பாவேந்தர்
காட்டிய படி(ப்)பாதை
இலக்கியம் என்பது ஒரு கலை ; இது எழுத்துக்களின்
அழகிய கூட்டணி ; ஒரு மொழிப்பெண்ணின் அழகினை அடையாளம் காட்டும் அணிகலன் , என அடுக்கிக்கொண்டே
போகலாம். நீ யார் ? எனக் கேட்டால் நான்
இன்னாருடைய மகன் அல்லது இன்னாருடைய பேத்தி (பெயர்த்தி) எனக் கூறுவது
தானே வழக்கம். அப்படித்தான் இலக்கியமும் அம்மொழிக்குரியவரை அடையாளம் காட்டி
இனத்தின் பெருமையினை அறிமுகம்செய்துவிடுகிறது. இவ்வாறு
செய்வதற்கு ஓர் குடும்பத்தில் வாழ்ந்த முன்னோரின் வரலாற்றினை தெரிந்துகொள்வதுதான் நன்று. அப்படித்தான்
ஒரு மொழியின் பெருமையினைப் பிறருக்கு அறிமுகம் செய்யவேண்டுமாயின் இலக்கியங்களின் வரலாற்றினை
அறிந்துவைத்திருத்தல் வேண்டும். முன்னோர் பெருமையுடன் வாழ்ந்ததனை மூன்றாம் தலைமுறை அறிவதில்லை. தாத்தாவை
உலகமே அறிந்திருக்க, அவருடைய பேரன் அறிந்திருக்கமாட்டான். இவ்வாறு
வாழ்வதால் தாத்தாவிற்கு எந்த இழுக்கும் இல்லை. ஆனால் பேரனுக்கு ? அப்படித்தான்
வளமான இலக்கியங்களை இன்றைய தலைமுறைகள் அறியாமலிருப்பதும். அதன் விளைவாகவே
தமிழ்த்தாய்வாழ்த்தினைக் கூட ஆங்கிலமொழியில் எழுதிப்படிக்கும் அவலம். இந்த அவலநிலை
ஏற்படும் என்பதனை முன்பே எண்ணிய பாவேந்தர் பாரதிதாசன் ஒரு குழந்தையை அழைத்து “நூலைப்
படி சங்கத்தமிழ் நூலைப் படி ; முறைப்படி நூலைப் படி” என அறிவுறுத்துகிறார். தொலைக்காட்சி, கைப்பேசி
எப்போது பார்க்கவேண்டும் எனக் கேட்காத குழந்தை, எப்போது
படிக்கவேண்டும் ? எனக் கேட்கிறது. அதனால் “காலையில் படி; கடும்பகல் படி ; மாலை இரவு
பொருள்படும்படி நூலைப்படி” என்கிறார். அடுத்து எப்படிப்
படிக்கவேண்டும் ? எனக்கேட்டு இல்லாத வாலை (மனதுக்குள்) ஆட்டுகிறது. “கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி ; கற்கத்தான்
வேண்டுமப்படி” என்கிறார். படிக்காவிட்டால் ? எனக்கேட்ட
அச்சுட்டிக்குழந்தையிடமே “கல்லாதார் வாழ்வதெப்படி ?” எனக்கேட்கிறார். இவ்வுலகில்
சிறப்பாக வாழக் கல்வி அவசியம் எனத் தெளிவுறுத்துகிறார். பிறகு எதைப்
படிக்கவேண்டும் எனக் கேட்டவுடன் “அறம் படி ; பொருளைப் படி ; அப்படியே
இன்பம் படி ; இறந்த தமிழ் நான்மறை பிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி” எனக்கூறுகிறார். “கண்டதைக்
கற்றவன் பண்டிதன் ஆவான்” என்னும் முதுமொழியை நினைவுறுத்துகிறார். எது தன்
வாழ்வுக்குப் பொருந்துமோ அதனைக் கண்டு படிப்பவன் வாழ்வில் வல்லவனாக வருவான் என இதற்குப்
பொருள் காணவும் இயலும். மேலும் “அகப்பொருள்படி ; அதன்படி புறப்பொருள்
படி ; நல்லபடி புகப்புக, படிப்படியாய்
புலமை வரும் ; என்சொற்படி நூலைப் படி” என்கிறார். தமிழர்
வாழ்க்கை முறையின் அருமையினை எடுத்துக்காட்டும் அகப்பாடல்களையும் புறப்பாடல்களையும்
அறிந்தாலே புலமை தானேவரும் எனக் கூறுகிறார். ஆங்கிலப்பள்ளியில்
படிக்கும் அக்குழந்தை தமிழில் படிப்பது கடினமாக இருக்கிறது எனக் கூறியது. “தொடங்கையில்
வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப்படி – அடங்கா இன்பம் மறுபடி
ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி – நூலைப்படி” எனக்கூறி ஊக்கமளிக்கிறார்
பாவேந்தர்.
படி என ஒவ்வொரு வீட்டிலும் கட்டுவது எதற்காக ? படியில்
ஏறினால் (படித்தால்) தானே உயரத்திற்குச்
செல்லமுடியும் என உணர்த்துவதற்குத் தானோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக