தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 15 ஜூலை, 2019

குறியீடுகளாகும் நிறங்கள் - COLOUR MATTERS

குறியீடுகளாகும் நிறங்கள்

மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களைப் பார்த்ததும் நமக்கு நிறங்கள் தோன்றுவதில்லை. சாலையைச் சீரமைக்கும் கவனி, நில் , புறப்படு என்னும் எண்ணங்களே நிலைத்துவிட்டன. வெள்ளைக்கொடி என்றதும் கொடியின் நிறம் முன் வருவதில்லை. அமைதி, சமாதானம் உடன்பாடு என்னும் எண்ணங்களே நினைவுக்கு வருகின்றன. கருப்பு என்னும் நிறம் அழகிய நிறம் ; பயனுடைய நிறம். கருமேகத்தைப் பார்த்தால் இவ்வுண்மை தெரியும் தானே. ஆனால் எப்படியோ அது எதிர்ப்புக்கான அல்லது புறக்கணிப்புக்கான நிறம் என்னும் எண்ணம் நிலைபெற்றுவிட்டதனைக் காணமுடிகிறது. ஆனால் இலக்கியத்தில் கருப்பின் மேன்மை அழகாகப் படம்பிடித்துக்காட்டப்படுகிறது. மை என்பது கருப்பு நிறம். அது அழகாக இருப்பதனால் தானே கண்ணிமையில் தீட்டப்பட்டு கண்ணுக்கு அழகு சேர்க்கிறது. எனினும் மதிப்பினைப் பொருத்தவரை உயர்ந்ததாகக் கருதமுடியாது. மரகதம் நிறத்தில் மட்டுமின்றி விலை மதிப்பிலும் உயர்ந்ததாக இருப்பதால் முன்னதை விட சிறப்புடையது. மறிகடல் நிறத்தில் மட்டுமின்றி, பல மணிகளை உள்ளடக்கியதால் மதிப்பிலும் பரப்பளவால் பெருமையுடையதாகவும் சிறக்கிறது. எனவே, முன் இரண்டைக் காட்டிலும் சிறப்புடையதுமழை முகிலான கருமேகம் அழகோடு, மதிப்போடு, பொழியும் அளவில் குறைவின்றி மிகுந்து இருப்பதோடு உயிரைக்காக்கும் பயனுடையதாகவும் அமைகிறது. இவ்வாறு மை, மரகதம், மறிகடல், மழைமுகில் என அழகினை ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே கருநீல மேனியின்  அழகினை எடுத்துக்காட்டுகிறார் கம்பர்.

கருப்பு நிறத்தின் அழகு கதிரவனின் ஒளி அழகினைவிட விஞ்சி நிற்பதனால் கதிரவனின் ஒளியானது இராமனின் ஒளிமேனியில் ஒடுங்கிவிடுகிறது. இராமனின் கருமேனி ஒளிவீசுகிறது. இருக்கிறதா ? இல்லையா ?  எனக் கூற இயலாத நிலையில் உள்ள மெல்லிய இடையினை உடைய சீதையோடும், ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்என்னும்  முதுமொழிக்கு இலக்கணமான இளையவனான இலக்குவனுடனும் இராமன் நடந்துசெல்கிறான். இக்காட்சி அழகுக்கு அழகூட்டுவது போல் அமைகிறது. இயல்பாகவே அழகினை உடைய இராமனின் அழகு மேலும் மேலும் கூடிக்கொண்டே செல்வதனைக் கண்ட கம்பர் சொற்களைச் சுவைத்துச் சுவைத்து அடுக்குகிறார். இதோ அந்தக் கம்பராமாயணக் கங்கைப் படலத்துப் பாடல்

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்.

மை, மரகதம், மறிகடல், மழைமுகில் என எண்ணி எண்ணி மதிப்புடைய சொற்களை அடுக்கினாலும் கம்பனின் மனம் நிறைவடையவில்லை. எல்லையில்லாத அழகினைச் சொல்லால் அடுக்குவது எப்படி ?. உடனே ஐயோ ? என்னும் தன் இயலாமையைக் கூறி அழகின் பெருமையினை வெளிப்படுத்துகிறார். இறைவனை அளந்துவிடமுடியும் என்னும் அறியாமையினை விடப் பெரிய அறியாமை உலகத்தில் உண்டோ ? என்னும் கேள்விக்குத் துணை நிற்பதாக கம்பனின் இப்பாடல் அமைகிறது. இப்பாடலின் அழகினை எத்துனை முறைப் பாடினாலும் இனிக்கும். எத்துனை முறை எண்ணினாலும் சுவைக்கும்.

இனி கருப்பு நிறம் அழகு நிறம் எனச் சுவைத்து மகிழலாம். கருப்பு தான் எனக்குப் பிடித்த நிறம் என அந்நிறத்தை உடையவர்கள் பாடி மகிழலாம். கருப்பு நிறமுடையவர்களின் தாழ்வு மனப்பான்மையை ஒழித்து நிறத்தை எவ்வாறு சுவைத்து மகிழவேண்டும் எனக் கம்பர் காட்டிய வழியினை நினைத்து நினைத்து மகிழலாம்.
************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக