தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 4 ஜூன், 2021

பெண்கள் சோர்வதில்லை – திருக்குறள் விளக்கம்

 

ஞாயிற்றிலும் உழைக்கும் திங்கள் – பெண்

எத்தனை விடுப்புகள் வந்தாலும்  வீட்டு வேலையில் பெண்களுக்கு விடுப்பு உண்டா?.  அனைவரும் ஓய்வெடுக்கும் நாளிலும் பெண்ணின் இடுப்பு ஒடிந்துபோகும் அளவிற்கு வேலை. ஏனென்றால் அன்றுதான் விருந்துபோல் உணவு சமைக்கவேண்டுமாயிற்றே. துணிதுவைக்கும் எந்திரம் துவைத்த பின் ஓய்வெடுக்கும். மாவரைத்த எந்திரமும் அரைத்த பின் ஓய்வெடுக்கும். சட்னி அரைத்த குறுஅரவையும் (மிக்ஸி) அரைத்தபின் ஓய்வெடுக்கும். ஆனால் ஓய்வறியாமல் நாளும் உழைத்திடும் பெண்கள் பலர். வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில்தான் ஓய்வெடுக்கமுடிகிறது. வீட்டுவேலைகளைவிட அவர்களுக்கு அலுவலக வேலைகள் பெரிதாகத் தெரிவதில்லை. அதனால்தான் பலர் காலை சிற்றுண்டியையும் அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றே உண்கின்றனர். எந்திரம்போன்ற அவர்களின் ஓட்டத்தை, அலுவலகத்தில் நுழையும்போது அவர்களின் தலையிலிருந்து எட்டிப்பார்க்கும் சீப்பு நினைவுபடுத்தும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலுள்ள பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என எண்ணுவதும், வீட்டில் உழைக்கும் பெண்கள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என எண்ணுவதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதானே.

பெண்களுக்குத் தன்னைக் காத்துக்கொள்வதே அரும்பணி. சமூகத்தில் பெண்களைப் பகடி செய்வது பழக்கமாகி இருக்கிறது. ஒரு பெண்ணை, தாயாகவும் தங்கையாகவும் பார்க்கும் பழக்கம் குறைந்துவருவதற்கான அடையாளம் அது. ஆண் குழந்தைகளுக்குப் படிப்பதுமட்டுமே போராட்டமாக இருக்கிறது. கடினமாகப் படித்தால் வெற்றிவாகை சூடமுடிகிறது. ஆனால், பெண்கள் நன்றாகப் படித்தால் மட்டும்போதாது, நாளும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று திரும்புவதே போராட்டமாக இருக்கிறது. அதனை எதிர்கொள்ள முடியாத எளிய குடும்பங்களில் பெண்களின் படிப்பு கனவாகி நின்றுவிடுகிறது. நன்றாகப் படித்து பெண் மருத்துவர்களாக ; பொறியாளராக ; காவல்துறை அதிகாரியாக ; சிறந்த ஆசிரியராக ; விஞ்ஞானியாக வரவேண்டியவர்கள் வீட்டிற்குள் முடங்கிப்போய்விட்டதனைக் காணமுடிகிறது. பெண் குழந்தைகள் கல்வி பெறாவிட்டாலும் பாதுகாப்பாக வாழ்ந்தால்போதும் என்னும் எண்ணம் வளர்ந்துவிட்டது. இத்தனை இழிவுக்கும் யாரைக் காரணம் காட்டுவது? இழிவான ஆண்களையா? அப்படிப்பட்ட இழிவான ஆண்களை ஒழுக்கமாக வளர்க்கமுடியாத பெண்களையா? ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்?  வளர்ப்பதில் ஆண்களுக்குப் பங்கில்லையா? எனக் கேட்காதீர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே குடும்பத்தை மட்டுமின்றி தன்னைக் கொண்டானையும் பேணிப்பாதுகாக்க முடியும். ஆண்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையினையே பெண்தானே அறிந்து வெளிப்படுத்துகிறாள். அதனால்தான் திருமணத்திற்குப் பின் ஆண்களின் வாழ்க்கை அழகானதாக மாறிவிடுகிறது.  இதனையே, தெய்வப்புலவர் திருவள்ளுவர்

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (திருக்குறள் – 56)

 

என்னும் திருக்குறளில் உணர்த்தியுள்ளார்.

 

     ஒரு சொல் வெல்லும் ; ஒரு சொல் கொல்லும் என்பர் பெரியோர். அது இல்வாழ்க்கைக்குப் பெரிதும் பொருந்தும். பெண்ணுடைய கடைக்கண் பார்வையும் கனிந்த சொல்லும் எத்தகைய ஆணையும் திருத்திவிடும் அருமையுடையது. எச்சொற்களை, எப்போது பேசவேண்டும் என்னும் கலை பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. ஏனெனில், சிறுவயது முதலே இப்படி இருக்கவேண்டும். இப்படிப்பேச வேண்டும் என்னும் கட்டுப்பாடுகள் சமூகத்தால் கற்பிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, ஏன்? எதற்கு? இவை அனைத்தும் நன்மைக்கா? தீமைக்கா? என அளவறிந்து செயல்படும் திறம் பழக்கமாகிவிடுகிறது. எனவே, பெருமையுடைய பெண், புகழுக்குரிய செயல்களை மட்டுமே செயல்படுத்த விழைகிறாள்.

    

     தனக்கு உடல் நலம் சரியில்லாதபோது கூட சிறிதும் பொருட்படுத்தாமல் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு ஆக்கிவைத்துவிட்டே ஓய்வெடுப்பாள். தன் சோர்வினை வெளிப்படுத்தமாட்டாள். பின் தூங்கி முன் எழும் பெருமையுடையாள். வீட்டிலுள்ள அனைவரும் திருமணத்திற்கோ, கோவிலுக்கோ சென்று திரும்புவர். அனைவரும் வீட்டில் நுழைந்ததும் ஓய்வெடுப்பர். ஆனால், பெண்ணோ அடுத்த வேளை உணவிற்கு வழி செய்வாள். அவளுடைய சோர்வு என்ன ஆனது?. அவளுடைய அன்பில் சோர்வே சோர்வடைந்து ஓடிவிடுகிறது.

 

          தாயாருக்கு எண்பது வயதானாலும் தனக்குத் துணை செய்ய வேண்டுமென அன்புக்கட்டளையிடும் மகள்களையும் பல  இடங்களில் பார்க்கமுடிகிறதுதானே?. அந்த வயதிலும் முடிந்தும் முடியாமலும் அனைத்து இல்லப்பணிகளையும் செய்யும் தாய்மார்களும் தமிழகத்தில் உண்டுதானே?

“ஏன்? இப்படி சோர்வில்லாமல் உழைக்கின்றீர்கள்?” எனக் கேட்டுப்பாருங்கள். “‘ஏன் தனியாக ஊரில் கஷ்டப்படுகிறீர்கள். இங்கே வந்துவிடுங்கள்” என. மகள் அழைத்தாள். ராணி போல் வாழலாம் என நினைத்தேன். இங்கே வேலைக்காரிபோல் வாழ்கிறேன். அவளை நம்பிவந்ததன் விளைவு. இப்படியாகிவிட்டது. மீண்டும் ஊருக்குத்திரும்பவும் முடியாது. மகள் பார்த்துக்கொள்வதாக பெருமையுடன் கூறிவந்துவிட்டேன்.  சரி. பரவாயில்லை. பேரன் பேத்திகளைத் தானே பார்த்துக்கொள்கிறேன்” என்பாள்.  அந்த அன்பில்தான் அவளுடைய சோர்வுகள் காணாமல் போகின்றன. கருணை உள்ளங்களை காயப்படுத்தி வாழ்வது  சிலருக்கு வாடிக்கையாகிவிட்டதே வேடிக்கைதான்.

நாட்டு மக்கள் நன்றாக வாழவேண்டுமென எல்லைக்கோட்டில் உழைத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்புப்படைவீரர்கள் எத்தனைப் பெருமை உடையவர்கள். அவர்களைப்போலவே வீட்டில் உள்ள அனைவரின் நன்மைக்காகவும் தனது சோர்வை மறந்துபோகிறாள் பெண். அவர்களால்தான் நாடும், வீடும் செழிக்கிறது.  

எட்டு வயதில் தொடங்கிய பணி எண்பது வயதிலும் தொடர்கிறது என்றால் “சோர்விலாள் பெண்” என்னும் தெய்வப்புலவரின் வாக்கு தேக்குதானே.

வியாழன், 3 ஜூன், 2021

திருவள்ளுவர் காட்டிய வழியில் - ஊக்கம்ஆக்கம் தருமா? –

 

தளச்சியின்மையே முயற்சி

     ஊக்கம் உடைமை உடைமையில் உயர்ந்தது. ஏனென்றால் அது வெளியிலிருந்து வருவதில்லை. உள்ளிருந்து வருகிறது. வெளியிலிருந்து வரும் காற்று நின்றுவிட்டால் மின்விசிறியை ஓட விடலாம். உள்ளிருந்து வரும் காற்று நின்றுவிட்டால் …? அவ்வளவுதான். உவமை அச்சுறுத்துகிறதே என்கிறீர்களா? . நான் படித்ததைக் கூறினால் மகிழ்ச்சி அடைவீர்கள். சொல்லட்டுமா?. முட்டை வெளியிலிருந்து உடைபட்டால் இறப்பு. உள்ளிருந்து உடைபட்டால் பிறப்பு. சரிதானே?

     ஊக்கம் மனிதனுக்கு வேண்டுமா ? என்னும் கேள்விக்கே இடமில்லாத வகையில் மனிதனின் ஆளுமையே ஊக்கத்தால்தான் அமைகிறது என்பதனை உணர்த்தும் வகையில் “ஆள்வினை உடைமை” எனப் பெயரிட்டிருக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     மடியுளான் புகழின்றி மடிவான் ; மடியிலான் புகழோடு உயர்வான். ‘மடி’ என்னும் சோம்பல் எத்தகைய உயர்வையும் இழிவாக்கிவிடும். பணம், புகழ், பதவி அனைத்தும் சோம்பலால் சீரழிந்துபோகும். “குந்தி தின்றால் குன்றும் குறையும்” என்பது தானே முன்னோர் மொழி. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றுவதுதானே அறிவுடைமை.

     ‘மடி’ என்னும் சோம்பல் இன்றி வாழ்பவன் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைசேர்ப்பான். ‘வாழ்பவன்’ மட்டும் தானா? ‘வாழ்பவள்’ இல்லையா? எனக் கேட்காதீர்கள்.  ‘சிவத்துக்குள் சக்தி’ இருக்கிறதுதானே. கடுமையாக உழைப்பவனுக்குத் திருமகளின் அருள்மழை அளவின்றி பொழியும். “எப்படி?” என்றுதானே கேட்கிறீர்கள். நான் படித்ததைக்கூறினால் ஒத்துக்கொள்வீர்கள்.

     கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவன் பிரதாப் என்னும் ஏழை உழவரின் மகன். சிறுவயது முதலே வறுமை வாழ்வு.  பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, படிப்பதற்குக் கிராமத்தில்  வசதியில்லாத போதும்  பக்கத்து ஊரில் கணினி மையத்தில் ‘ஏகலைவன்’ போல் தானாகவே கற்றுக்கொள்கிறான். பொறியியல் கல்லூரியில் சேர வசதி இல்லாமல் இயற்பியல் பாடத்தைப்படிக்கிறான். இருப்பினும் அவனுடைய ‘எந்திரப் பறவை’ என்னும் “ட்ரோன்” குறித்த எண்ணம் நாளும் வளர்ந்துகொண்டே இருந்தது. கல்லூரியில் பயிலும் காலத்தில் விடுதியில் பணம் கட்ட வசதியில்லாததால் துரத்தப்படுகிறார். மைசூர் பேருந்து நிலையத்தில் தங்கிக்கொண்டு கல்லூரிக்கு சென்றுவருகிறார். வசதியும் வாய்ப்பும் இல்லாததால் வீணான மின்னணுக் கழிவுகளைத் தேடி மும்பாயிலும், விசாகப்பட்டினத்திலும் அலைகிறான். அப்போதுதான் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐ.ஐ.டி) தில்லியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி நடத்துகிறது. தொடர்வண்டியில் பயணச்சீட்டுப் பதிவு செய்யக்கூடப்பணம் இல்லாமல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்கிறான். அத்தகைய பொருட்களைக் கொண்டு ‘எந்திரப்பறவை’யைப் பறக்கச்செய்கிறான்.  எண்பது முறை தோல்வி அடைகிறான். இறுதியில் வெற்றிபெறுகிறான். இந்திய அளவில் நடைபெற்ற அப்போட்டியில் இரண்டாம் இடம்பிடிக்கிறான். அவனுடைய அறிவியல் மேதைமையை உணர்ந்துகொண்ட அறிஞர் ஒருவர் ஜப்பான் நாட்டு “டோக்யோ”வில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள அறிவுறுத்துகிறார்.

     மைசூர் பேருந்து நிறுத்தத்தையே பார்த்து வியந்த ஏழை மகனுக்கு “டோக்யோ”  செல்லும் கனவினை நினைவாக்கும் ஊக்கம் பிறந்தது. அப்போட்டியில் கலந்துகொள்ள பேராசிரியர் பரிந்துரைக்கும் தகுதிச்சான்றிதழ் பெறவேண்டும் என்ற நிலையில் ஒரு பேராசிரியிடம் கேட்கிறான். “நீ படிக்கும் படிப்புக்கும் இப்போட்டிக்கும் சம்பந்தமில்லை” எனப் பேராசிரியர் பரிந்துரைக்க மறுக்கிறார். கையில் காசு இல்லாததால் பேருந்து நிலையங்களையே எங்கு சென்றாலும் இருப்பிடமாகக் கொள்கிறான். பொதுக்கழிப்பிடத்தையே பயன்படுத்துகிறான். ஒரு வேளைக்கு ஒரு ரொட்டிச் சாப்பிட்டு தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொள்கிறான். எண்ணம் முழுதும் “டோக்யோவில் எழுபதாவது இடத்தையாவது பிடித்துவிடவேண்டும்” என்னும் இலக்கு நோக்கியே இருந்தது

உணவும் இல்லை ; பணமும் இல்லை ; பரிந்துரை கடிதமும் இல்லை. இப்படி எத்தனையோ தடைகள். ஊக்கத்தை மட்டும் இழக்கவில்லை. முப்பது நாட்கள் நாளும் கடினமாக உழைக்கிறான். பரிந்துரைக் கடிதம் பெறுகிறான். சமயத்துறவி ஒருவர் உதவ முன்வருகிறார். ஆனால், அது விமானப் பயணக்கட்டணத்திற்குக் கூட போதவில்லை. தாயின் தாலிக்கொடியை விற்றுப் பயணச்சீட்டு எடுத்துச் செல்கிறான். 

“டோக்யோ” சென்ற பிறகு போட்டி நடக்கும் இடத்திற்குச் செல்ல வசதியான பேருந்து இருந்தாலும் கையில் காசு இல்லாததால் அத்தனைச் சுமைகளையும் எடுத்துக்கொண்டு கட்டணம் குறைந்த பேருந்துகளில் ஏறி இறங்கி ; ஏறி இறங்கிச் செல்கிறான். உடல் வருந்த உள்ளம் தளராமல்  பல இன்னல்களைக் கடந்து போட்டியில் கலந்துகொள்கிறான்.  பந்தயக் குதிரை கொள்ளைப் பார்க்குமா? புல்லைப் பார்க்குமா? இலக்கு மட்டுமே தெரிகிறது.

     முடிவுகள் வருகிறது. எழுபதாவது இடத்தில் இருந்து தொடங்குகிறது. எழுபதாவது இடத்திலாவது பெயர்வந்துவிடவேண்டும் என எண்ணுகிறான் : வரவில்லை. அறுபதாவது இடத்திலாவது பெயர்வந்துவிடவேண்டும் என எண்ணுகிறான் : வரவில்லை. ஐம்பதாவது ; நாற்பதாவது ; முப்பதாவது ; இருபதாவது  என எதிர்பார்த்துப் பார்த்து ஏங்கிவிடுகிறான். “இனி அவ்வளவுதான்” என மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருக்கையில் முதல் பத்து இடங்களுக்கான அறிவிப்பு வருகிறது. அமெரிக்காவின் ஸ்டான்ஸ்ஃபோர்டு தான் முதலிடம் பிடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்கின்றனர்ன்.  ஸ்டான்ஸ்ஃபோர்டு இரண்டாம் இடம் என அறிவிப்பு வருகிறது. முதல் இடம் யார்? என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். “இந்தியாவின் பிரதாப் முதலிடம்” என அறிவிப்பு வருகிறது.  

இந்தியக்கொடி அனைத்து நாட்டுக்கொடிகளையும் விட உயரே பறக்கிறது. ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகை கிடைக்கிறது. பிரதாப் ‘ட்ரோன்’ பிரதாப் என அழைக்கப்பட்டார்.  இந்தியாவுக்குத் திரும்பும்போது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்று மகிழ்கின்றனர். ஊக்கத்தின் அருமை பெருமை அனைத்தும் அந்தத் தாயின் கண்களில் கண்ணீராகி வறுமையை அழித்துக்கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு (மாதத்திற்கல்ல) 60,000 ஆயிரம் சம்பளம் கொடுக்கிறோம் என ஃப்ரான்ஸ் அழைக்கிறது ; பல நாடுகள் அழைக்கின்றன.

     ‘ஏவுகணை மனிதர்’ ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் போல் “என் தாய்நாட்டிற்காகவே பணி செய்வேன்” எனக் கூறி அத்தனை வாய்ப்புகளையும் வேண்டாம் எனக்கூறுகிறார் பிரதாப். இனி, அவன் எனச்சொல்வது தவறுதானே. இந்தியப்பிரதமர் மோடி அவர்கள் விருது வழங்கினார். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பில் இணையக் கேட்டுக்கொண்டார். இன்று “இளைய அப்துல்கலாமாக” வலம்வருகிறார்.

      ஊக்கம் ஆக்கம் தந்துவிட்டதுதானே?. புகழ் ; பணம் ; பதவி எல்லாவற்றையும் மடியிலா மாணாக்கர் பெற்றுவிடுகிறார்.

     மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

     தாள்உளாள் தாமரையி னாள் (திருக்குறள்:617)

என்னும் தெய்வப்புலவரின் வாக்கே  செல்வாக்குதானே. 

 

ஞாயிறு, 30 மே, 2021

அரசியல் சாக்கடையல்ல – வாழ்க்கை – கம்பன் காட்டும் வழி


            கல்வி அமைச்சராக யார் இருக்கிறார்? எனக்கேட்டுப்பாருங்கள். உடனே, “எனக்கு அரசியலில் விருப்பம் கிடையாது” எனக் கூறும் இளைஞர்கள் பலரைக்காணமுடியும். “அரசியல்வாதிகளால்தான் கல்விக்கான திட்டங்களையும், பணிக்கான வாய்ப்புகளையும் பரிந்துரைக்கமுடியும். தெரியுமா?” எனக்கூறியதும் அரசியல் குறித்தும் ஆட்சி குறித்தும் அறியவேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்.

    “ஒரு நாளைக்கு, ஒரு ஏழைக்கேனும் உணவு கொடுக்கவேண்டும்” என நினைக்கும் சமூக அக்கறை கொண்டவர் அமைச்சராகிவிட்டால், அன்ன சத்திரங்களைக் கட்டி எத்தனையோ ஏழைகளின் பசியைப் போக்கிவிடுவார்கள்தானே?. “மக்கள் எவ்வாறு வாழவேண்டும்” என முடிவுசெய்வது அரசியல்வாதிகளுடைய செயல்பாட்டினைப் பொறுத்தே அமைகிறது. அத்தகைய வலிமையுள்ள அரசியலிலிருந்து இன்றைய இளைஞர்கள் விலகி நிற்பது நாட்டிற்கு நன்மையா?  அரசியல்வாதிகளைக் கயவர்களாகக்காட்டியே சில திரைப்படங்கள் வெறுப்பினை உண்டாக்கிவிட்டன. அந்நிலையிலிருந்து மாற்றவேண்டிய கடப்பாடும் அவர்களுக்குண்டு. கெடுப்பது எளிது ; ஆனால் திருத்துவது மிகக் கடினம். நாடு நலமாக அச்செயலை செய்துதானே ஆகவேண்டும்.


    தீயபழக்கங்களை. புகைபிடிப்பது ; மது குடிப்பது ; பெண்களைப் பகடி செய்வது என எத்தனைத் தீய பழக்கங்களைத் திரைப்படக்கதாநாயகர்கள் சிலர் கற்றுக்கொடுத்தனர் ; கொடுக்கின்றனர் ; கொடுப்பர். பொறுப்புணர்வுடனும் விழிப்புணர்வுடனும் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும். மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். அதனை அரசியல்வாதிகள் செய்துவிட்டால்போதும்.  அரசியல் சாக்கடையல்ல ; அதுவே வாழ்க்கை என்பதனை உணரமுடியும்.

    மக்கள் பொறுப்புடன் இருந்தால் தலைவனும் பொறுப்புடன்தானே இருக்கமுடியும். மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட தலைவன் மக்களை உயிர்போலும் தன்னை உடல்போலும் எண்ணவேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுகிறார் ‘கவிச்சக்கரவர்த்தி’ கம்பர்.

வயிரவான் பூணணி மடங்கன் மொய்ம்பினான்

உயிரெலாந் தன்னுயி ரொப்ப வோம்பலால்

செயிரில வுலகிற் சென்று நின்றுதீர்

உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்

 

என்னும் அடிகள் எத்தனை அழகானது. ‘மக்கள்’ எனக் கூறாமல் ‘உயிர்கள்’ எனக் கூறியது எத்தனை ஆழமானது.  மக்களை மட்டுமின்றி ஓரறிவு முதல் ஆறறிவு வரை அத்தனை உயிர்களையும் தன்னுயிராக எண்ணிக் காக்கும் அரசன் எத்தனைப் பெருமைக்குரியவன். அத்தகைய பெருமையுடைய அரசன் நாடாண்டால் மக்கள் மகிழ்ச்சியில்தானே திளைப்பார்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் ஆட்சிசெய்தால் ‘அரசியல் சாக்கடை’ எனக்குறிப்பிட இயலுமா?

     நாட்டு மக்களின் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகள் ஆட்சி செய்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்தானே? மக்கள் பணத்தை சூறையாடினால் என்னாகும்? ஏழ்மை பெருகும் ; பஞ்சம் ஏற்படும் ; கொள்ளை நடக்கும் ; தீய செயல்கள் படிப்படியாய் பெருகிக்கொண்டே இருக்கும்.


     எத்தனையோ ஏழைகள் அரசியலின் வழி பதவிபெற்று உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவதனையும் காணமுடிகிறது. அத்தகையோர் மக்களின் ஏழ்மையைப் போக்கி மகிழ்வர்.

ஒரு நல்ல நாட்டில் எவ்வாறு ஆட்சி நடைபெறவேண்டும்?. யார் செல்வந்தர்? யார் ஏழை? என அறிய இயலாத அளவிற்கு வறுமை இல்லாது மக்கள் வளமாக இருக்கவேண்டும்.  உடலை வலிமையாக்கிக்கொள்ளவேண்டும் என்னும் எண்ணமே ஏற்படாதவாறு அளவிற்குப் பகைமை இன்றி வாழவேண்டும். ஏமாற்றிப் பிழைக்கவேண்டும் என்னும் நிலையில்லாததால் பொய் என்பதனையே அறியாத மக்களாக இருக்கவேண்டும். எச்செயல் செய்தாலும் ஏன்? எதற்கு ? என ஆய்ந்து ஒவ்வொரு செயலையும் செய்வதால், அறியாமை அற்ற மக்களாக இருக்கவேண்டும். இத்தனைத் திறனும் ஒருநாட்டில் மொத்தமாக இருந்தால் எப்படி இருக்கும் அத்தகைய ஆட்சியினையே கம்பர் படம்பிடித்துக்காட்டுகிறார்.


“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை பொய்யுரை இலாமையால்

வெண்மை இல்லை, பல்கேள்வி மேவலால்”

 

என்னும் இவ்வடிகள் நாடு எவ்வாறு விளங்கவேண்டும் என்பதற்கு அழகிய எடுத்துக்காட்டு. "கம்பன் கவிக்கொம்பன்" என்பதனை இப்பாடலும் எடுத்துக்காட்டுகிறதுதானே?. 


            இத்தனைப் பயனையும் ஒரு நாட்டுக்கு அளிக்கும் வல்லமை அரசியல்வாதிகளுக்கே உண்டெனில் அந்த அரசியலை விட்டு விலகி நிற்கலாமா? இனி, “அரசியல் சாக்கடையல்ல ; வாழ்க்கை”. உணரலாம்தானே?

  


சனி, 29 மே, 2021

தீங்கற்றதே வாய்மை – திருக்குறள்

 



தீங்கற்றதே வாய்மை – திருக்குறள்

     எல்லோருக்கும் கடவுளைப் பிடித்திருக்கிறது. உறவுகளில் தாயாரையும், பின் தந்தையையும், உடன்பிறந்தோரையும், சுற்றத்தாரையும் ; நட்புக்களையும், உடன் பணியாற்றுவோரையும், பயணம் செய்வோரையும் எனத் அடுத்தடுத்து வரிசை தொடர்கிறது. இது உண்மைதானே. “ஏன்? இவ்வாறு வரிசைப்படுத்தினீர்” எனக்கேட்டால் என்ன சொல்வீர்கள்?. முதலில் தயங்குவீர். “இதைக் கூறினால்தான் உங்களுக்கு அடுத்தவேளை உணவு” எனக்கூறிவிட்டால் என்ன செய்வீர்கள்?. வரிசைப்படுத்திவிடுவீர்கள்தானே. வரிசைப்படுத்தி எழுதியதைப் பாருங்கள். யாருக்கெல்லாம் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்களோ அவர்களைத்தான் வரிசைப்படுத்தியிருப்பீர்கள். உங்களிடம் உண்மையாக இருப்பவர்களை நீங்கள் மறந்தும் போயிருக்கலாம்தானே. இப்போது இரண்டு மூன்று பெயர்கள் நினைவுக்கு வருகிறதா? அவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பட்டியலில் உள்ள அனைவருமே வாய்மையின் விழுக்காட்டிற்கேற்ப முதல் இடத்தினையும் கடைசி இடத்தினையும் பெற்றிருப்பதைக் கண்டறியலாம்.

     வாய்மையுடன் வாழ்பவர்க்கே இல்லத்திலும் உள்ளத்திலும் இடம்கொடுக்கிறோம். “உன் பிள்ளைக்குப் படிப்பு ஏறாது” எனப் பள்ளிக்கூடத்தை விட்டுத் துரத்தியபோது மகனிடம் அச்செய்தியை மறைக்கிறாள் தாய். “உன்னுடைய மூளையின் வேகமான செயல்பாட்டிற்கு பள்ளிக்கூடம் தேவையில்லை. நானே கற்றுக்கொடுக்கிறேன்” எனக்கூறி உலகத்திற்கே ஒரு விஞ்ஞானியைக் கொடுத்தார். அவர்தான் எடிசன். இன்று உலகமே மின் வெளிச்சத்தில் இருக்க அவரே வழி செய்தார். இந்தத் தாயின் பொய்தான் புரைதீர்ந்த நன்மை பயத்தது. எனவே, இந்தப் பொய்மை வாய்மை இடத்ததே எனத் தெய்வப்புலவர் வழிநின்று உணரலாம்தானே?

     ஒரு கொள்ளையோ, கொலையோ, மானத்திற்கு இழுக்கோ நடந்தால் அதனைக் கூறிக்கூறி மகிழ்ச்சியடையக் கூடிய மக்களை ; ஊடகத்தை என்னென்பது? அதுவும் ஏழைகளாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கிழிகிழியென்றுகிழித்து வறுத்தெடுத்துவிடுவதனைக் காணமுடிகிறது. ஒரு முறை விளைந்த அவமானம் இத்தகைய சில கீழ்த்தரமான ஊடகத்தாரால் நாள்தோறும் அரங்கேறும். இந்த வாய்மை வாய்மையாகுமா? ஆகாது.

    பக்கத்து வீட்டுக் கூரை எரிவதைப் பார்த்து ரசிப்பவர்கள் தன் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள இயலும். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவமானம் எனில் அதனைத் திருத்துவதற்கு ஊடகங்கள் துணைசெய்யவேண்டும். தாக்குதலுக்குண்டானவர்களுக்கான இழப்பீடு, காப்பீடு, சட்ட உதவிகள் என உதவிசெய்வதற்கே ஊடகங்கள் துணைசெய்யவேண்டும். அதற்குத் துணைசெய்யும் ஊடகங்கள் போற்றத்தக்கனவே.  மாறாக யாரிடம் இருந்து பணம்பெறலாம்? செய்தியைத் தொடர்ந்து மெல்லுவதா?  தள்ளுவதா? எனத் தந்திரம் செய்யும் ஊடகங்களால் சமூகம் கெடும் ; தலைமுறைகள் தடுமாறும்.

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

     தீமை இலாத சொலல் (திருக்குறள் - 291) 

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்கினை அறியாத தமிழரே இருக்கமுடியாது.  அப்படி இருந்தும் எப்படி எல்லா இடங்களிலும் பொய்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.

நடக்கின்ற செயல்களெல்லாம் நல்லவையாக நடந்தால் ; அச்செய்தி சமூகத்திற்கு நன்மை பயந்தால், சொல்லலாம் ; தீமை பயக்குமெனில் மௌனமாய் இருத்தல் நன்று. எனவே, இத்திருக்குறள் சூழலைத் திருத்தி அறத்துடன் வாழவேண்டியதன் அவசியத்தினை உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

“எப்போது பேசுவது நல்லது?” எனக் குருவிடம் ஒரு சீடன் கேட்கிறார். அதற்குக் குரு “எப்பொழுது உன்னுடைய மௌனத்தை விட பேச்சு நன்மை தரும் என நினைக்கிறாயோ அப்பொழுது பேசுவதே நல்லது” என்கிறார். இதனையே மக்கள் அனைவரும் தாரக மந்திரமாகக் கொள்ளவேண்டும்.

நடந்த செயலாக இருந்தாலும், நடவாத செயலாக இருந்தாலும் அது தீமை பயக்குமாயின் அதனைச் சொல்வது வாய்மையாகாது. அவ்வாறே, நடந்த செயலாக இருந்தாலும், நடவாத செயலாக இருந்தாலும் அது நன்மை பயக்குமாயின் அதனைச் சொல்வது பொய்மையாகாது என உரையாசிரியருள் சிறந்தவரான பரிமேலழகரின் உரை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.  இனி, ஒவ்வொரு சொல்லையும் பேசும்பொழுது வாய்மை என்னும் கல்லில் சொற்களை உரசிப்பார்த்துப் பேசுவீர்தானே? அப்படிப்பேசினால் உங்கள் சொற்கள் தங்கமாகும் ; நீங்களும்தான்.

 

 

 

    

வெள்ளி, 28 மே, 2021

திருக்குறளில் வாய்மை என்னும் பொய்யாவிளக்கு

 


அக இருள் நீக்கும் வாய்மை விளக்கு 

வாய்மை சுடும். அதனால்தான் அதனைப் பேசப் பெரும்பாலோனோர் தயங்குகின்றனர். உண்மை பேசத்தெரிந்தவர்களைவிட பொய் பேசத்தெரிந்தவர்கள் திறமைசாலிகள்தான். ஏனென்றால் யார் யாரிடம் என்னென்ன பொய் பேசிஇருக்கிறோம்? என்னும் நினைவுடன் இருத்தல்வேண்டும். திறமையான பொய்யாளர் நினைவாற்றலில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லைதானே. அப்படித் திறமையாகப்  பேசத்தெரிந்தவர்களையே சில நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. திறமையாகப் பேசத்தெரிந்தால்போதும் அவர்களுக்குப் “பொய்களை எவ்வாறு பேசவேண்டும்?” என்னும் பயிற்சி கொடுத்துத் தேற்றிவிடுவர். அப்பாவி மக்கள்தான் இப்படிப்பட்ட கயவர்களிடம் சிக்கிக்கொண்டு பொருளையும் செல்வாக்கையும் இழக்கின்றனர். ஏமாற்றப்பட்டதை வெளியே சொல்லவும் தயங்குவர். அது மக்களுக்கு மானப்பிரச்சினைதானே?

“அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில்லை” என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பொய்யர்கள் “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” என்னும் உண்மையினை அறியாமல் வாழ்கின்றனர். இளமையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பொய்சொல்லிப் பழகுபவன் வாழ்நாள் முழுதும் பொய் சொல்லியே இழிவாகச் சாகிறான். பொய்யனாக வாழ்பவனைப் பொய்யாகவே சமூகம் மதிப்பதை அவன் அறிவதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பெரிய பெரிய பொய்களைச் சொல்லி நிறுவனத்தின் வயிற்றையும் தங்கள் வயிற்றினையும் வளர்ப்பவர்கள் உண்டு. வெயிலைப் பாராது பாலம் கட்டும் தொழிலாளர்களின் ஐந்து நிமிட உழைப்பையாவது அவர்கள் பார்க்கவேண்டும். “உழைத்து உண்மையாக வாழவேண்டும்” என்னும் மன உறுதியின் அருமையினை அவர்களிடம் கற்றுக்கொள்ளமுடியும்.

பொய்களைப்பேசி வாழும் பெண்கள், ஐந்து வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பாட்டியைப் பார்க்கவேண்டும். “வாழும்வரை நேர்மையாக உழைக்கவேண்டும்” என எண்ணும் அந்தப்பாட்டியின் பெருமையினை அறியவேண்டும். பிச்சை எடுக்காமல் உழைத்து உண்மையாகவாழும் பாட்டியை வணங்கத்தானே வேண்டும்? ஏதோ ஒரு நிறுவனத்துக்காக பொய்களைப்பேசி மயக்குவது மக்களுக்கு எத்தனைத் துன்பம்தரும். கிடைக்கும் ஊதியத்துக்காக எத்தனைப் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். பொய்களுக்கேற்ப ஊதியம் அளிக்கும் நிறுவனங்களால் மூளை பொய்சுரபிகளாக மாறிவருவது ஆபத்துதானே?

பொய்பேசாமல் எப்படி வாழமுடியும்? எனக் கேட்பது வழக்கமாகவே மாறிவிட்டது. “பொய்சொன்னால் வாய்க்குச் சூடுபோடுவேன்” எனக்கண்டித்த தாய்மார்கள் காணாமல் போய்விட்டார்கள். குழந்தைகள் தேர்வுக்குப் படித்ததைக் கூடச் சொல்லக்கூடாது எனக் கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள். ‘கண்ணடி பட்டுவிடும்’ என்பதனால் அவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வாறே ‘யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட்டுவிடவேண்டும்’ எனச் சொல்வதும் உண்டு? இது குழந்தையிடம் கொண்ட அக்கறைதான் என்றாலும் குழந்தையின் சமூக மதிப்பு குறைவதற்கும் அவர்களே காரணமாகிவிடுகிறார்கள்.  பின்னாளில் தாயை காக்கும் அறத்தையும் மறந்து முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடுகின்றனர். விதை ஒன்று விதைக்க  வேறொன்றா விளையும்.?

இப்போது, “வாய்மை சுட்டுவிடுமோ” என்னும் அச்சத்தால் பொய்பேசும் இளைஞர்களை ; குழந்தைகளை ; தாய்மார்களை, பார்த்தோம்தானே? வாய்மைபேசினால் வேலை கிடைக்காது. வாய்மைபேசினால் தன்னலம் பாதிக்கும். என்னும் எண்ணங்கள் பரவிவிட்டது. யாரும் யாரையும் நம்புவதில்லை. எந்திரம் கொடுக்கும் சீட்டுகளையும், பத்திரங்களையுமே நம்பும் நிலைக்கு வந்துவிட்டோம்தானே? எந்தப்பெற்றோராவது பிள்ளைகள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வாழ்கிறார்களா? அதற்கு மாறாக, அவ்வாறு பிள்ளைகளை எதிர்பார்த்து வாழ்வது தவறு எனக் கற்பித்துவருகின்றனர். குழந்தைகளைப் பெற்றோர் நம்புவது தவறா? “வயதான பெற்றோர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது” என்னும் எண்ணத்தில் இக்கூற்று பரவியிருந்தால் நன்றே.  

மின்சாரத்தில் எரியும் பல விளக்குகளுக்கிடையே ஒரு அகல் விளக்கு ஏற்றப்படுகிறது. மின் துண்டிப்பு ஏற்பட்டவுடன் அகல் விளக்கு மட்டும்தானே எரியும். அப்படித்தான் பொய் விளக்குகள் ஏற்றப்பட்டுவிட்டதால் உண்மை விளக்கின் வெளிச்சம் தெரியாமலே போய்விட்டது. சமூகத்தின் நிலையும் அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அறத்தின் அறையில் அவ்விளக்கு மட்டுமே எரியும். இதனையே தெய்வப்புலவர் திருவள்ளுவர்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு (திருக்குறள்:299)

என அறிவுறுத்துகிறார். புற இருளை நீக்கும் விளக்குகளைக் காட்டிலும் அக இருளை நீக்கும் விளக்குதானே உயர்ந்தது. வாய்மை என்னும் தீ மற்ற தீயைக் காட்டிலும் உயர்ந்ததுதானே.

     விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்கள் ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உசி. மற்றும் ‘வீர முரசு’ சுப்பிரமணிய சிவாவையும் தெரியுமா? எனக்கேட்டால் “தெரியவே தெரியாது” என அனைவரும் உயிருக்கு அஞ்சி பொய் கூறினர். அவர்களிடையே “சூரியனையும் சந்திரனையும் பார்த்து தெரியுமா? எனக் கேட்கிறீர்” எனத் துணிவுடன் வாய்மையைப்  பேசிய மகாகவியின் சொற்கள் “தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகம் தானே.