நட்பைப் போற்றிய தமிழ் இலக்கியம்
நட்பு ஆராய்ந்து கொள்ளத்தக்கது. ஏனெனில் நட்பு ஒருவரின்
வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும். தாய், தந்தையுடனான
நெருக்கம் பள்ளி, கல்லூரி என உயர்கல்விக்குச் செல்லச்செல்ல குறைந்துவிடுகிறது. நட்புக்கான
வாய்ப்புப் பெருகிவிடுகிறது. எனவே நல்ல நட்பினை ஆராய்ந்து தேர்ந்துகொள்ள வேண்டும். ‘தோள்
கொடுப்பான் தோழன்’ என்பது தானே பழமொழி. நீ உன்
நண்பனைப்பற்றிச்சொல் நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்பது உலகவழக்கு. நகைக்கப்பேசி
விட்டு பொழுதுபோக்குவது ஒரு வகை. விளையாடுவதற்குத்
துணைவேண்டி நட்பு கொள்வது ஒருவகை. படிப்பதற்காக நட்பு கொண்டு பயன்கொள்வது ஒருவகை. இவ்வகை
நட்புகள் கொடியும் மரமும் ஒருங்கே வளர்வதுபோல் இருவரின் உயர்வுக்கும் துணைசெய்யுமாயின்
நன்றே. அப்படியில்லாமல் மரத்தின் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளரும்
ஒட்டுத்தாவரம் போல் கொடிவளர மரம்தளரக்கூடாது. பொழுதுபோக்குக்காக
மட்டுமே அமையும் நட்பு உயர்ந்ததாகாது. உயர்வுக்குத் துணைநின்று தாழ்வுக்குத் தோள்கொடுக்கும் நட்பே உயர்ந்தது. ஒரு மணிநேரம்
பேசிவிட்டு என்ன பேசினோம் என எண்ணிப்பார்த்தால் பயனுடையது ஒன்றுமில்லையெனில் அந்நட்பை
தவிர்க்கலாம். வளரும் பருவத்தில் கிடைக்கும் காலம் அரிதானது. அதனை
முறையாகப் பயன்படுத்தவேண்டியது அவசியம். வீணாக்குதல் கூடாது. அருமையான
நட்பு கிடைத்துவிட்டால் வாழ்வின் உயர்வுக்கு வேறெதுவும் தேவையில்லை. எத்திசைக்குச்
சென்றாலும் அங்கு நட்பு உண்டெனில் வாழ்க்கை இனிதாகும். இல்லையெனில்
பாழ் என்கிறது பழம்பாடல் ஒன்று.
மனைக்குப்பாழ் வாள்நுதல்
இன்மை தான்சென்ற
திசைக்குப்பாழ் நட்டோரை
இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை
இன்மை தனக்குப்பாழ்
கற்று அறிவில்லா உடம்பு
இல்லத்திற்குப் பெண் ; நல் அவைக்குச்
சான்றோர் ; மனிதனுக்கு
அறிவுடைய உடல், இவை இல்லாவிடில்
எப்படி வீணோ அவ்வாறே நட்பில்லா இடத்தில் வாழ்வதும் வீண் என்கிறார் ’செய்யுளியல்’ என்னும்
நூலை எழுதிய செய்யுளியலுடையார். போற்றாத நல்லநட்பு மறைந்துவிடுவதுபோல் இந்நூலும் மறைந்துபோய்விட்டதனை
மயிலை சீனி.வேங்கடசாமி’ மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்னும்
நூலில், கிடைத்த இப்பாடலின் வழி உணர்த்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக