கடல் உண்ட தமிழ்
பழங்காலத்தில்
முன்னோர்கள் தங்கள் புலமையினை வெளிப்படுத்த பனையோலையை எழுதும்பொருளாகப் பயன்படுத்தினர். பொறுப்பும்
தமிழார்வமும் கொண்ட சான்றோர்கள் பனை ஓலையின் தன்மைக்கேற்ப, அவை அழியும்
காலத்திற்கு முன் வேறோர் படி எடுத்து இலக்கியங்களைக் காத்துவந்தனர். அவ்வாறு
படி எடுத்ததன் விளைவாகவே இன்று பல நூல்கள் இலக்கியங்களாகித் தமிழரின் பெருமையை உணர்த்துகின்றன. கடல்கோள்
முதலான காரணங்களில் தப்பிப்பிழைத்த நூல்களே இன்று இலக்கியங்களாக இடம்பெற்றுள்ளன. அதில்
சிக்குண்டு காணாமல் போனவை எண்ணற்றன.
பாண்டிய நாடு கடல்கோளால் அழிந்தபோது சங்ககால இலக்கியங்கள் பல மறைந்துபோயின. பல துறைகளிலும்
விஞ்சி நின்ற தமிழரின் பேரறிவினை எடுத்துரைக்கும் இலக்கியங்கள் காணாமல் போனதனை எண்ணி
வருந்திப் பாடிய செய்யுளினை ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும்
நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி எடுத்துக்காட்டுகிறார்.
ஏரணம் உருவம் யோகம் இசை கணக்கிரதம் சாலம்
தாரணம் மறமே சந்தம் தம்பநீர் நிலம் உலோகம்
மாரணம் பொருள் என்றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்டது அந்தோ வழிவழிப் பெயரும் மாள.(ப.326)
என்னும் இப்பாடல் தமிழரின் பல்துறை ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. அளவை, மந்திரம், உடல் ஒழுங்குமுறை, இசை நயம், கணக்கு
மொழி, பொருள்கள், நிலைத்திருக்கும் கலை, வீரம், இசைப்பாடல், காக்கும்
நீர், நிலம், உலோகம், மாயவித்தை, உவமை என அனைத்து நுட்பங்களையும்
கொண்ட ஏடுகளை வாரி வாரணம் என்னும் கடல் யானைக் கொண்டதை இப்பழஞ்செய்யுள் புலப்படுத்துகிறது. கோயில்கள்
கட்டுவதற்குரிய கட்டுமானக் கலைத்திறன், கோள், நட்சத்திரம்
என நாளினை வகுத்துக் காட்டிய வானத்தைப் பற்றிய அறிவு, கடல்
போக்கினைக் கண்டறிந்து கப்பலைச் செலுத்திய ஆற்றல், நீர் நிலைகளைப் பாதுகாத்த முறைமை, நிலத்தை
பண்படுத்தி விளைவித்த பாங்கு , போர்க்கருவிகள் செய்த நுட்பம், வீரத்தைக்
கையாண்ட முறைமை, இலக்கண முறைமைப்படி செய்யுள்கள் எழுதிய சிறப்பு என அனைத்து
நுட்பங்களையும் எடுத்துரைக்கும் ஏடுகளைக் கடல்கொண்டு சென்றுவிட்டதே என வருந்தி நிற்கும்
தமிழ்ப்புலவரின் நிலையினை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக