தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 15 ஜூன், 2021

பாரதியார் விதைக்கும் நாட்டுப்பற்று

 


     மகாகவி பாரதியார் தூக்கத்தை விரட்டிய சூரியன். அதனால்தான் பாரதத்தாய்க்குப் (பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி) பள்ளியெழுச்சி மட்டும் பாடினார். பாவிற்கு அரசன் தாலாட்டுப் பாடவில்லை. ஏன் பாடவில்லை? தாய் உறங்கினால் குழந்தைகள் அடித்துக்கொள்கிறார்கள். பின் எப்படித்தூங்கமுடியும். ஒற்றுமையுடன் வாழத்தெரியாத பிள்ளைகளைப்பெற்றுவிட்டு அன்னையால் அமைதியாய்த் தூங்கமுடியுமா? முடியாதுதானே? அதனால்தான் தனக்குத் தாலாட்டுப் பாடிய தாய்க்குத் தாலாட்டுப் பாடமுடியாமல் தன் கைகளைத்தானே கட்டிப்போட்டுக்கொண்டார்.

“மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ

மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?”

 

எனத்தூங்காததாயை தூங்கியதாக எண்ணியெழுப்பும் இப்பாடலடிகள் அழகோஅழகுதானே?. ஆங்கிலேயனின் அடக்குமுறையினை கவிழ்க்கவே அவருடைய எழுதுகோல் தலைகவிழ்ந்தது. அந்த எழுதுகோல் கவிழ்ந்தபோதெல்லாம் இச்சமுதாயத்தில் விடுதலை உணர்வு எழுந்தது ; ஆங்கிலேயர் குருதி உறைந்தது ; விடுதலைப்போராட்டத்தியாகிகளின் உளம் நிறைந்தது.

     “உன் நாடு உன்னுடையது” எனச் சொல்வதற்கு ஒரு மகாகவி தேவைப்படுகிறார். கொடுமைதானே?. தந்தையானவர் மகனை அழைத்து, ‘இது உன்வீடு” எனக் கூறினால், என்ன பொருள்?. “பொறுப்பில்லாத மகன்” என்பதுதானே பொருள். “குடும்பம் இல்லை என்றால் நீ அநாதையாகி விடுவாய்” என ஒரு தந்தை மகனுக்கு உரைப்பதுபோல “உன்னைத் தாங்கிக்கொண்டிருக்கும் நாடு இல்லாவிட்டால் நீ அநாதையாகிவிடுவாய் என்பதனை  உணர்த்துகிறார் மகாகவி பாரதியார்.

உனக்கு நாட்டுப்பற்று உண்டா? என எந்தக் குழந்தையையாவது கேட்டுப்பாருங்கள். அப்படியென்றால்? எனக் கேட்கும். குழந்தைகளிடம் தவறில்லை. நாட்டுப்பற்று என்றால் என்னவென்று எந்தப்பாடத்தில் சொல்லிக்கொடுத்தீர்கள்.? தமிழ் மன்னர்கள் அந்நியரை வெற்றிகொண்டதையோ, நாட்டுக்காகப் போராடிய தியாகிகளையோ பாடத்தில் பார்க்கமுடியாதபோது அவர்கள் எப்படி அறிந்திருப்பார்கள். அந்நியர்களின் புகழை மட்டுமே படிக்க வாய்ப்பளித்துவிட்டு நாட்டுப்பற்று குறித்துப் பேசினால் என்ன பயன்? குழந்தைகளுக்கு நாட்டு உணர்வு வருவதில்லை. நடிகர்களை மட்டுமே காண்பதால் அவர்களையே கொண்டாடுகிறார்கள். குழந்தைகளிடம் உண்மையான வீரர்களைக் கொண்டு சேர்க்கவேண்டியது பெரியோர்களின் கடன்.

நாட்டுப்பற்று எப்படி இருக்கவேண்டும்? ஒரு உண்மை கதை சொல்லட்டுமா?... 1962 ஆம் ஆண்டில் வடகிழக்கு எல்லையான நூரானங் (அருணாசலப்பிரதேசம்) என்னும் இடத்தில் சீனாவுடன் இந்தியா போர் செய்கிறது. பெரும்படைகொண்ட சீனா, போரினை எண்ணிப்பார்க்காத இந்தியப் படையை எதிர்க்கிறது. எளிமையான ஆயுதங்களை மட்டுமே கொண்ட இந்தியப்படைவீரர்களை நவீன எந்திரத்துப்பாக்கிகளைக் கொண்டு குருவி சுடுவதைப் போல சுட்டழிக்கிறது. இந்தியப்படை பின் வாங்குகிறது. சீனா, அமைதிக்கான உடன்படிக்கை பேசிவிட்டு போர்தந்திரத்தைக் கையாண்டது. சீனா, வெற்றிகொண்டது வீரத்தால் அன்று ; துரோகத்தால்தான். போர்ச்சூழலில், அதனை துரோகத்தை அவமானமாகக் கருதிய மூன்று வீரர்கள், புறமுதுகிட்டுச் செல்வதை விரும்பவில்லை. சீனப்படையுடன் போர்செய்யத் துணிகின்றனர். சீனப்படைக்குள் சென்று அவர்களுடைய கனரக ஆயுதங்களைக் கைப்பற்றினால் அன்றி ஒன்றும் செய்யமுடியாது என சீனப்படைக்குள் நுழைய முன்னேறுகிறார்கள். இருவர் கொல்லப்படுகின்றனர். ஜஸ்வந்த்சிங்ராவத் என்னும் போர்வீரர் மட்டும் தவழ்ந்து தவழ்ந்து சீனப்படைக்குள் நுழைந்துச்சென்று ஓர் கனரகத்துப்பாக்கியைக் கைப்பற்றுகிறார்.

“இப்பொழுது வாங்கடா ! பார்ப்போம்” என அழைக்க சீனப்படையினர் சூழ்கின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் எதிரிகள் தரையில் சரிந்துகிடந்தனர். அடுத்தடுத்து சீனப்படையினர் தொடர்ந்து குவிந்துகொண்டே இருந்தனர். எழுபத்திரண்டு மணி நேரம் தனி மனிதனாக சீனப்படையை எதிர்கொண்டார். முந்நூறு சீன வீரர்களைக் கொன்றார். சீனப்படை அதிர்ந்தது. “இந்தியப்படையில் எவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள்” என ஆய்கிறார்கள். “ஒரே ஒருவன்தான் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறான்” எனச்செய்திப்பறக்கிறது. இதனை அறிந்துகொண்ட சீனப்படை, திட்டமிட்டுச் சுற்றிவளைத்து ஜஸ்வந்த்சிங்ராவத்தை சுட்டு வீழ்த்துகிறார்கள். “முந்நூறு வீரர்களை இவன் ஒருவன் கொன்றானே” என்று  இறந்தபின்னும் தலைசிறந்தவீரனின் தலையைவெட்டி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால், இன்றும் பாரதத்தின் பாதுகாப்புப்படை அவ்வீரனின் புகழைக் கொண்டாடுகிறது. இன்றும் ஜஸ்வந்த்சிங்ராவத் உயிருடன் இருப்பதாக எண்ணிப் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஓர் உயர்அதிகாரிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுமோ அதே மதிப்பினை இன்றும் அவருடைய நினைவாலயத்திலுள்ள அவருடைய சிலைக்குக்கொடுக்கப்படுகிறது. அந்த இடம் இன்று “ஜஸ்வந்த் கர்” என அழைக்கப்படுகிறது. இதுதான் பாரதத்தாயின் தவப்புதல்வனின் செயல். தாயாரின் புகழ்க்காத்த இருபத்தோரு வயது வீரப்புதல்வனை ஒவ்வொருநாளும் பாரதம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய தேசப்பற்றையே மகாகவி பாரதியார் ஒவ்வொரு குடிமகனிடம் எதிர்நோக்குகிறார். பாரதம் வளத்தாலும் பண்பு நலத்தாலும் பிறநாடுகளுக்கெல்லாம் தலையாயது. இதனை உணர்ந்து பெருமிதம் கொள்வாய் என அறிவுறுத்துகிறார்.

“பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்”

 

எனப்பாடியுள்ளார். சத்ரபதி சிவாஜி தன் படைக்கு அறிவுறுத்துவதுபோல் பாரதப்புதல்வர் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தும் திறத்தைக் காணமுடிகிறது.  இன்று அவருடைய கனவு நினைவாகியிருக்கிறதா? என்றுதானே கேட்கிறீர்கள். ஆம். இக்கால நிகழ்வு ஒன்றைக் கூறட்டுமா?

 

“உங்கள் நாட்டில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது ? எதிர்த்துப்போராடுங்கள்” எனத் தூண்டிவிடுகிறது எதிர்தேசம். அதற்கு இன்றைய நாட்டுப்பற்றுடைய பாரதப்புதல்வனின் விடை “என்னுடைய நாட்டிற்காக நான் கொடுக்கும் பணம் ஒவ்வொன்றும் மீண்டும் எங்கள் நலனுக்கே செலவழிக்கப்படும். எங்களுடைய நாட்டின் ஒரு மாநிலம் தான் உங்கள் நாடு. உங்களால் முடிந்தால் எங்கள் முப்படையுடன் போர் செய்துப்பாருங்கள். அச்சமாக இருந்தால் அமைதியாக இருங்கள். எங்களையே எங்கள் நாட்டுக்கு எதிராகப் போராடச்செய்யும் கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதீர்கள்.” எனக்கூறி வீரநடைபோடும் இளைஞனும் மகாகவி காணவிழைந்த பாரதத்தாயின் தவப்புதல்வன்தானே?  

மகாகவி ஒவ்வொருவர் உள்ளத்திலும் நாட்டுப்பற்றினை, விதைத்தார் ; விதைக்கின்றார் ; விதைப்பார். அத்தகைய வலிமையுடைய எழுத்துத்திறத்தை எண்ணிப்பார்க்கும்பொழுதே விண்ணைத் தொடுகிறது மகாகவியிடம் கொண்ட பேரன்பு.

ஞாயிறு, 13 ஜூன், 2021

மணிமேகலை என்னும் மாதரசி

 


மணிமேகலை என்னும் மாதரசி

     கொடுப்பவர் உயர்ந்தவர் ; பெறுபவர் தாழ்ந்தவர் என்பது உலகியல் வழக்கு. கொடுப்பவர்கரம் உயர்ந்திருப்பதும், பெறுபவர்கரம் தாழ்ந்திருப்பதும் இதனை உணர்த்திவிடுகிறது. இக்கூற்று அருளுக்கும் பொருந்தும் ; பொருளுக்கும் பொருந்தும். இத்தகைய வரையறையோடு மணிமேகலைக் காலத்துக் கணிகையர்க்குலத்தை நோக்கினால், அது தாழ்ந்த குலமாகக் குறிப்பிட்டுள்ளதனை உணர்ந்துகொள்ள இயலும். மன்னவர் கொடுக்கக் குடிகள் பெறுவது இயல்புதானே? எனினும் கலைகளில் சிறந்தோரையும் தாழ்வாக எண்ணிய காலம் அது. இன்று அப்படியே தலைகீழாக மாறிவிட்டதுதானே?. நடிகர்களைத் தலைமேல் தூக்கிக்கொண்டு ஆடும் நிலைக்குச் சமுதாயம் மாறிவிட்டிருக்கிறது. அதனால்தான் நடிகர்களின் பதாகைகளில்கூட பாலாறு ஓடுகிறது.

     மணிமேகலை, கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியின் மகள். அழகின் உரு. அழகு இருக்கும் இடத்தில் ஆணவம் இருப்பது இயல்புதானே? அந்த ஆணவமே கூட சில பெண்களின் அழகினை மிகுவிக்கும்தானே? ஆனால் மணிமேகலையோ, அழகில் இமயமாயினும் அன்பையும் பண்பையும் அணிகலனாகக் கொண்டவள் ; ஆணவத்தின் அடிச்சுவடும் அறியாதவள். மணிமேகலையின் அழகினை,

     மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்

அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய

     கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்

     படை இட்டு நடுங்கும் காமன் பாவையை

     ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?

     பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?

(மலர்வனம்புக்ககாதை:20-25)

என்னும் அடிகளில் சீத்தலை சாத்தானார் எழிலுற  எடுத்துக்காட்டுகிறார். கோவலன், கண்ணகியை இழந்த துயர்கேட்டு அழும் நிலையில்கூட மணிமேகலையின் அழகை எடுத்துக்காட்டுகிறார். மதிமுகம் ; அழகான நீலமலரை வென்ற கண்கள் ; காமனும் நடுக்குறும் அளவிற்குக் கடைமணியில் கண்ணீர். அவளைக்கண்டால் ஆடவர் அகலார் ; அகன்றால் அவர் ஆடவராகார் எனப்பாடியுள்ளார் சீத்தலைசாத்தனார்.

     அத்தகைய பேரழகுடைய மணிமேகலையின் பிறப்பின் நோக்கம் அவ வாழ்க்கைக்கன்று ; தவ வாழ்க்கைக்கே. “காமனையே வெல்லும் தவச்செல்வியைப் பெறுவாய்” என மணிமேகலை பிறக்கும் முன்னரே மணிமேகலா தெய்வம் மாதவியின் கனவில்தோன்றிக் கூறியதனை,

     காமன் கையறக் கடுநவை அறுக்கும்

     மா பெருந்தவக்கொடி ஈன்றனை என்றே

     நனவே போலக்கனவு அகத்து உரைத்தேன்

(துயிலெழுப்பிய காதை: 36-38)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.   

     உதயகுமரன் தன்னைக் காதலிப்பதை உணர்ந்துகொண்ட மணிமேகலை, “நான் எவ்வாறு அவனைக் காதலிக்க எண்ணினம்?” என எண்ணுகிறாள். அவன்பின்னே உள்ளம் சென்ற நிலையினை

     புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்

     இதுவோ, அன்னாய்! காமத்து இயற்கை

     இதுவே ஆயின் கெடுக தன் திறம்

           (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை:89-91)

என்னும் அடிகளில் உணர்த்திவிடுகிறாள். அதற்கான காரணத்தை அறியவிழைகிறாள். பின்னர், முற்பிறவியின் கணவனாக வாழ்ந்த இராகுலனே இப்பிறவியில் உதயகுமாரானாகப் பிறப்பெடுத்தான் என்பதனை அறிந்துகொள்கிறாள்:

தன் அளவில்லாத ; அடக்கவியலாத காமத்தை அறிகிறாள். பின் தன் பிறப்பின் நோக்கத்தை அறிகிறாள். காமத்தை வெல்கிறாள்.    உதயகுமரன், தன் காதலைக் கூறி நெருங்க விழையும்பொழுது, அவனுக்கு வாழ்வின் மெய்யியல் குறித்து விளக்குகிறாள்.

     பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு  இரங்கலும்

     இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

     மக்கள் யாக்கை இது என உணர்ந்து

மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்

                     (உதயகுமரன் அம்பலம் புக்ககாதை: 136-139)

எனக் கூறுகிறாள். இவ்வாழ்க்கை பிறத்தல், மூத்தல், பிணிபட்டு வருந்தல், இறத்தல் என்னும் நான்கு படிநிலைகளை உடையது. இதுவே இவ்வுடலுக்கான செயல். எனவே, இவ்வுடலின் விருப்பத்திற்காக வாழ்வதைக் காட்டிலும் அனைத்து உயிர்களுக்கும் நல்லன செய்து வாழ்ந்தால் பிறப்பு பொருளுடையதாகும் என உணர்த்துகிறாள் மணிமேகலை.

வாழ்க்கையின் உண்மையை அறியாமல், பிறப்பின் நோக்கம் புரியாமல், பெற்றோரின் அருமையினை உணராமல் காதலித்து வாழ்க்கையை இழந்து வருந்தும் பெண்களுக்கு மணிமேகலையே பாடம் கற்பிக்கிறாள். உணர்வுகளைக் கையாளும் திறம் இருப்பின் காமத்தின் ஆற்றலை கடமைக்கு மடைமாற்றம் செய்ய இயலும். அவ்வாறு இளமையை வெற்றிகொண்டேரே ஆட்சியராக ; மருத்துவராக ; விளையாட்டு வீர்ர்களாக வலம்வருவதனைக் காணமுடிகிறது.

அவ்வாறின்றி காதலால் ; காமத்தால் தவறானவர்களிடம் சிக்கிக்கொண்டு, பெற்றோரை இழந்து, உறவுகளை இழந்து, கணவனை இழந்து, பிள்ளைகளை இழந்து (திருமணமானவர்களும்தான்) சிறையில் வாடும் நிலை இருப்பதனைக் காணமுடிகிறது. நாளிதழ்களில் நாள்தோறும் கொலைச்செய்திகள். அவை, தன்னடக்கத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்திவருகின்றன. பொருளுக்காகக் காதலித்து ஏமாற்றும் வழக்கம் இனி இருக்காது. ஏனெனில், பெற்றோரின் ஒப்புதலின்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை எனச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. பெற்றோர்கள் உள்ளம் குளிரும்தானே?

தன்னடக்கத்தால் உயர்ந்த மணிமேகலையின் பெருமையினை எடுத்துரைக்கும் இலக்கியமாகவும் “மணிமேகலை” இலக்கியத்தைக்கொள்ளமுடியும்தானே? மணிமேகலையில் இன்னும் பல புதையல்கள் இக்காலத்திற்கும் வழிகாட்டுவனவாக அமைகின்றன. இன்று மணிமேகலையின் அறிவுரை ஒன்றைப்பார்த்துவிட்டோம். அறியாத வயதிலும் அறிவினை ஊட்டிய மணிமேகலை மாதரசிதானே.?

சனி, 12 ஜூன், 2021

கல்வி என்னும் மலைவாழை

 


ஆசிரியப் பணியைவிட உலகில் உயர்ந்த பணி உலகில் இல்லை. ஏனென்றால் உயிருள்ள பொம்மைகளை உயர்ந்த மனிதர்களாக உலகில் உலவச்செய்யும் கலை ; அது ஆசிரியர்களுக்கு மட்டுமே கைவந்தகலை. ஒருவர் மருத்துவரை வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்றால் அவர் போற்றப்படுவார். ஆனால், ஆசிரியரைச் சந்தித்ததே இல்லை என்றால்?... அவர் மதிக்கப்படுவாரா? இல்லைதானே?. வாழ்நாளில் எப்பொழுதாவது ஒருவர் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்திருந்தால் அந்த மருத்துவமனையை மறக்கவே முயற்சிப்பார். ஆனால், கல்வி கற்ற பள்ளியை மறப்பார்களா? எந்நாளும் மறவார். வயதான பின்பும் அங்குசென்று பார்த்து மகிழ்வார் ; நின்று மகிழ்வார் ; முடிந்தால் ஓடியும் ஆடியும் மகிழ்வார்தானே?

கல்வி அத்துணை அருமையானது ; பெருமையானது ; அகலமானது ; ஆழமானது ; அழகானது.  அதனால்தான் கல்விகற்ற இடத்தைப் பார்ப்பதில் அத்துணை மகிழ்ச்சி.

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழை. மனச்சிக்கலைப் போக்கும் கல்வி. அதனால்தான் பாவேந்தர் ‘மலைவாழை அல்லவோ கல்வி” என்றார்.  இச்சொற்றாடரை ஆய்வு செய்வதே இக்கட்டுரை.

வாழை – மங்கலக்கனி  - அதனால் ஒவ்வொரு விழாவிலும் முதலிடம்பெறும். இது ஒரு கற்பகக் கனி. “கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி”. இது இறைவனை மட்டுமன்று அவர்படைத்த வாழையையும் குறிக்கும். ஏனெனில், இப்பழம் காலத்திற்கேற்ப கிடைக்கும் கனியன்று; காலம் தவறாமல் கிடைப்பது. எக்காலமும் பசி தீர்க்கும் பெருமையுடையது. அதனால்தான் இறைவனுக்கும் படைக்கப்படுகிறது.

கல்வியும் அப்படித்தான். இறைவனே தொடக்கமும் இறைவனே முடிவும். அகரத்தில் தொடங்கி முப்பாற்புள்ளியில் முடிகிறது. அகரம் அறிவுக்கண் திறப்பு. முப்பாற்புள்ளி என்பது மெய்யறிவுக் (மூன்றாவது) கண் திறப்பு. என்ன தலைப்பு மாறிப்போகிறதே? என எண்ணுகிறீரா? என்ன செய்வது. எண்ணியதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஒரு மகிழ்ச்சி. சரி, தலைப்புக்கு வந்துவிடுவோம்.

மலைவாழையை, பெருமலைவாழை, சிறுமலைவாழை என இருவகையாகப் பிரிப்பர். கல்வியும் அப்படியே கலை, அறிவியல் என்னும் இருபிரிவுக்குள் அனைத்தையும் அடக்கிவிடமுடிகிறது.

மலை வாழை சூட்டைத் தரும் – குளிர் பிரேதசங்களுக்குரிய நல்ல கனி. மலைவாழை. சளி (கோழை) பிடிக்காமல் காக்கும். கல்வியும் அறிவுச்சூட்டினை உருவாக்கும். கோழையாகாமல் வீரனாக வளரவழி செய்யும். 

மலைவாழை, மனித உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் “செரட்டோனின்” என்னும் இயக்குநீரை (ஹார்மோன்) சுரக்கச்செய்கிறது. கல்வி அறிவுத்திறனைச் சுரக்கச்செய்து தன்னம்பிக்கையை வளர்த்து  மகிழ்ச்சியுடன் வாழவழிவகுக்கிறது.

மலைவாழை தாய்ப்பால் சுரக்கத் துணைசெய்கிறது. கல்வியறிவு தாய்மொழிப் பற்றையும், தாய்நாட்டுப் பற்றையும் உருவாக்கி நாடு வாழவழிசெய்கிறது.

மலைவாழை மந்தத்தை நீக்கும். கல்வியறிவு அறிவு மந்தத்தை நீக்கிப் புதைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறது.

மலைவாழை குருதியில் (ரத்தத்தில்) குருதிவளிக்காவி (ஹீமோகுளோபினை) அதிகரிக்கும். கல்வி தன்னம்பிக்கையினை வளர்த்து ஊக்கமுடன் வாழவைக்கும்.

 மலைவாழையினால் உயிரணு (செல்கள்) சுறுசுறுப்பாகும். கல்வியால் விழிப்புணர்வு உண்டாகும். செல்கள் சேர்ந்து உடலில் பல்வேறு உறுப்புகளாக மாறுவதுபோல் கல்வியறிவு முயற்சிக்கும் பயிற்சிக்கும் விரும்புகின்ற துறையில் வல்லவராக மாற்றுகிறது.

மலைவாழையினைச் சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். கல்வியினைப் பெறுவதற்கு உடல்வலிமை தேவையில்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் எவரும் கற்க இயலும்.

மலைவாழை புற்றுநோயைத் தடுக்கும். பிறந்ததே வீண் என நாளும் எண்ணியெண்ணி உடலும் உள்ளமும் வருந்த தாழ்வுமனப்பான்மையுடன் திரிவோரைக் கல்வி மேம்படுத்தும்.

மலைவாழை, உணவைச் சீரணமாக்கத் துணை செய்யும். கல்வி, வறுமை, ஏழ்மை அனைத்தையும் உண்டு வளமாக வாழவழி செய்யும்.

மலைவாழை தோல் கருத்தாலும் பழம் நன்றாக இருக்கும். கல்வி நிறத்தைப் பார்க்காமல் அவருடைய பதவியைப் பார்க்கச்செய்யும் ; மதிப்பினை உண்டாக்கும் ; இழிவு செய்தோரையும் வணங்கவைக்கும்.

மலைவாழை அழிந்துவரும் பயிர்களுள் ஒன்றாக இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுத்தால் காக்க இயலும். கல்வியில் பிறமொழிச்செல்வாக்கானது திறமானவர்களை உருவாக்க இயலாமல் தேய்ந்துவருகிறது. தாய்மொழிக்கல்வியால் மட்டுமே எண்ணங்கள் விரியும் ; உலகிற்கும் திறமை தெரியும்.

மலைவாழை சீறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு வேண்டாம். கல்வியை ; ஆசிரியர்களை, ஏன் மதிக்கவேண்டும்? என்னும் சிறுமதிகொண்ட கோளாறு உள்ளவர்களுக்கு கல்வி கற்பித்தால் ஆபத்துதான். அவர்களால் வீட்டிற்கோ நாட்டிற்கோ பயன் இருக்காது.

இனி, மலைவாழையையும் கல்வியையும் நாம் பெறுவதோடு மற்றவர்களும் பெற வழிகாட்டுவோம். இனிப்பாவேந்தர் பாடலைக் காண்போமா?

‘தனனான தனனான னானா – தான

தானன்ன தானன்ன தானன்ன தான”

இந்த தாளத்தில் பாடினால் இன்னும் மலைவாழை போல் எளிதில் உள்ளத்துள் இறங்கும். பாடிப் பார்க்கிறீர்களா?

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட

சாலைக்குப் போவென்று சொன்னால் உன்அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி

வேளைதோறும் கற்றுவருவதால் படியும்

மலைவாழை அல்லவோ கல்வி? – நீ

வாயார உண்ணுவாய் போயென் புதல்வி.”

எத்தனை அழகு பாருங்கள். இன்னும் சுவைக்க ஆசை உண்டா? உண்டாயின் உங்களுக்காகப் பாவேந்தர் “இசையமுது”  நூலில் “பெண்ணுக்கு” எனப்பாடியுள்ள பாடலை முழுதாகப் படித்துச் சுவைப்பீர் ; மகிழ்வீர்.

 

 

 

 

ஞாயிறு, 6 ஜூன், 2021

கற்பு என்னும் திண்மை – தமிழ் இலக்கியப்பதிவுகள்

 


கற்பு என்னும் திண்மை – தமிழ் இலக்கியப்பதிவுகள்

“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” - சொல் திறம்பாமல் வாழ்வதே ‘கற்பு’ என்பது ‘தமிழ் மூதாட்டி’ ஔவையின் வாக்கு.  இதனை முறையாகக் கற்பித்த ஒழுக்கமே கற்பாயிற்று. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்பதனைக் கற்பித்ததும், “கற்புடன் வாழவேண்டும்” எனக் கற்பித்துதும் இரண்டல்ல ; ஒன்றே.  

      இதை எவ்வாறு ஒப்புவது? என நீங்கள் கேட்பதுபுரிகிறது. ஒல்காப்புகழ் தொல்காப்பியம் கூறினால் ஒத்துக்கொள்வீர்தானே?

     கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

     கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

     கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே (140)

என்னும் நூற்பாவில் ‘கற்பு’ குறித்து இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியர். இந்நூற்பாவில் மூன்று கருத்துக்களை வரிசைப்படுத்துகிறார். முதலில் ‘கரணமொடு புணர்வது”. ‘கரணம்’ என்பது வதுவையைக் குறிக்கும். ‘வதுவை’ என்பது கூடி வாழ்வதற்கான வழிவகை செய்தல்.  எனவே, எந்நாளும் கூடிவாழும் வகையில் தலைவனையும் தலைவியையும் இணைந்துவாழச்செய்வதே ‘கற்பு வழக்கு’ என்கிறார் தொல்காப்பியர். உண்மையாக வாழ்வதனால் மட்டுமே கூடிவாழஇயலும் என்பதனை வாழ்ந்தவர்கள் வழி அறியலாம்தானே? ‘உண்மையாக வாழ்தல்’ என்பது சொல் திறம்பாமையையும் குறிக்கும்தானே?

     இரண்டாவது,  திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் கல்வி, பணம், புகழ், பதவி என எவற்றையெல்லாம் அளவீடாகக் கொள்ளமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்து ஆண்வீட்டார் திருமணம் செய்விக்கவேண்டும். இதுவே கொளற்குரிய மரபு.

     மூன்றாவது, புகுந்தவீட்டில் எக்குறையுமின்றி வாழவேண்டும் என்பதனை உணர்ந்து பெண்வீட்டார் அத்தகைய வாய்ப்புடைய ஆண்மகனையே திருமணம் செய்விக்கவேண்டும். இதுவே கொடைக்குரிய மரபு.

     இவ்வாறு திருமணங்கள் செய்யப்படும்போது, வாழ்க்கை இனிதாகும். இல்லையேல் நரகம்தான். மருத்துவம் படித்த பெண்ணை, மருத்துவத்தைப் பற்றி ஒரு துளியும் அறியாத ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தால் என்னாகும்?. இரவுபகல் பாராது உழைக்கும் மருத்துவத்தின் அருமையினையும் பெருமையினையும் அறியாது செயல்படுவான். இதனால் வாழ்நாள் நரகமாகிவிடும்தானே? உணர்ந்தவனாயின் உயிர்காக்கும் தெய்வீகப்பணி என மனைவியைக் கொண்டாடுவான்தானே?

     கணவன் மட்டும்தான் மனைவியின் அருமையினை அறிவானா? மனைவி கணவனின் அருமையை அறியமாட்டாளா? என்றுதானே கேட்கவருகிறீர். நீங்கள் கேட்பீர்கள் என்பதால்தான், தற்காலத்தில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வு ஒன்றினைக் கூறவிழைகிறேன்.

     நிகிதாகௌர் என்னும் பெண்மணிக்குத் திருமணம் நடக்கிறது. கணவன்  டோராடூனைச் சார்ந்த விபூதிசங்கர்தவுண்டி, இராணுவ மேஜர். பத்து மாதங்கள் ஓடின. 2019 பிப்ரவரிமாதம் இந்திய எல்லையான ஜம்முகாஷ்மீர் ‘புல்வாமா’வில் தாக்குதல் நடக்கிறது. எதிரிகளால் மத்திய இருப்புக்காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) நாற்பது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். உடனடியாக எதிரிகளுக்குப் பாடம் கற்பிக்க இராணுவம் இறங்குகிறது. அப்படையில்தானே விரும்பி களம் இறங்குகிறார் விபூதிசங்கர்தவுண்டி. எதிரிகள் துரத்தப்படுகின்றனர் ; கொல்லப்படுகின்றனர். இப்போரில் மேஜரும் உயிரிழக்கிறார். காலம்காலமாக இப்படி நாட்டுக்காக வீரர்கள் உயிர்கொடுத்துக்கொண்டிருப்பது இயல்பான நிகழ்வுதானே என நினைக்கிறீர்கள். அப்படித்தானே? இத்துடன் அவர்களுடைய வீரப்பயணம் முடிந்துவிடவில்லை. இப்போதுதான்தொடங்கி இருக்கிறது என்கிறார் நிகிதா.

     கணவனை இழந்த துக்கத்தில் சோர்ந்துவிடாமல் கணவரின் தேசபக்தியினை தனதாக்கிக்கொள்கிறார். கணவனின் கனவினை நினைவாக்கத் தொடங்கினார். இலட்சக்கணக்கில் சம்பாதித்த தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலையை விட்டுவிட்டு, தகுதித்தேர்வெழுதி இராணுவத்தில் சேர்ந்துவிட்டார். கணவனின் இலட்சியக்கனவினை நினைவாக்கத் துணிந்த பெண்ணின் பெருமையினை என்னென்பது? ‘உனக்காக வாழ்வேன்’ என்னும் சொல்திறம்பாத கற்புத்திறம் பெருமையுடையதுதானே?

     பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

     திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள்-54)

என்னும் தெய்வப்புலவரின் வாக்கிற்கு வாழ்க்கையான பெண்மணிதானே இவர்.

     ஆம்! அருமையான பெண்மணிதான். பெண்ணுக்கு மட்டும்தான் கற்பா ? ஆணுக்குக் கற்பில்லையா ? என்னும் கேள்வி உங்களுக்குள் எழுகிறதுதானே? அதனால்தான்  ‘ஏக பத்தினியுடன் வாழ்ந்த இராமனை இராமாயணத்தில் படம்பிடித்துக்காட்டினார் கம்பர். தமிழில் இல்லாத பொருளென்று எதுவும் இல்லைதானே?

 

வெள்ளி, 4 ஜூன், 2021

பெண்கள் சோர்வதில்லை – திருக்குறள் விளக்கம்

 

ஞாயிற்றிலும் உழைக்கும் திங்கள் – பெண்

எத்தனை விடுப்புகள் வந்தாலும்  வீட்டு வேலையில் பெண்களுக்கு விடுப்பு உண்டா?.  அனைவரும் ஓய்வெடுக்கும் நாளிலும் பெண்ணின் இடுப்பு ஒடிந்துபோகும் அளவிற்கு வேலை. ஏனென்றால் அன்றுதான் விருந்துபோல் உணவு சமைக்கவேண்டுமாயிற்றே. துணிதுவைக்கும் எந்திரம் துவைத்த பின் ஓய்வெடுக்கும். மாவரைத்த எந்திரமும் அரைத்த பின் ஓய்வெடுக்கும். சட்னி அரைத்த குறுஅரவையும் (மிக்ஸி) அரைத்தபின் ஓய்வெடுக்கும். ஆனால் ஓய்வறியாமல் நாளும் உழைத்திடும் பெண்கள் பலர். வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில்தான் ஓய்வெடுக்கமுடிகிறது. வீட்டுவேலைகளைவிட அவர்களுக்கு அலுவலக வேலைகள் பெரிதாகத் தெரிவதில்லை. அதனால்தான் பலர் காலை சிற்றுண்டியையும் அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றே உண்கின்றனர். எந்திரம்போன்ற அவர்களின் ஓட்டத்தை, அலுவலகத்தில் நுழையும்போது அவர்களின் தலையிலிருந்து எட்டிப்பார்க்கும் சீப்பு நினைவுபடுத்தும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலுள்ள பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என எண்ணுவதும், வீட்டில் உழைக்கும் பெண்கள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என எண்ணுவதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதானே.

பெண்களுக்குத் தன்னைக் காத்துக்கொள்வதே அரும்பணி. சமூகத்தில் பெண்களைப் பகடி செய்வது பழக்கமாகி இருக்கிறது. ஒரு பெண்ணை, தாயாகவும் தங்கையாகவும் பார்க்கும் பழக்கம் குறைந்துவருவதற்கான அடையாளம் அது. ஆண் குழந்தைகளுக்குப் படிப்பதுமட்டுமே போராட்டமாக இருக்கிறது. கடினமாகப் படித்தால் வெற்றிவாகை சூடமுடிகிறது. ஆனால், பெண்கள் நன்றாகப் படித்தால் மட்டும்போதாது, நாளும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று திரும்புவதே போராட்டமாக இருக்கிறது. அதனை எதிர்கொள்ள முடியாத எளிய குடும்பங்களில் பெண்களின் படிப்பு கனவாகி நின்றுவிடுகிறது. நன்றாகப் படித்து பெண் மருத்துவர்களாக ; பொறியாளராக ; காவல்துறை அதிகாரியாக ; சிறந்த ஆசிரியராக ; விஞ்ஞானியாக வரவேண்டியவர்கள் வீட்டிற்குள் முடங்கிப்போய்விட்டதனைக் காணமுடிகிறது. பெண் குழந்தைகள் கல்வி பெறாவிட்டாலும் பாதுகாப்பாக வாழ்ந்தால்போதும் என்னும் எண்ணம் வளர்ந்துவிட்டது. இத்தனை இழிவுக்கும் யாரைக் காரணம் காட்டுவது? இழிவான ஆண்களையா? அப்படிப்பட்ட இழிவான ஆண்களை ஒழுக்கமாக வளர்க்கமுடியாத பெண்களையா? ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்?  வளர்ப்பதில் ஆண்களுக்குப் பங்கில்லையா? எனக் கேட்காதீர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே குடும்பத்தை மட்டுமின்றி தன்னைக் கொண்டானையும் பேணிப்பாதுகாக்க முடியும். ஆண்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையினையே பெண்தானே அறிந்து வெளிப்படுத்துகிறாள். அதனால்தான் திருமணத்திற்குப் பின் ஆண்களின் வாழ்க்கை அழகானதாக மாறிவிடுகிறது.  இதனையே, தெய்வப்புலவர் திருவள்ளுவர்

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (திருக்குறள் – 56)

 

என்னும் திருக்குறளில் உணர்த்தியுள்ளார்.

 

     ஒரு சொல் வெல்லும் ; ஒரு சொல் கொல்லும் என்பர் பெரியோர். அது இல்வாழ்க்கைக்குப் பெரிதும் பொருந்தும். பெண்ணுடைய கடைக்கண் பார்வையும் கனிந்த சொல்லும் எத்தகைய ஆணையும் திருத்திவிடும் அருமையுடையது. எச்சொற்களை, எப்போது பேசவேண்டும் என்னும் கலை பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. ஏனெனில், சிறுவயது முதலே இப்படி இருக்கவேண்டும். இப்படிப்பேச வேண்டும் என்னும் கட்டுப்பாடுகள் சமூகத்தால் கற்பிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, ஏன்? எதற்கு? இவை அனைத்தும் நன்மைக்கா? தீமைக்கா? என அளவறிந்து செயல்படும் திறம் பழக்கமாகிவிடுகிறது. எனவே, பெருமையுடைய பெண், புகழுக்குரிய செயல்களை மட்டுமே செயல்படுத்த விழைகிறாள்.

    

     தனக்கு உடல் நலம் சரியில்லாதபோது கூட சிறிதும் பொருட்படுத்தாமல் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு ஆக்கிவைத்துவிட்டே ஓய்வெடுப்பாள். தன் சோர்வினை வெளிப்படுத்தமாட்டாள். பின் தூங்கி முன் எழும் பெருமையுடையாள். வீட்டிலுள்ள அனைவரும் திருமணத்திற்கோ, கோவிலுக்கோ சென்று திரும்புவர். அனைவரும் வீட்டில் நுழைந்ததும் ஓய்வெடுப்பர். ஆனால், பெண்ணோ அடுத்த வேளை உணவிற்கு வழி செய்வாள். அவளுடைய சோர்வு என்ன ஆனது?. அவளுடைய அன்பில் சோர்வே சோர்வடைந்து ஓடிவிடுகிறது.

 

          தாயாருக்கு எண்பது வயதானாலும் தனக்குத் துணை செய்ய வேண்டுமென அன்புக்கட்டளையிடும் மகள்களையும் பல  இடங்களில் பார்க்கமுடிகிறதுதானே?. அந்த வயதிலும் முடிந்தும் முடியாமலும் அனைத்து இல்லப்பணிகளையும் செய்யும் தாய்மார்களும் தமிழகத்தில் உண்டுதானே?

“ஏன்? இப்படி சோர்வில்லாமல் உழைக்கின்றீர்கள்?” எனக் கேட்டுப்பாருங்கள். “‘ஏன் தனியாக ஊரில் கஷ்டப்படுகிறீர்கள். இங்கே வந்துவிடுங்கள்” என. மகள் அழைத்தாள். ராணி போல் வாழலாம் என நினைத்தேன். இங்கே வேலைக்காரிபோல் வாழ்கிறேன். அவளை நம்பிவந்ததன் விளைவு. இப்படியாகிவிட்டது. மீண்டும் ஊருக்குத்திரும்பவும் முடியாது. மகள் பார்த்துக்கொள்வதாக பெருமையுடன் கூறிவந்துவிட்டேன்.  சரி. பரவாயில்லை. பேரன் பேத்திகளைத் தானே பார்த்துக்கொள்கிறேன்” என்பாள்.  அந்த அன்பில்தான் அவளுடைய சோர்வுகள் காணாமல் போகின்றன. கருணை உள்ளங்களை காயப்படுத்தி வாழ்வது  சிலருக்கு வாடிக்கையாகிவிட்டதே வேடிக்கைதான்.

நாட்டு மக்கள் நன்றாக வாழவேண்டுமென எல்லைக்கோட்டில் உழைத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்புப்படைவீரர்கள் எத்தனைப் பெருமை உடையவர்கள். அவர்களைப்போலவே வீட்டில் உள்ள அனைவரின் நன்மைக்காகவும் தனது சோர்வை மறந்துபோகிறாள் பெண். அவர்களால்தான் நாடும், வீடும் செழிக்கிறது.  

எட்டு வயதில் தொடங்கிய பணி எண்பது வயதிலும் தொடர்கிறது என்றால் “சோர்விலாள் பெண்” என்னும் தெய்வப்புலவரின் வாக்கு தேக்குதானே.