தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 15 ஜூலை, 2019

வில்லை வெல்லும் சொல் - The Word Power

வில்லை வெல்லும் சொல்

பஞ்சானது நூலாகி ஆடையாகும் என்பது போல எழுத்தானது சொல்லாகிப் பொருளாகும் என்பதனாலேயே பனுவல் எனப் புலவர்கள் குறிப்பிட்டனர்.  நூல் ஆடையாகி மானத்தைக் காப்பது போலவே நூலும் இலக்கியமாகி இனத்தின் பெருமையைக் காக்கிறது. எனவே புரவலர்கள் (மன்னர்கள்) புலவர்கள் பாடுவதனையே பெருமையாகக் கருதினர். புலவர்கள் பாடாதிருப்பதனை இழிவாக எண்ணினர்.  அவ்வாறு எண்ணிய பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி  
மாங்குடி மருதன்  தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக
என் நிலவரை

எனப் பாடுகிறான். புறநானூற்றில் 72 ஆம் பாடலில் இவ்வடிகள் இடம்பெற்றுள்ளன.


பகைவர்கள் பாண்டியனுடைய நாட்டு மக்களைச் சிரிக்கத்தக்கவர்கள் என எள்ளி நகையாடுகின்றனர். தமது யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை வலிமையைக்கூறி பாண்டியநாட்டை இகழ்கின்றனர். அத்தகைய இழிவான சொற்களைக் கூறிய அரசர்களை சிதறி ஓடும்படி வெற்றிகொள்ளேனாயின் என் மக்கள் என்னைக்  கொடியன் எனக்கூறி இகழ்வாராக. உலகத்தில் என்றும் நிலைக்கக்கூடிய பாடல்களைப் பாடக்கூடிய உயந்த தலைமையினையும் அறிவினையும் கொண்ட மாங்குடி மருதனார்  உள்ளிட்ட புலவர்கள் பாடாது நீங்குக எனப் பாண்டியன் வஞ்சினம் கூறுகிறான். புலவர் சொல் அரசர் வில்லையும் வெல்லும் தானே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக