சேர, சோழ, பாண்டியர் பெயர்கள்
பெயர்கள் தான் அடையாளங்கள். பெயர்களால்
அழைப்பதனைக்கொண்டு இருவரிடையே உள்ள நெருக்கத்தை அறிந்துகொள்ள இயலும். பெயரில்லையென்றால்
வாழ்க்கை முறையே கடினமாகிவிடும். ஒரே பெயருடைய இருவர் ஒரு சூழலில் இருந்தாலே எத்தனை இடர்ப்பாடு. ஒரே உருவம்
கொண்ட இரட்டையர்களைப் பெயர்கள்தான் அடையாளம் காட்டுகின்றன. சிலர் தங்கள்
விருப்பப்படி தாங்களே பெயர்களைப் புனைந்துகொள்வர். அவையே புனைப்பெயர்களாகின்றன. மன்னர்
காலத்தில் தாமே புனைந்துகொண்டதும், புலவர் புனைந்ததும், மக்கள்
புனைந்ததும் எனப்பல வகைகளில் புனைப்பெயர்கள் அமைந்திருந்ததனைக் காணமுடிகிறது. மன்னர்களைப்
பாடிய புலவர்கள் புனைப்பெயர்களைக்கொண்டு பாடல்களை இயற்றினர். தோற்றம், பண்பு, ஆட்சிமுறை, வாழ் நிலம்
இவற்றை அடிப்படையாகக்கொண்டு பல பெயர்களால் வாழ்த்தினர். பழந்தமிழகம் ‘வடவேங்கடம்
தென்குமரி ஆயிடைத் தமிழ்க்கூறு நல்லுலகம்’ என்னும்
தொல்காப்பிய அடிகளுக்கேற்ப பரந்த எல்லையினைக் கொண்டதாக இருந்தது. எனவே அந்நிலப்பரப்பினைச் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டனர் என்பதனைத் தமிழக வரலாறு எடுத்தியம்புகிறது. மன்னர்களுக்குரிய
பெயர்களை திருவேங்கட பாரதியாரால் ஆக்கப்பெற்ற ‘பாரதி தீபம்’ என்னும்
நிகண்டு நூல், மக்கட்பெயர்த் தொகுதியில் தெளிவாக எடுத்துரைக்கிறது.
சேரனுக்குரிய
பெயர்கள் :
வில்லவன் கேரளன் வானவன் வஞ்சிக்கு வேந்தன்குடக்
கொல்லியன் குன்றன் குடநாடன் குட்டுவன் கோதைகொங்கன்
மல்லுதியன் பொறை யன்போந்தின் மாலையன் வானவரம்
பெல்லையன் சேரலன் சேரன் பொருனைக் கிறையவனே
(11)
சோழனுக்குரிய
பெயர்கள் :
பொன்னிநன் நாடன் புகாரிறை கிள்ளி புலியுயர்த்த
மன்னவ னேரியன் வீர னிரவி குலன்வளவன்
சென்னி யிமையவன் செம்பியன் கண்டன் றிறலபையன்
நன்னெறி யாரத்தன் சோழ னுறந்தைக் குரியவனே
(12)
பாண்டியனுக்குரிய
பெயர்கள் :
வழுதி கவுரியன் பஞ்சவன் மீனவன் மாறன்கொற்கைச்
செழியன் மதுரைமன் பூழியன் கைதவன் றென்னவன்சே
லெழுது புரவலன் வைகைத் துறையவ னிந்துகுலம்
பழகு மிறையவ னிம்பத் தொடையினன் பாண்டியனே
(13)
என்னும்
பாடல்கள் மன்னர்களின் பெயர்களை எடுத்துரைக்கிறது.
சேரனுக்குரிய
பெயர்கள் :
வில்லவன், கேரளன், வானவன், வஞ்சிக்கு
வேந்தன், குடக்கொல்லியன், குன்றன், குடநாடன், குட்டுவன், கோதை, கொங்கன், மல்லுதியன், பொறையன், போந்தின்
மாலையன், வானவரம்பு எல்லையன், சேரலன் , சேரன், பொருனைக்கு
இறையவன்.
சோழனுக்குரிய
பெயர்கள் :
பொன்னி நன்னாடன், புகார்
இறை, கிள்ளி, புலி உயர்த்த மன்னவன், ஏரியன், வீரன், இரவிகுலன், வளவன், சென்னி, இமையவன், செம்பியன், கண்டன், திறல் அபயன், நன்னெறி
ஆரத்தன், சோழன், உறந்தைக்கு உரியவன்.
பாண்டியனுக்குரிய
பெயர்கள் :
வழுதி, கவுரியன், பஞ்சவன், மீனவன், மாறன், கொற்கைச்
செழியன், மதுரைமன், பூழியன், கைதவன், தென்னவன், சேல் எழுது
புரவலன், வைகைத் துறையவன், இந்துகுலம், பழகும்
இறையவன், இம்பத் தொடையினன், பாண்டியன்
உயிர் இருக்கும் வரை பெயர் இருப்பதனால், பெயரை மதித்துக்
காத்துக்கொள்வது தான் நன்று.
************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக