என்ன கிழித்துவிட்டாய் ? என யாரையும் கேட்காதீர்கள்.
எதையும் கிழிக்காமல் இருந்தாலே போதும். ஆம்! வீட்டில் நல்ல பிள்ளையாய் வீடடங்கி நின்றாலே
போதும்தானே.
வாழ்க்கை புரியாத புதிர்? இக்கூற்றை ஒத்துக்கொள்ளாதவர்கள்கூட
இன்று ஒத்துக்கொள்கின்றனர். எல்லோரும் கடவுளைத் தேடி அலைகிறார்கள். மருத்துவர் மட்டுமன்று
; செவிலியர்களும் கடவுளாகத் தெரிகிறார்கள்.
மருத்துவமனையில் இடமில்லை எனத் தடுத்து நிறுத்தாத பாதுகாவலரும் கடவுளாகிறார். ‘தம்பி!
வீட்டை விட்டு வெளியே வராதே” எனக் கெஞ்சும் காவலரும் தெய்வமாகத் தெரிகிறார். வணிகர்களும் தெய்வமாகத்தெரிகின்றனர். பால்காரர் காலையில் வரவிட்டால்
தெய்வ அருள் கிடைக்கவில்லையே! என மனம் ஏங்குகிறது. அவர் உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும்
என மனம் வேண்டுகிறது. காய்கறி வீட்டிற்கே கொண்டுவந்துகொடுக்கும் மகராசியிடம் விலைபேசுவது
‘பாவத்தின் உச்சம்’ என்னும் எண்ணம் வந்துவிட்டது. இவர்கள் கண்முன்னே காட்சி கொடுப்பதால்
தெய்வமாயினார். உறவுகள், நட்புகள், உடன்பணி செய்வோர், சுற்றி இருப்பவர்கள் யாரும் வந்து
பார்ப்பதில்லை. அவர்கள் மீது துளியும் கோபம் இல்லை. மாறாக, அவர்களும் தெய்வம்போல் தெரிகிறார்கள்.
நம் உடல் நலத்தில் அவர்களுக்கு அக்கறை இருப்பதால்தான் பார்க்கவரவில்லை என்னும் எண்ணம்
எல்லோரிடமும் பரவலாகிவருகிறது. எல்லோரும் அன்புடையவர்களாகத் தெரிகிறார்கள்.
இப்படி தொடக்கத்திலேயே இருந்திருந்தால் என்ன
அழகாக இருந்திருக்கும்.எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாம்தானே. கையிலோ, காலிலோ
அடிபடும்போதுதான் அதன் அருமை தெரிகிறது. தலையில் வெட்டுக்களுக் காயங்களுடன் ஒருவர்
வருகிறார். எப்படி? என்று மற்றொருவர் கேட்கிறார்.
முடி திருத்துநரின் பணியை மனைவி செய்ததால்வந்தவினை என்றார்.
இன்னொரு பக்கம்தான் கொடுமையானது. ஒருவருக்கு
உடல்நலம் குறைந்தால், என்ன? எனக் கேட்பதற்கு ஆளில்லை. பெற்றோர்களைப் பார்ப்பதற்கு,
பிள்ளைகளே அஞ்சும்போது பேரக்குழந்தைகள் என்ன
செய்வார்கள்?. எத்தனையோ மருத்துவமனைகளில் மருத்துவர்களே தொலைபேசியில் தொடர்புகொண்டு,
“உங்கள் தாத்தா ; உங்கள் பாட்டி….” எனக் கூறினாலே
இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். “நலமானார்கள்” எனச்சொல்லும் முன்னே துண்டித்துவிடும்
பேரக்குழந்தைகளின் செயலைக் கண்டு ‘இதுதான் கலியுகம்” என்பதனை அனைவரும் உணர்கிறார்கள்.
முதியவர்கள் சிக்கலான சூழலை புரிந்துகொள்ளமுடியாமலும் வீட்டில் இருக்கவும் முடியாமலும்,
மருத்துவமனைக்குச் செல்வதும் திரும்புவதுமாக இருக்கிறார்கள். பாதுகாப்புணர்வைத் தரவேண்டிய ஊடகங்களில் சில அச்சத்தைமட்டுமே தந்துகொண்டிருக்கிறார்கள்.
இவர்களால் மன உளைச்சல்பெற்று இறப்பவர்கள் தொகைதான் அதிகரித்துவருகிறது. மரங்கள், விலங்குகளுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.
ஊடகங்களை அவை பார்ப்பதில்லைதானே.
“பள்ளிக்குப் போ, விளையாடப்போ” என வெளியில்
துரத்தியவர்கள் “வீடடங்கி இரு” என அடைத்துவைக்கிறார்கள். அரிசி மூட்டை சுருங்கச்சுருங்க
பிள்ளைகளின் எடை பெருகுகிறது. விழித்துக்கொள்ளும்
குழந்தைகள் அளவறிந்து உண்கிறார்கள். எதுகேட்டாலும் ஆக்கித்தரும் தாய்மார்கள், குழந்தைகளைப்
பருக்கவைத்துவிடுகிறார்கள். இந்நேரத்தில் குழந்தைகளுக்கு எல்லா வேலைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும்.
இந்த கொடுமையான சூழலை இனிதாக மாற்ற அவர்களுடைய திறனை அறிந்து கற்பிக்க வழிவகைசெய்யவேண்டும்.
இசையோ, கலையோ, எல்லாவற்றையும் சொல்லித்தர இணையவழியில்
குருமார்கள் காத்திருக்கிறார்கள். தெய்வங்களாகிய குருமார்கள் இணையவழியில் உங்கள் வீட்டிற்கேவந்து
சொல்லித்தருவர். வீட்டிலிருந்தே கற்க வழிவகைசெய்தால் பிள்ளைகளை மூளைச்சலவையிலிருந்து
காப்பாற்றிவிடலாம்.
ஏழைக்குழந்தைகளிடம் திறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்)
இல்லையே என வருந்தாதீர். அது இல்லாமல் இருப்பதே அவர்கள் கண்களையும் உள்ளத்தையும் பாதுகாக்கும்.
காலை இரண்டு மணிக்கு எழுந்து பல இடர்ப்பாடுகளைக்
கடந்து இருபது வருடங்களாக உழைத்து உழைத்து தேய்ந்துபோன எண்ணற்ற மனிதர்கள் வாழ்கிறார்கள்.
கடைவீதியில் அவர்கள், ஐம்பது, நூறு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு
என்ன வாங்கலாம்? என ஒவ்வொரு பொருளுடைய விலையைக்கேட்டுக்கேட்டு, எதை வாங்கலாம்? எனத்
தயங்கித்தயங்கி நிற்கின்றனர். ஒருவர் விலையே கேட்காமல் “இது ஒரு கிலோ, அது ஒரு கிலோ”
எனத் தேவையானதை வாங்கிவிட்டு 2000 தாளை நீட்டுகிறார். சலவை நோட்டு. “இவர்களுக்கு எப்படி
பணம் கிடைக்கிறது?” என ஏழைகள் நினைப்பது இயல்புதானே?
காலைமுதல் மாலை வரை, எரிவாயு உருளை (சிலிண்டர்)
எடுத்து மாடிப்படிகளில் சிரமப்பட்டு ஏறிச்செல்லும் ஊழியரைப் பார்த்தால் உழைப்பின் அருமை
புரியும். ஆளையே சாய்த்துவிடுவது போல் பெரிய உப்புமூட்டையை வைத்துக்கொண்டு தள்ளமுடியாமல்
‘உப்பு , உப்பு” என குரல்கொடுத்துக்கொண்டே விற்றுக்கொண்டுபோகும் முதியவரைப் பார்த்தால்
அவருடைய பிள்ளைகளை வசைபாடத்தோன்றும். நேர்மையாக
உழைக்கும் இவர்கள் ஒரு புறம். தவறான வழியில் செல்வம் சேர்த்து பணத்தை இரைப்போர் ஒரு
புறம். இதுதான் வாழ்க்கை
அரசு என்பது என்ன? மக்கள்தானே? எனவே ஒவ்வொருவரும்
பொறுப்பேற்கவேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவோம். நம்மால்
இயன்றவரை சுற்றி இருப்போர்க்கு நன்மை செய்வோம். பணத்தால் உதவலாம் ; பொருளால் உதவலாம்
; தொலைவில் முகக்கவசத்துடன் விலகிநின்று நம்பிக்கையூட்டும் சொற்களால் உதவலாம். எப்படி
முகக்கவசம் அணியவேண்டும் எனச்சொல்லித்தருவதும் மருத்துவமே.
மகள் திருமணத்துக்குச் சேர்த்துவைத்த பணத்தை,
சாலையோர மக்களின் உணவுக்காகச் செலவிடுகிறார் ஒருவர் ; உறவை இழந்து என்ன செய்வது எனப்புரியாமல்
துணையற்று ஏங்குவோருக்காக, “என்னைத் தொடர்புகொள்க” என தனது எண்ணைக் கொடுத்து உதவி செய்யக்காத்திருக்கிறார்
ஒருவர். தனது மகன் நோயில் சிக்கிக்கொள்ளக்கூடாதென பணிக்குச் செல்லும் மகனைப் பெற்றோர்
தடுத்தாலும், அதனை மறுத்து நாளும் அவசரசிகிச்சை ஊர்தி ஓட்டுகிறார் ஒருவர் ; வாசலிலேயே
உணவுண்டுவிட்டு விடைபெறுகிறார் ஆய்வாளர் ஒருவர் ; பகல், இரவு தெரியாமல், தாகத்தில்
தண்ணீர் கூட குடிக்கமுடியாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் ; கூட்டத்தைக் கட்டுப்படுத்த
முடியாமல் காலில் விழுந்து வணங்கும் தலைவர்கள் ; குழந்தைகள் ஓய்விலேயே இருந்தால் அறிவு
வளர்ச்சி தடைபடும் என்பதனை உணர்ந்து நிகழ்நிலை (ஆன்லைன்) வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்
; மின்சாரம் , தண்ணீர், தூய்மை என ஒவ்வொருவரும் தம் இல்லத்தை விட பிறர் நலம் நாடுகின்றனர்.
பணியினை, பணியாக எண்ணாது சேவையாகச் செய்யும் தெய்வத்துக்கு இணையான அத்தகைய மனிதர்களின்
அன்பு எத்தனை உயிர்ப்புடையது. இவர்களை அகக்கண்கொண்டு பாருங்கள் ! வாழ்க்கை அழகானதுதானே.