கவியரசர் கண்ணதாசன்
24.06.2019 கவியரசரின் 92 ஆவது பிறந்த நாள். அவர்
எழுதும் எழுத்து உயிரோ, மெய்யோ, உயிர்மெய்யோ அனைத்தும் உயிர் பெற்றுவிடும். ‘கலங்காதிரு
மனமே’ என்னும் அவருடைய முதல் திரைப்பாடல் முதல் ‘கண்ணே
கலைமானே’ என்னும் கடைசி திரைப்பாடல்வரை அனைத்துமே இன்றும் கூட, ஏதேனும்
ஒரு இதழில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது என்பதே அவருடைய பாடல்களின் அருமைக்குச்சான்று.
ஐந்து
நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் ‘முத்தான முத்தல்லவோ’ என்னும்
திரைப்பாடலை எழுதினார் என அவருடைய புலமைக்குச் சான்று காட்டுவர். அவருடைய
ஆளுமை அழகானது. “அவரைப் பார்க்கும் போது ஒரு கவிஞரைப்பார்ப்பது போல் தோன்றுவதில்லை. ஒரு அரசரைப்
பார்ப்பது போல் தோன்றும்” என எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுவார். ஒரு முறை
பாடல் எழுத காலம் நீட்டித்ததால் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
அவர்கள் “அண்ணே மே மாதம் வந்துவிட்டது. படம்
வெளியாகவேண்டும் என மே… மே…மே என அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். “அன்பு
நடமாடும் கலைக்கூடமே” எனப்
பாடல் முழுதும் மே .. மே, என ஒவ்வொரு அடியும் இயைபுடன் அமைத்துப் பாடினார் என்று கவியரசர்
புகழினைக் கூறுவார்.
தான் நாத்திகராகவும், அரசியல்
வாழ்வில் இருந்த காலத்தையும் ‘வன வாசம்’ என்னும் நூலாக எழுதினார். ஒருமுறை
அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஊசி குத்திய போது ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என அவ்வலியிலும்
கிருஷ்ணரையே அழைத்தாராம். அந்த அளவுக்கு பின்னாளில் ஆத்திகரானார். ‘அர்த்தமுள்ள
இந்து மதம்’ அவருடைய பக்திக்குச் சான்று. பாடல் எழுதும்போது காலில் செருப்பு கூட அணியமாட்டார். அந்த
அளவிற்கு கலையினை மதித்தார். அவர் அழகினைக் கூட்டும் தங்கச்சங்கிலி சில நேரங்களில் அவர்
கழுத்தில் இருக்காது. நண்பர்கள் சங்கிலி எங்கே ? எனக்
கேட்டால் ‘பள்ளிக்கூடம் சென்றிருக்கின்றன’ எனக்
கூறுவார். அடகுக்கடையைத் தான் பள்ளிக்கூடம் என்பார். யாருக்கும்
அஞ்சாத ஞானச்செருக்கு கொண்டவர் கவியரசர். “எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை” எனக் கூறும் துணிவு அவருக்கு மட்டுமே உண்டு. இன்றும்
எத்தனை மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக