத்தால்  பேசாத குழந்தைகளும். எங்கும் தமிழ்மணம் வீசும். உண்மைதானே?

 

(‘நீதிக்குத்தலைவணங்கு’ என்னும் திரைப்படப்பாடலான “இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் தொட்டிலில் கட்டிவைத்தேன்” என்னும் பாடலிலுள்ள அடிகள்)

திங்கள், 28 ஜூன், 2021

தேநீர் கவிதை

 


சிங்கைப்பெண்ணின் தங்கக் கவிதை 


(மொழிபெயர்ப்பு மட்டுமே நான். கவிதை பேராசிரியர் லீ சூ பெங்க் , சிங்கப்பூர் பண்பாட்டுப் பதக்க வெற்றியாளருடையது)

 

தேநீர் கவிதை

 

தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும் ….

இறுதிப் பயணம்

எப்போதென்று யாரறிவார்?

இருக்கும்வரை மகிழ்ந்திடுவாய்

 

தேநீரைச் சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்  

 

பனித்துளி வாழ்க்கை

கடலாய்த் தெரியும்

உலகமே உன்னால் விடிவதாய்த் தெரியும்

செய்யும் செயலெல்லாம் தடையாய் முடியும்

போராட்ட வாழ்க்கை இது. எதிர்கொள்ளக் கற்றுக்கொள்

காலம் கடந்தபின் ஞானம் வழிந்தென்ன?

காலன் இங்கே காத்திருக்கிறான்

 

தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

நட்புகள் சில மலர்ந்திருக்கும்

இன்னும் சில மாய்ந்திருக்கும்

வானவில்லாய் உடன் நின்றபலரும்

வானத்தின் முகவரியில் மறைந்தே போயிருப்பர்

குழந்தைகளுக்கு இறக்கை முளைக்கும்

பறந்துசென்றே பார்வை மறைக்கும்

வாழ்க்கை இப்படித்தான் கடக்குமென்று

கணித்திட ஒருவர் பிறந்திடவில்லை.

 

அதனால், தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

இறுதிவாழ்க்கை அன்பால் நிறையும்

உலகம் முழுதும் உறவாய்த் தெரியும்

விண்மீன் வெளிச்சம் அன்பால் ஒளிரும்

பாசத்துடன் வாழ்ந்தோரைப் பாராட்டிடுவோம்

 

புன்னகையோடு சுவாசிப்போம்

கவலைகள் யாவும் ஓடிவிடும்

 

அதனால், தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

உறவுகளைக் கடந்தது இக் கவிதை

அனைவர்க்குமானது இக்கவிதை

 

நான் இறந்தபின்னே

கண்ணீர்துளிகளை  காணிக்கையாக்குவீர்

அப்போது அதைநான்  அறிவேனோ?

இன்றே என்னுடன் அழுதிடுவீர்.

 

மலர்களைத் தூவி வணங்கிடுவீர்

என்னால் பார்க்க இயலாதே?

இன்றே மலர்களைக் கொடுத்திடுவீர்.

 

என்னை அன்று புகழ்ந்திடுவீர்

எனது செவிக்குள் நுழையாது

இன்றே என்னைப் புகழ்ந்திடுவீர்

 

எந்தன் பிழைகளை மன்னிப்பீர்

எனக்கு ஒன்றும் தெரியாது

இன்றே என்னை மன்னிப்பீர்

 

என்னை இழந்து வருந்திடுவீர்

என்னால் உணர முடியாதே

இன்றே என்னை இழந்திடுவீர்.

 

என்னுடன் பழக விரும்பிடுவீர்

என்னால் அறிய  முடியாதே

இன்றே பழக வருவீரே.

 

 

பல்லாண்டாய் பிரிந்த நண்பரெல்லாம்

அஞ்சலி செலுத்த வந்திடுவீர்

அப்போது நானும் அறிவேனா?

இப்போதே என்னைத் தேடிடுவீர்.

 

நேரத்தை யாவர்க்கும் செலவிடுவீர்

உதவிகள் செய்து  மகிழ்ந்திடுவீர்

குடும்பத்தை நட்பை மதித்திடுவீர்

எப்போதும் எதுவும் நடந்திடலாம்

யாரை இழப்பீர் அறியீரே

 

தனியாக நீங்கள் புலம்பலாம்

இணைந்தால்தானே பேசலாம்

தனியாக நீங்கள் மகிழலாம்

இணைந்தால்தானே கொண்டாடலாம்

தனியாக நீங்கள் புன்னகைக்கலாம்

இணைந்தால்தானே சிரிக்கலாம்

 

இப்போதில்லையெனில் எப்போது?