தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 26 ஜூன், 2021

குடிகார நண்பர்களே – திருவள்ளுவர் அழைக்கிறார்

 




குடிகார நண்பர்களே – திருவள்ளுவர் அழைக்கிறார்

“இராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்ல” எனப் பாடிக்கொண்டு குடித்துவிழும் குடிகாரரர்களைப் பார்த்திருப்பீர்கள்தானே? 1980- இல் வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படத்தில் வெளிவந்தபாடல் இது. இன்றும் அந்தப்பாட்டைப் பாடிக்கொண்டு குடித்து விழுந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்?. அந்த அளவிற்கு அந்தப் பாடலை விரும்பியிருக்கிறார்கள் என்றுதானே பொருள். அதுபோலவே 1974 இல் வெளிவந்த “அவள் ஒரு தொடர்கதை“ படத்தில் “தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என்னும் பாடலும் குடித்துவிட்டுப்பாடும் பாடல். அப்பாடலைப் பாடுவதனையும் அன்றாடம் பார்க்கமுடிகிறதுதானே. அறுபது வயது குடிகாரரின் கச்சேரியில் இப்பாடலுடன் நடிப்பும் பார்ப்பவரை ஈர்க்கும். இளைய குடிகாரர்களுக்குப் பாடல் பஞ்சமே இல்லை. இன்று வெளிவரும் படங்களில் ஒரு பாட்டு குடிப்பாட்டாக இருக்கவேண்டும் என்பது விதியாகவே எழுதப்பட்டுவிட்டிருக்கிறதுபோல.  குழந்தைகள்கூட இப்பாடல்களைப்பாடித்திரிவதுதான் வேதனை. தெரிந்தோ தெரியாமலோ சில நடிகர்கள் தங்கள் ரசிகர்களைக் குடிகாரர்களாக  மாற்றிக்கொண்டுதான் இருந்தனர் ; இருக்கின்றனர். சிங்கம்போன்று வீறுநடை போட வேண்டிய இளைஞர்கள் வீதீயில் விழுந்து கிடப்பது எத்தனை இழிவு. இந்நிலையினை மாற்றுவது நடிகர்களுடைய பொறுப்பு.   ஏன் இயக்குநர்களுக்குப் பொறுப்பில்லையா? எனக் கேட்காதீர். பெற்றோர் பேச்சைக்கேட்காத பிள்ளைகள்கூட நடிகர்பேச்சைக்கேட்டுத்தான் நடக்கிறார்கள் : நடக்கவும் செய்கிறார்கள்.

தாயானவள், குழந்தையின் எந்த நிலையினையும் கண்டு பொறுத்துக்கொள்வாள். ஆனால், குடித்து விழுந்திருக்கும் நிலையினைக் கண்டால் மனம் பொறாள். பெற்றவளே மன வருத்தம்கொள்ளும்போது, சான்றோர்கள் கண்டால் என்ன ஆகும்? எனக்கேட்கிறார் திருவள்ளுவர். படிப்பு, பணி, திருமணம், உடல் நலம் என அனைத்தையும் ஒருங்கே கெடுத்துவிடும்தானே?

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி (திருக்குறள் – 923)

 

என்னும் திருக்குறள் குழந்தையின் முகத்தைக் கண்டு இன்பமடைந்த தாயின் மனம், துன்பமடையக்கூடிய நிலைக்குக் குடி மாற்றிவிடுவதனை எடுத்துக்காட்டியுள்ளது.

குடிகாரர்கள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்களே எப்படி?. குடிகாரன் எப்படி உளறுவான்? எப்படி நடப்பான்? எப்படி விழுவான்? என்பதைப் பார்க்க எல்லோருக்கும் ஆவல் உண்டு. அதனால்தான் கயவர்கள் ‘விருந்து’ என்னும் பெயரில் நேர்மையானவர்களை குடிக்கவைத்து, தவறான செயல்களில் ஈடுபடவைத்து படமெடுத்துவைத்துக்கொள்கின்றனர். பின்னாளில் மயக்கியோ, அச்சுறுத்தியோ பணியவைக்கின்றனர். போதையில் கையெழுத்துபோட்டுவிட்டு வீட்டையும் நாட்டையும் இழந்தவரலாறு பலவுண்டு. பெரிய விடயங்களுக்குள் புகவேண்டாம். குடும்பங்களில் கலவரம் ஏற்படுத்தும் குடியினைத் தடுக்கத் திருவள்ளுவர் என்ன கூறுகிறார்? என்பதைப் பார்த்தால் போதும். வீடு நன்றாக இருந்தால்தானே நாடு நன்றாக இருக்கும்.

அரசு குடும்ப வறுமையை நீக்க உதவித்தொகை கொடுத்தால், உடனே அப்பணத்தை எடுத்துக்கொண்டு குடிக்கச்சென்றுவிடும் குடிகாரர்களைப் பார்க்கமுடிகிறது. குழந்தைகளுக்குக் கஞ்சி வார்க்கவும் வழியின்றித் தவிக்கும் குடும்பச்சூழலை மறந்துவிட்டு எங்கோ விழுந்துகிடக்கும் பொறுப்பற்ற குடிகாரர்களை என்னென்பது? அப்படிக் கேட்பாரற்று அளவுக்கு அதிகமாகக் குடித்து இறந்துபோகும் குடிகாரர்கள் இருபத்தைந்து (25) முதல் நாற்பத்தைந்து (45) வரை வயதுள்ளோரே. திருமணம் நடந்து சில மாதங்கள், வருடங்களானோர், ஒன்று, இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றோர் என எத்தனையோபேர்  இறப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

ரோஜா மலர் போன்ற பிஞ்சுக்குழந்தைகளை விட்டுவிட்டு குடியில் மூழ்கி இறக்கின்றனர். அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு அக்குடும்பம் தாழ்ந்துபோகிறது. தந்தையை இழந்த குழந்தை வேலைக்காரியாகி பத்துப்பாத்திரம் தேய்த்துக் கைகள் காய்ந்து புண்ணாகிவிடும் நிலையினைப்பார்க்கமுடிகிறது. இதனை, குடிப்பவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்தானே? மருத்துவராக ; பொறியாளராக ; ஆசிரியராக ; விளையாட்டு வீர்ர்களாக ; கலைஞர்களாக வரவேண்டிய குழந்தைகள் வறுமையில் உணவுக்காகவே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்கொள்வது எத்தனை அவலம். தன் குடும்பத்தினரிடம் பாசம் கொண்டவர்கூட, குடியானது நஞ்சு எனத்தெரிந்தும் குடிக்கின்றனர். அத்தகையோர் அறிவுடையராகார் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்உண் பவர் (திருக்குறள் – 926)

 

என்னும் திருக்குறளின்வழி, குடும்ப நன்மையையும், உடல் நலத்தின் அவசியத்தையும் உணர்ந்தால் மட்டுமே இக்குடியிலிருந்து ; நஞ்சிலிருந்து விடுபடமுடியும் என உணர்த்துகிறார் தெய்வப்புலவர்.

     ஒருவன் குடித்துவிட்டு சாலையில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருகிறான். போவோர் வருவோரையெல்லாம் கிண்டல் செய்கிறான். ஊடகங்கள் அப்படித்தானே குடிகாரர்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் அவரைத் தண்டிக்கும் வகையில் தான் வைத்திருந்த குச்சியில் ஒரு அடி அடிக்கிறார். சுற்றி இருந்தவர்கள். “நல்லா அடிங்கய்யா? குடித்துவிட்டு சாலையில் ஆட்டம் போடுகிறான்”. என இளைஞரை ஊக்கப்படுத்துகின்றனர். அடித்த அடியினைத்தாங்கமுடியாமல் அவன்மேல் விழுகிறான் குடிகாரன். “என்மேலா கைவைத்தாய்” என இளைஞன் பலமாக அடிக்க, குடிகாரன் மயங்கி விழுகிறான். சுற்றி இருந்தவரில் ஒருவன் ஓடி வந்து விழுந்த குடிகாரனின் நாடியைப் பார்த்தான். “செத்துட்டான்பா” என்கிறான். கூட்டம் புலம்பிக்கொண்டு இருக்கிறது. ஒரு பெண்ணும், மூன்று பெண்குழந்தைகளும் ஓடி வருகிறார்கள்.  “இது ஒரு கதை” என எண்ணாதீர். அன்றாட நிகழ்வு. கேட்பதற்கு நாதியின்றி நாள்தோறும்  இறக்கும் குடிகாரர்கள் பலர்.

     மதுக்கடைகள் எத்தனைக் குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது? எனக் கேட்ட காலம் மலையேறிவிட்டது. குடி எத்தனைக் குடும்பங்களை வாழ்விக்கிறது? எனக் கேட்கும் அளவிற்கு, குடிப்பது நகைச்சுவையாகிவிட்டதுதான் கொடுமை.

இவர்களைத் திருத்தவே முடியாதா? என்றுதானேகேட்கிறீர்கள். குடியில் மூழ்கி இருக்கும்போது திருத்த எண்ணுவது, விளக்கினை ஏற்றி எடுத்துக்கொண்டு  நீரில் மூழ்கியவனைக் காப்பது போன்றது என்கிறார் தெய்வப்புலவர்.

     களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைக் தீத்துரீஇ அற்று (திருக்குறள் – 929)

 

சேற்றில் விழுந்த செங்கதிர்போல் ஒளியின்றி வாழ்வைக்கெடுத்துக்கொள்வோரைப் பார்த்தால் வெறுப்பினைவிட அவர்களுடைய குழந்தைகளை ; மனைவியை ; பெற்றோரை எண்ணி வருந்தவே வேண்டியிருக்கிறது. குடியை எதிர்த்து எத்தனை ஆயிரம் மக்கள் போராடினாலும் பயனில்லை. இதற்கு அந்த ஆலைகளை வைத்திருக்கும் ஒருசிலர் எண்ணினால் போதும். நாடும் வீடும் நலம்பெறும்தானே.

குடி குடிப்போரே கேளுங்கள் ! குடி விற்போரே கேளுங்கள் ! இன்று  உங்களுக்கு மகிழ்ச்சி தருவதால் இச்செயலைச் செய்கிறீர்கள்.  ஆனால் இது  மகிழ்ச்சியைத் தராது. அப்படியே நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தந்தாலும் எதிர்காலத்தில் துன்பத்தையே தரும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்

     முடிந்தாலும் பீழை தரும் (திருக்குறள் – 658)

 

     சான்றோர்கள் போற்றாத செயல்களைச் செய்தால் இழிவுமட்டுமே உண்டாகும். குடிப்பதுபோல் நடிப்பது தவறு. நடிப்பதுபோல் குடிப்பது அதனைக் காட்டிலும் தவறு.  இதனை, உணர்ந்து தவறான வழியில் செல்லாதிருத்தலே பெருமைக்கு வழி. தெய்வப்புலவர் பேச்சைக் கேட்கலாம்தானே?

 

புதன், 23 ஜூன், 2021

கடவுள் இருக்கின்றார் – கவியரசர் கண்ணதாசன்

 


     “கடவுள் இருக்கிறார்”  என்று சொல்வதற்கே அஞ்சிநின்ற நாத்திக வாழ்விற்கு இடையே “கடவுள் இருக்கின்றான்” எனக்கவிதைபாடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி ஒழுக்கத்துடன் வாழவழிகாட்டியவர் கவியரசர் கண்ணதாசன். தாயானவள், குழந்தை மதுக்கடையைத் தேடிச்சென்றால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பாளா? மகன் எட்டி உதைத்தாலும் மயங்கும்வரை அடிவாங்கிக்கொண்டுதானே இருப்பாள். அத்தகைய தாயுள்ளத்தோடு, எவர் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாது, தீயவழியில் சென்ற மக்களுக்கு நல்வழிகாட்டிய பெருமை கவியரசருக்கு உண்டு. புலவர்கள் என்றாலே மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபவர்கள்தானே? அக்காலப் புலவராகவும் இக்காலக் கவிஞராகவும் புகழ்பெற்று மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்றவர் இவர் ஒருவர்தானே?

     தாயானவள், வெளியே சென்றமகன் வீட்டிற்குள் நுழைந்ததும் ‘அவன் பசித்திருப்பானே’ என உணவு சமைத்துக் காத்திருப்பதைப் போல இறைவன் தன்னிடம் வருவோர்க்கு அருளை அள்ளித்தரக் காத்திருக்கிறான் என்று சான்றோர் குறிப்பிடுவர். நீ ஓரடி முன்வைத்தால் இறைவன் பத்தடி முன்வைப்பானல்லவா? ஆனால், எங்கெங்கோ செல்லும் கால்கள் இறைவனைத் தேடிச்செல்வதில்லை ; மாயை, செல்லவிடுவதும் இல்லை. இத்தகைய கொடுமையைக்கண்டு, காலந்தோறும் நல்வழிப்படுத்திய  அருளாளர்கள் ; சான்றோர்கள் ; பெரியோர்கள் ; கவிஞர்கள் பலர். அவர்களுள் சிறியோர் ; பெரியோர்  என்னும் வேறுபாடின்றி அனைவரையும் நற்றமிழால் நல்வழிப்படுத்தித் தமிழுள்ளங்களை ஈர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.

     கடவுள் இருக்கின்றான் ; அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

எனக்கேட்கிறார். கண்ணிருந்தால் தெரியவேண்டுமே? எனக்குத் தெரியவில்லை. அதனால் கடவுள் இல்லை எனக் கூறிவிடுகிறான். அவர்களுக்கு விடை கூறுகிறார் கவியரசர். காற்றைக் காணமுடிகிறதா? காணமுடியவில்லைதானே? உடனே, காற்று இல்லையென்று சொல்லிவிடுவீரா? என மறைமுகமாகக் கேட்கிறார்.

     காற்றில் தவழுகிறான் ; அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

எனக்கேட்கிறார். குழந்தைகளுக்குப் பக்தியுணர்வை ஊட்டவேண்டியது யாருடைய கடமை? மக்கள் ஒவ்வொருவரின் கடமைதானே? வீட்டிலுள்ள பெரியவர்கள் கோவிலுக்கு நாள்தோறும் அழைத்துச்செல்வார்கள். அதனால், குழந்தைகளுக்குக் கடவுளிடம் மதிப்பு இருந்தது ; அச்சமும் இருந்தது. அதனால், எப்போதும் “கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்னும் அச்சத்தால் தவறும் செய்யாம ஒழுக்கமாக வாழ்ந்தனர் ; அதனால் பெருமை கூடிற்று ; உடல் நலமும் உள்ளநலமும் நன்றானது.

முதலில், குழந்தைகள் கடவுளை மதிக்கக் கற்றுகொண்டனர்; பின்னர் கடவுளைக்காட்ட கோவிலுக்கு அழைத்துச்சென்ற பெரியோர்களை மதித்தனர் ; பின்னர், ஒழுக்கமாக வாழவேண்டும் எனக் கற்றுக்கொடுத்த பெற்றோர்களை மதித்தனர். உடன்பிறந்த தமக்கையை, அண்ணனை, தங்கையை மதித்தனர் ; அவர்களைச் சுற்றியிருந்த உறவுகளை, சுற்றத்தாரை மதித்தனர். கற்ற கல்வியை மதித்தனர். இவர்களையெல்லாம் ; இவற்றையெல்லாம் மதிக்கவேண்டும் எனக்கற்பித்த ஆசிரியரை மதித்தனர்.  ஆனால், இன்று இவர்கள் அனைவருடைய இடத்தையும் கைப்பேசி விரட்டிவிட்டது. ஒரு கைப்பேசி இருந்தால் அவர்களால் வாழமுடியும். பத்து நிமிடம்  எந்திரங்கள் இன்றி அவர்களால் வாழமுடிவதில்லை. பொய்களை உண்மையாக எண்ணும் நிலை பரவிவிட்டது. உறவுகளை வெறுக்கும் நிலை பெருகிவருகிறது. கதவை தட்டினாலும், கைப்பேசியில் அழைப்பு வந்தாலும் ‘உச்’ கொட்டும் நிலைக்கு வந்துவிட்டதனைக் காணமுடிகிறது. எல்லோரும் வெளிச்சக்கண்ணாடிகளிடம் சிக்கிக்கொண்டு இருட்டில் வாழப்பழகிவிட்டிருக்கின்றனர். இப்படி ஏதேனும் ஒரு மாயையில் சிக்கிக்கொண்டு இறைவழிபாட்டில் கவனம் செலுத்தாதிருக்கின்றனர். காலக்கணிதமான கவியரசர் இதனையே,

இருளில் இருக்கின்றாய் ; எதிரே இருப்பது புரிகின்றதா?

எனக் கேட்கிறார். கண்முன்னால் நிற்கும் பெற்றோர்கள் தான் தெய்வங்கள். அவர்கள் சொல்லைக் கேட்காமல் புகைக்கவும், குடிக்கவும், எதிர்க்கவும் கற்றுக்கொடுக்கும் சில நடிகர்களின் சொல்லுக்குத் தவம் கிடக்கிறார்கள். பண்பாட்டைக் கெடுக்கும் நிலைகளைச் செய்தால் ஒத்துக்கொள்கிறார்கள். கடவுளையே கிண்டல் செய்யும் கொடுமையைப் பொறுத்துக்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். கடவுள் பெயரை வைத்தவர்களை இழிவுபடுத்தும் நிலையினையும் காணமுடிகிறது. தன் விரலைவைத்தே தன் கண்களைக் குத்தச் செய்யும் நாயகர்களை நம்புகிறார்கள்.

நம்முடைய பண்பாட்டை விளக்கும் மகாபாரதம், இராமாயணம் போன்ற  நல்லெண்ணங்களை விதைக்கும் காவியங்களைப் படமாக்க வெளிநாட்டார், வெளிமாநிலத்தார் முயல்கின்றனர். தமிழில் அத்தகைய தொடர்கள் எடுத்தால் நன்றாக இருக்கும்தானே? அரேபிய நாடுகளிலும் இராமாயணம், மகாபாரத ஒழுக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றனர். உண்மையைக் கற்றுக்கொடுத்தால் மட்டுமே குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வார்கள். வீடும் நாடும் நலம்பெறும் என்பதனை உணர்ந்திருக்கின்றனர். உண்மை அமைதியாகத் தன் கடமையைச் செய்துகொண்டே இருக்கும். இதனை,

உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகின்றதா?

என்னும் வினாவின்வழி உணர்த்தியுள்ளார்.  உண்மையின் வடிவாக இருக்கின்ற இறைவன், உள்ளத்தில் இருப்பதனையும் அது கண்ணுக்குத்தெரியாமல் மக்களை மகிழ்விக்கும் நிலையினையும் கவியரசர் உணர்த்தியுள்ளது எத்தனை அழகு?

     நாத்திகர்கள் இராமனையும், கிருஷ்ணனையும் எவ்வாறு நம்புவது? எனக் கேட்கின்றனர்தானே? அவர்களுக்கு உண்மையை உணர்த்த எவ்வளவு படிக்கவேண்டியிருக்கிறது ; எத்தனை அறிவுத்தேடல் வேண்டும். ஆனால், ‘இல்லை’ என்று சொல்வதற்கு அறிவு தேவையா? தேவையில்லைதானே? எனக்கேட்கிறார் கவியரசர். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களையே நூல்களின்வழிதானே தெரிந்து கொள்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக கடவுளின் பெருமை பேசப்படுவதனை எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும். காலம் கடந்து நிற்கும் அவ்வுண்மைகளைச் சந்தேகிப்பது எத்தனை அறியாமை? என வினாத்தொடுக்கிறார் கவியரசர்.

புத்தன் மறைந்துவிட்டான்.அவன் போதனை மறைகின்றதா?

எனப்பாடி உண்மை என்றும் அழியாது நிலைக்கும் என்பதனை உணர்த்தியுள்ளார்.

சத்தியம் தோற்றதுண்டா? உலகில் தர்மம் அழிந்ததுண்டா?

எனக்கேட்கிறார். வாழ்நாள் முழுதும் கடவுள் வாழ்ந்துகாட்டிய தர்மங்களைச் சொல்லிக்கொடுக்கவேண்டும். குழந்தைகள், தவறான வழியில் சென்று வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது. நல்லவர்களாகவாழ, கடவுளின் திருவிளையாடல்களை விளக்கவேண்டும். அப்படியும் ஏற்றுக்கொள்ளாது கயவர்களின் பேச்சில் மயங்கி நிற்போரிடம்

     இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா?

எனக் கேட்கிறார். எதிரிநாடுகள் நேரடியாக நமது நாட்டை எதிர்க்கமுடியாது என உணர்ந்துகொண்டனர். மாற்றுவழியாக, காசு வாங்கிக்கொண்டு தொழில்செய்யும் கயவர்களை உள்நாட்டில் தேடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்து பணத்தைக்கொடுத்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கின்றனர். தன்விரலை வைத்து தன்கண்ணைக் குத்துவதுபோல் நம்நாட்டவரைக்கொண்டே நாட்டில் குழப்பங்களை உண்டாக்குகின்றனர். இந்நிலை, குடிக்கக் காசின்றி அடிமைப்படும் கடைமகனிலிருந்து மிகுந்த செல்வாக்குள்ள விலைபோகும்நடிகர்வரை பரவியிருக்கிறது.

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடான இந்தியாவை வீழ்த்தமுடியாமல், நாட்டையேகாட்டிக்கொடுக்கும் இழிவானவர்களை விலைக்குவாங்கி முதலில் பண்பாட்டை அழிக்கின்றனர் ; படிப்படியாக போதையைக் கற்பிக்கின்றனர் ; வன்முறைகளுக்கு அடிமையாக்கி இளையோரின் ஆற்றலை, குழந்தைகளின் அறிவுத்திறனை ஒழித்துவிடுகின்றனர். இதனை உணராத குழந்தைகள் “நடிகர்களே தம்மை வழிபடுத்தும் நல்லவர்கள்” என நினைக்கின்றனர். அவர்களிடமிருந்து புகைபிடிப்பது, குடிப்பது என தீயபழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றனர்.  நடிகர்கள் பெண்களை ; பெரியோர்களைக் கிண்டல்செய்வதைப் பார்த்துப்பார்த்து குழந்தைகளும் பெண்களை ; பெற்றோரை எதிர்த்துப் பேசுகின்றனர். இதனால் தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும் நிலை உருவாகிவிடுகிறது.

கடவுள் இயற்கையின் வடிவமாக நின்று உயிர்களைக் காக்கின்றார். இதனை உணராது இயற்கைக்கோ ; ஏதேனும் ஒரு உயிருக்கோ, கேடு செய்வாராயின் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். “பிற உயிர்களைத் தாக்குவது தர்மம் இல்லை” எனக் கற்றுக்கொடுத்த இறைக்கோட்பாட்டை கடவுளன்பர்கள் பின்பற்றுவர். இதனை அறிந்துகொண்ட கயவர்கள் மென்மையானவர்களை எதிர்க்கின்றனர். இது எத்தனை இழிவு. தாயின் கவனம் மென்மையான குழந்தையிடமே இருக்கும். அதுபோலவே கடவுள் நல்லோரைக் காப்பார். இதனை உணராது கேடு செய்தால்,

     காலத்தில் தோன்றி ; கைகளை நீட்டி ; காக்கவும் தயங்காது

என்கிறார் கவியரசர். இறைநாட்டம் உடையவர்கள் எந்நாளும் கடவுளின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதனை எடுத்துக்காட்டுகிறார். தலையில் சுமைவைத்துக்கொண்டு நடப்பவர்களைவிட, சுமை இல்லாமல் நடக்க வழிசெய்தவர் கடவுள்தானே? ஏனென்றால், இறையடியார்கள் தம் சுமைகளை இறைவனிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள்தானே? இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக்கொடுத்தவர் கவியரசர்.

கவியரசர் விதைத்த விதைகள் இன்று விருட்சமாகி எத்தனையோ நல்லவர்களை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கடவுள் பக்தி  உண்மையானது. அதனைக் காணமுடியாது ; அதனைக் கட்டுப்படுத்த முடியாது ; அதனை அடக்கிவிடமுடியாது என்பதனை,

நீதி தெருவினில் கிடைக்காது ; சாட்டைக்கு அடங்காது ; நீதி சட்டத்தில் மயங்காது 

எனப் பாடியுள்ளார். உலகியல் நீதிமன்றத்திற்கு சாட்சி தேவை. இறைவனுடைய நீதிமன்றத்தில் உண்மையான வாழ்வே சாட்சியாகும்  என்பதனை உணர்த்தியுள்ளார்.

     இப்பாடலைக் கவியரசர், புரட்சித்தலைவர் எனக்கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களின் ‘ஆனந்த ஜோதி” படத்துக்காக எழுதினார். எம்.ஜி.ஆரைத் தம் தலைவராக மக்கள் கொண்டாடிய காலகட்டம்அது. இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தொண்டர்களிடம் கடவுள் பக்தியை விதைத்து ஒழுக்கமாக வாழவழிவகுத்தார் எம்.ஜி.ஆர். இவ்வாறு, நடிகர்கள் ஒவ்வொருவரும் ரசிகர்களின் ஒழுக்கத்தைக் காக்க ; பண்பாட்டைக் காக்க ; உடல் நலம் காக்க ; உயிரைக் காக்கத் துணை நிற்பாராயின் படத்தில் மட்டுமன்று ; வாழ்விலும் நாயகராய் வலம்வருவார்தானே?

      மக்களை நல்வழிப்படுத்த எண்ணிய கவியரசரின் ஒவ்வொரு சொல்வெட்டும் உள்ளத்தில் பதிக்கவேண்டிய கல்வெட்டுதானே. கவியரசர் கவிதைக்கு இணங்குவோம் ; கடவுளை வணங்குவோம்.

 

*****************

 

 

    

 

வியாழன், 17 ஜூன், 2021

வாழ்வது எப்படி? – கவியரசர் கண்ணதாசன் காட்டும் வழி


பொய்  வாழ்க்கை வாழலாமா? –  கவியரசர் கண்ணதாசன் காட்டும் வழி

     ஓர் ஊரில் ஒரு செல்வந்தர். ஊருக்கு உணவிட்டபின் தன் வீட்டுக்கு உணவிடுவார். தம் வயலில் நெல் விளைந்தபின், மக்களுக்குக் கொடுத்தபிறகே தன் வீட்டிற்கு படியளப்பார். அவருக்கு ஊரில் செல்வாக்குப் பெருகிற்று. பெருமையுடையவர்கள் வாழும் நாட்டில் பொறாமை உடையவர்களும்தானே வாழ்வார்கள். ஒரு நல்லவனைப் படைத்த கடவுள் ஓராயிரம் தீயவர்களைப் படைத்துவிடுகிறார். தீயவர்கள் நன்றாக வாழ நல்லவர்கள் வருந்தி வாழ்கிறார்களே என நீங்கள் நினைக்கிறீர்கள்தானே? நீங்கள் இப்படி நினைப்பீர்கள் என்பதனை முன்னரே உணர்ந்தேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அன்றே

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும் (திருக்குறள்-167)

 

எனப்பாடிவைத்தார். இதற்கு விடை சொல்ல கவியரசர் கவிதை காத்திருக்கிறது. சரி! கதையைப் பாதியில் விட்டுவிட்டோமே? ஆம். தீயவர்கள் ஒன்றுகூடி செல்வந்தரைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். உங்களால்தான் அவர் கோடீஸ்வரனானவர். உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பணத்தைத்தான் எடுத்துகொள்கிறார். வெளியூரில் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார். நீங்கள் அவரை எதிர்த்துக்கேட்டால்தான் அந்தப் பயன் உங்களுக்குக் கிடைக்கும் எனத் தூண்டிவிடுகின்றனர்.  

வெள்ளந்தியான மக்களும், செல்வந்தரால்தான் பஞ்சமின்றி மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என உணராமல் நாளும் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் செய்தனர். எதிரிகள் கூறிய பொய்யையே இவர்களும் எல்லோருடைய உள்ளத்திலும் விதைத்தனர் ; வேலைக்கு வருவோரையும் தடுத்தனர். செல்வந்தர் பொறுமை இழந்தார், நிலத்தை விற்றுவிட்டு நகரத்திற்குச் சென்றுவிடுகிறார். விளைநிலம் தொழிற்சாலையாக மாறுகிறது. அந்த தொழில்நிறுவனத்தில் பணிசெய்ய வேலையாட்கள் வெளியூரிலிருந்து வருகின்றனர். செல்வந்தரை எதிர்த்துப்போராடக் கூறியவர்கள் வீடெல்லாம் மாளிகையாகிவிடுகிறது. அப்பாவி மக்கள் அன்றாடங்காய்ச்ச கஞ்சியுமின்றி வருந்தினர். “பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்னும் சத்தியமான வாக்கினை உணர்ந்தனர். கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம் செய்தால் நல்லது எனத்தெரிந்து கொண்டனர். என்ன புண்ணியம்?

அப்பாவி மக்களை ஏமாற்றியவன்தானே பாவத்தை அனுபவிக்கவேண்டும். மக்கள் என்ன செய்வார்கள்? என்றுதானே கேட்கிறீர்கள். உணவிட்டவரை மனம் நோகவைத்தல் எத்தனை பாவம். அதுவே வினைப்பயன்(விதி). நல்லோர்கள் சிலராக இருக்க தீயோர்கள் பலராக இருக்கின்றனர். இதற்கு என்னதான் விடை என்றுதானே கேட்கிறீர்கள்? மேற்கூறிய அனைத்து வினாக்களுக்கும் ஒரே விடை சொல்கிறார் கவியரசர்.

 

ஆண்டவன் வாசல் அளவில் சிறியது

சாத்தான் வாசல் சாலையிற் பெரியது!

அதிலே செல்பவர் அளவில் குறைவே

இதிலே செல்பவர் எத்தனை பேரோ!

 

எனக்கூறுவது எத்தனை அழகு. இறைவனுடைய வீட்டிற்கான வாசல் சிறியது. அவ்வாசலில் பலர் நுழைவது கடினம். எனவே நல்லவர்களைக் குறைவாக்கினார். தீயவர்கள் குறித்து சொல்லத்தேவையில்லை. நீங்கள் புரிந்துகொண்டீர்கள்தானே?

     இப்போது நீங்கள் எந்த வரிசையில் நிற்கவேண்டும் என உணர்ந்துகொண்டீர்கள்தானே?. எனக் கவியரசர் கேட்கிறார். நல்வழிதான். ஆனால், அதற்கு என்ன செய்யவேண்டும் என்றுதானே கேட்கிறீர். இதோ, கவியரசர் கூறும் கருவழி பிறப்பைத் தடுக்கும் அருவழி.

எவரைப் பற்றி எந்த நேரத்திலும்

குற்றம் பேசிக் குறை சொல்லாதீர்!’

அப்படிச் சொன்னால் அடுத்தநாள் உமக்கும்

சட்டம் அதுவே தாக்குதல் திரும்பும்

கண்டனம் செய்தால் கண்டிக்கப்படுவீர்

மன்னித்துவிட்டால் மன்னிக்கப்படுவீர்

கொடுங்கள் அதுபோல் கொடுக்கப்பெறுவீர்

அளக்கும் அளவே அளக்கப்படுமே!

 

என்னும் அடிகள் எத்தனை எளிமையோ அத்தனை வலிமையும் கூட. எனவே, அன்புடன் வாழ்வோம். அன்பைப் பெறுவோம்.

அன்பின் ஆழத்தை அறிந்துகொள்ள படித்த கதை ஒன்றை சொல்லட்டுமா? கணவனை இழந்த தாயானவள் பலவீடுகளில் வேலைசெய்து ஒரே மகனைச் செல்லமாக வளர்க்கிறாள். வறுமைச் சுவடே தெரியாமல் வளர்க்கிறாள். “பிறகு, எப்படி அந்தக் குழந்தை உருப்படும்” என்றுதானே கேட்கிறீர்? ஆம்! அந்தக் குழந்தை உருப்படாமல் போனது. உருப்படாத நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கமே நன்மை என உணரும் அளவிற்குப் போதைப் பழக்கம் உண்டாயிற்று. இப்போது, உணவுக்கான பணத்தையும் அடித்துப் பிடிங்கிக்கொண்டு போய்விடுகிறான். என்னதான் இருந்தாலும் தாய்மனம் பித்துதானே!. பக்கத்துவீட்டில், எதிர்வீட்டில் எனக் கடன்வாங்கி சமைத்துப்போட்டுவிடுகிறாள், குடித்துவிட்டு, சாப்பிடாமல் இருந்தால் வயிறு புண்ணாகிவிடும் இறந்துவிடுவான் என்று கவலை.

ஒருநாள், குடித்துவிட்டுவந்த மகன் தாயை அடிக்க வழக்கம்போல் எல்லோரும் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தாயானவள், வழக்கத்திற்கு மாறாகத் தேம்பித்தேம்பி அழுகிறாள். சுற்றி இருந்தவர்கள் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல் மகனை அடித்துத் துவைத்துவிடுகிறார்கள். தாயானவள், அவர்களிடமிருந்து மகனைக் காப்பாற்றுகிறாள். எதிர்வீட்டுக்காரர், “என்னம்மா? எப்போதும் அழமாட்டீர்கள். இன்று அழுகிறீர்கள். அதனால்தானே அடித்தோம்” என்றனர். அதற்கு அந்த தாய், “நான் தினமும் அடிவாங்குவேன். அழுதால் நீங்கள் மகனை அடித்துவிடுவீர்கள் எனத்தெரியும். எனவே, அழாமல் வலியைப் பொறுத்துக்கொள்வேன். ஆனால் இன்று, அவன் அடித்து ஒரு வலியும் இல்லை. குடித்துக்குடித்து அவன் வலுவிழந்துவிட்டான். அதனை எண்ணினேன். கட்டுப்படுத்தமுடியாமல் அழுகைவந்துவிட்டது.” என்றாள். சுற்றி இருந்தவர்கள் அனைவருடைய கண்களிகளிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது.  இவ்வுலகில் செய்யும் ஒவ்வொரு வரவு செலவுக்கான கணக்கும் மேலுலகில் சரிபார்க்கப்படும் என்னும் கவியரசர் சொல்லுக்கு இலக்கணமே இத்தாய்.

இனி, பொய்யான வாழ்க்கை வாழ மனம் வராதுதானே. வாழ்க்கைச் சகதியில் சிக்கிக்கொள்ள நேரிட்டால் கவியரசர் பாடல்தான் உங்களுக்கு ஊன்றுகோல்.

 

 

 



 

புதன், 16 ஜூன், 2021

குழந்தைக்குக் கற்பிக்கவேண்டிய பாடம் - திருக்குறள் விளக்கம்

 



குழந்தைகளை மலரச்செய்வீர்

குழந்தைகளுக்கு வீட்டுப்பற்றும், நாட்டுப்பற்றும் வளரவேண்டும் என என்றாவது நீங்கள் உரைத்ததுண்டா? ஆம்! என்பது உங்கள் விடையானால், வாழ்வின் இறுதிவரை உங்கள் குழந்தை உங்களுடன் பாசத்துடன் இருக்கும் எனக் கூறமுடியும். அவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் வளரவேண்டுமானால்,  உடலையும் உயிரையும்  வளர்க்கும் வீட்டுக்கும், அறிவை வளர்க்கும் நாட்டுக்கும் நன்றியுடையவர்களாக வளர்க்கவேண்டும்.

     இவ்வுலகில் எந்த ஒன்றையும் ஒருவன் தானே உருவாக்கி உண்பதில்லை ; அது இயலவும் இயலாது. பிறர் துணையால் பெற்ற வளத்தை உண்டே உயிர்வாழ இயலும். அந்த நன்றியுணர்வை பணத்தை வீசிப்பெற்றுவிடுவதோடு முடியாது. அன்புநிறை உள்ளத்துடன் நன்றி கூறவேண்டும். நிலத்தை விற்று நன்றாக வாழமுடியும் என்றாலும், உணவளிப்பதே அறமென உழுதுமகிழும் உழவர்களால்தானே இந்நாடு வளம் பெறுகிறது. இத்தியாகிகள் உள்நாட்டுப் பாதுகாப்புப்படைவீரர்கள் எனில் மிகையில்லை. அவர்களுக்கும் நன்றி சொல்ல குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டும்.

     குழந்தைகள் களிமண்தான். நல்ல குயவனிடம் அகப்பட்டால் அழகான சிலைகளாகும் ; சிறந்த பாத்திரங்களாகும். எனவே, குழந்தைகளிடம் நல்ல குயவனாக நடந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவருடைய கடன்.

     ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் ஏதேனும் ஒரு நன்மை செய்துவிட்டுத்தான் உறங்கவேண்டும். அதுவே, உயிரைத்தாங்கும் பூமிக்குச்செய்யும் நன்றிக்கடன். ‘சுமை’ எனப் பொறுப்புகளைக் கடந்து செல்வது அறிவுடைமையன்று. உலகையே சுமக்கும் பூமிகூட உன் காலடியில்தான் இருக்கிறது என்பார் சுவாமி விவேகானந்தர். அப்படியெனில், நீ எத்தனை உயர்ந்தவன் என்பதனை எண்ணிப்பார்க்கமுடிகிறதுதானே?

     “மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” எனச் சோம்பிக்கிடத்தல் கூடாது. விதை மண்ணைக் கிழித்த பின்னர்தான் செடியானது ; செடி மரமானது. ஒரு நாளும் சோம்பிக்கிடப்பதில்லை. அதனால்தானே அது எவ்வுயிர்க்கும் வரமானது. தன்னை வளர்த்த வானுக்குப் பூக்களைத் தருகிறது. தன்னைத் தாங்கும் பூமிக்கு நிழலைக் கொடுக்கிறது. தன்னை நம்பிய பறவைகளுக்கு வீட்டைக் கொடுக்கிறது. தன்னை நம்பிய மனிதர்களுக்கு கனியைக் கொடுக்கிறது. இத்தனையும் தருவதால் அது ‘தரு’ ஆயிற்று. தன் பணியை தரு செய்வதால்தான் அது வாழ்நாள் முழுதும் வளர்ந்துகொண்டேபோகிறது.

     பொறுப்பில்லாமல் வாழ்வதால் என்ன கேடு என்று கேட்கிறீர்களா?.  ஒரு கதை சொல்லட்டுமா?. ஒரு நாட்டில் வற்கடம்(பஞ்சம்) ஏற்பட்டது. மக்கள் அனைவரும் வேறு ஊருக்குப் புறப்பட்டனர். நீண்ட தூரம் செல்லவேண்டி இருக்கலாம் என்று எண்ணிய ஊரின் தலைவர், கையில் கட்டைகளை எடுத்துக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார். ஒவ்வொருவரும் சிறிய அளவிலான கட்டைகளை எடுத்துக்கொண்டனர். பெரியவர் பேச்சினை மதித்து ஒரே ஒருவன் மட்டும் இரண்டு மூன்று கட்டைகளை எடுத்துக்கொண்டான். ஒரிரு நாள் பயணம் சென்ற பிறகு ஒரு ஆழமான பள்ளத்தாக்கு வந்தது. அதனைக் கடப்பதற்கு அவர்கள் எடுத்துவந்த கட்டை உதவவில்லை. அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கில் இறங்கித்தான் செல்லவேண்டும் என எண்ணிச் சென்றனர். ஆனால், ஒரே ஒருவன் மட்டும் தான் சுமந்துவந்த நிறைய கட்டைகளை இணைத்து அழகாகப் பலகையாக்கி எளிதாகக் கடந்துசென்றான். சுமப்பது கடினமென எண்ணினால் வெற்றி கிடைக்காது. அவ்வாறு எண்ணாது வாழ்ந்தால் வாழ்க்கை வெறுக்காது. இக்கூற்று உண்மைதானே?

“நம்மால் பணத்தாலோ, புகழாலோ உதவமுடியாதே” என எண்ணும் கோடிக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா?. கவலைவேண்டாம். இதோ ஒருவர் வழிகாட்டுகிறார். “எப்படி நீங்கள் இந்தச் சமுதாயத்திற்கு உதவுகிறீர்கள்?” எனக் கேட்டபோது, அவருடைய விடைதெளிவான பாதையைக் காட்டியது. “என்ன? என்றுதானே கேட்கிறீர்கள். இதோ, அவர்கூறியவிடை “நான் படிக்காதவன். நல்ல வேலையில்லை. அன்றாடங்காய்ச்சி. பணமில்லை. ஆனால் இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்னும் எண்ணம் மட்டும் இருந்தது. அதனால் நாள்தோறும் பணிக்குப் பேருந்தில் செல்லும்போதும், திரும்பும்போதும் முதியோர்களோ, உடல்நலம் குறைந்தவர்களோ இருக்கையைத் தேடினால் உடனே அவர்கள் இருக்க இடம்கொடுத்துவிடுவேன். உட்கார்ந்து பயணிக்கும் பயணத்தைவிட  ஒருவர்க்கு இடம்கொடுத்துவிட்டு பயணிப்பது அந்நாளை பயனுடைய நாளாக மாற்றிவிடுகிறது. நான் செய்வது பெரிய செயலல்ல. ஆனாலும் என்னைப் பாராட்டுகிறார்கள்” எனக் கூறுகிறார். இதன்வழி, தனக்கு நன்மை செய்யும் சமூகத்திற்கு தான் எவ்வாறு உதவமுடியும் என எண்ணிச் செய்த செயல் எத்தனை மதிப்புடையது. உண்மைதானே?

நாட்டிற்காக உழைத்தவர்களுக்கும், வீட்டிற்காக உழைத்தவர்களுக்கும் நன்றியுடையவர்களாக விளங்கவேண்டும். அவர்களுடைய செயலை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தையையும் தாய் பெற்றுவிடுகிறாள். ஆனால், அந்தக் குழந்தையைப் பத்திரமாகக் காத்து, குளிப்பாட்டி; சீராட்டி ; பாராட்டி ; நலம் காத்து ; அறிவூட்டி வளர்க்கும் பாட்டிக்கும், தாத்தாவிற்கும் எத்தனைக் குழந்தைகள் நன்றியுடையவர்களாக ; பாசமலர்களாக இருக்கிறார்கள். அப்படி இல்லையே. முதியோர் இல்லங்கள் பெருகுகின்றனவே. குழந்தைகள் மலரவேண்டுமா?  தெய்வப்புலவர் திருவள்ளுவர் தாத்தா சொல்வதைச் சொல்லிக்கொடுங்கள்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயர் நட்பு (திருக்குறள்-106)

 

இந்த இரண்டு அடிகளை உள்ளத்தில் பதியவைப்பீர். வீடும் நாடும் நலம்பெறும் ; முதியோர் இல்லமும் குறைந்துவிடும்.

 

செவ்வாய், 15 ஜூன், 2021

பாரதியார் விதைக்கும் நாட்டுப்பற்று

 


     மகாகவி பாரதியார் தூக்கத்தை விரட்டிய சூரியன். அதனால்தான் பாரதத்தாய்க்குப் (பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி) பள்ளியெழுச்சி மட்டும் பாடினார். பாவிற்கு அரசன் தாலாட்டுப் பாடவில்லை. ஏன் பாடவில்லை? தாய் உறங்கினால் குழந்தைகள் அடித்துக்கொள்கிறார்கள். பின் எப்படித்தூங்கமுடியும். ஒற்றுமையுடன் வாழத்தெரியாத பிள்ளைகளைப்பெற்றுவிட்டு அன்னையால் அமைதியாய்த் தூங்கமுடியுமா? முடியாதுதானே? அதனால்தான் தனக்குத் தாலாட்டுப் பாடிய தாய்க்குத் தாலாட்டுப் பாடமுடியாமல் தன் கைகளைத்தானே கட்டிப்போட்டுக்கொண்டார்.

“மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ

மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?”

 

எனத்தூங்காததாயை தூங்கியதாக எண்ணியெழுப்பும் இப்பாடலடிகள் அழகோஅழகுதானே?. ஆங்கிலேயனின் அடக்குமுறையினை கவிழ்க்கவே அவருடைய எழுதுகோல் தலைகவிழ்ந்தது. அந்த எழுதுகோல் கவிழ்ந்தபோதெல்லாம் இச்சமுதாயத்தில் விடுதலை உணர்வு எழுந்தது ; ஆங்கிலேயர் குருதி உறைந்தது ; விடுதலைப்போராட்டத்தியாகிகளின் உளம் நிறைந்தது.

     “உன் நாடு உன்னுடையது” எனச் சொல்வதற்கு ஒரு மகாகவி தேவைப்படுகிறார். கொடுமைதானே?. தந்தையானவர் மகனை அழைத்து, ‘இது உன்வீடு” எனக் கூறினால், என்ன பொருள்?. “பொறுப்பில்லாத மகன்” என்பதுதானே பொருள். “குடும்பம் இல்லை என்றால் நீ அநாதையாகி விடுவாய்” என ஒரு தந்தை மகனுக்கு உரைப்பதுபோல “உன்னைத் தாங்கிக்கொண்டிருக்கும் நாடு இல்லாவிட்டால் நீ அநாதையாகிவிடுவாய் என்பதனை  உணர்த்துகிறார் மகாகவி பாரதியார்.

உனக்கு நாட்டுப்பற்று உண்டா? என எந்தக் குழந்தையையாவது கேட்டுப்பாருங்கள். அப்படியென்றால்? எனக் கேட்கும். குழந்தைகளிடம் தவறில்லை. நாட்டுப்பற்று என்றால் என்னவென்று எந்தப்பாடத்தில் சொல்லிக்கொடுத்தீர்கள்.? தமிழ் மன்னர்கள் அந்நியரை வெற்றிகொண்டதையோ, நாட்டுக்காகப் போராடிய தியாகிகளையோ பாடத்தில் பார்க்கமுடியாதபோது அவர்கள் எப்படி அறிந்திருப்பார்கள். அந்நியர்களின் புகழை மட்டுமே படிக்க வாய்ப்பளித்துவிட்டு நாட்டுப்பற்று குறித்துப் பேசினால் என்ன பயன்? குழந்தைகளுக்கு நாட்டு உணர்வு வருவதில்லை. நடிகர்களை மட்டுமே காண்பதால் அவர்களையே கொண்டாடுகிறார்கள். குழந்தைகளிடம் உண்மையான வீரர்களைக் கொண்டு சேர்க்கவேண்டியது பெரியோர்களின் கடன்.

நாட்டுப்பற்று எப்படி இருக்கவேண்டும்? ஒரு உண்மை கதை சொல்லட்டுமா?... 1962 ஆம் ஆண்டில் வடகிழக்கு எல்லையான நூரானங் (அருணாசலப்பிரதேசம்) என்னும் இடத்தில் சீனாவுடன் இந்தியா போர் செய்கிறது. பெரும்படைகொண்ட சீனா, போரினை எண்ணிப்பார்க்காத இந்தியப் படையை எதிர்க்கிறது. எளிமையான ஆயுதங்களை மட்டுமே கொண்ட இந்தியப்படைவீரர்களை நவீன எந்திரத்துப்பாக்கிகளைக் கொண்டு குருவி சுடுவதைப் போல சுட்டழிக்கிறது. இந்தியப்படை பின் வாங்குகிறது. சீனா, அமைதிக்கான உடன்படிக்கை பேசிவிட்டு போர்தந்திரத்தைக் கையாண்டது. சீனா, வெற்றிகொண்டது வீரத்தால் அன்று ; துரோகத்தால்தான். போர்ச்சூழலில், அதனை துரோகத்தை அவமானமாகக் கருதிய மூன்று வீரர்கள், புறமுதுகிட்டுச் செல்வதை விரும்பவில்லை. சீனப்படையுடன் போர்செய்யத் துணிகின்றனர். சீனப்படைக்குள் சென்று அவர்களுடைய கனரக ஆயுதங்களைக் கைப்பற்றினால் அன்றி ஒன்றும் செய்யமுடியாது என சீனப்படைக்குள் நுழைய முன்னேறுகிறார்கள். இருவர் கொல்லப்படுகின்றனர். ஜஸ்வந்த்சிங்ராவத் என்னும் போர்வீரர் மட்டும் தவழ்ந்து தவழ்ந்து சீனப்படைக்குள் நுழைந்துச்சென்று ஓர் கனரகத்துப்பாக்கியைக் கைப்பற்றுகிறார்.

“இப்பொழுது வாங்கடா ! பார்ப்போம்” என அழைக்க சீனப்படையினர் சூழ்கின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் எதிரிகள் தரையில் சரிந்துகிடந்தனர். அடுத்தடுத்து சீனப்படையினர் தொடர்ந்து குவிந்துகொண்டே இருந்தனர். எழுபத்திரண்டு மணி நேரம் தனி மனிதனாக சீனப்படையை எதிர்கொண்டார். முந்நூறு சீன வீரர்களைக் கொன்றார். சீனப்படை அதிர்ந்தது. “இந்தியப்படையில் எவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள்” என ஆய்கிறார்கள். “ஒரே ஒருவன்தான் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறான்” எனச்செய்திப்பறக்கிறது. இதனை அறிந்துகொண்ட சீனப்படை, திட்டமிட்டுச் சுற்றிவளைத்து ஜஸ்வந்த்சிங்ராவத்தை சுட்டு வீழ்த்துகிறார்கள். “முந்நூறு வீரர்களை இவன் ஒருவன் கொன்றானே” என்று  இறந்தபின்னும் தலைசிறந்தவீரனின் தலையைவெட்டி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால், இன்றும் பாரதத்தின் பாதுகாப்புப்படை அவ்வீரனின் புகழைக் கொண்டாடுகிறது. இன்றும் ஜஸ்வந்த்சிங்ராவத் உயிருடன் இருப்பதாக எண்ணிப் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஓர் உயர்அதிகாரிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுமோ அதே மதிப்பினை இன்றும் அவருடைய நினைவாலயத்திலுள்ள அவருடைய சிலைக்குக்கொடுக்கப்படுகிறது. அந்த இடம் இன்று “ஜஸ்வந்த் கர்” என அழைக்கப்படுகிறது. இதுதான் பாரதத்தாயின் தவப்புதல்வனின் செயல். தாயாரின் புகழ்க்காத்த இருபத்தோரு வயது வீரப்புதல்வனை ஒவ்வொருநாளும் பாரதம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய தேசப்பற்றையே மகாகவி பாரதியார் ஒவ்வொரு குடிமகனிடம் எதிர்நோக்குகிறார். பாரதம் வளத்தாலும் பண்பு நலத்தாலும் பிறநாடுகளுக்கெல்லாம் தலையாயது. இதனை உணர்ந்து பெருமிதம் கொள்வாய் என அறிவுறுத்துகிறார்.

“பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்”

 

எனப்பாடியுள்ளார். சத்ரபதி சிவாஜி தன் படைக்கு அறிவுறுத்துவதுபோல் பாரதப்புதல்வர் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தும் திறத்தைக் காணமுடிகிறது.  இன்று அவருடைய கனவு நினைவாகியிருக்கிறதா? என்றுதானே கேட்கிறீர்கள். ஆம். இக்கால நிகழ்வு ஒன்றைக் கூறட்டுமா?

 

“உங்கள் நாட்டில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது ? எதிர்த்துப்போராடுங்கள்” எனத் தூண்டிவிடுகிறது எதிர்தேசம். அதற்கு இன்றைய நாட்டுப்பற்றுடைய பாரதப்புதல்வனின் விடை “என்னுடைய நாட்டிற்காக நான் கொடுக்கும் பணம் ஒவ்வொன்றும் மீண்டும் எங்கள் நலனுக்கே செலவழிக்கப்படும். எங்களுடைய நாட்டின் ஒரு மாநிலம் தான் உங்கள் நாடு. உங்களால் முடிந்தால் எங்கள் முப்படையுடன் போர் செய்துப்பாருங்கள். அச்சமாக இருந்தால் அமைதியாக இருங்கள். எங்களையே எங்கள் நாட்டுக்கு எதிராகப் போராடச்செய்யும் கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதீர்கள்.” எனக்கூறி வீரநடைபோடும் இளைஞனும் மகாகவி காணவிழைந்த பாரதத்தாயின் தவப்புதல்வன்தானே?  

மகாகவி ஒவ்வொருவர் உள்ளத்திலும் நாட்டுப்பற்றினை, விதைத்தார் ; விதைக்கின்றார் ; விதைப்பார். அத்தகைய வலிமையுடைய எழுத்துத்திறத்தை எண்ணிப்பார்க்கும்பொழுதே விண்ணைத் தொடுகிறது மகாகவியிடம் கொண்ட பேரன்பு.