நோயற்றவாழ்வுக்கு மகாத்மா வழி - For Healthy Life - Mahatma's Policy
அஞ்ச வேண்டிய செயல்களுக்கு அஞ்சாதிருப்பதும் அஞ்சக்கூடாத
செயல்களுக்கு அஞ்சாதிருப்பதும் அறியாமை என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தீய பழக்கவழக்கங்களால்
தம் உடலைக் கெடுத்துக்கொள்ளும் மானிடர்கள் கணக்கிலர். தீயை நெருங்கினால்
தான் சுடும். தீயபழக்கம் தேடிச்சென்று சுட்டுக்கொள்ளும். எனவே எந்நாளும்
உண்மைக்குப் புறம்பாக நடக்கமாட்டேன் எனத்தன் தாயாரிடம் சத்தியம் செய்துகொடுத்தார் அண்ணல்
காந்தியடிகள். தீயவை செய்தால் பெரியோரின் பழிக்கு ஆளாக நேரிடும் என எண்ணல்
வேண்டும். தீயவற்றிலிருந்து விலகுவதும் பாவத்திலிருந்து நீங்குவதும்
ஒன்றே. அவ்வழியில் செல்வோர்க்கு எக்கேடும் நிகழ்வதுமில்லை. அதனால்
நோயற்ற வாழ்வு வாழ இயலும். இவையனைத்தும் நிகழவேண்டுமாயின் ஒருவரை எப்போதும் கண்காணிக்கக்கூடிய
தாயுள்ளம் ஒன்று வேண்டும். தாயாரால் அனைத்து இடங்களுக்கும் சென்று கண்காணிக்க இயலுமா ? இயலாது. எனவே எங்கும்
நிறைந்திருக்கும் இறைவனே எப்போதும் மானிடரைக்காக்க வல்லவன் என எண்ணுகிறார் திருஞானசம்பந்தர்.
“அச்சம் இலர் பாவமிலர் கேடும் இலர் அடியார்
நிச்சமுறு நோயுமிலர் தாமுந் நின்றியூரில்
நச்சமிடறு உடையார் நறுங் கொன்றை நயந்து ஆளும்
பச்சமுடை அடிகள் திருப் ; பாதம் பணிவாரே ”
எனத் தேவாரத் திருநின்றியூர் பதிகத்தில் ஆளுடைய பிள்ளை பாடியுள்ளார். இப்பாடலுக்கு எடுத்துக்காட்டாக இறைவழிபாடு செய்து அச்சமில்லாது துணிவுடன் வாழ்ந்தவர் தானே அண்ணல் காந்தியடிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக