தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 15 ஜூலை, 2019

தமிழர் தொலைத்த தமிழ் - Thamzihar tholaiththa Thamizh

தமிழர் தொலைத்த தமிழ் (ஏடுகள்)

மொழிப்பற்றுடைய மக்களால் மட்டுமே ஒரு மொழியினைக்காக்க இயலும். அழியும் தருவாயில் இருந்த மொழிகளெல்லாம் இன்று மீட்டெடுக்கப்படுவதற்குக் காரணம் அந்தந்த மொழி சார்ந்தவர்களின் ஆர்வமே. தமிழ்மொழியின் அருமையினை உணராத கல்லாதவர்களின் கையில் பனையோலைகள் சிக்கிக்கொண்டபோது அதனை விழாக்கள் என்னும் பெயரில் குளத்திலும், ஆற்றிலும் மிதக்கவிட்டனர். கல்லாதவர்களின் அறியாமை தமிழ் இலக்கியங்களைக் காணாமல்செய்துவிட்டது. அச்சுக்கலை கண்டறியப்படாததனாலும்  படி எடுப்போர் நாளுக்கு நாள் குறைந்துவிட்டதனாலும் பல தமிழேடுகள் சிதலமடைந்தன. தமிழகத்தில் அந்நியப் படையெடுப்புகள் தொடர்ந்து நிகழ்ந்ததும் பல ஏடுகள் காணாமல் போவதற்குக் காரணமாயிற்று. எதிரிகள் தமிழரின் அறிவுப்புலத்தைக் கண்டு வியந்து அதற்குக் காரணமான ஏடுகளை அழித்தனர். கோயில்களில் பாதுகாக்கப்பட்ட ஏடுகளும் முறையான பராமரிப்பின்றி வீணாயின. சமயப்பகையும், காழ்ப்புணர்ச்சியும் பல நூல்களை அழித்துவிட்டன. இவ்வாறு அழிந்த நூல்கள் குறித்து மயிலை சீனி. வேங்கடசாமிமறைந்துபோன தமிழ் நூல்கள்என்னும் நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

தேவாரப் பதிகங்கள் எழுதிய ஏட்டுச் சுவடிகள் தில்லைச் சிற்றம்பலத்திலே ஒரு அறையிலே வைக்கப்பட்டிருந்ததை அநபாயசோழ மகராசன் அறிந்து அவ்வேடுகளை எடுக்கச்சென்றான். சென்று அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது வன்மீகம் (சிதல்) அரித்து மண்மூடிக் கிடப்பதைக் கண்டு திகைப்புற்று வருந்தினான். பிறகு குடங்குடமாக எண்ணெயை ஊற்றிக் கிளறிப்பார்த்த போது சில ஏடுகள் மட்டும் எஞ்சியிருந்தன. இவ்வாறு எஞ்சிநின்ற பகுதிதான் இப்போதுள்ள தேவாரப்பதிகங்கள். தேவாரத்தின் பெரும்பகுதி மறைந்துபோயின”(.329) எனக் கூறி திருமுறைக்கண்ட புராணத்தின் பாடலையும் எடுத்துக்காட்டுகிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

பார்த்து அதனைப் புறத்து உய்ப்ப உரைத்து மேலே
      படிந்திருந்த மண் மலையை சேரத் தள்ளிச்
சீர்த்த தயிலம் மலி கும்பங் கொண்டு
      செல்லு நனையச் சொரிந்து திரு ஏடெல்லாம்
ஆர்த்த அருள் அதனாலே எடுத்து நோக்க
      அலகிலா ஏடு பழுதாகக் கண்டு
தீர்த்தமுடிக்கு அணிபரனே பரனே என்ன
      சிந்தை தளர்ந்து இரு கணீர் சோர நின்றான் (.330)

என்னும் இப்பாடல் அநபாயசோழனின் தமிழ்ப்பற்றை எடுத்துக்காட்டுகிறதுஅவன் சிந்திய கண்ணீர் காணாமல் போன பிற ஏடுகளை நினைத்துச் சிந்திய கண்ணீராகவும் இருக்கக்கூடும்.
***********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக