தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஆணுக்கும் ஒன்பது பருவங்கள் - Nine Stages of Man

ஆணுக்கும் ஒன்பது பருவங்கள் - Nine Stages of Man
தமிழ் வளமுடைய மொழி என்பதற்குப் பழமை, வளமை, செம்மை, தனிமை எனப்பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஒரு பொருளுக்குப் பல சொற்கள் அமைந்துள்ளதேபெண்களைப் பூக்களோடு ஒப்பிட்டு இரண்டிற்கும் ஏழு பருவம் எனக் குறிப்பிடுவர்.
அரும்புமுன் இதழ்கள் குவிந்து சிறிதாக அரும்பும் நிலை, மொட்டுமுன் இதழ்கள் குவிந்து மொக்கு விடும் நிலைமுகைமலர்வதற்கு முகிழ்க்கும் (தோன்றும்) நிலை, மலர்மலர்ந்த நிலை , அலர்- மலர்ந்து (மலர் அல்லாத) விரிந்த மலர்வீவீழ்கின்ற நிலை , செம்மல்விடுதலைக்கு பக்குவப்பட்ட நிலை.
பேதை – 5-8 வயது, பெதும்பை – 9 -10 வயது, மங்கை – 11- 14 வயது, மடந்தை – 15 -18 வயது, அரிவை – 19 – 24 வயது, தெரிவை – 25-29 வயது, பேரிளம்பெண் – 30 – 36 வயது,
அரும்பு பேதைக்கும், மொட்டு பெதும்பைக்கும், முகை மங்கைக்கும், மலர் மடந்தைக்கும், அலர் அரிவைக்கும், வீ தெரிவைக்கும், செம்மல் பேரிளம்பெண்ணுக்கும் ஒப்பிட்டுக் காட்டுவர்.
பெண்களுக்கு மட்டும்தான் பருவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதா ? ஆணுக்கு இல்லையா எனக் கேட்கிறீர்களா ? தமிழில் எது இல்லை. ஆணுக்கும் பருவங்கள் உண்டு.
பாலன் – 1- 7 வயது, மீளி – 8-10 வயது, மறவோன் – 11-14 வயது, திறவோன் – 15 வயது, காளை – 16 வயது, விடலை -17 – 30 வயது, முதுமகன் – 30 வயதுக்கு மேல் என அகராதி குறிப்பிடுகிறது.
ஆண்,பெண்ணுக்கான ஏழு பருவத்தை,
ஆடவர் காளைய ராடூஉ மகன்மைந்த னாளன்பூம
னீடு குமரனு மாண்பெயர் பேதை நிகர்பெதும்பை
தேடிய மங்கை மடந்தை யரிவை தெரிவையுடன்
கூடிய பேரிளம் பெண்ணேழ் பருவஞ்செய் கோதையரே
என திருவேங்கடபாரதியாரின் நிகண்டு நூலானபாரத தீபத்தின்பதினெட்டாம் பாடல் குறிப்பிடுகிறது. ஆடவர், காளையர், ஆடூ, மகன், மைந்தன், பூமன், குமரன் என ஆணுக்கும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்ணுக்கும் வரையறுத்துள்ளதைக் காணலாம்.

***********

இலக்கியம் காட்டும் சுவர்க்கம் - Route for Heaven

இலக்கியம் காட்டும் சுவர்க்கம் - Route for Heaven 

உடுப்பது உடையானது போல் கொடுப்பது கொடையாயிற்று. மக்கட் பிறவியின் பயன் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே. இதனை இலக்கியங்கள் ஏதேனும் ஓர் கருப்பொருளைக்கொண்டு காலந்தோறும் உணர்த்திவருவதனைக் காணமுடிகிறதுதமிழர்கள் வீடுகட்டும்போது பிறர் ஓய்வெடுத்துச்செல்ல திண்ணை கட்டினர். வெயிலில் நடந்து செல்லும் போது களைப்பாற நீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் சத்திரம், சாவடி என அமைத்து வழிப்போக்கர்களைக் காத்தனர். இவ்வறத்தைத் தொடர்ந்து செய்தல் வேண்டும் எனச் சிறுபஞ்சமூலம் எடுத்துரைக்கிறது.

மக்களின் நீர் தேவையினை நிறைவு செய்யும் வகையில் குளம் வெட்டுவர். வெயில் தாக்காத வகையில் கிளைகளை நட்டு மரமாக்கி நிழற்பாதை அமைப்பர். மேடு பள்ளங்களுடைய கரடுமுரடான வழியினைச் சீராக்கிப் போக்குவரத்தை எளிதாக்குவர். தரிசு நிலத்தை உழுது விளை நிலமாக்குவர். ஊருக்குள்ளேயே மக்களின் தாகத்தைத் தீர்க்க கிணறு வெட்டுவர். இவ்வைந்து தொழிலையும் செய்வோர் சுவர்க்கத்தை அடைவர் எனச் சிறுபஞ்சமூலத்தின் அறுபத்தாறாவது பாடல் வழிகாட்டுகிறது.

குளம்தொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்டு உழுவயல் ஆக்கிவளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோடு என்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது

 மானிடர்க்கு மூன்று பக்கம் படிக்கட்டுகள் வைத்தும் கால்நடைகளுக்கு ஒரு பக்கம் சரிவான பாதையும் அமைத்து குளம் வெட்டுவதும் உண்டு. நாடாள்பவரே இச்செயல்களைச் செய்யவேண்டும் என்பதில்லை. மக்களும் செய்யலாம் என்பதனையே இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது. அப்போது சுவர்க்கம் இங்கேயே வந்துவிடும் தானே.

*****************

கண்கள் உறவை வளர்க்கும் - Eye -grows relationship

கண்கள் உறவை வளர்க்கும் - Eye -grows relationship

அறம் என்பது வாழ்க்கை முறைமை. இப்படி வாழ்ந்தால் தான் அழகு என ஆய்ந்து மனநிறைவுடன் வாழக்கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். அன்பை அடித்தளமாகக்கொண்டு குடும்பம் என்னும் ஒழுங்கு முறைமையைக் கொண்டு, தாய், தந்தை, மகன், தமக்கை, தம்பி, அண்ணன், சிற்றப்பன், சித்தி, அத்தை, மாமன், அத்தான், கொழுநன் (கணவன்), மனைவி, கொழுந்தன் (கணவனின் உடன்பிறப்பு) கொழுந்தி (மனைவியின் உடன் பிறப்பு) பாட்டன், பாட்டி என  உறவுகளுக்குப் பெயர்வைத்துக் கூடிவாழக் கற்றுக்கொடுத்தனர். எப்படி வாழ வேண்டும் எனக் கற்பது மட்டுமன்று எப்படி வாழக்கூடாது எனக் கற்பதும் நன்று. அன்பில்லாது வாழ்தல் கூடாது. அன்பு மழை போல் பொழிதல் வேண்டும். நிலம்பார்த்து மழை பெய்தல் இல்லை. அதுபோல் அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டல் வேண்டும். மழை இல்லாவிடில் மரத்தில் கிளை ஏது ? அவ்வாறே அன்புமழை இல்லாவிடில் கிளை என்னும் சுற்றம் ஏது ? நட்பு ஏது ? எனவே அன்பு என்னும் ஈரத்தை கண்களில் பெருக்கி வாழ்தல் வேண்டும். முதுமொழிக்காஞ்சியில்அல்ல பத்துஎன்னும் தலைப்பில்ஈரமில்லாதது கிளை நட்பு அன்றுஎன மதுரைக்கூடலூர்கிழார் குறிப்பிடுகிறார்.

நா கூட சில நேரங்களில் வறண்டுவிடுகிறது. கண்கள் எப்போதும் கருணை என்னும் ஈரத்துடன் விளங்குவதால் தானே ஒளிவீசுகிறது. எண் சாண் உடம்புக்குத் தலையே தலை. தலைக்குக் கண்கள் தானே

நோயற்றவாழ்வுக்கு மகாத்மா வழி - For Healthy Life - Mahatma's Policy

நோயற்றவாழ்வுக்கு மகாத்மா வழி - For Healthy Life - Mahatma's Policy


அஞ்ச வேண்டிய செயல்களுக்கு அஞ்சாதிருப்பதும் அஞ்சக்கூடாத செயல்களுக்கு அஞ்சாதிருப்பதும் அறியாமை என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தீய பழக்கவழக்கங்களால் தம் உடலைக் கெடுத்துக்கொள்ளும் மானிடர்கள் கணக்கிலர். தீயை நெருங்கினால் தான் சுடும். தீயபழக்கம் தேடிச்சென்று சுட்டுக்கொள்ளும். எனவே எந்நாளும் உண்மைக்குப் புறம்பாக நடக்கமாட்டேன் எனத்தன் தாயாரிடம் சத்தியம் செய்துகொடுத்தார் அண்ணல் காந்தியடிகள். தீயவை செய்தால் பெரியோரின் பழிக்கு ஆளாக நேரிடும் என எண்ணல் வேண்டும். தீயவற்றிலிருந்து விலகுவதும் பாவத்திலிருந்து நீங்குவதும் ஒன்றே. அவ்வழியில் செல்வோர்க்கு எக்கேடும் நிகழ்வதுமில்லை. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும். இவையனைத்தும் நிகழவேண்டுமாயின் ஒருவரை எப்போதும் கண்காணிக்கக்கூடிய தாயுள்ளம் ஒன்று வேண்டும். தாயாரால் அனைத்து இடங்களுக்கும் சென்று கண்காணிக்க இயலுமா ? இயலாது. எனவே எங்கும் நிறைந்திருக்கும் இறைவனே எப்போதும் மானிடரைக்காக்க வல்லவன் என எண்ணுகிறார் திருஞானசம்பந்தர்.

அச்சம் இலர் பாவமிலர் கேடும் இலர் அடியார் 
 நிச்சமுறு நோயுமிலர் தாமுந் நின்றியூரில் 
நச்சமிடறு உடையார் நறுங் கொன்றை நயந்து ஆளும் 
பச்சமுடை அடிகள் திருப் ; பாதம் பணிவாரே

எனத் தேவாரத் திருநின்றியூர் பதிகத்தில் ஆளுடைய பிள்ளை பாடியுள்ளார். இப்பாடலுக்கு எடுத்துக்காட்டாக இறைவழிபாடு செய்து அச்சமில்லாது துணிவுடன் வாழ்ந்தவர் தானே அண்ணல் காந்தியடிகள்.


செவ்வாய், 16 ஜூலை, 2019

நட்பைப் போற்றிய தமிழ் இலக்கியம் - The Excellene of Friendship

நட்பைப் போற்றிய தமிழ் இலக்கியம்
      நட்பு ஆராய்ந்து கொள்ளத்தக்கது. ஏனெனில் நட்பு ஒருவரின் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும். தாய், தந்தையுடனான நெருக்கம் பள்ளி, கல்லூரி என உயர்கல்விக்குச் செல்லச்செல்ல குறைந்துவிடுகிறது. நட்புக்கான வாய்ப்புப் பெருகிவிடுகிறது. எனவே நல்ல நட்பினை ஆராய்ந்து தேர்ந்துகொள்ள வேண்டும். ‘தோள் கொடுப்பான் தோழன்என்பது தானே பழமொழி. நீ உன் நண்பனைப்பற்றிச்சொல் நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்பது உலகவழக்கு. நகைக்கப்பேசி விட்டு பொழுதுபோக்குவது ஒரு வகைவிளையாடுவதற்குத் துணைவேண்டி நட்பு கொள்வது ஒருவகை. படிப்பதற்காக நட்பு கொண்டு பயன்கொள்வது ஒருவகை. இவ்வகை நட்புகள் கொடியும் மரமும் ஒருங்கே வளர்வதுபோல் இருவரின் உயர்வுக்கும் துணைசெய்யுமாயின் நன்றே. அப்படியில்லாமல் மரத்தின் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளரும் ஒட்டுத்தாவரம் போல் கொடிவளர மரம்தளரக்கூடாது. பொழுதுபோக்குக்காக மட்டுமே அமையும் நட்பு உயர்ந்ததாகாது. உயர்வுக்குத் துணைநின்று  தாழ்வுக்குத் தோள்கொடுக்கும் நட்பே உயர்ந்தது. ஒரு மணிநேரம் பேசிவிட்டு என்ன பேசினோம் என எண்ணிப்பார்த்தால் பயனுடையது ஒன்றுமில்லையெனில் அந்நட்பை தவிர்க்கலாம். வளரும் பருவத்தில் கிடைக்கும் காலம் அரிதானது. அதனை முறையாகப் பயன்படுத்தவேண்டியது அவசியம். வீணாக்குதல் கூடாது. அருமையான நட்பு கிடைத்துவிட்டால் வாழ்வின் உயர்வுக்கு வேறெதுவும் தேவையில்லை. எத்திசைக்குச் சென்றாலும் அங்கு நட்பு உண்டெனில் வாழ்க்கை இனிதாகும். இல்லையெனில் பாழ் என்கிறது பழம்பாடல் ஒன்று.
மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்சென்ற
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்று அறிவில்லா உடம்பு


இல்லத்திற்குப் பெண் ; நல் அவைக்குச் சான்றோர்மனிதனுக்கு அறிவுடைய உடல், இவை  இல்லாவிடில் எப்படி வீணோ அவ்வாறே நட்பில்லா இடத்தில் வாழ்வதும் வீண் என்கிறார் செய்யுளியல்என்னும் நூலை எழுதிய செய்யுளியலுடையார். போற்றாத நல்லநட்பு மறைந்துவிடுவதுபோல் இந்நூலும் மறைந்துபோய்விட்டதனை மயிலை சீனி.வேங்கடசாமிமறைந்துபோன தமிழ்நூல்கள்என்னும் நூலில், கிடைத்த இப்பாடலின் வழி உணர்த்துகிறார்

கடல் உண்ட தமிழ் - Sea swallowed Tamil Literature

கடல் உண்ட தமிழ்
பழங்காலத்தில் முன்னோர்கள் தங்கள் புலமையினை வெளிப்படுத்த பனையோலையை எழுதும்பொருளாகப் பயன்படுத்தினர். பொறுப்பும் தமிழார்வமும் கொண்ட சான்றோர்கள் பனை ஓலையின் தன்மைக்கேற்ப, அவை அழியும் காலத்திற்கு முன் வேறோர் படி எடுத்து இலக்கியங்களைக் காத்துவந்தனர். அவ்வாறு படி எடுத்ததன் விளைவாகவே இன்று பல நூல்கள் இலக்கியங்களாகித் தமிழரின் பெருமையை உணர்த்துகின்றன. கடல்கோள் முதலான காரணங்களில் தப்பிப்பிழைத்த நூல்களே இன்று இலக்கியங்களாக இடம்பெற்றுள்ளன. அதில் சிக்குண்டு காணாமல் போனவை எண்ணற்றன.
      பாண்டிய நாடு கடல்கோளால் அழிந்தபோது சங்ககால இலக்கியங்கள் பல மறைந்துபோயின. பல துறைகளிலும் விஞ்சி நின்ற தமிழரின் பேரறிவினை எடுத்துரைக்கும் இலக்கியங்கள் காணாமல் போனதனை எண்ணி வருந்திப் பாடிய செய்யுளினைமறைந்துபோன தமிழ் நூல்கள்என்னும் நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி எடுத்துக்காட்டுகிறார்.
ஏரணம் உருவம் யோகம் இசை கணக்கிரதம் சாலம்
தாரணம் மறமே சந்தம் தம்பநீர் நிலம் உலோகம்
மாரணம் பொருள் என்றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்டது அந்தோ வழிவழிப் பெயரும் மாள.(.326)

என்னும் இப்பாடல் தமிழரின் பல்துறை ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. அளவைமந்திரம், உடல் ஒழுங்குமுறை, இசை நயம், கணக்கு மொழி, பொருள்கள், நிலைத்திருக்கும் கலை, வீரம், இசைப்பாடல், காக்கும் நீர், நிலம், உலோகம், மாயவித்தை, உவமை என அனைத்து நுட்பங்களையும் கொண்ட ஏடுகளை வாரி வாரணம் என்னும் கடல் யானைக் கொண்டதை இப்பழஞ்செய்யுள் புலப்படுத்துகிறது. கோயில்கள் கட்டுவதற்குரிய கட்டுமானக் கலைத்திறன், கோள், நட்சத்திரம் என நாளினை வகுத்துக் காட்டிய வானத்தைப் பற்றிய அறிவு, கடல் போக்கினைக் கண்டறிந்து கப்பலைச் செலுத்திய ஆற்றல்,  நீர் நிலைகளைப் பாதுகாத்த முறைமை, நிலத்தை பண்படுத்தி விளைவித்த பாங்கு , போர்க்கருவிகள் செய்த நுட்பம், வீரத்தைக் கையாண்ட முறைமை, இலக்கண முறைமைப்படி செய்யுள்கள் எழுதிய சிறப்பு என அனைத்து நுட்பங்களையும் எடுத்துரைக்கும் ஏடுகளைக் கடல்கொண்டு சென்றுவிட்டதே என வருந்தி நிற்கும் தமிழ்ப்புலவரின் நிலையினை இப்பாடல் எடுத்துரைக்கிறது.


பாவேந்தர் காட்டிய படி(ப்)பாதை - 'How to read literature' by Poet Bharathidasan

பாவேந்தர் காட்டிய படி(ப்)பாதை
இலக்கியம் என்பது ஒரு கலை ; இது எழுத்துக்களின் அழகிய கூட்டணி ; ஒரு மொழிப்பெண்ணின் அழகினை அடையாளம் காட்டும் அணிகலன் , என அடுக்கிக்கொண்டே போகலாம். நீ யார் ? எனக் கேட்டால் நான் இன்னாருடைய மகன் அல்லது இன்னாருடைய பேத்தி (பெயர்த்தி) எனக் கூறுவது தானே வழக்கம். அப்படித்தான் இலக்கியமும் அம்மொழிக்குரியவரை அடையாளம் காட்டி இனத்தின் பெருமையினை அறிமுகம்செய்துவிடுகிறது. இவ்வாறு செய்வதற்கு ஓர் குடும்பத்தில் வாழ்ந்த முன்னோரின் வரலாற்றினை தெரிந்துகொள்வதுதான் நன்று. அப்படித்தான் ஒரு மொழியின் பெருமையினைப் பிறருக்கு அறிமுகம் செய்யவேண்டுமாயின் இலக்கியங்களின் வரலாற்றினை அறிந்துவைத்திருத்தல் வேண்டும். முன்னோர் பெருமையுடன் வாழ்ந்ததனை மூன்றாம் தலைமுறை அறிவதில்லை. தாத்தாவை உலகமே அறிந்திருக்க, அவருடைய பேரன் அறிந்திருக்கமாட்டான். இவ்வாறு வாழ்வதால் தாத்தாவிற்கு எந்த இழுக்கும் இல்லை. ஆனால் பேரனுக்கு ? அப்படித்தான் வளமான இலக்கியங்களை இன்றைய தலைமுறைகள் அறியாமலிருப்பதும். அதன் விளைவாகவே தமிழ்த்தாய்வாழ்த்தினைக் கூட ஆங்கிலமொழியில் எழுதிப்படிக்கும் அவலம். இந்த அவலநிலை ஏற்படும் என்பதனை முன்பே எண்ணிய பாவேந்தர் பாரதிதாசன் ஒரு குழந்தையை அழைத்து நூலைப் படி சங்கத்தமிழ் நூலைப் படி ; முறைப்படி நூலைப் படிஎன அறிவுறுத்துகிறார். தொலைக்காட்சி, கைப்பேசி எப்போது பார்க்கவேண்டும் எனக் கேட்காத குழந்தை, எப்போது படிக்கவேண்டும் ? எனக் கேட்கிறது.  அதனால்காலையில் படி; கடும்பகல் படி ; மாலை இரவு பொருள்படும்படி நூலைப்படிஎன்கிறார். அடுத்து எப்படிப் படிக்கவேண்டும் ? எனக்கேட்டு இல்லாத வாலை (மனதுக்குள்) ஆட்டுகிறது.  “கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி ; கற்கத்தான் வேண்டுமப்படிஎன்கிறார். படிக்காவிட்டால் ? எனக்கேட்ட அச்சுட்டிக்குழந்தையிடமேகல்லாதார் வாழ்வதெப்படி ?” எனக்கேட்கிறார். இவ்வுலகில் சிறப்பாக வாழக் கல்வி அவசியம் எனத் தெளிவுறுத்துகிறார். பிறகு எதைப் படிக்கவேண்டும் எனக் கேட்டவுடன்அறம் படி ; பொருளைப் படி ; அப்படியே இன்பம் படி ; இறந்த தமிழ் நான்மறை பிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படிஎனக்கூறுகிறார். “கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்என்னும் முதுமொழியை நினைவுறுத்துகிறார். எது தன் வாழ்வுக்குப் பொருந்துமோ அதனைக் கண்டு படிப்பவன் வாழ்வில் வல்லவனாக வருவான் என இதற்குப் பொருள் காணவும் இயலும். மேலும்அகப்பொருள்படி ; அதன்படி புறப்பொருள் படி ; நல்லபடி புகப்புக, படிப்படியாய் புலமை வரும் ; என்சொற்படி நூலைப் படிஎன்கிறார். தமிழர் வாழ்க்கை முறையின் அருமையினை எடுத்துக்காட்டும் அகப்பாடல்களையும் புறப்பாடல்களையும் அறிந்தாலே புலமை தானேவரும் எனக் கூறுகிறார். ஆங்கிலப்பள்ளியில் படிக்கும் அக்குழந்தை தமிழில் படிப்பது கடினமாக இருக்கிறது எனக் கூறியது. “தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப்படிஅடங்கா இன்பம் மறுபடி ஆகும் என்ற ஆன்றோர் சொற்படிநூலைப்படிஎனக்கூறி ஊக்கமளிக்கிறார் பாவேந்தர்.

படி என ஒவ்வொரு வீட்டிலும் கட்டுவது எதற்காக ? படியில் ஏறினால் (படித்தால்) தானே உயரத்திற்குச் செல்லமுடியும் என உணர்த்துவதற்குத் தானோ ?