“என் மனைவி ஊருக்குப் போயிட்டா”
“என் மனைவி ஊருக்குப்
போயிட்டா” எனச் சொல்வதில்
ஆனந்தப்படுவோர் எத்தனைபேர் . சிலபேர் மட்டுமே கை உயர்த்துகிறீர்கள். மற்றவர்கள் அமைதியாகப்
பக்கத்தில் பார்க்கிறார்கள். கைதூக்கியவர்களின்
மனைவிமார்கள் இவர்கள் பக்கத்தில் இல்லை என்றுதானே. அந்த மனைவிமார்கள் இவர்களுக்காக
எதையோ வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மனைவி ஊருக்குச்செல்லும் நாளில்கூட, அன்றைய உணவு
சமையலறையிலும் குளிரூட்டியிலும் வைக்கப்பட்டிருப்பதனைக் கூறிவிட்டேசெல்வாள். அப்படியென்றால்
எத்தனை அன்பு என்பதனை எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?
பெண்ணுக்கு மட்டுமே கயிறில்லாமல் கட்டிப்போடும்
வித்தை தெரிந்திருக்கிறது. அத்தகைய அறிவினைப் பெற்றிருப்பதால்தான் பெண்ணைக்கேட்டே ஆண்கள்
செயல்படுவதனைக் காணமுடிகிறது.
ஆண்கள் நடுரோட்டில் பெண்களை அடிப்பதனைப் பார்க்கமுடிகிறது.
ஆனால், அத்தகைய ஆணை பெண்கள் திருப்பி அடிப்பதில்லை. காரணம் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா?
அடியைக் கொடுப்பதைவிட அடியைப் பொறுத்துக்கொள்வதற்குத்தானே வீரம் வேண்டும்.
விடுதலைப் போராட்டத்தைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
உடல்வலிமை பெற்றிருந்தாலும் தம்மைவிட உடல்பலம் குன்றிய ஆங்கிலேயரிடம் அடிவாங்கிக்கொண்டு
கொடியினைக் கூட விடாமல் “எவ்வளவு வேண்டுமானலும் அடி ; கையிலிருந்து விழாது கொடி” எனத்
துணிந்து நின்றவீரம் போற்றத்தக்கதுதானே. புழு பூச்சிகூட எதிரியை எதிர்த்துப்போராடும்.
ஆனாலும் விடுதலை வீரர்கள் திறமை இருந்தும் ; ஆயுதம் இருந்தும் ; அடிவாங்கியது எத்தனை
பொறுமை. அத்தகைய பொறுமையானகுணம் படைத்தவர்களை அடிக்க வேண்டுமென்றால் அவன் விலங்கினும்
கீழாகவன்றோ இருந்திருக்கவேண்டும்.
மனைவியை அடிப்பவனுக்கும் இது பொருந்தும்தானே.
அவர்களுக்காக 1098 என்னும் எண் எப்பொழுதும் விழிப்புடன் காத்திருக்கிறது. இருப்பினும்
கணவன், குடும்பம் என்னும் அமைப்பிற்காக எவ்வளவு பொறுமையுடன் புகாரளிக்காமல் செயல்படுகிறார்கள்.
அத்தனை பொறுமையுடன் விஞ்சிநிற்பதால்தானே, குழந்தைகளுக்கு
வகுப்பெடுக்க பெண்களே ஆசிரியர்களாக முன்வருகிறார்கள். ஒரு குழந்தையாக இருந்தாலும்
; ஒருவகுப்புக்குரிய குழந்தைகளானாலும் ஈடுகட்ட பெண்ணால்மட்டுமே முடிகிறது. நலமான குழந்தையானாலும்
உடல்நலம் குறைந்த குழந்தைகளாயினும் செவிலித்தாயானவள் எவ்வளவு அழகாகப் பார்த்துக்கொள்கிறாள்.
ஒரு ஆண்
வெற்றிபெறுவதற்காக உழைக்கும் உழைப்பைவிட பெண்ணுக்கான போராட்டம் பெரிதுதானே. ஒரு பெண்
வெற்றிபெற்றால் அது நல்லூழ் (அதிர்ஷ்டம்) எனக்கூறிவிடுவோரும் உண்டு. அதற்காக உழைத்த
உழைப்பை (பெற்றோரோ/ கணவரோ) உடனிருந்தோர் மட்டுமே அறிவர். எனவேதான் ஒருமுறை வெற்றிபெறுவதனைவிட
ஒவ்வொரு முறையும் வெற்றிபெறவேண்டும் என்பார் ஏவுகணை நாயகரும் முன்னாள் குடியரசுத்தலைவருமான
அப்துல்கலாம்.
விண்வெளியில் ராக்கெட்டை செலுத்துவதுபோல் ‘பெண்கல்வி’யானது
பெருமுயற்சியாக இருந்தநிலைமாறிவிட்டதுதானே. அதனால்தான் நன்றாகக் கல்விகற்ற பெண்ணாயினும்
கணவனின் தவறினை நேரடியாகச் சொல்வதில்லை. ஏனென்றால் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கணவனுக்கு
இருக்காது ; இருந்தாலும் தன்முனைப்பு அவனை ஏற்றுக்கொள்ளவிடாது. அதனால்தான் ‘இவன் எது
கூறினாலும் கேட்கமாட்டான்” எதற்குச்சொல்லவேண்டும் எனப் பெண்கள் அமைதியாகவே இருந்துவிடுவதனைக்
காணமுடிகிறது. “தலைக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்” எனக் கூறினாள். “அதெல்லாம் தேவையில்லை”
எனக்கூறிவிடுவான். தான் மறந்ததை ஒத்துக்கொள்ளமாட்டான். வழியில் போக்குவரத்துக்காவலரிடம்
சிக்கித்தண்டம் கட்டியபிறகு அசடுவழிவான்.
பெண்களை தேனீக்களுடன் ஒப்பிடலாம்தானே. ‘இ’கரம்
பெண்பால் விகுதிதானே. ரேவதி, செல்வி, தேவி, ராணி இப்படி சொல்லிப்பாருங்கள் புரிந்துவிடும்.
இலக்கியப்பார்வையிலும் தேனீதான். ‘தேனீ’ எப்படி உழைக்குமோ அப்படித்தானே பெண்கள் உழைக்கிறார்கள்.
எந்தத் தேனீயாவது நான் இவ்வளவு கடினப்படுகிறேன் என்று கூறியதுண்டா. அது இயல்பான ஈக்களைக்
காட்டிலும் கடினமாக உழைப்பதால்தானே அது கெடாத தேனை உருவாக்கிவிடுகிறது. சாகாமருந்தாகும்
தேனை உணவாகக்கொடுக்கும் அரிய பூச்சாக இருக்கும் தேனீ எத்தனை அழகு. அப்படித்தானே பெண்ணும்
வாழ்நாள் முழுதும் உணவினைச் சமைத்துத்தருகிறாள்.
விடுப்பின்றி கடுப்பின்றி அடுப்பில் இடுப்பொடிய
வேலைசெய்யும் துடிப்புடைய பெண்களால்தானே குடும்பம் குடும்பமாக இருக்கிறது.
கடவுளும் மனைவியும் ஒன்றுதானே. எவ்வளவு கொடுத்தாலும்
திட்டுவது அவர்களைத்தான். அவர்கள்மட்டுமே காதுகொடுத்து கேட்பார்கள், பிறரிடம் குறைகளைச்
சொல்லமாட்டார்கள். அப்படியே கேட்காவிட்டாலும் அவர்களிடம் சொல்வதில் ஏதோஒரு மகிழ்ச்சி
இருக்கிறதுதானே? மனக்குறை நீங்கிவிடுகிறது. தெளிவாக செயல்படமுடிகிறது.
பெண்ணுக்காகவே வாழும் ஆண் போருக்குச் செல்கிறான்.
போரில் சண்டையிட்டு முகத்தில் காயப்படுகிறான். மீண்டும் தன் மனைவியின் முகத்தைக்காண
வெட்கப்படுகிறான். மனைவி அவனை ஏற்பாளா? என்னும் அச்சத்துடன் ஒதுங்கி நிற்கிறான். அவன்
வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவி முன்பிருந்த காதலைவிட பல மடங்கு பெருகிய
காதலோடு அவனை அணைத்துக்கொள்கிறாள். அப்படியென்றால் மனைவியின் பேரன்பு பெருமையுடையதுதானே.
இக்காட்சி தமிழ் இலக்கியத்தில் களிறு என்னும் ஆண் யானையையும் பிடி என்னும் பெண்யானையையும்கொண்டு
விளக்கப்படும். களிறானது போரில் எதிரிகளுடைய கோட்டையை தந்தத்தால் தகர்த்துவிடுகிறது.
எதிர்த்துநின்ற யானைகளை வீழ்த்துகிறது. இதனால் தந்தம் உடைந்து அழகுகுன்றி இருக்கிறது.
பிடி என்னும் தன் பெண்யானையைக் காண வெட்கப்படுகிறது. என்பது எத்தனை அழகான காட்சி. விருப்புடன்
பெண்யானை நோக்குகிறது. இது எத்தனையோ பாதுகாப்புபடை வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுதான்.
அத்தகைய பெண்யானையைப் போன்றவர்களே பெண்கள். எத்தனை
இடர்வரினும் அன்பு நிறைந்த கணவனுடன் இல்வாழ்க்கையில் சிறப்புற்று விளங்கும்பேறு சிறப்புடையது.
ஆணுக்கும் இக்கூற்று பொருந்தும் என்பதில் ஐயமில்லை.
இனி “என் மனைவி ஊருக்குப் போயிட்டா” எனச் சொல்வதற்குமுன்
ஒருமுறை உறவுகள் அனைத்தையும் விட்டுவந்த தியாகத்தை எண்ணிப்பார்ப்பீர்கள்தானே?