தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 15 ஜூலை, 2019

வில்லை வெல்லும் சொல் - The Word Power

வில்லை வெல்லும் சொல்

பஞ்சானது நூலாகி ஆடையாகும் என்பது போல எழுத்தானது சொல்லாகிப் பொருளாகும் என்பதனாலேயே பனுவல் எனப் புலவர்கள் குறிப்பிட்டனர்.  நூல் ஆடையாகி மானத்தைக் காப்பது போலவே நூலும் இலக்கியமாகி இனத்தின் பெருமையைக் காக்கிறது. எனவே புரவலர்கள் (மன்னர்கள்) புலவர்கள் பாடுவதனையே பெருமையாகக் கருதினர். புலவர்கள் பாடாதிருப்பதனை இழிவாக எண்ணினர்.  அவ்வாறு எண்ணிய பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி  
மாங்குடி மருதன்  தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக
என் நிலவரை

எனப் பாடுகிறான். புறநானூற்றில் 72 ஆம் பாடலில் இவ்வடிகள் இடம்பெற்றுள்ளன.


பகைவர்கள் பாண்டியனுடைய நாட்டு மக்களைச் சிரிக்கத்தக்கவர்கள் என எள்ளி நகையாடுகின்றனர். தமது யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை வலிமையைக்கூறி பாண்டியநாட்டை இகழ்கின்றனர். அத்தகைய இழிவான சொற்களைக் கூறிய அரசர்களை சிதறி ஓடும்படி வெற்றிகொள்ளேனாயின் என் மக்கள் என்னைக்  கொடியன் எனக்கூறி இகழ்வாராக. உலகத்தில் என்றும் நிலைக்கக்கூடிய பாடல்களைப் பாடக்கூடிய உயந்த தலைமையினையும் அறிவினையும் கொண்ட மாங்குடி மருதனார்  உள்ளிட்ட புலவர்கள் பாடாது நீங்குக எனப் பாண்டியன் வஞ்சினம் கூறுகிறான். புலவர் சொல் அரசர் வில்லையும் வெல்லும் தானே.  

கவியரசர் கண்ணதாசன் - Kannadasan - The Emperor of Poets

கவியரசர் கண்ணதாசன்

24.06.2019 கவியரசரின் 92 ஆவது பிறந்த நாள். அவர் எழுதும் எழுத்து உயிரோ, மெய்யோ, உயிர்மெய்யோ அனைத்தும் உயிர் பெற்றுவிடும். ‘கலங்காதிரு மனமேஎன்னும் அவருடைய முதல் திரைப்பாடல் முதல்கண்ணே கலைமானேஎன்னும் கடைசி திரைப்பாடல்வரை அனைத்துமே இன்றும் கூட, ஏதேனும் ஒரு இதழில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது என்பதே அவருடைய பாடல்களின் அருமைக்குச்சான்று

ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்முத்தான முத்தல்லவோஎன்னும் திரைப்பாடலை எழுதினார் என அவருடைய புலமைக்குச் சான்று காட்டுவர். அவருடைய ஆளுமை அழகானது. “அவரைப் பார்க்கும் போது ஒரு கவிஞரைப்பார்ப்பது போல் தோன்றுவதில்லை. ஒரு அரசரைப் பார்ப்பது போல் தோன்றும்என எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுவார். ஒரு முறை பாடல் எழுத காலம் நீட்டித்ததால் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்அண்ணே மே மாதம் வந்துவிட்டது. படம் வெளியாகவேண்டும் என மேமேமே என அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். “அன்பு நடமாடும்  கலைக்கூடமேஎனப் பாடல் முழுதும் மே .. மே, என ஒவ்வொரு அடியும் இயைபுடன் அமைத்துப் பாடினார் என்று கவியரசர் புகழினைக் கூறுவார்.

தான் நாத்திகராகவும், அரசியல் வாழ்வில் இருந்த காலத்தையும்வன வாசம்என்னும் நூலாக எழுதினார். ஒருமுறை அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஊசி குத்திய போதுகிருஷ்ணா, கிருஷ்ணாஎன அவ்வலியிலும் கிருஷ்ணரையே அழைத்தாராம். அந்த அளவுக்கு பின்னாளில் ஆத்திகரானார். ‘அர்த்தமுள்ள இந்து மதம்அவருடைய பக்திக்குச் சான்றுபாடல் எழுதும்போது காலில் செருப்பு கூட அணியமாட்டார். அந்த அளவிற்கு கலையினை மதித்தார். அவர் அழகினைக் கூட்டும் தங்கச்சங்கிலி சில நேரங்களில் அவர் கழுத்தில் இருக்காது. நண்பர்கள் சங்கிலி எங்கே ? எனக் கேட்டால்பள்ளிக்கூடம் சென்றிருக்கின்றனஎனக் கூறுவார். அடகுக்கடையைத் தான் பள்ளிக்கூடம் என்பார். யாருக்கும் அஞ்சாத ஞானச்செருக்கு கொண்டவர் கவியரசர். “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎனக் கூறும் துணிவு அவருக்கு மட்டுமே உண்டு. இன்றும் எத்தனை மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

***********

சேர, சோழ, பாண்டியர் பெயர்கள் - Names of Chera, Chola, Pandya

சேர, சோழ, பாண்டியர் பெயர்கள்

பெயர்கள் தான் அடையாளங்கள். பெயர்களால் அழைப்பதனைக்கொண்டு இருவரிடையே உள்ள நெருக்கத்தை அறிந்துகொள்ள இயலும். பெயரில்லையென்றால் வாழ்க்கை முறையே கடினமாகிவிடும். ஒரே பெயருடைய இருவர் ஒரு சூழலில் இருந்தாலே எத்தனை இடர்ப்பாடு. ஒரே உருவம் கொண்ட இரட்டையர்களைப் பெயர்கள்தான் அடையாளம் காட்டுகின்றன. சிலர் தங்கள் விருப்பப்படி தாங்களே பெயர்களைப் புனைந்துகொள்வர். அவையே புனைப்பெயர்களாகின்றன. மன்னர் காலத்தில் தாமே புனைந்துகொண்டதும், புலவர் புனைந்ததும், மக்கள் புனைந்ததும் எனப்பல வகைகளில் புனைப்பெயர்கள் அமைந்திருந்ததனைக் காணமுடிகிறது. மன்னர்களைப் பாடிய புலவர்கள் புனைப்பெயர்களைக்கொண்டு பாடல்களை இயற்றினர். தோற்றம், பண்பு, ஆட்சிமுறை, வாழ் நிலம் இவற்றை அடிப்படையாகக்கொண்டு பல பெயர்களால் வாழ்த்தினர். பழந்தமிழகம்வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்க்கூறு நல்லுலகம்என்னும் தொல்காப்பிய அடிகளுக்கேற்ப பரந்த எல்லையினைக் கொண்டதாக இருந்ததுஎனவே அந்நிலப்பரப்பினைச் சேர, சோழ, பாண்டியர்கள்  ஆண்டனர் என்பதனைத் தமிழக வரலாறு எடுத்தியம்புகிறது. மன்னர்களுக்குரிய பெயர்களை திருவேங்கட பாரதியாரால் ஆக்கப்பெற்றபாரதி தீபம்என்னும் நிகண்டு நூல், மக்கட்பெயர்த் தொகுதியில் தெளிவாக எடுத்துரைக்கிறது.

சேரனுக்குரிய பெயர்கள் :

வில்லவன் கேரளன் வானவன் வஞ்சிக்கு வேந்தன்குடக்
கொல்லியன் குன்றன் குடநாடன் குட்டுவன் கோதைகொங்கன்
மல்லுதியன் பொறை யன்போந்தின் மாலையன் வானவரம்
பெல்லையன் சேரலன் சேரன் பொருனைக் கிறையவனே (11)

சோழனுக்குரிய பெயர்கள் :

பொன்னிநன் நாடன் புகாரிறை கிள்ளி புலியுயர்த்த
மன்னவ னேரியன் வீர னிரவி குலன்வளவன்
சென்னி யிமையவன் செம்பியன் கண்டன் றிறலபையன்
நன்னெறி யாரத்தன் சோழ னுறந்தைக் குரியவனே (12)

பாண்டியனுக்குரிய பெயர்கள் :

வழுதி கவுரியன் பஞ்சவன் மீனவன் மாறன்கொற்கைச்
செழியன் மதுரைமன் பூழியன் கைதவன் றென்னவன்சே
லெழுது புரவலன் வைகைத் துறையவ னிந்துகுலம்
பழகு மிறையவ னிம்பத் தொடையினன் பாண்டியனே (13)

என்னும் பாடல்கள் மன்னர்களின் பெயர்களை எடுத்துரைக்கிறது.

சேரனுக்குரிய பெயர்கள் :

வில்லவன், கேரளன்வானவன்,   வஞ்சிக்கு வேந்தன், குடக்கொல்லியன், குன்றன், குடநாடன், குட்டுவன், கோதை, கொங்கன், மல்லுதியன், பொறையன், போந்தின் மாலையன், வானவரம்பு எல்லையன், சேரலன் , சேரன், பொருனைக்கு இறையவன்.

சோழனுக்குரிய பெயர்கள் :

பொன்னி நன்னாடன், புகார் இறை, கிள்ளி, புலி உயர்த்த மன்னவன், ஏரியன், வீரன், இரவிகுலன், வளவன், சென்னி, இமையவன், செம்பியன், கண்டன், திறல் அபயன், நன்னெறி ஆரத்தன், சோழன், உறந்தைக்கு உரியவன்.

பாண்டியனுக்குரிய பெயர்கள் :

வழுதி, கவுரியன், பஞ்சவன், மீனவன், மாறன், கொற்கைச் செழியன், மதுரைமன், பூழியன், கைதவன், தென்னவன், சேல் எழுது புரவலன், வைகைத் துறையவன், இந்துகுலம், பழகும் இறையவன், இம்பத் தொடையினன், பாண்டியன்

உயிர் இருக்கும் வரை பெயர் இருப்பதனால், பெயரை மதித்துக் காத்துக்கொள்வது தான் நன்று.


************

குறியீடுகளாகும் நிறங்கள் - COLOUR MATTERS

குறியீடுகளாகும் நிறங்கள்

மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களைப் பார்த்ததும் நமக்கு நிறங்கள் தோன்றுவதில்லை. சாலையைச் சீரமைக்கும் கவனி, நில் , புறப்படு என்னும் எண்ணங்களே நிலைத்துவிட்டன. வெள்ளைக்கொடி என்றதும் கொடியின் நிறம் முன் வருவதில்லை. அமைதி, சமாதானம் உடன்பாடு என்னும் எண்ணங்களே நினைவுக்கு வருகின்றன. கருப்பு என்னும் நிறம் அழகிய நிறம் ; பயனுடைய நிறம். கருமேகத்தைப் பார்த்தால் இவ்வுண்மை தெரியும் தானே. ஆனால் எப்படியோ அது எதிர்ப்புக்கான அல்லது புறக்கணிப்புக்கான நிறம் என்னும் எண்ணம் நிலைபெற்றுவிட்டதனைக் காணமுடிகிறது. ஆனால் இலக்கியத்தில் கருப்பின் மேன்மை அழகாகப் படம்பிடித்துக்காட்டப்படுகிறது. மை என்பது கருப்பு நிறம். அது அழகாக இருப்பதனால் தானே கண்ணிமையில் தீட்டப்பட்டு கண்ணுக்கு அழகு சேர்க்கிறது. எனினும் மதிப்பினைப் பொருத்தவரை உயர்ந்ததாகக் கருதமுடியாது. மரகதம் நிறத்தில் மட்டுமின்றி விலை மதிப்பிலும் உயர்ந்ததாக இருப்பதால் முன்னதை விட சிறப்புடையது. மறிகடல் நிறத்தில் மட்டுமின்றி, பல மணிகளை உள்ளடக்கியதால் மதிப்பிலும் பரப்பளவால் பெருமையுடையதாகவும் சிறக்கிறது. எனவே, முன் இரண்டைக் காட்டிலும் சிறப்புடையதுமழை முகிலான கருமேகம் அழகோடு, மதிப்போடு, பொழியும் அளவில் குறைவின்றி மிகுந்து இருப்பதோடு உயிரைக்காக்கும் பயனுடையதாகவும் அமைகிறது. இவ்வாறு மை, மரகதம், மறிகடல், மழைமுகில் என அழகினை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே கருநீல மேனியின்  அழகினை எடுத்துக்காட்டுகிறார் கம்பர்.

கருப்பு நிறத்தின் அழகு கதிரவனின் ஒளி அழகினைவிட விஞ்சி நிற்பதனால் கதிரவனின் ஒளியானது இராமனின் ஒளிமேனியில் ஒடுங்கிவிடுகிறது. இராமனின் கருமேனி ஒளிவீசுகிறது. இருக்கிறதா ? இல்லையா ?  எனக் கூற இயலாத நிலையில் உள்ள மெல்லிய இடையினை உடைய சீதையோடும், ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்என்னும்  முதுமொழிக்கு இலக்கணமான இளையவனான இலக்குவனுடனும் இராமன் நடந்துசெல்கிறான். இக்காட்சி அழகுக்கு அழகூட்டுவது போல் அமைகிறது. இயல்பாகவே அழகினை உடைய இராமனின் அழகு மேலும் மேலும் கூடிக்கொண்டே செல்வதனைக் கண்ட கம்பர் சொற்களைச் சுவைத்துச் சுவைத்து அடுக்குகிறார். இதோ அந்தக் கம்பராமாயணக் கங்கைப் படலத்துப் பாடல்

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.

மை, மரகதம், மறிகடல், மழைமுகில் என எண்ணி எண்ணி மதிப்புடைய சொற்களை அடுக்கினாலும் கம்பனின் மனம் நிறைவடையவில்லை. எல்லையில்லாத அழகினைச் சொல்லால் அடுக்குவது எப்படி ?. உடனே ஐயோ ? என்னும் தன் இயலாமையைக் கூறி அழகின் பெருமையினை வெளிப்படுத்துகிறார். இறைவனை அளந்துவிடமுடியும் என்னும் அறியாமையினை விடப் பெரிய அறியாமை உலகத்தில் உண்டோ ? என்னும் கேள்விக்குத் துணை நிற்பதாக கம்பனின் இப்பாடல் அமைகிறது. இப்பாடலின் அழகினை எத்துனை முறைப் பாடினாலும் இனிக்கும். எத்துனை முறை எண்ணினாலும் சுவைக்கும்.

இனி கருப்பு நிறம் அழகு நிறம் எனச் சுவைத்து மகிழலாம். கருப்பு தான் எனக்குப் பிடித்த நிறம் என அந்நிறத்தை உடையவர்கள் பாடி மகிழலாம். கருப்பு நிறமுடையவர்களின் தாழ்வு மனப்பான்மையை ஒழித்து நிறத்தை எவ்வாறு சுவைத்து மகிழவேண்டும் எனக் கம்பர் காட்டிய வழியினை நினைத்து நினைத்து மகிழலாம்.
************


தமிழர் தொலைத்த தமிழ் - Thamzihar tholaiththa Thamizh

தமிழர் தொலைத்த தமிழ் (ஏடுகள்)

மொழிப்பற்றுடைய மக்களால் மட்டுமே ஒரு மொழியினைக்காக்க இயலும். அழியும் தருவாயில் இருந்த மொழிகளெல்லாம் இன்று மீட்டெடுக்கப்படுவதற்குக் காரணம் அந்தந்த மொழி சார்ந்தவர்களின் ஆர்வமே. தமிழ்மொழியின் அருமையினை உணராத கல்லாதவர்களின் கையில் பனையோலைகள் சிக்கிக்கொண்டபோது அதனை விழாக்கள் என்னும் பெயரில் குளத்திலும், ஆற்றிலும் மிதக்கவிட்டனர். கல்லாதவர்களின் அறியாமை தமிழ் இலக்கியங்களைக் காணாமல்செய்துவிட்டது. அச்சுக்கலை கண்டறியப்படாததனாலும்  படி எடுப்போர் நாளுக்கு நாள் குறைந்துவிட்டதனாலும் பல தமிழேடுகள் சிதலமடைந்தன. தமிழகத்தில் அந்நியப் படையெடுப்புகள் தொடர்ந்து நிகழ்ந்ததும் பல ஏடுகள் காணாமல் போவதற்குக் காரணமாயிற்று. எதிரிகள் தமிழரின் அறிவுப்புலத்தைக் கண்டு வியந்து அதற்குக் காரணமான ஏடுகளை அழித்தனர். கோயில்களில் பாதுகாக்கப்பட்ட ஏடுகளும் முறையான பராமரிப்பின்றி வீணாயின. சமயப்பகையும், காழ்ப்புணர்ச்சியும் பல நூல்களை அழித்துவிட்டன. இவ்வாறு அழிந்த நூல்கள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமிமறைந்துபோன தமிழ் நூல்கள்என்னும் நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

தேவாரப் பதிகங்கள் எழுதிய ஏட்டுச் சுவடிகள் தில்லைச் சிற்றம்பலத்திலே ஒரு அறையிலே வைக்கப்பட்டிருந்ததை அநபாயசோழ மகராசன் அறிந்து அவ்வேடுகளை எடுக்கச்சென்றான். சென்று அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது வன்மீகம் (சிதல்) அரித்து மண்மூடிக் கிடப்பதைக் கண்டு திகைப்புற்று வருந்தினான். பிறகு குடங்குடமாக எண்ணெயை ஊற்றிக் கிளறிப்பார்த்த போது சில ஏடுகள் மட்டும் எஞ்சியிருந்தன. இவ்வாறு எஞ்சிநின்ற பகுதிதான் இப்போதுள்ள தேவாரப்பதிகங்கள். தேவாரத்தின் பெரும்பகுதி மறைந்துபோயின”(.329) எனக் கூறி திருமுறைக்கண்ட புராணத்தின் பாடலையும் எடுத்துக்காட்டுகிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

பார்த்து அதனைப் புறத்து உய்ப்ப உரைத்து மேலே
      படிந்திருந்த மண் மலையை சேரத் தள்ளிச்
சீர்த்த தயிலம் மலி கும்பங் கொண்டு
      செல்லு நனையச் சொரிந்து திரு ஏடெல்லாம்
ஆர்த்த அருள் அதனாலே எடுத்து நோக்க
      அலகிலா ஏடு பழுதாகக் கண்டு
தீர்த்தமுடிக்கு அணிபரனே பரனே என்ன
      சிந்தை தளர்ந்து இரு கணீர் சோர நின்றான் (.330)

என்னும் இப்பாடல் அநபாயசோழனின் தமிழ்ப்பற்றை எடுத்துக்காட்டுகிறதுஅவன் சிந்திய கண்ணீர் காணாமல் போன பிற ஏடுகளை நினைத்துச் சிந்திய கண்ணீராகவும் இருக்கக்கூடும்.
***********