தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 21 மே, 2021

வாழ்க்கை அழகானது தான் – Life is really Beautiful

 


தீமைகளைக் கடப்போம் ; நன்மைகளை மதிப்போம் 

என்ன கிழித்துவிட்டாய் ? என யாரையும் கேட்காதீர்கள். எதையும் கிழிக்காமல் இருந்தாலே போதும். ஆம்! வீட்டில் நல்ல பிள்ளையாய் வீடடங்கி நின்றாலே போதும்தானே.

வாழ்க்கை புரியாத புதிர்? இக்கூற்றை ஒத்துக்கொள்ளாதவர்கள்கூட இன்று ஒத்துக்கொள்கின்றனர். எல்லோரும் கடவுளைத் தேடி அலைகிறார்கள். மருத்துவர் மட்டுமன்று ; செவிலியர்களும்  கடவுளாகத் தெரிகிறார்கள். மருத்துவமனையில் இடமில்லை எனத் தடுத்து நிறுத்தாத பாதுகாவலரும் கடவுளாகிறார். ‘தம்பி! வீட்டை விட்டு வெளியே வராதே” எனக் கெஞ்சும் காவலரும் தெய்வமாகத் தெரிகிறார். வணிகர்களும்  தெய்வமாகத்தெரிகின்றனர். பால்காரர் காலையில் வரவிட்டால் தெய்வ அருள் கிடைக்கவில்லையே! என மனம் ஏங்குகிறது. அவர் உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என மனம் வேண்டுகிறது. காய்கறி வீட்டிற்கே கொண்டுவந்துகொடுக்கும் மகராசியிடம் விலைபேசுவது ‘பாவத்தின் உச்சம்’ என்னும் எண்ணம் வந்துவிட்டது. இவர்கள் கண்முன்னே காட்சி கொடுப்பதால் தெய்வமாயினார். உறவுகள், நட்புகள், உடன்பணி செய்வோர், சுற்றி இருப்பவர்கள் யாரும் வந்து பார்ப்பதில்லை. அவர்கள் மீது துளியும் கோபம் இல்லை. மாறாக, அவர்களும் தெய்வம்போல் தெரிகிறார்கள். நம் உடல் நலத்தில் அவர்களுக்கு அக்கறை இருப்பதால்தான் பார்க்கவரவில்லை என்னும் எண்ணம் எல்லோரிடமும் பரவலாகிவருகிறது. எல்லோரும் அன்புடையவர்களாகத் தெரிகிறார்கள்.

இப்படி தொடக்கத்திலேயே இருந்திருந்தால் என்ன அழகாக இருந்திருக்கும்.எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்தானே. கையிலோ, காலிலோ அடிபடும்போதுதான் அதன் அருமை தெரிகிறது. தலையில் வெட்டுக்களுக் காயங்களுடன் ஒருவர் வருகிறார்.  எப்படி? என்று மற்றொருவர் கேட்கிறார். முடி திருத்துநரின் பணியை மனைவி செய்ததால்வந்தவினை என்றார்.

இன்னொரு பக்கம்தான் கொடுமையானது. ஒருவருக்கு உடல்நலம் குறைந்தால், என்ன? எனக் கேட்பதற்கு ஆளில்லை. பெற்றோர்களைப் பார்ப்பதற்கு,  பிள்ளைகளே அஞ்சும்போது பேரக்குழந்தைகள் என்ன செய்வார்கள்?. எத்தனையோ மருத்துவமனைகளில் மருத்துவர்களே தொலைபேசியில் தொடர்புகொண்டு, “உங்கள் தாத்தா ; உங்கள் பாட்டி….”  எனக் கூறினாலே இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். “நலமானார்கள்” எனச்சொல்லும் முன்னே துண்டித்துவிடும் பேரக்குழந்தைகளின் செயலைக் கண்டு ‘இதுதான் கலியுகம்” என்பதனை அனைவரும் உணர்கிறார்கள். முதியவர்கள் சிக்கலான சூழலை புரிந்துகொள்ளமுடியாமலும் வீட்டில் இருக்கவும் முடியாமலும், மருத்துவமனைக்குச் செல்வதும் திரும்புவதுமாக இருக்கிறார்கள். பாதுகாப்புணர்வைத் தரவேண்டிய  ஊடகங்களில் சில அச்சத்தைமட்டுமே தந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களால் மன உளைச்சல்பெற்று இறப்பவர்கள் தொகைதான் அதிகரித்துவருகிறது.  மரங்கள், விலங்குகளுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஊடகங்களை அவை பார்ப்பதில்லைதானே.

“பள்ளிக்குப் போ, விளையாடப்போ” என வெளியில் துரத்தியவர்கள் “வீடடங்கி இரு” என அடைத்துவைக்கிறார்கள். அரிசி மூட்டை சுருங்கச்சுருங்க பிள்ளைகளின்  எடை பெருகுகிறது. விழித்துக்கொள்ளும் குழந்தைகள் அளவறிந்து உண்கிறார்கள். எதுகேட்டாலும் ஆக்கித்தரும் தாய்மார்கள், குழந்தைகளைப் பருக்கவைத்துவிடுகிறார்கள். இந்நேரத்தில் குழந்தைகளுக்கு எல்லா வேலைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும். இந்த  கொடுமையான சூழலை இனிதாக  மாற்ற அவர்களுடைய திறனை அறிந்து கற்பிக்க வழிவகைசெய்யவேண்டும். இசையோ, கலையோ,  எல்லாவற்றையும் சொல்லித்தர இணையவழியில் குருமார்கள் காத்திருக்கிறார்கள். தெய்வங்களாகிய குருமார்கள் இணையவழியில் உங்கள் வீட்டிற்கேவந்து சொல்லித்தருவர். வீட்டிலிருந்தே கற்க வழிவகைசெய்தால் பிள்ளைகளை மூளைச்சலவையிலிருந்து காப்பாற்றிவிடலாம்.

ஏழைக்குழந்தைகளிடம் திறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) இல்லையே என வருந்தாதீர். அது இல்லாமல் இருப்பதே அவர்கள் கண்களையும் உள்ளத்தையும் பாதுகாக்கும்.

காலை இரண்டு மணிக்கு எழுந்து பல இடர்ப்பாடுகளைக் கடந்து இருபது வருடங்களாக உழைத்து உழைத்து தேய்ந்துபோன எண்ணற்ற மனிதர்கள் வாழ்கிறார்கள். கடைவீதியில் அவர்கள், ஐம்பது, நூறு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு என்ன வாங்கலாம்? என ஒவ்வொரு பொருளுடைய விலையைக்கேட்டுக்கேட்டு, எதை வாங்கலாம்? எனத் தயங்கித்தயங்கி நிற்கின்றனர். ஒருவர் விலையே கேட்காமல் “இது ஒரு கிலோ, அது ஒரு கிலோ” எனத் தேவையானதை வாங்கிவிட்டு 2000 தாளை நீட்டுகிறார். சலவை நோட்டு. “இவர்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது?” என ஏழைகள் நினைப்பது இயல்புதானே?

காலைமுதல் மாலை வரை, எரிவாயு உருளை (சிலிண்டர்) எடுத்து மாடிப்படிகளில் சிரமப்பட்டு ஏறிச்செல்லும் ஊழியரைப் பார்த்தால் உழைப்பின் அருமை புரியும். ஆளையே சாய்த்துவிடுவது போல் பெரிய உப்புமூட்டையை வைத்துக்கொண்டு தள்ளமுடியாமல் ‘உப்பு , உப்பு” என குரல்கொடுத்துக்கொண்டே விற்றுக்கொண்டுபோகும் முதியவரைப் பார்த்தால் அவருடைய பிள்ளைகளை வசைபாடத்தோன்றும்.  நேர்மையாக உழைக்கும் இவர்கள் ஒரு புறம். தவறான வழியில் செல்வம் சேர்த்து பணத்தை இரைப்போர் ஒரு புறம். இதுதான் வாழ்க்கை

அரசு என்பது என்ன? மக்கள்தானே? எனவே ஒவ்வொருவரும் பொறுப்பேற்கவேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவோம். நம்மால் இயன்றவரை சுற்றி இருப்போர்க்கு நன்மை செய்வோம். பணத்தால் உதவலாம் ; பொருளால் உதவலாம் ; தொலைவில் முகக்கவசத்துடன் விலகிநின்று நம்பிக்கையூட்டும் சொற்களால் உதவலாம். எப்படி முகக்கவசம் அணியவேண்டும் எனச்சொல்லித்தருவதும் மருத்துவமே.

மகள் திருமணத்துக்குச் சேர்த்துவைத்த பணத்தை, சாலையோர மக்களின் உணவுக்காகச் செலவிடுகிறார் ஒருவர் ; உறவை இழந்து என்ன செய்வது எனப்புரியாமல் துணையற்று ஏங்குவோருக்காக, “என்னைத் தொடர்புகொள்க” என தனது எண்ணைக் கொடுத்து உதவி செய்யக்காத்திருக்கிறார் ஒருவர். தனது மகன் நோயில் சிக்கிக்கொள்ளக்கூடாதென பணிக்குச் செல்லும் மகனைப் பெற்றோர் தடுத்தாலும், அதனை மறுத்து நாளும் அவசரசிகிச்சை ஊர்தி ஓட்டுகிறார் ஒருவர் ; வாசலிலேயே உணவுண்டுவிட்டு விடைபெறுகிறார் ஆய்வாளர் ஒருவர் ; பகல், இரவு தெரியாமல், தாகத்தில் தண்ணீர் கூட குடிக்கமுடியாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் ; கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காலில் விழுந்து வணங்கும் தலைவர்கள் ; குழந்தைகள் ஓய்விலேயே இருந்தால் அறிவு வளர்ச்சி தடைபடும் என்பதனை உணர்ந்து நிகழ்நிலை (ஆன்லைன்) வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் ; மின்சாரம் , தண்ணீர், தூய்மை என ஒவ்வொருவரும் தம் இல்லத்தை விட பிறர் நலம் நாடுகின்றனர். பணியினை, பணியாக எண்ணாது சேவையாகச் செய்யும் தெய்வத்துக்கு இணையான அத்தகைய மனிதர்களின் அன்பு எத்தனை உயிர்ப்புடையது. இவர்களை அகக்கண்கொண்டு பாருங்கள் ! வாழ்க்கை அழகானதுதானே.

வியாழன், 20 மே, 2021

தமிழ் இலக்கிய வேர்கள் - Root of Tamil Literature

 


வேர்களால் வாழ்கிறோம்

           இலக்கிய மை. கருப்பாக இருந்தாலும் கற்போர் உள்ளத்தில் வெளிச்சத்தை ஊட்டிவிடுகிறது கரும்பலகை வெளிச்சம் ஊட்டுவதுபோல்.

           தமிழ் இலக்கிய வேர்கள்தான் தமிழ்மரபினைக் காத்துவருகின்றன. வேர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டே சென்றால் மரம் என்னாகும் என்பதை அறிவோம்தானே! தமிழ்மரமும் அவ்வாறே. தமிழ் இலக்கியங்களைப் படிப்பது நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. “புத்தக விற்பனை அதிகமாக இருக்கிறதே!” என  எனக்கு விடையளிக்க முயல்வீர்களேயானால் மகிழ்ச்சிதான். ஆனால், அவ்விடையை புத்தகம் பதிப்பிக்கும் நூலாசிரியர்களிடம் சொல்லுங்கள். வீட்டில் பல பரண்கள் புத்தகங்களால் வழிந்துகொண்டிருக்கும் அவலத்தைச் சொல்வார்கள். தங்கள் சொத்து தங்களிடம் இருப்பதை எந்த எழுத்தாளரும் விரும்புவதில்லைதானே?

           மரங்களைப் பாதுகாத்தல் நன்றுதான். முடியாவிட்டால் விட்டுவிடலாமா?. வேர்களுக்கு கேடுசெய்தால் கனிகள் குறையும் ; காய்கள் குறையும் ; பூக்கள் குறையும்  ; கிளைகள் குறையும் ; இலைகள் குறையும் ; மரம் விறகாகும் ; நிழல் மறையும் ; காற்று மாசாகும் ; மண் மணலாகும் . மருதம் பாலையாகும். இது மரங்களுக்கு மட்டுமா ?  இலக்கியங்களுக்கும்தான். ஒவ்வொரு மொழியின் வேர் இலக்கியங்கள்தானே? அந்த மொழியே மனிதர்க்கு வேர். வேர் இல்லாத மரம் என்னாகும்? அதுபோல்தான் தாய்மொழி இல்லாத மனிதர்களும் அடையாளம் தெரியாமல் முழு ; முக்கால் ; அரை ; கால் எனக் காணாமல் போனார்கள் ; போகிறார்கள் ; போவார்கள்.

           மதிப்பிற்குரிய வாசகர்களே ! விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் தாத்தாவின் தமிழ்வளம் உங்கள் தந்தையிடம் இருந்ததா? உங்கள் தந்தையின் தமிழ்வளம் உங்களிடம் இருந்ததா? உங்களின் தமிழ்வளம் உங்கள் பிள்ளைகளிடம் இருக்கிறதா? செழுமையான இலக்கியங்கள் எல்லாம் நூலகங்களில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அருமையான பதிப்புகள் எல்லாம் கரையான்களால் கரைக்கப்படுகின்றன. மின்னாக்கம் செய்யவேண்டிய நூல்களை அடையாளம் சொல்வதற்காவது தமிழ்ப்புலமை வேண்டுமன்றோ ! தமிழறிஞர்களுடன் தமிழ் இலக்கியங்களும் மறைந்துபோகிறது. ஒரு இலக்கியத்தைப் படிப்பதற்கே வாழ்நாள் போதாது என்னும் நிலையில், தமிழில் படிக்க என்ன இருக்கிறது? எனக் கேட்பது எத்தனை அறியாமை. குழந்தைகளுக்கு தமிழின் அருமையைக் கற்பிக்கவேண்டியது தமிழர்களால்தானே முடியும். அவ்வருமையை நாள்தோறும் ஊட்டிமகிழ்வோம்.

            இந்த உலகத்தில் “நீங்கள் நன்றி சொல்ல விரும்பினால் யாருக்குச் சொல்வீர்கள்?” என்று ஒருவர் பலரை நேர்காணல் செய்கிறார். ஒவ்வொருவரும் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி எனப் பலரை சொல்கின்றனர். எல்லோரிடமும் கேட்டுவிட்டு, யாரும் குறிப்பிடாத ; நாள்தோறும் அனைத்து உயிர்களின் உணவுக்காக உழைத்திடும் உழவனைப்பற்றி கருத்து கேட்கிறார். எல்லோரும் புன்னகைத்து ; உண்மைதான் எனக்கூறி ; பொறுத்தருளவேண்டி ; “உழவர்தான் நாம் மதிக்கவேண்டிய முதல் மனிதர்” என ஆனந்தக்கண்ணீருடன் கூறுகிறார்கள். உழவன் மட்டுமே தன் பசியை அடக்கிக்கொண்டு ஊர் பசிக்குச் சோறு போடுகிறான். கடவுள் என்னும் முதலாளியின் முதல் தொழிலாளி உழவன் எனில் மறுப்பாருண்டோ?  அத்தகைய உழவனாலேயே நாடு நலம்பெறும் என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் எத்தனை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.

           அடிப்படை நன்றாக இருந்தால் கட்டிடம் நன்றாக இருக்கும்தானே? அப்படி நாடு நன்றாக இருக்க உழவுத்தொழில் சிறக்கவேண்டும் என உலகுக்கே நெறிகாட்டியவர் தமிழர். வரப்பு உயர்ந்தால் நீர் நிறைவாகும் ; நீர் நிறைவானால் நெல் முதலாகிய தானியங்கள்  நிறைவாகும் ; நெல் நிறைவானால்  உழவர்கள் வளம் பெறுவர். உழவர்கள் வாழ்வு வளமானால் நாடு வளமாகும். அதற்குத் துணைநின்ற மன்னனின் உயர்வினை நாடே புகழும். இப்பெருமையினை, உலகம் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கும் எனப் பாடியுள்ளார் சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்.

வார்சான்ற கூந்தல் ; வரம்புயர வைகலும்

நீர் சான்று உயரவே நெல்லுயரும் – சீர்சான்ற

தாவாக் குடியுயரத் தாங்கரும் சீர்க்கோ உயரும்

ஓவாது உரைக்கும் உலகு (சிறுபஞ்சமூலம் – 46)

 

என்னும் இப்பாடல் காலத்தால் மறையாத ; பொய்க்காத சொற்களின்வழி எடுத்துக்காட்டியுள்ள திறம் வியக்கத்தக்கதுதானே!

           இக்கருத்தினையே ‘தமிழ் மூதாட்டி” ஔவையார் மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் பாடியுள்ளார். காரியாசான் கூறிய கூற்றோடு செங்கோலின் அறத்தையும் கூட்டிப் பாடியுள்ளார். அறமின்றி அரண் ஏது? என்னும்  செங்கோல் அறத்தையும் பதிவுசெய்கிறார்.

           வரப்பு உயர்ந்தால் நீர் நிறைவாகும் ; நீர் நிறைவானால் நெல் முதலாகிய தானியங்கள்  நிறைவாகும் ; நெல் நிறைவானால்  உழவர்கள் வளம் பெறுவர். உழவர்கள் வளமாக வாழ்ந்தால் மன்னனின் செங்கோல் எவ்வுயிர்க்கும் கொடுங்கோலாகாது. .செங்கோல் தாழாது உயர்ந்து நிற்பின் மன்னனின் உயர்வினை நாடே புகழும் என்பதனைத் “தமிழ் மூதாட்டி” ஔவையார் அருந்தமிழில் பாடினார்.

வரப்புயர நீர் உயரும் ; நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும் ; குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன்  உயர்வான்.

 

எனக் குலோத்துங்க சோழனுக்காகத் ‘தமிழ் மூதாட்டி” ஔவையாரின் அறிவுரை எண்ணியெண்ணி வியக்கத்தக்கதுதானே. இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியங்களை விரித்துரையுங்கள். தமிழில் ஆர்வம் தலைக்கேறும். பின்னர், அவர்களே உங்களை இலக்கியம் படிக்கச்சொல்வார்கள். தமிழின் செவ்விலக்கியங்களை செவிமடுக்கச்செய்வீர். தமிழ்த்தாயின் தவப்புதல்வர் என்னும் பெருமைதனைக் காப்பீர்.

          

 

செவ்வாய், 18 மே, 2021

தமிழில் பெயர் வைப்போம் – Keep Name in Tamil

 

 


இருகால் மலர்கள்

     தமிழில் பெயரிட்டால் தமிழ்ப்பண்போடு குழந்தைகள் வளரும். அப்பெயரில்மீண்டும் மீண்டும் அழைக்க அழைக்க அப்பண்பு எளிதில் வாய்க்கும் என்பது நம்பிக்கை. உலக நாடுகள் அனைத்தும் தம் தாய்மொழியிலேயே பெயரிடும்போது, தமிழர்கள் பிறமொழியில் பெயரிடலாமா? அப்படியே பெரியோர்கள் சொல்வதைக் கேட்டாலும் அப்பெயர்கள் இக்காலத்திற்கேற்றபடி புதிதாக இல்லை ; சிறியதாக இல்லை எனக்கூறுவோரும் உண்டுதானே? திரைப்படங்களும் விளம்பரங்களும்தான் பெயரழகை கிண்டல்செய்து கெடுத்துவிட்டது. விளம்பரங்களில் தமிழர்பெயரைக்கேட்பது குதிரைக்கொம்பு. பெயர்களால், குழந்தைகளால் மதிப்பு உண்டாகவேண்டும் என நீங்கள் நினைப்பதைவிட, பெயர்களுக்கு குழந்தைகளால் மதிப்பு உண்டாக்கவேண்டும் என நினையுங்கள். நல்ல பெயர்களே உங்கள் குழந்தையை புகழின் உச்சத்திற்குக்கொண்டுசெல்லும். வருங்காலத்தில் உங்கள் குழந்தையின் பெயரை உலகம் உச்சரிக்கும். ‘பிச்சை’ என்று பெயர் வைத்த ‘சுந்தரம் பிச்சை’ கோடிக்கணக்கில் கொடை (தானம்) அளிக்கிறார்.  அவருடைய பெற்றோர் அக்குழந்தையை இறைவன் இட்ட பிச்சையாகத்தானே கருதியிருக்கவேண்டும். இன்று உலகமே கொண்டாடும் தமிழனாக ; உலகத்தையே ஆளும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே! நீண்ட பெயர்களை குலப்பெயரோடு சேர்த்துவைக்கும் பெருமையுடையவர்கள் அவர்கள் பணியைத் தொடர்க.

விமானத்தில் செல்ல சுருக்கமான பெயர்கள் தேவை. என்ன பெயர் வைக்கலாம் ? சுருக்கமா ஓரிரு எழுத்தில் தமிழில் பெயர் இருக்கா ? என என் நண்பர் கேட்டார். தமிழில் இல்லாத பொருள் இல்லை அல்லவா? அவர்போன்ற பலருக்காக சில பெயர்கள் கீழே:

அ – அன்பு, அரசு, அழகு, அணி, அறிவு, அரி

ஆ – ஆடல், ஆதி, ஆண்டாள், ஆரூரன், ஆரூரி

இ – இனி (யான்), இனியாள், இன்னிசை, இரும்பொறை, இசை, இன்பா, இறைவி,

ஈ – ஈகையான், ஈரா, ஈஸ்வரன், ஈடாகான், ஈசா,

உ – உமை, உமா, உரன், உலகன், உவகை(கா), உலகநாயகி

ஊ – ஊரா, ஊரி, ஊக்கி, ஊக்கன், ஊடி

எ – எழிலி, எழிலன், எம்பி, எவ்வி, எல்லி.

ஏ – ஏகன், ஏகி, ஏகாம்பரன், ஏடன், ஏரன், ஏரா

ஐ – ஐயன், ஐயள். ஐயர் (தலைவர்), ஐயா, ஐமுகன்

ஒ – ஒப்பிலி, ஒளியா(ள்), ஒளிஇறை, ஒற்றி(ஊரன்), ஒயில்

ஓ – ஓமி, ஓவியா, ஓவி, ஓரி, ஓசைநாயகி

ஔ – ஔவை, ஔடதா

க – கலை, காசி, கிருத்திகா, கீதை, குளிர், கூர்பிறை, கெடிலா, கேசவா, கைலாசம், கொற்றா, கோ, கௌரி

ச – சரண், சாரா(ல்), சிலம்பு, சீரா, சுகி, சூடன், செங்கோ, சேரா, சைலா, சொல்லா(ள்), சோமா, சௌரா.

த – தருண், தாரிணி, திரு, தீக்கா(கை), துணா, தூரா, தென்னி, தேனீ, தை, தொடி, தோடி, தௌரி

ப – பரன், பாரி, பிரான், பீடு, புரன், பூவை, பெருந்தேவி, பேரழகி, பைரா(வன்), பொன், போகி, பௌன்,

ம – மறன், மாரி, மின்னி, மீரா, முகில், மூரி, மெல்லியள், மேலான், மைனா, மொட்டு, மோடி (சக்தி), மௌலி (முடி)

வ – வசி, வாரி, விண்ணி, வீரி, வெண்ணிலா, வேம்பு, வைகா(கை),

பெயர் வைத்தால் அணிகலனும் சூடவேண்டும்தானே? என்ன அணிகலன் எனக் கேட்கிறீர்களா? தமிழ்க்குழந்தையாயிற்றே தமிழன்னைக்குச் சூட்டிய அனைத்தையும் சூட்டுங்கள். அழகுக்கு அழகு சேர்ப்பதும் தமிழர் கலைதானே. தமிழன்னைக்கு என்ன சூட்டினார் எனக் கேட்கிறீர்களா? இதோ, சுத்தானந்த பாரதியின் பாடல்.

 

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச்சூடி 
 நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க.

 

“தமிழில் பெயர் வைப்போம் ! தமிழில் கையொப்பமிடுவோம்”

 

ஞாயிறு, 16 மே, 2021

கலியுகத்தில் வாழ்வதற்கான இரகசியங்கள் – Secrets to live in kaliyuga

 


உங்களைப்போல் யார் இருக்கிறார்கள்?

ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வகையாக அசுர குணமும் , தேவ குணமும் மனிதர்களை ஆண்டுகொண்டிருக்கும். முதலில் தேவ குணம் என்னும் நற்குணம் மட்டுமே மக்களிடம் பரவி இருந்தது. பின்னர், சில மனிதர்களிடம் அசுர குணமும் சில மனிதர்களிடம் தேவ குணமும் இருந்தது.  இன்றைய கலியுகத்தில் ஒருவரிடத்திலேயே  இருகுணமும் ஒளிந்திருக்கிறது. யாரிடம் எந்த குணம் இருக்கிறது? எனக் கண்டறிதல் கடினம். எந்தக் கட்சிக்கு ஓட்டுக்குப் போட்டாய்? எனக் கேட்டால் வஞ்சம் இல்லாமல் ‘உங்கள் கட்சிக்குத்தான்’ எனச்சொல்லி, கேட்பவரை மகிழ்ச்சிப்படுத்தத் தெரிந்தவரே கலியுகத்தில் வாழத்தெரிந்தவர். “இல்லை, இல்லை, நான் உண்மைதான் சொல்வேன்”  என்று கூறிவிட்டால், இந்த உலகத்தில் வாழ்வதற்கான தகுதி இல்லை என்பதனை நீங்கள் முடிவு செய்யவேண்டிய அவசியம் இருக்காது. யார் மனமும் நோகாமல் அவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படுத்தும்வகையில், புன்னகையில் மட்டுமே விடைசொல்லத்தெரிந்தவர்கள் கலியுகத்தில் வாழ்வதற்கென்றே பிறந்தவர்கள்.

மனிதர்கள் அனைவரையும் நல்லவராக எண்ணி, சிரித்துப் பழகி உறவுகளை வளர்க்க மட்டுமே தெரிந்திருந்தால் நீங்கள்  இந்தக் கலியுகத்தில் வாழத்தகுந்தவரில்லை. சாலையில் சிரித்துப்பேசிக்கொண்டே ஒருவர் உங்களுடைய கவனத்தைத்  திருப்பி உங்கள் சட்டைப்பையிலிருக்கும் பணத்தை தன்னுடைய சட்டைப்பைக்கு உங்களுக்குத் தெரியாமலே இறக்குமதி செய்திருப்பார். சாலையில் நடக்கும்போது, நடைபோட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடிப்பவரைப் போல நடந்து வீடு சேர்வது நன்று. மொழி தெரியாதவர்களைப்போல் நடந்துகொண்டால் நீங்கள்தான் “கலியுக ஜித்தன்”.

பணம் எடுக்கும் எந்திரத்தை நம்பாமல், பக்கத்திலிருப்பவரை நம்பினால் அவர் உங்களின் தேவைக்குப் பணம் எடுத்துக் கொடுத்து உங்களை அனுப்பிவிடுவார். பின்னர், அவர் தேவைக்கும் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்வார். கலியுகத்தில் மனிதர்களைக் காட்டிலும் எந்திரத்தைப் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.   இது அனைத்து மின்னணு கருவிகளுக்கும் பொருந்தும்.

“பிச்சையிட்டால் பாவம் தொலையும்” எனக் கனிவுடன் பிச்சையிடும் கனிவான உள்ளம் கொண்டவரா நீங்கள்? “ஆம்! என் கிறீர்களா.”கேட்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், பிச்சை எடுப்பதையே ஒரு நிறுவனம் போல் நடத்தும் கயவர்கள் வளர்வதற்கு நன்கொடை அளிப்பவர்களாகவும் நீங்கள் மாறியிருக்கலாம்தானே? கலியுகத்தில், உங்கள் கருணை, புண்ணியத்திற்கு மாற்றாகப் பாவமும் கூட்டக்கூடும்.  ஆனால், “‘இல்லை’ என்று சொன்னால் அசிங்கமாகத்திட்டி மானத்தை வாங்கிவிடுவார்களே (அப்படியும் சில பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறேன்)” எனக் கையில் கிடைத்ததைக் கொடுத்து தப்பி ஓடி, மூச்சுவாங்கிக்கொள்ளத்தெரிந்தால் நன்றுதான்.

மற்றுமொருவழியுண்டு, ஒருவழிப்பாதையில் போக்குவரத்துக்காவலரைக் கண்டு, ஏதோ ஒரு முக்கியமான கோப்பினை (ஃபைல்) வீட்டில் மறந்துவிட்டுவந்ததுபோல் திரும்பிவிட்டாலும் நீங்கள் பிழைத்துக்கொள்வீர். இல்லாவிடில்,  திரும்பிக்கொண்டுகாதுகேளாதவர்போல் நடிக்கத்தெரிந்தால் இந்த உலகம்தான் நீங்கள் நடித்துக்காட்டி அசத்தவேண்டிய நாடகமேடை. பிச்சைக்காரரைக் கண்டு வருந்தியகாலம் மாறி அஞ்சும்காலம் வந்துவிட்டதால் இது கலியுகம்தானே. நல்லது செய்தாகவேண்டுமென்றால் அரசு மருத்துவமனைகளில்  உறவுகளைச்சேர்த்துவிட்டு,  ஓட்டலில் தங்க வசதியின்றி வெளியே காத்திருக்கும் மக்களுக்குத் தானம் செய்யலாம். பாவம் ! உள்ளமும் செத்து, உடலும் செத்து  வாழும் பலரை அங்கு பார்க்கலாம்.

                வீட்டில் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வழக்கம் உங்களுடையதா? உங்கள் குழந்தை அவ்வாறு இல்லையே என வருந்துகிறீரா? நீங்கள் இந்த யுகத்து மானிடர்  இல்லை. விருந்தினராக வந்தவர்களைப் பார்த்து வணக்கம் கூறினாலோ ; புன்னகை சிந்தினாலே போதும். “இப்படிப்பட்ட நல்ல குழந்தைகளை வளர்த்திருக்கிறீர்களே” எனப் பாராட்டத் தெரிந்திருக்கவேண்டும். குழந்தைகளில் வயதிற்கேற்ப  விளையாட்டில் வரும் கதை நாயகனின் பெயரைச்சொல்லி இதில் எந்த  “கேம்” பிடிக்கும் எனக் கேட்கத்தெரிந்தால்  உங்களுக்கு “கலியுகத்தில் வாழ்வதற்கான சிறந்த மனிதர்” விருதே கொடுக்கலாம்.

                படித்தவர்கள் வரிசையில் வராமல் சூழ்ந்து நின்றால், நீங்களெல்லாம் படித்தவரா? எனக் கேட்க கூடாது. கேட்டால் நீங்கள் பழைய யுகத்தில் வாழவேண்டியவர்கள். பேருந்து வந்து நின்றதும் வரிசையாகச் சென்று ஏறாமல் ஒருவரையும் ஏறவிடாமல் கைகளால்வேலிபோட்டுத் தடுப்பவர்களைப் பார்த்தால், “என்னே திறமைசாலி! தனக்கென ஒரு சீட்டைப் பிடிக்க எப்படி ஒரு தடுப்புபோட்டார் !” எனப்பாராட்டி, “கலியுகத்தின் சிறந்த பயணி” பட்டம் கொடுக்கலாம். பொறுத்திருந்து கூட்டம் குறைந்தபின் பேருந்தைப்பிடித்து இரண்டு மணி நேரம் காலதாமதமாகச் சென்றால் “நீங்கள் பிழைக்கத்தெரியாதா ஏமாளி” பட்டத்தை இலவச இணைப்பாகப் பெறுவீர்.  

 தங்க நகைக் கடையில் பொருள் வாங்கும்போது “மீதிச் சில்லறையை நீயே வைத்துக்கொள்” என நகைக்கடைப் பையனுக்குக் கொடுக்கத்தெரிந்த ஒரு வள்ளலுக்கு, கீரை விற்கும் முதியவரிடம்  ஒரு கட்டு பதினைந்தா? பத்துதானே? எனப்பேரம்பேசி ஐந்து ரூபாய் மிச்சம்பிடிக்கத் தெரிந்திருந்தால் கலியுகம்  அவருக்குத்தான் சொர்க்கம்.

தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து பால் கொடுக்கும் பால்காரர் ஒரு நாள் தாமதமாக வந்தால் ‘பாவம்! என்ன வேலையோ?” என நினைக்காமல், உங்களிடம் பால்வாங்குவதைவிட “பாக்கெட் பால்” வாங்கிவிடலாம் போலிருக்கு என அவரை அச்சுறுத்தத் தெரிந்தவர்க்கு “கலியுகத்தின் குடிமகன்” பட்டமே கொடுக்கலாம். ஏனென்றால், அவர்தான் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து குடிமகன்களோடு குடிமகனாக குடிக்கப்பழகியவர். அப்படிப்பட்டவர்களைக் கண்டால் உங்களைப்போல் கண்டிப்பா இருந்தால்தான் நாடு உருப்படும்” எனப் பாராட்டத்தெரிந்திருந்தால் கலியுகத்தில் நட்பை வளர்த்துக்கொள்வது எளிது. இடித்துரைத்தால் அடிவாங்கவேண்டியதுதான்.

ஆசிரியரை வழியில் பார்த்தால் ஓடி ஒளிந்துகொண்டு அவர் சென்ற பிறகு வெளியே வருவதும். பேருந்தில் பயணம் செய்யும்போது ஆசிரியரைப் பார்த்துவிட்டால் தூங்குவது போலும் நடிக்கத்தெரிந்த மாணவருக்கு ‘கலியுக மாணவர்’ எனச் சான்றளிக்கலாம். இறங்கும்போது பார்ப்பது தவிர்க்கமுடியாமல் வணக்கம் கூறினால், இந்தப் பேருந்திலா வந்தீர்கள்? எனக்கேட்டால், முந்திக்கொண்டு அவர்களை “நீ பார்த்திருந்தால் இடம் கொடுத்திருப்பாயே? எனப் பாராட்டத்தெரிந்திருக்கவேண்டும்.  அவரே கலியுகத்தின் சிறந்த ஆசிரியர். ஏழை ஆசிரியரின் நிலைமை அறிந்து அவருக்கு வீடு கட்டிக்கொடுத்த மாணாக்கர்களைக் கண்டால் அவர்கள் சென்ற யுகத்தின் எச்சம் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

இப்படி, அடுக்கிக்கொண்டேபோகலாம்தானே. இனி வாசகரே உம் சமத்து.

யாராவது உங்களை கண்டு கொள்ளவில்லையே என்றால் ‘முறைத்துப்பார்க்கவில்லையே’ என  நினைத்துக்கொள்ளுங்கள்.  முறைத்துப்பார்த்தார் என்றால் ‘ஏசவில்லையே’ என  நினைத்துக்கொள்ளுங்கள்.  ஏசினார் என்றால் ‘அடிக்கவில்லையே’ என  நினைத்துக்கொள்ளுங்கள்.  அடித்தார் என்றால் ‘கொல்லவில்லையே’ என  நினைத்துக்கொள்ளுங்கள். கொன்றார் என்றால் ‘இவ்வுலகிலிருந்து விடுதலை கொடுத்தார் என  நினைத்துக்கொள்ளுங்கள்., கலியுகத்தில் சகிப்புத்தன்மையுடன் வாழ முன்னோர்கள் கற்றுக்கொடுத்த இரகசியம்  இது.

 

 

 

 

 

சனி, 15 மே, 2021

கண்ணகி கற்பித்த பெண்ணியம் –– Kannagi – The Feminist





 மதுரையை எரித்த தீபம் 


நாவிற்குச் சுவையூட்டும் காரத்தை அறிவோம். அறிவுக்குச் சுவையூட்டும் காரத்தை அறிவீரா? ஆம் அந்த காரம். நீங்கள் அறிந்த காரம்தான். சிலப்பதிகாரம். 5270 அடிகளைக் கொண்ட சிலப்பதிகாரம் முதல் காப்பியமாக மட்டுமின்றி முதன்மைக் காப்பியமாகவும் நிலைபெற்றுவிடுகிறது. ஐம்பெருங்காப்பியமே ஆயினும் இரட்டைக் காப்பியமே ஆயினும் சிலப்பதிகாரத்திற்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. அது தீபம் தீப்பந்தமான கதை. ஒவ்வொரு இலக்கியமும் இலக்கினைக் கொண்டுதானே அமைகிறது.
 
பெண்ணிய இலக்கணச் சேய்க்கு இலக்கியம் கற்பிக்கும் இலக்கியத் தாய் சிலப்பதிகாரம் எனலாம். இலக்கணமுடன் வாழும் வாழ்க்கைக்கு முன்னோர்களின் வாழ்வே இலக்கியமாகி வழிகாட்டுகிறது. இளங்கோவடிகள் பதிகத்திலேயே சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகளை எடுத்துக்காட்டி பத்தினி வாழ்க்கையின் பக்குவத்தினை அறிவுறுத்தியுள்ளார். இளங்கோவடிகள் பெண் குலத்தையே கதைத்தலைவியாக்கி ஊழ்வினை குறித்த எண்ணங்களைக் காவியமாக்கி உணர்த்தியுள்ள சிறப்பு எண்ணி வியக்கத்தக்கது.
 
இலக்கணம் என்றாலே விளக்கெண்ணெய் எனச்சிலர் சொல்வர். அதுவும் உண்மைதான். விளக்கு எரிய வேண்டுமானால் எண்ணெய் வேண்டும்தானே.  தமிழர்க்குரிய தமிழ் மொழியின் இலக்கணத்தை, இளைய தலைமுறைக்குக் கொண்டுசொல்ல வேண்டுமெனில், இலக்கிய விளக்கம் தேவைதானே. அவ்வகையில், பெண்ணிய இலக்கணத்தை படம்பிடித்துக்காட்டும் அரிய இலக்கியம் சிலப்பதிகாரம்.  இது பொருள் இலக்கணம் ; அதனால்தான் அகவாழ்க்கையை அழகாகச் சொல்கிறது.
       
        பெண்ணுக்குரிய நாற் குணங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த கண்ணகி அறத்தைக் காக்கும் சூழல் விளையும் போது பொங்கி எழுந்து தன்மானத்தையும் குலப்பெருமைகளையும் காக்கும் நிலையினை எடுத்துக்காட்டுகிறார் இளங்கோவடிகள். பெண்கள் எவ்வாறு துணிச்சலுடன் வாழ வேண்டும் என வழிகாட்டுகிறாள்.  கணவனைத் திருத்த முடியாத கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் எனக்கேட்பார்கள். ஆனால் அக்கால வழக்கத்தில் சில செல்வந்தர்களிடம் பிற பெண்டீரை நாடும் வழக்கமாக இருந்தது. என்செய்வது? மாதவியின்வழி  இதனை அறியலாம்தானே?   
 
ஒரு காலத்தில் “தீபம் தலை கீழாக எரியும்” எனக் கூறியபோது எல்லோரும் சிரித்தனர். ஆனால் இன்று எல்லா விளக்குகளும் தலைகீழாக மட்டுமல்ல எப்படி வேண்டுமானாலும் நீண்டும் வளைந்தும் எரிவதனைக் காணமுடிகிறது. அவ்வாறே பெண்ணின் நிலையும் எழுச்சியுறும் என்பதனை முன்னரே அறிந்தனர். எதிர்மொழி பேசா கண்ணகி பின்னாளில் வெஞ்சின மொழிபேசுவதன் வாயிலாக உணர்த்தினார் இளங்கோவடிகள். எவ்வாறெனினும் கண்ணகி தன்னுடைய சொல்லில் குற்றம் நிகழாதவாறு தன் முன் தோன்றிய தீக்குரிய கடவுளிடம் ‘தீத்திறத்தார் பக்கமே சார்க’ என்றே கூறினாள்.  இதுவும் ஒரு இலக்கணம்தானே.
 
        கருங்கயற் கண் விழித்து ஒல்கி நடந்தவெல்லாம் நின் கணவன்
        திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி
 
என்னும் அடிகளின் வழி காவிரியின் பெருமையினையும் மன்னனின் பெருமையினையும் கூறுகிறது. ஆணின் பெருமையான நடைக்குப் பெண்தான் காரணம் என்னும் இலக்கணத்தோடு, ஆணுடைய ஆளுமையாலேயே பெண்ணின் பெருமை சிறப்பதனையும் உணர்த்தியுள்ளார் இளங்கோவடிகள். செல்லாச்செல்வன், கருணை மறவன், இல்லோர் செம்மல் என வாழ்ந்த கோவலனின் வலம்புரி முத்தாயிற்றே கண்ணகி. பெண்ணை ஆற்றுடன் ஒப்பிட்டதும் செழிப்பின் உள்ளடக்கம்தானே? ஆட்சியாளர்களின் ஆளுமையினைக் கொண்டே ஆறுகள் ஓடுவதும் ஒடுங்குவதும் அமைகிறது எனக்கூறியுள்ளதும் எத்தனை அழகு.
 
கண்ணகி மதுரையை எரித்த மல்லிகை.  ‘வண்ணச் சீறடி மண் மகள் அறிந்திலள் ‘ என்னும் மெல்லினமாகத் தொடங்கி ‘செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றெழில் சிலம்பொன்றேந்திய கையள்’ என வல்லினமாக மாறிய தன்மையைக் காட்சிப்படுத்துகிறது.
 
நிறைவாக, எவ்வுயிர்க்கும் இடையினமாக நிற்கும் கடவுள் தன்மை எய்தியதனை ‘பூப்பலி செய்து  காப்புக் கடை நிறுத்தி ; வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்து’ என மாறி நின்றதனை எடுத்துக்காட்டுகிறார். இதன் வழி பெண்ணின் பொறுமை, அருமை, பெருமை என்னும் மூன்று பெண்ணிய இலக்கணத்தையும் சுட்டிக்காட்டுகிறார் இளங்கோவடிகள். கண்ணகி பெண்ணியத்தின் அழகியல். மாசறு பொன் மட்டுமன்று ; மாசறு பெண்ணும் கூட.